Ad

புதன், 28 ஜூலை, 2021

கொரோனா: `நாட்டில் 22 மாவட்டங்கள்; அவற்றில் கேரளத்தில் மட்டும் 7’ - அதிகரிக்கும் பரவலால் அதிர்ச்சி

உலகை அச்சுறுத்திக்கொண்டிருக்கும் கொரோனா கொடுந்தொற்று, இந்தியாவில் இரண்டாம் அலையில் பெரும் சேதாரத்தை ஏற்படுத்தியது. பல மாநிலங்களில் கொரோனா குறைந்துவரும் நிலையில், சில மாநிலங்களில் கொரோனா பரவல் கவலையளிக்கும்விதமாக இருக்கிறது. தமிழ்நாட்டின் அண்டை மாநிலமான கேரளத்தில் கொரோனா தொற்று ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது.

கடந்த 25-ம் தேதி கேரளத்தில் 17,466 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. நேற்று முன்தினம் 11,586 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இந்தநிலையில், நேற்று இந்த எண்ணிக்கை எதிர்பாராதவிதமாக உயர்ந்திருக்கிறது. நேற்று மட்டும் 22,129 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதையடுத்து கேரளத்தில் கொரோனா பாதித்து சிகிச்சையில் இருப்பவர்கள் எண்ணிக்கை 1,45,371-ஆக உயர்ந்துள்ளது. ஒரே நாளில் 156 பேர் மரணம் அடைந்துள்ளனர். மொத்த மரண எண்ணிக்கை 16,326-ஆக உயர்ந்துள்ளது. மாநிலம் முழுவதும் 4,36,387 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

கேரளா

மாவட்டவாரியாக கணக்கிடும்போது மலப்புரம் மாவட்டத்தில் 4,037 பேருக்கு நேற்று கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. திருச்சூர் மாவட்டத்தில் 2,623, கோழிக்கோடு 2,397, எர்ணாகுளம் 2,352, பாலக்காடு 2,115, கொல்லம் 1,914, கோட்டயம் 1,136, திருவனந்தபுரம் 1,100, கண்ணூர் 1,072, ஆலப்புழா 1,064, காஸர்கோடு 813, வயநாடு 583, பத்தனம்திட்டா 523, இடுக்கி மாவட்டத்தில் 400 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

இந்தநிலையில், இந்தியாவில் 22 மாவட்டங்களில் கொரோனா பரவல் அதிர்ச்சியளிக்கும் வகையில் அதிகரித்துவருவதாக மத்திய சுகாதாரத்துறை இணைச் செயலர் லவ் அகர்வால் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியுள்ளார். அதில் ஏழு மாவட்டங்கள் கேரள மாநிலத்தைச் சேர்ந்தவை. கேரளத்தின் ஆலப்புழா, கோட்டயம், மலப்புரம், திருச்சூர், வயநாடு, எர்ணாகுளம், பத்தனம்திட்டா ஆகிய ஏழு மாவட்டங்களில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்திருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

கொரோனா பாதிப்பு

கொரோனா அதிகரித்துவருவதால் மாநில அரசுடன் இது குறித்து விவாதித்திருப்பதாகவும், கொரோனா அதிகரித்துவரும் மாவட்டங்களில் எந்தக் காரணத்கைக் கொண்டும் தளர்வுகள் ஏற்படுத்தக் கூடாது என அறிவுறுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார். கேரளத்தில் பத்து மாவட்டங்களில் கொரோனா பாசிட்டிவ் விகிதம் 10 சதவிகிதமாக இருப்பதாக லவ் அகர்வால் தெரிவித்திருக்கிறார். கேரள மாநிலத்தில் ஓணம் பண்டிகை அடுத்த மாதம் கொண்டாடப்படவிருக்கிறது. இந்தநிலையில், கொரோனா அதிகரித்துவருவதால் ஓணம் பண்டிகை கடந்த ஆண்டைப்போல கடும் கட்டுப்பாடுகளுடன் கொண்டாடும் நிலை ஏற்படும் எனக் கூறப்படுகிறது.



source https://www.vikatan.com/news/india/corona-numbers-are-increasing-in-kerala-2

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக