விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்திலிருந்து மரக்காணம் செல்லும் சாலையில் உள்ளது பெருமுக்கல். இங்குள்ள மலைமீது சோழர் காலத்தை சேர்ந்த சிவன் ஆலயம் (முக்யாசலேஸ்வரர்) ஒன்று உள்ளது. மலையின் அடிவாரத்தில் காமாட்சியம்மன் ஆலயம் அமைந்துள்ளது. இங்கு அறங்காவலராக இருக்கும் ராமு(63) என்ற நபர், கடந்த 23-ம் தேதி மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ள கோவிலின் மூலஸ்தானத்தில் இருந்த சிவலிங்கத்தை உடைத்து, அங்கு குழி தோண்டியுள்ளார். மறுதினம் அவ்வழியே வந்த மக்கள் சிலர், சிவலிங்கம் உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியுற்று பிரம்மதேசம் காவல் நிலையத்திற்கு புகார் அளித்துள்ளனர். அங்கு வந்த காவல்துறையினர், விசாரணையை மேற்கொண்டுள்ளனர்.
Also Read: முந்திரித் தோப்பில் கிடந்த சாமி சிலை! கைவரிசைகாட்டிய சிலைகடத்தல் கும்பல்
அறங்காவலரான ராமுவிடம் விசாரித்தபோது முரணான பதில்களே வெளிப்பட்டுள்ளன. அவரிடம் காவல்துறையினர் மேலும் விசாரித்தபோது சிலையை உடைத்ததை ஒப்புக்கொண்டுள்ளார். 'சிவனே கனவில் வந்து அங்கு தோண்டச் சொன்னதாக' அந்நபர் கூறியதாகவும் கூறப்படுகிறது. அந்த நபர் மீது வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.
இதுதொடர்பாக பிரம்மதேசம் காவல்துறை அதிகாரிகளிடம் பேசினோம். "சிலை உடைக்கப்பட்டதாக கிடைத்த தகவலின் பேரில், விசாரணையை மேற்கொண்டோம். ராமு (எ) அப்பு எனும் நபரை கைது செய்துள்ளோம். சிலையை சேதப்படுத்தி, உடைத்ததற்காக அவர் மீது இரு பிரிவுகளின் கீழ் ( 295(a), 464/2 ) வழக்குப்பதிவு செய்துள்ளோம்" என்றார்.
பழமையாக ஆலயத்தில், தொன்மை வாய்ந்த சிலை உடைக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
source https://www.vikatan.com/news/crime/police-have-arrested-a-man-for-breaking-an-ancient-statue-in-villupuram-district
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக