கேரள மாநிலத்தில் கடந்த 2016-2021 சி.பி.எம் ஆட்சியில் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தவர் கே.கே.சைலஜா. மழை வெள்ள பிரளயம், நிபா வைரஸ், கொரோனா வைரஸ் ஆகியவற்றுக்கு எதிராக சிறப்பாக செயல்பட்டதாக புகழப்பட்டவர் கே.கே.சைலஜா. 2021-ல் சி.பி.எம் மீண்டும் ஆட்சி அமைத்த சமயத்தில் கே.கே.சைலஜா மீண்டும் சுகாதாரத்துறை அமைச்சர் ஆவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், முதல்வர் பினராயி விஜயன் தவிர பழைய அமைச்சர்களுக்கு யாருக்கும் மீண்டும் வாய்ப்பு இல்லை என்று அறிவிக்கப்பட்டது. மேலும், இந்தமுறை புதியவர்களுக்கு அமைச்சர் வாய்ப்பு வழங்கப்பட்டது.
இதுபற்றி அப்போது கருத்து தெரிவித்த கே.கே.சைலஜா, ``கட்சி கடந்தமுறை அமைச்சராக பணி செய்ய வாய்ப்பு வழங்கியது. இந்த முறை எம்.எல்.ஏ-வாக பணிசெய்யும்படி கூறியுள்ளது, அவ்வளவுதான். இப்போது அமைச்சர்களாக நியமிக்கப்பட்டவர்கள் தகுதிவாய்ந்தவர்கள்தான்” என கூறியிருந்தார். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக கேரள சட்டசபை கூட்டம் நடைபெற்று வருகிறது. சட்டசபையில் கே.கே.சைலஜா எம்.எல்.ஏ-வுக்கு பேச வாய்ப்பு வழங்கப்பட்டது. அப்போது அவர் கொரோனா நிவாரண பணியில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக அரசை விமர்சித்து பேசியது பரபரப்பை கிளப்பியுள்ளது.
சட்டசபையில் பேசிய கே.கே.சைலஜா, ``கொரோனாவால் மிகவும் மோசமான பிரச்னைகளை மக்கள் அனுபவித்து வருகிறார்கள். ஆயிரம் ரூபாய் இப்போது வழங்கப்பட்டுள்ளது. அதுகொண்டு அவர்களின் வாழ்க்கையை நடத்த முடியாது. இனியும் அவர்களுக்கு உதவ வேண்டும். கேரள அரசு பல பேக்கேஜ்களை அறிவித்துள்ளது. அதே சமயம், இது மிகவும் முக்கியத்துவம் அளிக்க வேண்டிய பிரச்னை ஆகும். சிறு, குறு மற்றும் பாரம்பர்ய தொழில்கள் மிகவும் பாதித்துள்ளன.
வங்கி கடனை செலுத்த முடியாமலும், குழந்தைகளின் கல்வி கட்டணத்தை கட்ட முடியாமலும் இன்னும் பிற செலவுகளை சமாளிக்க முடியாமலும் உள்ளனர். இதையெல்லாம் அரசு கவனத்தில் எடுக்க வேண்டும். சிலருக்கு ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. அதைக்கொண்டு அவர்களின் செலவை சமாளிக்க முடிவதில்லை. எனவே சிறு, குறு மற்றும் பாரம்பர்ய தொழில் செய்பவர்களுக்கு கடன் வழங்க வேண்டும். தொழிலாளர்களுக்கு வேண்டிய உதவிகளை செய்ய வேண்டும்.
ஓணப்பண்டிகை சமயத்தில் கிடைக்க வேண்டிய வருவாய் இவர்களுக்கு கிடைக்கவில்லை. எனவே அரசு இந்த தொழிலாளர்களுக்காக சிறப்பு பேக்கேஜ் உருவாக்க வேண்டும்" என பேசினார். இதற்கு பதிலளித்து பேசிய தொழில்துறை அமைச்சர் பி.ராஜிவ், `கே.கே.சைலஜா கூறிய விஷயங்கள் பரிசீலிக்கப்படும்’ எனக்கூறினார். கடந்த சில நாட்களாக எதிர்கட்சிகள் கூறிவந்த கருத்தை ஆளும் சி.பி.எம் எம்.எல்.ஏ-வும் முன்னாள் அமைச்சருமான கே.கே.சைலஜா பேசியிருப்பது விவாதபொருளாக மாறியுள்ளது.
Also Read: கேரளா: சைலஜா டீச்சருக்கு பதிலாக சுகாதாரத்துறை அமைச்சராக மீண்டும் ஒரு பெண்? யார் இந்த வீணா ஜார்ஜ்?
source https://www.vikatan.com/government-and-politics/politics/kerala-former-health-minister-criticizes-pinarayi-vijayan-government-in-corona-issue
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக