Ad

புதன், 28 ஜூலை, 2021

`இந்தியக் கடல் இனி மீனவனுக்குச் சொந்தமில்லையா?' -புதிய கடல் சட்ட திட்டங்கள் சொல்வதென்ன? ஓர் அலசல்

நிலமும் கடலும்:

நிலத்தில் இருக்கும் பிரபஞ்சம் கடல். நில உலகின் வெற்றிடத்தை காற்று நிரப்பியுள்ளதைப்போல, அந்த உலகத்தை நீரும் சேர்ந்து நிரப்பியுள்ளது. இரு உலகிலும் காடுகள், மேடுகள், குன்றுகள், பள்ளத்தாக்குகள் போன்ற எல்லா அமைப்புகளும் உள்ளன. ஒரு செல் உயிரினங்கள் முதல் பாலூட்டிகள் வரை, எண்ணிலடங்கா உயிரினங்களின் உறைவிடமாக, ஒற்றை பூமியின் இரட்டை உலகமாக திகழ்கின்றன நிலமும், கடலும்.

விவசாயிகள் நிலத்தை உழுது உணவு தானியங்களை அறுவடை செய்வதைப்போல, மீனவர்கள் கடலில் சென்று மீன் அறுவடை செய்கிறார்கள். பச்சைநிலமோ, நீலக்கடலோ இரண்டுமே ஒருவகையில் உணவுதரும் விவசாயம் தான். அவை சோறுபோடும் தாயகம் தான்!

இந்த அளவுக்கு நிலத்தையும் கடலையும் ஒப்பீடு செய்வதற்கு காரணங்கள் இல்லாமல் இல்லை. இந்த கட்டுரையின் சாரமே அதிலொன்றுதான். முடிவில் அது விளங்கும்.

கடல் வணிகம்

மனிதன் வான்வெளியை அளந்த அளவுக்கு, வான் பிரபஞ்சத்தை ஆராய்ந்த அளவுக்கு, கடலை இன்னும் அறிந்திடவில்லை. கடலைப்பற்றி அவன் தெரிந்துகொண்டது எல்லாமே வெறும் ஐந்து சதவீதத்துக்குள்ளாக அடங்கிவிடும் என்போருண்டு. அந்தக்குறையை தீர்ப்பதற்காகத்தான் உலகின் வல்லரசு நாட்டு மனிதர்களெல்லாம் தற்போது கடலில் குதிக்கத் தொடங்கிவிட்டனர். அவர்களுடன் விண்வெளியில் போட்டிப்போட்ட இந்தியாவும், தற்போது கடல்வெளி போட்டியில் முந்திக்கொண்டு குதித்துள்ளது. அதற்காக பிரத்யேக சட்ட திட்டங்களையும் கொண்டுவந்துள்ளது. ஆம், அவை வெறும் கடல் ஆராய்ச்சிக்காக மட்டுமல்ல, கடலில் இருக்கும் கனிம வளங்களை வெட்டி எடுப்பதற்காவும் தான் களமிறங்கியுள்ளது என்கிறார்கள் சுற்றுசூழல் ஆர்வலர்கள்.

அப்படி ஆழ்கடலில் கொட்டிக்கிடக்கும் கனிம வளங்களைத் தோண்டி எடுக்கவும், அவற்றை எடுக்கத் தடையாக இருக்கும் மீனவர்களை அப்புறப்படுத்தும் படியாகவும், ஒன்றிய அரசு பல்வேறு கடல்சார்ந்த சட்ட திட்டங்களை கொண்டு வருகிறது என நிதமும் போராடி வருகிறார்கள் மீனவர்கள்.

புதிய சட்டங்கள்:

இந்திய அரசாங்கம் அண்மைக்காலத்தில் மட்டும் பல்வேறு கடல் சார்ந்த திட்டங்களை தீட்டியுள்ளது. அவை பெரும்பாலும் மீனவர்களின் வாழ்வாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் நலனை மிகவும் அச்சுறுத்தும் வகையில் அமைந்துள்ளன. குறிப்பாக, சாகர் மாலா திட்டம், ஹைட்ரோகார்பன் திட்டம், ஆழ்கடல் ஆராய்ச்சி திட்டம் போன்றவற்றைக் கொண்டு வந்தும், இந்திய கடல்மீன் வள சட்ட மசோதா 2021, இந்திய துறைமுகங்கள் சட்ட மசோதா 2021 என அடுத்தடுத்த புதிய சட்ட திட்டங்களைக் கொண்டு வந்து நிறைவேற்றவும் நிற்கிறது ஒன்றிய அரசு.

அவற்றில் மிக முக்கியமான இரண்டு சட்ட, திட்டங்களைப்பற்றி தான் இந்தக்கட்டுரையில் பார்க்கப்போகிறோம்.

அவற்றிலொன்று, அமலில் இருக்கும் ஆழ்கடல் ஆராய்ச்சி திட்டம் (Deep Ocean Mission) மற்றொன்று அமல்படுத்தப்போகும் இந்திய கடல்மீன் வள சட்டம் 2021 (Indian Marine Fisheries Bill, 2021).

கடல் மட்ட உயர்வு

இந்திய அரசின் இந்த புதிய சட்ட திட்டங்களை அரசியல் வல்லுநர்கள், "கடலின் வளங்களை அளவில்லாமல் எடுக்க, ஆழ்கடல் ஆராய்ச்சித் திட்டமும், கடலிலிருந்து மீனவர்களை அப்புறப்படுத்த இந்திய கடல்மீன் வள சட்டமும் கொண்டு வருகிறார்கள்” என கடுமையாக விமர்சிக்கின்றனர்.

இந்திய அரசு கடல் சம்பந்தமாக பல்வேறு திட்டங்களைக் கொண்டுவந்தாலும், தற்போது பூதாகரமாக கிளம்பியுள்ள இந்த இரு திட்டங்களைப்பற்றி தான், இந்த கட்டுரைத்தொகுப்பு விரிவாக விளக்கவுள்ளது. இந்த கட்டுரையை அரசின் அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்களே வழிநடத்துகின்றன.

இந்திய கடல்கள்:

இந்திய அரசின் கடல் திட்டங்களைப் பற்றி அறிவதற்கு முன், இந்தியாவின் கடல்களைப் பற்றியும் அது உள்ளடக்கி வைத்திருக்கும் உயிருள்ள மற்றும் உயிரற்ற வளங்களின் செரிவைப் பற்றியும் அறிந்துகொள்ள வேண்டியது மிக அவசியம்.

இந்தியா அரபிக்கடல், வங்காள விரிகுடா, இந்தியப்பெருங்கடல் என முப்பகுதிகளிலும் கடலால் சூழப்பட்ட ஓர் தீபகற்பமாகும். இந்தியாவின் கடற்கரை (Coastline) சுமார் 7,517 கி.மீ. நீளமுடையது. 1,382 தீவுகளையும் உள்ளடக்கியிருக்கிறது. மேலும், இந்திய கடலில் 23 லட்சம் ஸ்கொயர் கி.மீ. (2,305,143 sq.km) பரப்பளவு சிறப்பு பொருளாதார மண்டலமாக (Exclusive Economic Zone (EEZ)) குறிக்கப்பட்டுள்ளது. இந்திய மக்களில் 30% சதவீதம் பேர் கடலோரத்தில் தான் வாழ்கின்றனர். இந்தியாவிலுள்ள 9 கடலோர மாநிலங்களில், சுமார் 3,827 மீனவ கிராமங்கள் உள்ளன.

மீனவர்கள்

தமிழ்நாடு, இந்தியாவின் இரண்டாவது நீளமான(1,076 கி.மீ) கடற்கரையைக் கொண்டுள்ளது. தமிழக கடலின் சிறப்பு பொருளாதார மண்டலமாக 1.9 லட்சம் ஸ்கொயர் கி.மீ. பரப்பளவில் உள்ளது. தமிழ்நாட்டின் 14 கடற்கரை மாவட்டங்களில் சுமார் 608 மீனவகிராமங்கள் உள்ளன. இங்கு சுமார் 10.48 லட்ச மீனவ மக்கள் வாழ்கின்றனர்.

இந்தியக் கடல்களின் வளங்கள்:

இந்தியாவின் கடல் வளத்தை இரண்டுவகையாக பிரிக்கலாம். ஒன்று மீன் வளம் (Living Resources) மற்றொன்று கனிம வளம் (Non-living Resources / oil and minerals).

மீன் வளம்:

இந்தியா மீன் உற்பத்தியில் உலக அளவில் மூன்றாவது இடத்தில் உள்ளது. இந்தியாவின் மொத்த ஜிடிபி-யில் 1.7% சதவீத பங்கு மீன்பிடித் தொழிலில் உள்ளது. ஒன்றரைகோடி இந்திய மக்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கும் மிகப்பெரிய துறையாக இது விளங்குகிறது. மீன் மற்றும் மீன் சார்ந்த பொருட்கள் ஏற்றுமதியில் மட்டும் ஆண்டுக்கு 60,000 கோடி ரூபாய் (தோராயமாக) அந்நிய செலாவணியை ஈட்டித்தருகிறார்கள் இந்திய மீனவர்கள்.

பாம்பனில் மீனவர்கள் விழிப்பு பிரசாரம்
Image by Erich Westendarp from Pixabay

கனிம வளம்:

இந்தியாவின் குஜராத் அரபிக் கடல் தொடங்கி கேரளா, தமிழ்நாடு என கொல்கத்தாவின் வங்காள விரிகுடா வரை கடற்கரையிலும், ஆழ்கடலிலும் ஏராளமான கனிம வளங்கள் கொட்டிக்கிடக்கின்றன.

குறிப்பாக, பாம்பே ஹை-மும்பை, கொங்கன் -கேரளா உள்ளிட்ட அரபிக்கடலிலும், தமிழ்நாட்டின் காவேரிப்படுகை (Cauvery Basin), ஆந்திராவின் கிருஷ்ணா-கோதாவரி படுகை (KG Basin) உள்ளடக்கிய வங்கக்கடலிலும் கணக்கிலங்காத எண்ணெய் (Petroleum) வளங்கள், மீத்தேன் உள்ளிட்ட இயற்கை எரிவாயுக்கள் மற்றும் நிலக்கரி படிமங்களும் நிரம்ப கிடக்கின்றன. இதுமட்டுமல்லாமல், தமிழ்நாடு, கேரளா, ஒரிசா உள்ளிட்ட மாநிலங்களின் கடலோர மணற்பகுதியில் கார்னெட், சிலிமனைட், மோனசைட், கையனைட், தோரியம் உள்ளிட்ட தாதுப்பொருட்கள் மிகுதியாக உள்ளன.

அதுமட்டுமில்லாமல், இந்தியப்பெருங்கடலின் ஆழ்கடல் பரப்பில் மாங்கனீசு, இரும்பு, தாமிரம் உள்ளிட்ட கனிமங்களின் தொகுப்பு (Polymetallic nodules) அளவிடமுடியாதவாறு பரந்து விரிந்துள்ளன.

ஆழ்கடல் ஆராய்ச்சித் திட்டம்: (Deep Ocean Mission)

இந்திய அரசின் லட்சிய கனவு திட்டம் தான் இந்த ஆழ்கடல் ஆராய்ச்சித் திட்டம்! கனவுத் திட்டம் என்றால் அரைநூற்றாண்டுகள் கடந்த ஒரு கனவுத் திட்டம். இந்த திட்டத்தின் நோக்கமாக இந்திய அரசு ஆறு முக்கிய கூறுகளை முன்வைக்கிறது.

அதானி துறைமுகம்

1. ஆழ்கடலில் சுரங்கம் அமைக்க மற்றும் மனிதன் செல்லவதற்கான தொழில்நுட்பக் கருவிகள் உருவாக்கம் (Development of Technologies for Deep Sea Mining, and Manned Submersible)

2. பெருங்கடல் காலநிலை மாற்றம் மற்றும் வானிலை ஆய்வை மேம்படுத்தல் (Development of Ocean Climate Change Advisory Services)

3. ஆழ்கடல் பல்லுயிரினங்களை ஆராய மற்றும் பாதுகாப்பதற்கான தொழில்நுட்பக் கருவிகள் கண்டுபிடித்தல் (Technological innovations for exploration and conservation of deep-sea biodiversity)

4.ஆழ்கடல் ஆய்வு மற்றும் அகழாய்வு (Deep Ocean Survey and Exploration)

5. கடலிலிருந்து எரிசக்தி மற்றும் குடிநீர் பெறுதல் (Energy and freshwater from the Ocean)

6. கடல் உயிரியல் ஆராய்ச்சி நிலையம் அமைத்தல் (Advanced Marine Station for Ocean Biology)

ஆழ்கடல் ஆராய்ச்சித் திட்டத்தின் செயல்பாடுகள், பயன்பாடுகள் மற்றும் பாதிப்புகள் பற்றி அறிவதற்கு முன்னர் ஒரு புரிதலுக்காக அத்திட்டத்தின் தொடக்கம், வளர்ச்சி குறித்தான காலக்கோட்டைக் காண்போம்.

இந்திய வரலாறு

ஆரம்பகால வரலாறு:

இந்தியா சுதந்திரம் பெற்ற 1947-ம் ஆண்டிலேயே, கடல் ஆராய்ச்சிக்கான முயற்சிகளும் தொடங்கப்பட்டு விட்டன. முதலாவதாக, தமிழ்நாட்டிலுள்ள ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தில் "மத்தியக் கடல்மீன்வள ஆராய்ச்சி நிலையத்தை" (Central Marine Fisheries Research Institute - CMFRI) இந்திய அரசு நிறுவியது. பின்னர்,1971-ம் ஆண்டு இந்த நிலையம் கேரளாவின் கொச்சிக்கு மாற்றப்பட்டது.

ஐ.நா.வின் உலகளாவிய கடல் அறிவியல் சேவைக்காக தொடங்கப்பட்ட, யுனெஸ்கோவின் அனைத்துலக கடல்சார் ஆணையம் (Intergovernmental Oceanographic Commission (IOC)) மற்றும் பெருங்கடல் ஆராய்ச்சிக்கான அறிவியல் குழு (The Scientific Committee on Ocean Research (SCOR)) ஆகியவை உலகில் உள்ள பெருங்கடல்களில் மிகக் குறைந்த அளவு ஆராய்ச்சி செய்யப்பட்ட கடல் ``இந்தியப் பெருங்கடல்" என்ற உண்மையை உணர்ந்தது. எனவே, 1959-ம் ஆண்டு செப்டம்பர் மாதம், நியூயார்க்கில் ஒரு சர்வதேச கடல்சார் மாநாட்டை நடத்தியது.

உலக வரைபடம்

சுமார் 45 நாடுகளிலிருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடல்சார் அறிஞர்கள் கலந்துகொண்ட அந்த மாநாட்டில், முதன்முதலாக "சர்வதேச இந்தியப் பெருங்கடல் பயணத் திட்டம்" (International Indian Ocean Expedition (IIOE)) என்ற மாபெரும் திட்டத்தை அறிவித்தது. அதன்படி, 1960 முதல் 1965 வரை இந்தியா, பாகிஸ்தான், அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட இருபதுக்கும் மேற்பட்ட நாடுகள் கூட்டுசேர்ந்து இந்திய கடல் ஆராய்ச்சியில் ஈடுபட்டன. சுமார் 350-க்கும் மேற்பட்ட கடல்சார் அறிஞர்கள் மேற்கொண்ட ஆராய்ச்சியில், பல்வகையான கனிம வளங்கள் இந்தியப் பெருங்கடல் பரப்பில் தாராளமாக கொட்டிக்கிடப்பது கண்டறியப்பட்டன.

அதன் பின்னர் இந்திய அரசு கடல் துறை சார்ந்த பல்வேறு சீர்திருத்தங்களை மேற்கொண்டது. முதலாவதாக, 1966-ம் ஆண்டு தேசிய கடல்சார் நிறுவனத்தை (National Institute of Oceanography(NIO)) தொடங்கியது. முக்கியமாக, 1976-ம் ஆண்டு இந்திய நாடாளுமன்றத்தில் பிராந்திய நீர்நிலைகள்( Territorial Waters), Continental Shelf என அழைக்கப்படும் ஆழமற்ற கடல் பகுதி, சிறப்பு பொருளாதார மண்டலம்(EEZ) மற்றும் பிற கடல் மண்டலங்கள் சார்ந்த பல புதிய சட்டங்கள் இயற்றப்பட்டன. மேலும், 1977 ஜனவரியில் 200 மைல் சிறப்பு பொருளாதார மண்டலத்தை நிறுவி, கடல் தொடர்பான நடவடிக்கைகளுக்கு ஒரு புதிய பரிமாணத்தை சேர்த்தது.

அடுத்தகட்டமாக, 1981-ம் ஆண்டு அப்போதைய இந்திய பிரதமர் இந்திராகாந்தி தனது நேரடி கட்டுப்பாட்டின் கீழ், பெருங்கடல் மேம்பாட்டுத் துறையை (Department of Ocean Development (DOD)) உருவாக்கினார். அது, 1982 மார்ச் மாதம் தனி துறையாக மாற்றம்பெற்றது. அதுவே பின்னர், 2006-ம் ஆண்டு மறுசீரமைக்கப்பட்டு, புவி அறிவியல் அமைச்சகமாக (Ministry of Earth Sciences (MoES)) விரிவு செய்யப்பட்டது.

ஐ.நா.

1982-ம் ஆண்டு ஐ.நா.வின் சர்வதேச கடல் சட்டம் (United Nations Convention on the Law of the Sea (UNCLOS)) குறித்தான முக்கிய முடிவுகள் எடுக்கும் மூன்றாவது மாநாடு (UNCLOS III) நடைபெற்றது. அம்மாநாட்டில், உலகப் பெருங்கடல்களைப் பயன்படுத்துவது, வணிகம், சுற்றுச்சூழல், சிறப்பு பொருளாதார மண்டலம் (EEZ) மற்றும் கடல் இயற்கை வளங்களை நிர்வகிப்பது போன்றவற்றில் சர்வதேச நாடுகளுக்கு இருக்கும் உரிமைகள் மற்றும் பொறுப்புகள் வரையறுக்கப்பட்டன.

இந்தியப் பெருங்கடல் பரப்பில் ஆழ்கடல் ஆராய்ச்சி மேற்கொள்வதற்காக சுமார் 1,50,000 ச.கி.மீ. பரப்பளவு இந்தியாவிடம் ஐ.நா.வால் ஒப்படைக்கப்பட்டது.

1993-ம் ஆண்டு, கடல் ஆராய்ச்சிக்காக தேசிய கடல்சார் தொழில்நுட்ப நிறுவனம் (National Institute of Ocean Technology (NIOT)) சென்னையில் தொடங்கப்பட்டது.

ஐநாவின் இந்த சர்வதேச ஒப்பந்தத்தின்கீழ் அறுபதுக்கும் மேற்பட்ட நாடுகள் உறுப்பினர்களாக கூட்டு சேர்ந்தன. இதன் விளைவாக, 1994-ம் ஆண்டு, ஐ.நா.வின் தன்னாட்சி பெற்ற அமைப்பாக "சர்வதேச கடற்படுகை ஆணையம்" (International Seabed Authority (ISA)) அமைக்கப்பட்டது. இந்த ஆணையம் அகழாய்வு செய்வதற்காக கடல் பகுதிகளை அந்தந்த நாடுகளுக்கு ஒதுக்கியது.

2030-ன் சக்தி வாய்ந்த பொருளாதார நாடுகள் பட்டியல்... இந்தியாவுக்கு 3-ம் இடம்!

இந்தியா தனது ஆழ்கடல் ஆய்வுப் பணிகளை முடித்த பின், 2002 மார்ச் 24-ம் தேதி சர்வதேச கடற்படுகை ஆணையத்திடம் (ISA) ஒரு ஒப்பந்தம் போட்டுக்கொண்டது. அதில், தனக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட 1.5 லட்சம் ச.கி.மீ. மொத்த பரப்பில், 50% சதவீத பரப்பளவை திருப்பி அளித்தது. அதாவது, மத்திய இந்தியப் பெருங்கடல் பகுதியில் அகழாய்வு செய்வதற்காக 75,000 ச.கி.மீ. பரப்பளவை மட்டும் தன்னிடத்தில் வைத்துக்கொண்டது.

இந்த குறிப்பிட்ட இடத்தை மட்டும் உணர்ந்துகொண்டால் தற்போது நிகழும் பலவற்றிற்கான பாதி உண்மைகள் தெளிந்துவிடும். அதாவது,

மத்திய இந்தியப் பெருங்கடல் பரப்பில் அப்படி என்ன இருக்கிறது?

சர்வதேச கடற்படுகை ஆணையத்தின் (ISA) ஒப்பந்தப்படி, மத்திய இந்தியப் பெருங்கடலில் (Central Indian Ocean Basin(CIOB)), சுமார் 75,000 ச.கி.மீ. பரப்பளவுக்கு ``பாலிமெட்டாலிக் முடிச்சுகளை" (Polymetallic nodules or Manganese nodule) எடுக்கத் திட்டமிட்டுள்ளது. பாலிமெட்டாலிக் முடிச்சுகள் என்பவை கோபால்ட், நிக்கல், காப்பர், மாங்கனீஸ் போன்ற பல கனிமங்கள் ஒன்றுசேர்ந்த ஒரு உருண்டைத் தொகுப்புகளாகும்.

இதுமட்டுமல்லாமல், தங்கம், பிளாட்டினம் போன்ற கிடைப்பதற்கரிய கனிமவளங்களைக் கொண்ட ``ஹைட்ரோதெர்மல் சல்பைட் (Hydrothermal Sulphides)" தொகுப்புகளும் இந்தியப்பெருங்கடல் பரப்பில் உள்ளன.

இந்தியக் கடல்

இதேபோல், இந்தியாவின் அரபிக் கடல் மற்றும் வங்காள விரிகுடா மற்றும் அந்தமான் தீவுப் பகுதிகளிலும் ஆய்வாளர்களால் அளவிடமுடியாத அளவுக்கு இதர கனிம வளங்கள் நிறைந்துள்ளன. ஆழ்கடலில் மட்டுமல்லாமல், இந்தியக் கடலோர தரைப்பகுதியிலும் (continental shelf), ஆழமற்ற கடல்பகுதியிலும் (Sallow Water) இயற்கை வாயுக்கள், எண்ணெய் பெட்ரோலிய எரிபொருட்கள், நிலக்கரி, மீத்தேன், உள்ளிட்ட வளங்கள் நிரம்பியுள்ளன.

மேலும் 220 டிரில்லியன் டன் அலுமினியம், 650 டிரில்லியன் டன் இரும்பு, 73 டிரில்லியன் டன் டைட்டானியம் மற்றும் 15 டிரில்லியன் டன் அளவுக்கு வெனடியம், காரீயம், தாமிரம், கோபால்ட், நிக்கல் என நிலத்தில் கிடைக்கும் வளங்களை விட பன்மடங்கு கடற்பகுதியில் இருக்கின்றன.

புதிதிலும் அரிதாக, கடந்த 2014 முதல் 2016 வரை நடத்தப்பட்ட ஆய்வில், முதன் முறையாக இந்தியப் பெருங்கடல் பரப்பில் "இயற்கை எரிவாயு ஹைட்ரேட்" (Natural gas Hydrate) கண்டுபிடிக்கப்பட்டது. இந்திய எண்ணெய் எரிவாயு அமைச்சகம் (Oil Ministry of India) மற்றும் அமெரிக்க நிலவியல் துறை (US Geological Survey) இணைந்து மேற்கொண்ட ஆய்வில்,

எரிவாயு ஹைட்ரேட் என்பது மீத்தேன், ஈத்தேன் மற்றும் கார்பன்-டை-ஆக்சைடு (such as methane, ethane, or carbon dioxide) கலந்த வாயுக்கலின் கலவையாகும். பெரும்பாலும் அவை மீத்தேன் (CH4) வாயுவால் உருவாகின்றன. அதிக அதிர்த்தி கொண்ட இந்த இயற்கை எரிவாயு, ஐஸ் கட்டி (an icy form of the fuel) போன்ற உறை நிலையில் இருக்கும்.

தங்கம், வெள்ளி, கச்சா எண்ணெய், காப்பர்

இயற்கை வாயுவின் மிகப்பெரிய வளமான இவை, வங்காள விரிகுடா மற்றும் அந்தமான் நிக்கோபார் தீவுப்பகுதிகளில் மிகுதியாக காணப்படுகிறது.

ஆழ்கடல் அகழாய்வு திட்டத்தின் மறுமலர்ச்சி:

அரைநூற்றாண்டு காலமாக மெல்ல அடியெடுத்து நகர்ந்துகொண்டிருந்த ஆழ்கடல் ஆராய்ச்சித் திட்டத்தை, வேகப்படுத்தும் நோக்கில் மிகத்தீவிரமாக கையிலெடுத்தது, மோடி தலைமையிலான ஒன்றிய அரசு.

2016-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஜமைக்காவில் நடைபெற்ற கூட்டத்தில், இந்திய அரசாங்கம், சர்வதேச கடற்படுகை ஆணையத்திடம், மத்திய இந்திய பெருங்கடலில் பாலிமெட்டாலிக் கனிமங்களை (Poly-Metallic Sulphides (PMS)) அகழ்ந்தெடுக்க, 15 ஆண்டு தொடர் ஒப்பந்தம் போட்டுக்கொண்டது. இந்தியாவின் சார்பில், MoES செயலாளர் மாதவன் நாயர் ராஜீவன், ISA பொதுச்செயலாளர் நீ அல்லோடெய் ஓடுன்டனும் (Nii Allotey Odunton) ஒப்பந்ததில் கையெழுத்திட்டனர்.

MoES செயலாளர் மாதவன் நாயர் ராஜீவன், ISA பொதுச்செயலாளர் நீ அல்லோடெய் ஓடுன்டன்

அதனைத்தொடர்ந்து, 2017-ம் ஆண்டு மே மாதம், இந்திய அரசாங்கம் 10,000 கோடி மதிப்பீட்டில் ஆழ்கடல் ஆராய்ச்சித் திட்டத்தை அமல்படுத்தப்போவதாக மத்திய புவி அறிவியல் அமைச்சகத்தின் (MoES) செயலாளர் ராஜீவன் அதிரடியாக அறிவித்தார். அப்போது பேசிய அவர் "ஆழ்கடல் ஆராய்ச்சி திட்டத்தை அமல்படுத்த, மத்திய புவி அறிவியல் அமைச்சகம் கருத்துருவைத் தயாரித்து வருகிறது. விரைவில் இந்த கருத்துரு (Proposal) மத்திய அமைச்சரவையின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்படும்" என்றார்.

புதிய திட்டத்துக்காக, புதிய தொழில்நுட்பக் கண்டுபிடிப்பு:

கடலுக்கடியில் இருக்கும் வளங்களை ஆய்வு செய்யலாம். அதன் கொள்ளளவை மதிப்பீடு செய்யலாம். ஆனால், கடலுக்கடியில் சுரங்கம் அமைத்து, கனிம வளங்களை வெட்டி எடுப்பதென்பது சாதாரண காரியம் அல்ல. நிலத்தில் செய்யப்படும் அகழாய்வை விட பன்மடங்கு சிக்கலானது. அசாத்தியமானதும் கூட. ``இது கடினமான பணிதான்! ஆனால் நாம் குளத்தில் குதிக்காமல், நீச்சல் கற்றுக்கொள்ள முடியாது! அதேபோல், நாங்கள் கடலுக்குள் இறங்காமல், எல்லாவற்றையும் கற்றுக்கொள்ள முடியாது. எனவே நாமே அதற்கான தொழில்நுட்பங்களை உருவாக்கி சாத்தியப்படுத்த வேண்டும்.” என்றார் ராஜீவன்.

கடலடி கனிம வளங்களை அகழ்ந்தெடுப்பதற்கான தொழில்நுட்பங்களை உருவாக்க இந்தியா, ஏற்கனவே கடலாய்வு பணிகளில் அதிஉயர் தொழில்நுட்பத்துடன் செயல்பட்டு வந்த ஜப்பான் மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளிடம் உதவி கேட்டது. ஆனால் அவை மறுத்துவிட்டன.

எனவே தானே சொந்தமாக தயாரிக்கும் முயற்சியில் இந்தியா இறங்கியது. இந்த தொழில்நுட்பத்தை உருவாக்க, புவி அறிவியல் அமைச்சகத்தின் அங்கமாக செயல்படும், தேசிய கடல்சார் தொழில்நுட்ப நிறுவனம் (NIOT) முன்வந்தது.

முதல்கட்டமாக, மூன்று மனிதர்களை சுமந்துகொண்டு, கடலடியில் பயணிக்கும் வகையில் "Submersible Vehicle" எனும் ஆழ்கடல் ஆய்வு வாகனத்தை நாம் வடிவமைக்க வேண்டும் என NIOT இயக்குநர் ஆத்மானந்த் கூறினார். இந்த திட்டத்திற்கு "சமுத்ராயன்" எனப் பெயர் சூட்டப்பது.

Remotely Operable Vehicle (ROV)

ஏற்கனவே, 2016-ம் ஆண்டு அந்தமான் பவளத் (Andaman Coral Island ) தீவுகளில் இந்த நிறுவனம், Remotely Operable Vehicle (ROV) எனும் பிரத்யேக கலனை உருவாக்கி சுமார் 500 மீட்டர் அளவில் ஆழ்கடல் ஆராய்ச்சியை மேற்கொண்டு அதில் வெற்றியும் கண்டது. அந்த வெற்றி கொடுத்த உத்வேகத்தில் அதைவிட பத்துமடங்கு அதிகமான 6,000 மீட்டர் கடல் ஆழத்தில் சென்று அகழாய்வு செய்யக்கூடிய வாகனத்தை (Deep-Sea Crawler) உருவாக்க சபதமேற்றது.

இதற்காக, O-STROMS மற்றும் O-SMART எனும் இரண்டு இணைதிட்டங்களை அறிவித்தது மத்திய புவி அறிவியல் அமைச்சகம். அதாவது, O-STROMS Project என்பது (Ocean Services, Technology, Observations, Resources, Modelling and Science) ஆழ்கடலை ஆராய்ச்சி செய்து கனிம வளங்கள் (Natural resources) மற்றும் பல்லுயிரினத் தொகுப்பை (Bio diversity) கண்டறிவதற்காக ஏற்படுத்தப்பட்டது. O-SMART Project என்பது (Ocean Services, Modelling, Application, Resources and Technology ) ஆழ்கடல் ஆராய்ச்சிக்கான அறிவியல்,பொருளாதார மற்றும் தொழில்நுட்ப உதவி செய்வதற்காக உருவாக்கப்பட்டது.

Matsya 6000

இறுதியாக, இஸ்ரோ (Indian Space Research Organisation(ISRO)), பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி மேம்பாட்டு அமைப்பு (Defence Research and Development Organisation (DRDO)), உயிரி தொழில்நுட்ப வளர்ச்சி துறை (Department of Biotechnology (DBT)), அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி மன்றம் Council for Scientific and Industrial Research (CSIR) உள்ளிட்ட இந்தியாவின் பல்துறை முன்னணி ஆராய்ச்சி நிறுவனங்களின் உதவியோடு, ``Matsya 6000" எனும் பிரத்யேக ஆழ்கடல் ஆராய்ச்சி வாகனத்தின் மாதிரியை சென்னையிலுள்ள தேசிய கடல்சார் தொழில்நுட்ப நிறுவனம் வடிவமைத்தது.

மத்திய இந்தியப் பெருங்கடல் ஆய்வு

இந்நிறுவனம் தனது முதல்கட்ட சோதனை முயற்சியை மேற்கொள்வதற்காக, 2021 கடந்த ஏப்ரல் மாதம் சாகர் நிதி (ORV Sagar Nidhi) என்ற ஆய்வுக் கப்பலின் மூலம் சென்னையிலிருந்து இந்தியப்பெருங்கடல் நோக்கி விரைந்தது. 11 நாட்கள், 3,000 கி.மீ. பயணம் செய்த இந்த ஆய்வுக் கப்பல் ஐ.எஸ்.ஏ. வரையறுத்த மத்திய இந்திய பெருங்கடல் பரப்பை வந்தடைந்து, தனது ஆய்வைத் துவக்கியது. சுமார் 8 டன் எடையுள்ள கிராவ்ளர் வாகனத்தை (Crawler) கடலுக்கடியில் சுமார் 5,270 மீட்டர் ஆழத்திற்கு இறக்கி, அசாத்திய சாதனை படைத்தது.

இதுகுறித்து பேசிய NIOT-ன் இயக்குநர் ராமதாஸ்," இந்த இயந்திரம் கடலுக்கடியில் இருக்கும் பாலிமெட்டாலிக் கனிமங்களை உடைத்து எடுப்பதற்கு பயன்படுத்தப்படும். விரையில் உடைக்கப்பட்ட பாலிமெட்டாலிக் சிதறல்களை கடலின் மேற்பரப்பில் கப்பலுக்கு கொண்டுவரும் அடுத்தகட்ட முயற்சிகள் 2024-ம் ஆண்டுக்குள் முழுமையடையும்" என தெரிவித்திருந்தார்.

காலம் கனிந்தது, கனவு திட்டத்திற்கு நிதி ஒதுக்கப்பட்டது:

ஆழ்கடல் ஆராய்ச்சித் திட்டத்திற்கான அனுமதி மற்றும் நிதி ஒதுக்கீடு கேட்டு மத்திய புவி அறிவியல் அமைச்சகமானது (Ministry of Earth Science -MoES) ஒன்றிய அரசின் பொருளாதார அமைச்சகத்திடம் (Union Finance Ministry) ஒரு முழுமையான ஆய்வறிக்கையை சமர்ப்பித்தது.

நிர்மலா சீதாராமன் - மோடி

2021 பிப்ரவரி மாதம் இதுகுறித்து பேசிய ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், "நமது கடல்பரப்பானது உயிருள்ள மற்றும் உயிரற்ற வளங்களின் (Living & Non-living Resources) கருவூலமாக திகழ்கிறது. இதைப்பற்றி ஆழமாக அறிந்துகொள்ள ஆழ்கடல் ஆராய்ச்சித் திட்டத்தை செயல்படுத்த உள்ளோம். அதற்காக 4,000 கோடி ரூபாய் பட்ஜெட் ஒதுக்க முடிவு செய்துள்ளோம்" என அறிவித்தார்.

இந்நிலையில், இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்காக 2021 கடந்த ஜூன் மாதம் 16-ம் நாள் சுமார் 4,077 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி, பிரதமர் மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவை குழு ஒப்புதல் அளித்திருக்கிறது. முதல் கட்டமாக (2021-2024) மூன்று ஆண்டுக்கு 2,823.4 கோடி ரூபாய் செலவு செய்ய அனுமதியும் வழங்கியிருக்கிறது.

மோடி

இதன் மூலம் ஆழ்கடலில் உள்ள வளங்கள் முழுமையாக ஆய்வுசெய்யப்பட்டு, அகழ்ந்தெடுக்கப்படும். மேலும், இந்தியாவின் அறிவியல், பொருளாதாரம் மற்றும் நிலையான வளர்ச்சிக்கு ஏற்ற நிரந்தரப் பயன்பாட்டுக் கருவூலமாக கடல் மாறும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

ஆழ்கடல் ஆய்வுத்திட்டத்தை வரவேற்று பேசிய அப்போதைய சுற்றுச்சூழல் அமைச்சர் பிரகாஷ் ஜவடேகரும் (Minister of Environment, Forest and Climate Change), "நாட்டின் நீல பொருளாதாரத்தை ஆதரிப்பது ஒரு முக்கியமான முடிவு" என ஒற்றை வரியில் தனது முழு ஆதரவை தெரிவித்தார்.

திட்டத்தால் ஏற்படும் சுற்றுச்சூழல் பேரழிவுகள்:

உலகிலுள்ள இயற்கை வளங்களை பாதுகாப்பதற்காக அமைக்கப்பட்ட, ``சர்வதேச இயற்கை பாதுகாப்பு ஒன்றியம்" (International Union for Conservation of Nature - IUCN), ஆழ்கடல் அகழாய்வால் ஏற்படும் சுற்றுச்சூழல் பேராபத்துகளை பகிரங்கமாகப் பட்டியலிடுகிறது.

பவள நிறமாற்றம்

ஆழ்கடல் பரப்பானது, மிகக் குறைந்த அளவு ஆக்ஸிஜன், சூரிய ஒளி, வெப்பநிலை மற்றும் அதிக உயர் அழுத்தம் போன்ற சூழ்நிலைகளுக்கு ஏற்றபடி வாழும் தனித்துவமான பல அரிய உயிரினங்களின் உறைவிடமாகத் திகழ்கிறது.

கடற்பரப்பின் பாதிப்புகள் (Disturbance of the seafloor):

``இயந்திரங்கள் மூலம் ஆழ்கடல் பரப்பை துளைத்து, சுரங்கம் அமைத்து அகழ்ந்தெடுப்பதால் அத்தகைய உயிரினங்களின் வாழ்விடங்கள் மொத்தமாக அழிந்துபோகும். இவை உயிரினங்களின் உயிரிழப்பை ஏற்படுத்துவதோடு, சுற்றுச்சூழலின் ஒட்டுமொத்த அமைப்பு மற்றும் செயல்பாட்டையே துண்டுத்துண்டாக சிதறடிக்கும். மேலும் இதுபோன்ற செயல்பாடுகளால், வெளி உலகிற்கே தெரியாத அரிய பல உயிரினங்களின் இருப்பை, அறிவியல் உலகம் அறிந்துகொள்வதற்கு முன்பாகவே முற்றிலுமாக அழித்தொழிக்கப்படும். ஆழ்கடல் அகழாய்வின் மிகப்பெரிய பேரழிவு இது!" என எச்சரிக்கிறது ஐ.யூ.சின்.

அழியும் கடல் சூழலியல்

வண்டல் புழுதிகள் (Sediment plumes):

ஆழ்கடல் அகழாய்வின்போது, கடலின் அடிப்பரப்பில் இருக்கும் களிமண்கள் (clay), சேறுகள் (silt), சிதறடிக்கப்பட்ட துகள்கள் மற்றும் நுண்ணியிர்களின் எச்சங்கள் எல்லாம் கிளறப்படும். அந்த வண்டல் புழுதிகள் அனைத்தும் ஒரு புகை மண்டலம் போல கடல்பரப்பெங்கும் பரவும். இது கடலின் மேற்பரப்பில் வாழும் உயிரினங்கள் வரைக்கும் பல்வேறு உயிரினங்களுக்கு தீங்கு விளைவிக்கும். குறிப்பாக, திமிங்கலம், சுறா, கிரில் போன்ற கடலுயிரினங்கள் இதனால் பெருமளவு பாதிக்கப்படும்.

கடல் அகழாய்வு பாதிப்புகள்

கடல் மாசு (Pollution):

அகழாய்வுப் பணி செய்யும் கிராவ்ளர்கள், கடலின் மேற்பரப்பில் இருக்கும் கப்பல்கள், அகழாய்வுக்குப் பயன்படுத்தப்படும் தொழில்நுட்பக் கருவிகள் உள்ளிட்டவற்றால் கடலில் ஒலி-ஒளி மாசுபாடு ஏற்படுகிறது. இந்த வாகனங்கள் ஏற்படுத்தும் சத்தம் மற்றும் அதிர்வுகளால் டுனா, திமிங்கலம், சுறா போன்ற பெரிய உயிரிங்களும் பாதிப்படைகின்றன. அத்துடன் கப்பல்களிலிருந்து வெளியேறும் நச்சுக் கழிவுகள், எண்ணெய் கசிவுகள் போன்றவை தவிர்க்கமுடியாத கூடுதல் பிரச்னைகளை உண்டாக்கும். என ஆழ்கடல் அகழாய்வால் ஏற்படும் பாதிப்புகளை அடுக்குகிறது சர்வதேச இயற்கை பாதுகாப்பு ஒன்றியமான ஐ.யூ.சின்.

கடலில் கச்சா எண்ணெய் தீ விபத்து

ஆடம்பரத் தேவைக்காக அத்தியாவசியத்தை இழக்கும் நிலை:

பாலிமெட்டாலிக் முடிச்சுகளில் இருக்கும் நிக்கல், கோபால்ட், மாங்கனீஸ், காப்பர் போன்ற உலோகங்கள் பெரும்பாலும் "பேட்டரி மெட்டல்ஸ்" (battery metals) என்றே அழைக்கப்படுகிறது. காரணம் இவை, மின்னணு சாதானங்கள் (electronic devices), ஸ்மார்ட்போன்ஸ் (smartphones), பேட்டரிகள் (electric storage batteries), சூரியஒளி பேனல்கள் (solar panels) போன்ற எலக்ட்ரானிக் சாதனங்களைத் தயாரிக்கும் மூலப்பொருட்களாகும்.

இதுபோன்ற உலோகங்கள் தற்போதைய ஆடம்பர உலக சூழலின் தவிர்க்க முடியாத பயன்பாட்டு அங்கமாக கோலோச்சுகின்றன. எனவே, இவற்றின் எதிர்கால இருப்பை நோக்கில் கொண்டு, அனைத்து உயிரினங்களின் ஆதாரமாக விளங்கும் இயற்கைச்சூழலியலின் இயல்பை நிரந்தரமாக சிதைத்து, கனிம வளங்களை எடுப்பது என்பது ஆபத்தை உணர்ந்தும் அபத்தமாக செயல்படும் சர்வதேச வல்லரசுகளின் பேராசைப்போக்கு என்றே உலக மானுடவியலாளர்களும், சுற்றுச்சூழல் செயல்பாட்டார்களும் அச்சத்தோடு விமர்சிக்கின்றனர்

சூழலியல் குற்றங்கள்

பாலிமெட்டாலிக் கனிமங்களை மட்டுமல்ல, இயற்கை எரிவாயு ஹைட்ரேட் எடுப்பதிலும் மிகப்பெரிய ஆபத்து இருக்கிறது எனத் தெரிவிக்கிறது, அமெரிக்காவின் தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் (National Oceanic and Atmospheric Administration (NOAA)). அதாவது, ``எரிவாயு ஹைட்ரேட்டுகள் மிக ஆபத்தானவையாக இருக்கலாம். ஏனெனில் அவற்றை எடுக்கும்போது உண்டாகக்கூடிய அவற்றின் சிதைவு அதிக அளவு மீத்தேன் வாயுவை வெளியிடக்கூடும். இது கிரீன்ஹவுஸ் (Greenhouse gas) வாயு ஆகும். இது பூமியின் காலநிலையை பாதிக்கும்."

மேலும், பிக்லோ எனும் உலகத்தர கடல் அறிவியல் ஆய்வகத்தின் (Bigelow Lab for Ocean Sciences) ஆராய்ச்சியாளர்கள், ஆழ்கடல் அகழாய்வானது ``மாற்றமுடியாத பேரழிவு" (irreversible damage), அதாவது மறுபடியும் மீட்டெடுக்கமுடியாத ஒரு பேரழிவை கடல் சுற்றுச்சூழலில் (Marine ecosystems) ஏற்படுத்தும் என ஒருசேர வாதிடுகின்றனர்.

இந்திய கடல் மீன்வள சட்டம் - 2021 (The Marine Fisheries bill 2021):

இந்திய கடல் மீன்வள சட்டம் எனும் புதிய வரைவு மசோதா தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட உள்ளதாக தெரிவிக்கிறது. இது தனி சட்டம் என்றாலும், ஆழ்கடல் ஆராய்ச்சி திட்டத்தின் பிரிக்க முடியாத அங்கமாக, அதன் பின்னணியில் இந்த சட்டம் இருப்பதாகவும் சந்தேகிக்கப்படுகிறது.

மீனவர்கள்

காரணம், கடலில் ஆழ்கடல் அகழாய்வுப்பணி மேற்கொள்வதற்கு இடையூராக மீனவர்கள் இருப்பார்கள் என்பதை உணர்ந்து தான், பன்னெடுங்காலமாக கடலில் அவர்களுக்கு இருக்கும் மீன்பிடி மரபுரிமையை பறிக்கும் வகையில், புதிய இந்திய கடல் மீன்வள சட்டம் கொண்டுவரப்பட உள்ளதாக மீனவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இந்த சட்டத்தை தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, குஜராத் போன்ற கடலோர மாநில அரசுகள் எதிர்த்து வருகின்றன. அனைத்து மீனவ சமுதாய மக்களும் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றன. மீனவர்கள் இந்த சட்டத்தை எதிர்த்து போராடுவதற்கான காரணம் மற்றும் சட்டம் குறித்தான அவர்களின் கருத்துக்களை அறிய கீழே உள்ள கட்டுரை லிங்க்கை கிளிக் செய்யவும்.

Also Read: தேசிய கடல் மீன்வள ஒழுங்குமுறை வரைவுச் சட்டம்: `உலக வரலாற்றிலேயே மோசமானது’ - கொந்தளிக்கும் மீனவர்கள்

கடந்த சில ஆண்டுகளில் மட்டும் இந்திய அரசு மேற்கொண்ட சட்ட திருத்தங்கள், கடல்சார் திட்டங்கள் :

ஏற்கனவே இந்தியாவின் கடற்பகுதிகளில் ஓ.என்.ஜி.சி., ரிலையன்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் பெட்ரோலியம் எடுக்கின்றன. தமிழகத்தின் மரக்காணம் முதல் கோடியக்கரை வரை காவிரி டெல்டாவின் கடலோரப்பகுதிகளில் ஹைட்ரோகார்பன் (Hydrocarbon Project), கச்சா எண்ணெய் எடுக்க இந்திய அரசுத்துறை நிறுவனமான ஓ.என்.ஜி.சி. மற்றும் தனியார் வேதாந்தா நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கியிருக்கிறது இந்திய அரசு. இந்த நிறுவனங்கள் கனிம வளங்களை எடுப்பதற்கு வசதியாக, கட்டுப்பாடுகள் நிறைந்த பழைய நெல்ப் (NELP- New Exploration Licensing Policy) லைசென்ஸ் சட்டத்தை மாற்றி, புதிதாக ஹெல்ப் (Hydrocarbon Exploration and Licensing Policy - HELP) எனும் ஒற்றை லைசென்ஸ் அனுமதியை இந்திய அரசு கொண்டு வந்தது.

'நாங்க வச்சதுதான் சட்டம்!' மோடி ஆட்சியில் மாற்றியமைக்கப்பட்ட சூழலியல் சட்டங்கள் #VikatanPhotoCards

மேலும், கடந்த 2020-ம் ஆண்டு, "தேசிய முக்கியத்துவம் வாய்ந்த அல்லது தேசிய நலன் சார்ந்த திட்டங்களுக்கு இனி சூழலியல் மதிப்பீடு தேவையில்லை" என்ற கருத்துருவை உள்ளடக்கிய புதிய சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு (Environmental impact assessment (EIA)) சட்டத்தையும் இந்திய அரசு கொண்டு வந்ததும் தற்போது நிலுவையில் நிற்கிறது.

ஒன்றிய அரசின் இதுபோன்ற திட்டங்களால், நாட்டின் இரண்டாவது மிக நீளமான கடற்கரையை கொண்டிருக்கும் தமிழ்நாடு பெரிய அளவில் பாதிக்கப்படும் என தமிழக அரசியல் தலைவர்கள் கருத்துகின்றனர். குறிப்பாக, இந்தியப் பெருங்கடல் பரப்பில் அகழாய்வு திட்டம், வங்காள விரிகுடாவில் ஹைட்ரோகார்பன் திட்டம், சென்னை முதல் கன்னியாகுமரி முதல் கிழக்கு கடற்கரை சாலை அமைத்தல், இணையம், குளச்சல் துறைமுக திட்டம் போன்ற பல திட்டங்கள் தமிழ்நாட்டின் மாநில உரிமையை பறிப்பதோடு, தமிழக மீனவர் வாழ்வாதாரம் மற்றும் கடல்வளங்களை சிதைக்கக்கூடும் எனவும் அச்சம் தெரிவிக்கின்றனர்.

சூழலியல்

முடிவில்லாத முடிவுரை:

இன்று 'மனிதன் பூமி பிளக்க தோண்டுகிறான், இயற்கை அகழ்வாரைத் தாங்கும் நிலமாக இனியும் இருக்காது! நிச்சயம் எதிர்வினையாற்றும்!'

இதை மனிதன் அறிவானா, இல்லை ஆசைத்தீயில் அழிவானா? என்ற முடிவை அறிய, தெரிந்தோ தெரியாமலோ இந்த உலக சமுதாயம் முழுக்க மெல்ல நகர்ந்துகொண்டிருக்கிறது, கேள்விக்குறியான தங்களின் எதிர்காலம் நோக்கி!



source https://www.vikatan.com/government-and-politics/politics/full-explanations-of-deep-ocean-mission-and-indian-marine-fisheries-bill-2021

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக