Ad

செவ்வாய், 27 ஜூலை, 2021

`சகல வசதிகள், கடுமையான கட்டுப்பாடுகள், இந்திய வீரர்களுடன் நான்..!' - கவிதாவின் ஒலிம்பிக் அப்டேட்ஸ்

உலகின் மிகப் பெரிய விளையாட்டுத் திருவிழாவான ஒலிம்பிக் போட்டிகள், ஜப்பான் நாட்டில் நடைபெற்று வருகின்றன. நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இந்தப் போட்டிகள், கடந்த ஆண்டே நடைபெற இருந்த நிலையில், கொரோனா சிக்கலால் இந்த ஆண்டு நடத்தப்படுகிறது. ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் கடந்த வாரம் 23-ம் தேதி, கண்கவர் கலைநிகழ்ச்சிகளுடன் 32-வது ஒலிம்பிக் திருவிழா தொடங்கியது. அதற்கு மறுநாளே, பளு தூக்கும் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்று அசத்தினார் இந்திய வீராங்கனை மீராபாய் சானு. சிறப்பான பங்களிப்பைக் கொடுக்கும் உத்வேகத்துடன் இந்தியா உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்ட நாடுகளின் வீரர்கள் பல்வேறு போட்டிகளில் களம் காண்கின்றனர்.

Tokyo

33 பிரிவுகளில் நடத்தப்படும் 339 போட்டிகளில், 11,000 வீரர்கள் பங்குபெறுகின்றனர். மொத்தம் 17 நாள்கள் நடைபெறவுள்ள இந்த ஒலிம்பிக் திருவிழாவில் பங்கேற்கும் வீரர்கள் உட்பட முக்கியமான பங்கேற்பாளர்களுக்கான அத்தியாவசியத் தேவைகளுக்காக, டோக்கியோ நகரில் கிராமம் ஒன்று பிரத்யேகமாகக் கட்டமைக்கப்பட்டுள்ளது. அதில், தங்குமிடம், பயிற்சி வசதிகள், உடற்பயிற்சிக்கான ஏற்பாடுகள், ஷாப்பிங், பொழுதுபோக்கு உட்பட சகல வசதிகளும் உண்டு.

ஜப்பானில் கட்டுப்பாடுகளுடன்கூடிய லாக்டெளன் அமலில் இருப்பதாலும், கோவிட் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையிலும் ஒலிம்பிக் போட்டிகளை நேரில் பார்க்க பார்வையாளர்களுக்கு அனுமதி கிடையாது. ஒலிம்பிக் நிகழ்ச்சியில் பங்களிப்பு செய்யும் ஆயிரக்கணக்கான தன்னார்வலர்களில், தமிழகத்தைச் சேர்ந்த கவிதாவும் ஒருவர். டோக்கியோவுக்கு அருகிலுள்ள கனகவா மாநிலத்தில் வசிப்பவர், ஒலிம்பிக் போட்டிகளுக்கான ஏற்பாடுகள், சிறப்பம்சங்கள் குறித்த தகவல்களைப் பகிர்கிறார்.

Tokyo olympics

``இந்த ஆண்டு ஒலிம்பிக் போட்டிகள் நடத்தப்படலைனா, டோக்கியோவுல நடக்கவிருக்கும் ஒலிம்பிக் போட்டிகள் ரத்து செய்யப்படும்னு ஒலிம்பிக் கவுன்சில் சொல்லியிருந்துச்சு. மிகச் சிறந்த வாய்ப்பை இழக்கக் கூடாதுனு நினைச்ச இந்த நாட்டு அரசு, கோவிட் கால பல்வேறு சிக்கல்களுக்கு மத்தியிலும், ஒலிம்பிக் திருவிழாவுக்கான ஏற்பாடுகளைச் சிறப்பா செஞ்சிருக்கு. ஏற்கெனவே, 1964-ல் நடந்த ஒலிம்பிக் போட்டியை நடத்திய ஜப்பான், பல்வேறு அசாதாரண சூழல்களையும் சிறப்பா எதிர்கொண்ட அனுபவத்துல, இந்த ஒலிம்பிக் திருவிழாவையும் சரியா செய்து முடிச்சிடும்னு ஜப்பான் மக்கள் முழுமையா நம்புறாங்க.

ஜப்பான்ல இப்போ கொரோனா அஞ்சாவது அலை பரவல் ஏற்பட்டிருக்கு. டோக்கியோ உட்பட நாடு முழுக்க பல இடங்கள்லயும் கட்டுப்பாடுகளுடன்கூடிய லாக்டெளன் நடைமுறையில் இருக்கு. அரசின் அறிவிப்புகள் எல்லாவற்றுக்கும், இந்த நாட்டு மக்கள் மதிப்பு கொடுத்து நடந்துப்பாங்க. அதனால, பொது இடங்கள்ல மக்கள் அதிகம் கூடுறதில்லை. டோக்கியோவுல இப்போ கோடைக்காலம். அதனால, பள்ளிகள், கல்லூரிகளுக்கு ஒரு மாதகால விடுமுறை விடப்பட்டிருக்கு. பெரும்பாலான தனியார் நிறுவன பணியாளர்கள் வீட்டுல இருந்தே வேலை செய்யுறாங்க. இதனால, நாடு முழுக்க போக்குவரத்து நெரிசல் கணிசமா குறைஞ்சிருக்கு. எனவே, எளிமையான முறையில ஒலிம்பிக் போட்டிகள் நடக்குது.

athlete's village for the 2020 Summer Olympics

வெளிநாடுகள்ல இருந்து வரும் வீரர்கள் மற்றும் முக்கிய நபர்கள், விமான நிலையத்துல இருந்து நேரா ஒலிம்பிக் கிராமத்துக்கு அழைத்து வரப்படுவாங்க. அந்தக் கிராமத்துல இருந்து நேரடியா விளையாட்டு அரங்கத்துக்கு மட்டுமே வீரர்கள் போகணுமாம். போட்டிகள் முடிஞ்சதும், அடுத்த சில தினங்களுக்குள் வீரர்கள் சொந்த நாட்டுக்குத் திரும்ப அறிவுறுத்தப்பட்டிருக்காங்க. இந்தப் பங்கேற்பாளர்களும், ஒலிம்பிக் கமிட்டியினரும் போட்டிகள் நடக்கும் அரங்கத்துக்குச் சென்று வர, சில இடங்கள்ல பிரத்யேக சாலை வசதிகள் செய்யப்பட்டிருக்கு. போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் இருக்கவும் சிறப்பு வசதிகள் செய்யப்பட்டிருக்கு.

ஒலிம்பிக் போட்டிகளுக்காக, டோக்கியோ நகரத்துல பெரிய அளவுல விளையாட்டு அரங்கம் கட்டப்பட்டிருக்கு. ஒலிம்பிக் தொடக்க விழா நடந்த அந்த அரங்கத்துலதான், நிறைவு விழாவும் நடக்கும். பின்னர், கால்பந்து மைதானமா இந்த அரங்கத்தைப் பயன்படுத்த திட்டமிட்டிருக்காங்க. தவிர, சிறியதும் பெரியதுமாக தற்காலிக விளையாட்டு அரங்கங்களும் கட்டப்பட்டிருக்கு. பல்வேறு விளையாட்டுப் பிரிவுகளைப் பொறுத்து, டோக்கியோ நகரத்துல இருக்கும் பல மைதானங்கள் உட்பட நாடு முழுக்க 41 இடங்கள்ல ஒலிம்பிக் போட்டிகள் நடத்தப்படுது.

கவிதா

Also Read: ஒலிம்பிக் ஹீரோக்கள்: போலியோவை வென்ற வில்மா ருடால்ஃப், தங்கங்களையும் வென்ற கதை!

விளையாட்டு வீரர்கள், தன்னார்வலர்கள், பாதுகாப்புப் பணியில் இருக்கும் காவல்துறையினர், ஒலிம்பிக் கமிட்டியினர் உட்பட சம்பந்தப்பட்டவர்கள் எல்லோருக்கும் விளையாட்டு அரங்கத்துல நுழையும் தினங்கள்ல கோவிட் டெஸ்ட் எடுக்குறாங்க. எல்லோருமே கட்டாயமா மாஸ்க் அணியணும். சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்கணும். போட்டிகள் நடக்கும் வளாகங்களைச் சுத்தி கடுமையான பாதுகாப்புடன், கண்காணிப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுது. கோவிட் பரவலைத் தடுக்க, போட்டிகள் நடக்கும் பகுதிகள்ல விழிப்புணர்வு நிகழ்வுகள் செய்யப்படுது.

ஒலிம்பிக் போட்டிகள் முடிஞ்சதும், உடனடியா மாற்றுத்திறனாளிகளுக்கான பாரா ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கும். இந்த ரெண்டு திருவிழாவும் முடிஞ்சதும் ஜப்பான்ல கொரோனா ஆறாவது அலை பரவல் ஏற்படலாம்னு சொல்றாங்க. இதுக்கிடையே, திட்டமிட்டபடி எல்லா போட்டிகளும் நல்லபடியா நடக்கணும்னு ஜப்பான் மக்களுடன் நானும் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்" என்று நம்பிக்கையுடன் கூறுபவர், ஒலிம்பிக் திருவிழாவில் தன்னார்வலர்களின் பங்களிப்பு குறித்துப் பேசினார்.

Olympic athletete's village

Also Read: ஒலிம்பிக் போட்டிகளில் பாலின சமத்துவம் இருக்கிறதா, பெண்களின் பங்கேற்பு ஏன் முக்கியம்?!

``டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில தன்னார்வலர்களாகப் பங்கேற்க ஆர்வமுள்ளவங்க விண்ணப்பிக்க ஏதுவா, 2018-ல் ஜப்பான் அரசு அறிவிப்பு வெளியிட்டது. அப்போது நானும் விண்ணப்பிச்சிருந்தேன். பலகட்ட தேர்வுகளுக்குப் பிறகு பல்லாயிரக்கணக்கானோருடன் நானும் தன்னார்வலரா தேர்வானேன். எங்களுக்கான பணி, செயல்பட வேண்டிய விதம் குறித்து பயிற்சி கொடுத்தாங்க.

கொரோனா பரவலுக்கு முன்பு, பல நாடுகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் இந்தத் தன்னார்வலர் பணிக்குத் தேர்வாயிருந்தாங்க. கோவிட் பாதிப்பு இருக்குறதால, வெளிநாடுகள்ல இருந்து தன்னார்வலர்கள் கலந்துக்க அனுமதி மறுக்கப்பட்டிருக்கு. ஜப்பான்ல வசிக்கும் உள்நாட்டினர் மற்றும் விசாவுடன் இங்கு வசிக்கும் வெளிநாட்டைச் சேர்ந்தவங்களுக்கு மட்டுமே தன்னார்வலர் பணிக்கான அனுமதி வழங்கப்பட்டிருக்கு. ஒவ்வொரு தன்னார்வலருக்கான பணியிடம், பணி நேரம் மாறுபடும். ஒலிம்பிக் திருவிழாவுல போட்டிகள் நடக்கும் 17 நாள்களும் எனக்குப் பணி ஒதுக்கப்பட்டிருக்கு. ஒவ்வொரு நாளும் ஒன்பது மணி நேரம் எனக்கு வேலை இருக்கும். எங்களுக்கான மேற்பார்வையாளர்கிட்ட தன்னார்வலர் பணிக்கான விவரங்களைக் கேட்டுத் தெரிஞ்சுக்கிறதோடு, ஒவ்வொரு நாளும் பணி முடிஞ்சதும் அவரிடமே அறிக்கை கொடுப்போம்.

கவிதா

Also Read: ''ஒலிம்பிக் வரை வந்ததே பெரும் கனவு'' - நாடற்றவர்களின் முகமாக மிளிர்ந்த லூனா சாலமன்!

ஜப்பான் நாட்டு வீரர்களின் தேவைக்காக அல்லது மற்ற நாட்டு வீரர்களின் தேவைக்காகனு விருப்பத்தின் பேர்ல ஏதாவது பிரிவுல தன்னார்வலர்கள் வேலை செய்யலாம். நான் இந்திய வீரர்களுக்கு உதவுறதுக்காக வேலை செய்யுறேன். வீரர்களுக்குத் தேவையான தகவல்கள், கோவிட் பாதுகாப்புக்கான ஏற்பாடுகள், கார் புக்கிங், தங்கும் இடத்துக்குப் போறது, மொழி பெயர்ப்புனு அத்தியாவசிய உதவிகளைச் செய்து கொடுப்பது எங்களோட வேலை. அந்த வகையில, ஒலிம்பிக்ல பங்கேற்கும் இந்திய வீரர்கள் பலருக்கும் இயன்ற உதவிகளைச் செய்யும் வாய்ப்பு எனக்குக் கிடைச்சிருக்கு. தன்னார்வலர்களுக்கு அடையாள அட்டை கொடுத்திருக்காங்க. ஊதியம் உள்ளிட்ட சிறப்புச் சலுகை எதுவும் எங்களுக்குக் கிடையாது. குடிநீர், மதிய உணவு வசதிகளுடன், பயணப்படியைக் கொடுத்திடுவாங்க. ஒலிம்பிக் திருவிழாவுல பங்களிப்பு செய்யுற பெரிய வாய்ப்பு, எனக்கும் கிடைச்சதுல அளவில்லா மகிழ்ச்சி. எனவே, பிரதிபலன் எதிர்பார்க்காம ஆயிரக்கணக்கான தன்னார்வலர்கள்ல ஒருவரா நானும் இந்தப் பணியைச் செய்யுறேன்" என்று உவகையுடன் முடித்தார்.



source https://cinema.vikatan.com/sports-news/olympic-volunteer-kavitha-shares-about-her-tokyo-olympics-2020-experience

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக