Ad

வியாழன், 2 செப்டம்பர், 2021

பழவேற்காடு: 180 மூட்டை ரேஷன் அரிசி; கடல் மார்க்கமாக கடத்தல்!’ - ரகசிய தகவலால் சிக்கிய தந்தை, மகன்

தமிழகத்தின் எல்லையோர மாவட்டங்களில் ஒன்றான திருவள்ளூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் லாரிகள், ரயில்கள் மூலம் ரேஷன் அரிசி மூட்டை, மூட்டையாகக் கடத்தப்பட்டு வருகிறது. ஆனால், சமீபகாலமாக வருவாய்த்துறையினர் மற்றும் காவல்துறையினர் ரேஷன் அரிசி கடத்தல் தொடர்பாகத் தீவிரமாகக் கண்காணித்து வருவதால், அரிசி மாஃபியாக்கள் நூதன முறையில் கடல் மார்க்கமாக ரேஷன் அரிசியை அண்டை மாநிலமான ஆந்திராவுக்குக் கடத்திக் கொண்டிருக்கின்றனர்.

அப்படி கடல் மார்க்கமாக அரிசியை ஆந்திராவுக்குக் கடத்தும் கடத்தல்காரர்கள் பழவேற்காடு, அதன் சுற்று வட்டார பகுதிகளைக் குறிவைத்துச் செயல்பட்டு வருகின்றனர். பழவேற்காடு, கருங்காலி மற்றும் சாத்தான்குப்பம் உள்ளிட்ட மீனவ கிராமங்களிலிருந்து பழவேற்காடு ஏரியின் மூலம் படகுகளில் ஆந்திராவுக்குச் சட்டவிரோதமாகக் கடத்தி வருகின்றனர். இது தொடர்பாக, பழவேற்காடு கிராம மக்கள் வருவாய்த்துறை அதிகாரிகளிடம் தொடர்ச்சியாகப் புகார்கள் அளித்து வந்தனர். இந்நிலையில், பழவேற்காட்டை அடுத்த சாத்தான்குப்பம் கிராமத்திலிருந்து நாட்டுப் படகுகள் மூலம் ஆந்திர மாநிலம், நெல்லூருக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக வருவாய்த்துறை அதிகாரிகளுக்குக் கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில் பொன்னேரி தாசில்தார் மணிகண்டன் பழவேற்காடு கடலோர காவல் படையினரை நேற்றைய தினம் உஷார்படுத்தினார்.

கடத்தப்பட்ட ரேஷன் அரிசி

அதைத் தொடர்ந்து, நேற்று மாலை முதலே கடலோர காவல் படையினர் பழவேற்காடு ஏரியில் கண்காணிப்பைத் தீவிரப்படுத்தினர். இந்நிலையில், இன்று காலை பழவேற்காடு ஏரியிலிருந்து இரண்டு நாட்டுப் படகுகள் ஒன்றன்பின் ஒன்றாக ஆந்திராவின் ஸ்ரீஹரிகோட்டாவை நோக்கி விரைந்து கொண்டிருக்கவே, அதைக் கண்டு சந்தேகமடைந்த கடலோர காவல் படையினர் அந்த படகுகளை விரட்டிச் சென்று வழி மறித்து சோதனை செய்ததில் அவற்றில் மூட்டை, மூட்டையாக ரேஷன் அரிசி சட்ட விரோதமாகக் கடத்தப்படுவதை உறுதி செய்தனர். தொடர்ந்து, திருபாலைவனம் போலீஸாருக்கும், பொன்னேரி வட்ட வழங்கல் அலுவலருக்கும் தகவல் தெரிவித்து விட்டு, கடத்தலில் ஈடுபட்ட இருவரை கைது செய்து அரிசி மூட்டைகளுடன் படகுகளைக் கரைக்குக் கொண்டு வந்தனர்.

கைது செய்யப்பட்ட தந்தை - மகன்

அதையடுத்து, பொன்னேரி வட்ட வழங்கல் அலுவலர் உமா சங்கரி தலைமையில் படகுகளைச் சோதனை செய்த வருவாய்த்துறையினர் இரண்டு நாட்டுப் படகுகள் மூலம் மொத்தம் 180 மூட்டை ரேஷன் அரிசி மற்றும் 1 பருப்பு மூட்டை உள்ளிட்டவற்றைப் படகிலிருந்து பறிமுதல் செய்து, லாரியில் ஏற்றி பொன்னேரி அடுத்த பஞ்செட்டி பகுதியில் அமைந்துள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கிடங்கிற்கு அனுப்பி வைத்தனர்.

ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்ட இருவரையும் கைது செய்த மாவட்ட குடிமைப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில் கைதானவர்கள் ஆந்திர மாநிலம், பாலகிருஷ்ணாபுரத்தை சேர்ந்த தந்தை - மகன் என்பது தெரியவந்துள்ளது. போலீஸார் தொடர்ந்து, ரேஷன் அரிசி எங்கிருந்து கடத்தப்பட்டது, இந்த கடத்தலின் பின்னணியில் இருப்பவர்கள் யார் என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Also Read: கேரளாவுக்குச் செல்லும் புகையிலை, ரேஷன் அரிசி மூட்டைகள்... கடத்தல் கேந்திரமான குமரி எல்லை?



source https://www.vikatan.com/news/crime/police-arrested-two-men-who-tried-to-smuggle-rice-from-the-pulicat-to-ap-by-boats

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக