இந்தியாவில் கொரோனா நோய்த்தொற்று பரவலின் காரணமாகக் கடந்தாண்டு 3 நாடாளுமன்ற கூட்டத்தொடர்கள் முன்கூட்டியே முடித்துக்கொள்ளப்பட்டு, குளிர்கால கூட்டத்தொடர் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில், இந்தியாவில் தற்போது நோய் பரவலின் தாக்கம் சற்றே தணிந்துள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 19-ம் தேதி தொடங்கியது.
மழைக்கால கூட்டத்தொடருக்கு ஒரு நாள் முன்னதாக இஸ்ரேல் நிறுவனத்தின் பெகாசஸ் ஸ்பைவேர் மூலம் பத்திரிகையாளர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் உள்ளிட்டோர் உளவு பார்க்கப்பட்ட விவகாரம் தொடர்பான அறிக்கைகள் வெளியாகி மழைக்கால கூட்டத்தொடரில் புயலைக் கிளப்பும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதற்கேற்றாற்போல், மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கி பிரதமர் மோடி உரையாற்றத் தொடங்கியதுமே காங்கிரஸ், கம்யூனிஸ்ட் மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி-க்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். அதனால், முதல் நாள் அன்றே அவை ஒத்திவைக்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து, அடுத்த நாளும் பெகாசஸ் விவகாரத்தைக் கையிலெடுத்து எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டதால் நாடாளுமன்றத்தில் தொடர் பதற்ற நிலையே நிலவியது. அடுத்த மாதம் 13-ம் தேதி வரை நடைபெறவிருக்கும் மழைக்கால கூட்டத்தொடரில் மொத்தம் 40 மசோதாக்கள் மற்றும் 5 அவசரச் சட்டங்களை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. ஆனால், எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியால் இரு அவைகளும் தொடர்ச்சியாக ஒத்திவைக்கப்பட்டு வருவதால் மத்திய அரசு தனது மசோதாக்களைத் தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்ற முடியாத சூழல் தற்போது நிலவி வருகிறது.
ஏற்கனவே, பெகாசஸ் ஸ்பைவேர் விவகாரம் குறித்து நாடாளுமன்ற அவைகளில் விவாதிக்க அனுமதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி எம்.பி-க்கள் பலரும் கோரிக்கைகளை முன்வைத்து வரும் நிலையில், டெல்லியில் காங்கிரஸ் தலைமையில் அண்மையில் நடைபெற்ற அனைத்து கட்சி கூட்டத்தில், திரிணாமுல் காங்கிரஸ், திமுக, ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ், சிவசேனா, சமாஜ்வாதி கட்சிகளின் முக்கிய பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். அதில் மழைக்கால கூட்டத்தொடரில், மத்திய அரசின் வேளாண் சட்டங்கள், பெட்ரோல் - டீசல் விலை உயர்வு, தடுப்பூசி தட்டுப்பாடு மற்றும் ரஃபேல் முறைகேடு உள்ளிட்ட முக்கிய விவகாரங்களைக் கையிலெடுத்து விவாத பொருளாக்குவது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
அதைத் தொடர்ந்து, நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரில், பெட்ரோல் டீசல் விலை உயர்வு, சமையல் கேஸ் சிலிண்டர் விலை உயர்வு, விவசாயிகள் போராட்டம், ரஃபேல் போர் விமான ஒப்பந்த ஊழல் மற்றும் பெகாசஸ் விவகாரம் உள்ளிட்ட பிரச்னைகளை, நாடாளுமன்றத்தின் இரண்டு அவைகளிலும் எதிர்க்கட்சிகள் தொடர்ச்சியாக எழுப்பி அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் காரணமாக, இரண்டு அவைகளும் தொடர்ச்சியாக ஒத்திவைக்கப்பட்டு வருகிறது.
Also Read: 'பெகாசஸ்' ஸ்பைவேர்: நாடாளுமன்ற கூட்டத்தொடரில் புயலைக் கிளப்பும் உளவு பார்க்கப்பட்ட விவகாரம்?!
இந்நிலையில், வழக்கமாகப் பதவியேற்கும் போதும், சில நேரங்களில் தமிழக எம்.பி-க்கள் பேசும் போதும் மட்டுமே பயன்படுத்தப்படும் தமிழ் மொழியில் அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பிய ருசிகர சம்பவம் நாடாளுமன்ற வரலாற்றில் முதன்முறையாக அரங்கேறியிருக்கிறது.
நாடாளுமன்ற அவைகளில் ஒட்டுமொத்த எதிர்க்கட்சி எம்.பி-க்களும் ஒன்றிணைந்து மத்திய அரசின் சட்டங்களுக்கு எதிராகவும், பெகாசஸ் உளவு விவகாரம் குறித்தும் தமிழில், 'வேண்டும்..வேண்டும்..நீதி வேண்டும்!, வேண்டும்..வேண்டும்..விவாதம் வேண்டும்..!!' என்று முழங்கியிருப்பது கவன ஈர்ப்பு சம்பவமாகப் பார்க்கப்படுகிறது.
Also Read: `கூடுகிறது நாடாளுமன்றம்; விவசாயிகள் போராட்டத்தில் போலீஸார் குவிப்பு!’ - டெல்லி எல்லையில் பதற்றம்
முதலில், பஞ்சாப் காங்கிரஸ் எம்.பி ஜஸ்பீர் சிங் கில் நாடாளுமன்றத்தில் தமிழில், 'வேண்டும்..வேண்டும்' என்று முழக்கமிட்டதாகவும், அவரைத் தொடர்ந்து தமிழக எம்.பி-க்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த எதிர்க்கட்சி எம்.பி-க்களும் தமிழில் 'நீதி வேண்டும்!' என்று முழக்கமிட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து காங்கிரஸ் மூத்தத் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் தனது ட்விட்டரில், ``வழக்கமாக, நாடாளுமன்றத்தில் ஆங்கிலம் அல்லது இந்தியில் தான் முழக்கங்கள் எழுப்பப்படும். ஆனால், மாநிலங்களவை வரலாற்றில் முதன் முறையாக, அனைத்து எதிர்க்கட்சி உறுப்பினர்களும், தமிழ் மொழியில், வேண்டும்.. விவாதம்... வேண்டும் என முழக்கமிட்டனர். வலுக்கட்டாயமாக எந்த ஒரு மசோதாவையும் தாக்கல் செய்வதற்கு முன்பு முறையாக விவாதிக்க வேண்டும்" என்று பதிவிட்டிருக்கிறார்.
ஏற்கனவே, கம்யூனிஸ்ட் சார்பில் மதுரை எம்.பி சு.வெங்கடேசன், விடுதலை சிறுத்தைகள் சார்பில் தொல்.திருமாவளவன் மற்றும் காங்கிரஸ் சார்பில் விருதுநகர் எம்.பி. மாணிக்கம் உள்ளிட்ட பலர் பெகாசஸ் விவகாரம் தொடர்பாக ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வரக் கோரிக்கை வைத்திருக்கும் நிலையில், தமிழ் மொழியால் நாடாளுமன்றம் அதிர்ந்து போயிருக்கும் சம்பவம் கவனம் ஈர்க்கும் ருசிகர நிகழ்வாக பார்க்கப்படுவதாக அரசியல் பார்வையாளர்கள் கூறி வருகின்றனர்.
source https://www.vikatan.com/government-and-politics/politics/for-the-first-time-in-parliament-history-all-opposition-mps-chanted-against-modi-govt-in-tamil
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக