பாஜக-வைச் சேர்ந்த கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா, இன்று தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்திருக்கிறார். பாரதிய ஜனதா கட்சியைப் பொறுத்தவரை 75 வயது நிரம்பிய யாரும் முதல்வர் பதவியில் தொடரக் கூடாது, கட்டாய ஓய்வு பெற வேண்டும் என்பது விதிமுறை. ஆனால், கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பாவுக்குத் தற்போது வயது 78. இருப்பினும், இரண்டாண்டுகளுக்கு முன்னர், 2019-ல் கர்நாடக முதல்வராக தனது 75-வது வயதில் பொறுப்பேற்றுக்கொண்டார். இந்தநிலையில், ஆட்சிப் பொறுப்பேற்று சரியாக இரண்டு ஆண்டுகள் முடிவடைந்த இன்று அவர் தனது பதவியை ராஜினாமா செய்திருக்கிறார்.
Also Read: காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள், சுப்பிரமணியன் சாமி ஆதரவு... தப்பிப்பாரா கர்நாடக முதல்வர் எடியூரப்பா?
அவர் முதல்வர் பதவியை ராஜினாமா செய்வது என்பது புதிதல்ல, ஏற்கெனவே வெவ்வேறு காலகட்டங்களில், பல்வேறு காரணங்களுக்காக மூன்று முறை ராஜினாமா செய்திருக்கிறார். குறிப்பாக, 2007-ம் ஆண்டு முதன்முறையாக முதல்வராகப் பொறுப்பேற்றதும் வெறும் ஏழு நாள்களில் ராஜினாமா செய்தார். அதன் பின்னர், மீண்டும் 2008 முதல் 2011 வரை மூன்றரை ஆண்டுகள் முதல்வராகத் தொடர்ந்த எடியூரப்பா மீது ஊழல் புகார் எழுந்து, அவர் சிறை செல்ல நேரிட்டது. இதனால், பாஜக தலைமை கொடுத்த அழுத்தத்தின் காரணமாக தனது முதல்வர் பதவியை இரண்டாவது முறையாக ராஜினாமா செய்தார்.
நீண்ட இடைவெளிக்குப் பின்னர், கடந்த 2018-ம் ஆண்டு, கர்நாடகா சட்டமன்றத்தில் தனது பெரும்பான்மையை நிரூபிக்கத் தவறியதால், வெறும் மூன்று நாள்களில் தனது முதல்வர் பதவியை மூன்றாவது முறையாக ராஜினாமா செய்தார்.
Also Read: காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள், சுப்பிரமணியன் சாமி ஆதரவு... தப்பிப்பாரா கர்நாடக முதல்வர் எடியூரப்பா?
கடந்த 2019-ம் ஆண்டு கர்நாடகாவில் குமாரசாமி தலைமையிலான ஆட்சி கவிழ்ந்ததையடுத்து, பாஜக ஆட்சி அமைத்தது. 2019, ஜூலை 26-ம் நாள் நான்காவது முறையாக முதல்வராக பொறுப்பேற்றுக்கொண்டார் எடியூரப்பா. வயது மூப்பின் காரணமாக, இரண்டாண்டுகள் மட்டுமே பதவிவகிக்க வேண்டும் என பாஜக தலைமை அப்போது நிபந்தனை விதித்தது.
தற்போது இரண்டாண்டுகள் முடிவடையும் தறுவாயில், கடந்த ஜூலை 16-ம் நாள் பிரதமர் மோடி, அமித் ஷா, பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோருடன் எடியூரப்பா ஆலோசனை மேற்கொண்டார்.
இந்தநிலையில், கர்நாடக முதல்வராக எடியூரப்பா ஆட்சி அமைத்து, இன்று 2021, ஜூலை 26-ம் தேதியுடன் சரியாக இரண்டாண்டுகள் முடிவடைந்த நிலையில் ராஜினாமா செய்திருக்கிறார்.
கர்நாடக ஆளுநர் தவார் சந்த் கெலாட்டிடம் தனது ராஜினாமா கடிதத்தைக் கொடுத்த பிறகு பத்திரிகையாளர்களைச் சந்தித்த எடியூரப்பா, ``முதல்வர் பதவியிலிருந்து நான் விலக வேண்டும் எனக் கட்சித் தலைமை எனக்கு எந்த அழுத்தமும் தரவில்லை. இரண்டு ஆண்டுகளில் பதவியை ராஜினாமா செய்வேன் என்று நான் கொடுத்திருந்த வாக்குறுதியை நிறைவேற்றியிருக்கிறேன். நான் இரண்டாண்டுகள் முதல்வராகப் பதவி வகிக்க வாய்ப்பளித்ததற்காக பிரதமர் மோடி, அமித் ஷா, ஜே.பி.நட்டா ஆகியோருக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்" என்று கூறினார்.
source https://www.vikatan.com/government-and-politics/politics/karnataka-bjp-chief-minister-yeddyurappa-resigns
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக