Ad

ஞாயிறு, 3 ஜனவரி, 2021

கோபத்தால் கோட்டை விடும் பாலாஜி... ஆழம் பார்க்கும் ஆரி... நடுங்கிய ரம்யா! பிக்பாஸ் - நாள் 91

ஆஜித் இன்று வெளியேற்றப்பட்டு விட்டார். எப்போதோ நடந்திருக்க வேண்டிய விஷயம் இது. எனவே போட்டியாளர்களிடமும் சரி, பார்வையாளர்களிடமும் சரி, அதிக சலனமில்லை; சோகமில்லை. ‘நல்லபடியா போயிட்டு வாடா’ தம்பி என்கிற விட்டேற்றியான மனநிலைதான் இருந்தது.

ஷிவானி அளவிற்கு இல்லையென்றாலும் ஆஜித்தும் பாலாஜியின் ஆதரவில்தான் அங்கு வாழ்ந்தார். ஒருவகையில் அதனால்தான் அவரால் நீடிக்க முடிந்தது. பலமான போட்டியாளர்களை முதலில் வீழ்த்திவிட்டு பலவீனமானவர்களை பிறகு பார்த்துக் கொள்வோம் என்கிற உத்தியின் காரணமாகவே இந்த கோயிஞ்சாமிகள் இதுவரை தப்பித்திருக்கலாம். இதே நோக்கில் கூட பார்வையாளர்கள் தங்களின் வாக்குகளை செலுத்தியிருக்கலாம்.

“ஏம்ப்பா... இந்தப் பையன் இப்படி இருக்கான்?” என்று நான் கூட இந்தத் தொடரில் ஆங்காங்கே ஆஜித்தை மெலிதாகக் கடிந்து கொண்டதுண்டு. ஆனால் கூட்டிக் கழித்துப் பார்த்தால் பிக்பாஸ் போன்ற ரத்தபூமிக்கு சம்பந்தேமயில்லாத குணாதிசயங்களைக் கொண்டிருப்பவர் ஆஜித். (பல சமயங்களில் ஆஜித்தை ‘அவர்’ என்றல்லாமல் உரிமையில் ‘அவன்’ என்றுதான் முதலில் எழுதி பிறகு திருத்திக் கொண்டிருக்கிறேன்).

பிக்பாஸ் – நாள் 91

அமைதியான சுபாவம், அதிர்ந்து பேசாத தன்மை, மற்றவர்களைக் காயப்படுத்தக்கூடாது என்று எண்ணுகிற கண்ணியம், கோபத்தைக் கூட தனிமையில் காட்டுகிற நாகரிகம் என்று இருப்பவரைப் போய், ‘சண்டை போடு, எகிறிக்குதி, அவனைக் குத்து’ என்றெல்லாம் நெருக்கடி தந்தால் அவரும் என்னதான் செய்வார்? மேலும் இளம் வயது என்பதால் அதிகம் அனுபவமும் இல்லை.

ஆஜித் அடிப்படையில் சிறந்த பாடகர். ஒரு குட்டிப் பையன் சூப்பராக பாடி சூப்பர் சிங்கரில் வெற்றி பெற்ற காட்சியானது இன்னமும் கூட மனதில் ஓடிக் கொண்டிருக்கிறது. அந்தப் பையன் வளர்ந்து இளைஞராக பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்த போது ‘அட’ என்று ஆச்சர்யமாகத்தான் இருந்தது. ஆனால் ஆஜித்தால் எவ்வித பாதிப்பையும் இந்த ஷோவிற்கு அதிகம் ஏற்படுத்த முடியவில்லை. ஒரு சராசரியான வெள்ளந்தி ஆசாமி, முதலாளித்துவ உலகின் தந்திரப் புயல்களுக்குள் சிக்கி அவதிப்படுபவதைப் போலவே ஆஜித்தும் அந்த வீட்டில் அவஸ்தைப் பட்டுவிட்டார். "எனக்கு என்ன ஈடுபாடு இல்ல. அதற்கு நான் என்ன செய்யணும்?” என்கிற கேள்வி அவரைத் துரத்திக் கொண்டே இருந்திருக்கிறது.

‘பிக்பாஸ் தந்திருக்கும் புகழை பயன்படுத்திக் கொள்வேன்’ என்று ஆஜித் மேடையில் புத்திசாலித்தனமாக பேசினார். இந்தப் புதிய ஆண்டில் வெளியாகும் பல திரைப்படங்களில் ஆஜித்தின் குரல் ஒலித்தால் அதற்காக சந்தோஷப்படும் நபர்களில் நானும் ஒருவனாக இருப்பேன். அப்படியொரு அற்புதமான குரல் ஆஜித்துடையது. அப்படியே நடக்கட்டும். அவரது உப திறமையான நடிப்பிற்கும் வாய்ப்பு கிடைக்கட்டும்.

'என் ஃபேன்ஸ்லாம் என்கிட்ட எதிர்பார்ப்பாங்கள்ல’ என்பது போன்ற மமதை ஆஜித் தலையில் ஏறாமல் இருக்கட்டும். (எத்தனை உச்சத்திற்குச் சென்றாலும் காலை தரையிலேயே வைத்திருக்கிற ரஹ்மானை உதாரணமாகக் கொள்ளுங்கள்). சென்று வாருங்கள் ஆஜித்! மனமார்ந்த வாழ்த்துகள்.

ஓகே... 91வது நாளில் என்ன நடந்தது?!

"மாற்றத்திற்கான ஆண்டாக வரும் ஆண்டைப் பார்க்கிறேன். விழிப்போடு நேர்மை மற்றும் விடாமுயற்சியோடு தொடர்ந்து பயிற்சி செய்தால் நம் கனவுகள் நிஜமாகும்" என்கிற உபதேசத்தோடு மேடைக்கு வந்தார் கமல்.

பிக்பாஸ் – நாள் 91

கமல் இன்று அணிந்திருந்த கோட், பேன்ட், ஷூவின் கலர் காம்பினேஷன் நன்றாக இருந்தது. இந்த ஆடையும் கதர்தானாம். ''மேற்கத்திய கார்ட்ராய் துணிக்கு இந்திய ஆடை உற்பத்தியாளர்களின் பதில்'’ என்று பிறகு போட்டியாளர்களிடம் பெருமிதப்பட்டார் கமல். "சார்... எங்களுக்கு வாங்கித் தர்றேன்னீங்களே" என்று அப்பாவுடன் கடைக்குச் சென்ற பையன் மாதிரி ஆரி நினைவுப்படுத்த, "நிச்சயம் செய்கிறேன்" என்று வாக்குறுதி தந்தார்.

"பிக்பாஸ் டைட்டிலை வெல்வதற்கு நான் ஏன் தகுதியானவன்?” என்று ஒவ்வொரு போட்டியாளரும் தனியறைக்கு வந்து ‘பிரசாரம்’ செய்யலாமாம். மூன்று விதிகள்: (1) பொய் சொல்லக்கூடாது (2) தகவல்கள் சரியாக இருக்க வேண்டும் (3) உளறக்கூடாது. "இந்த விதிகளை உங்களுக்குச் சொல்றேன். ‘உங்களுக்கும்… சொல்றேன்’ '' என்று வெவ்வேறு மாடுலேஷன்களில் கமல் சொன்னது நல்ல நையாண்டி. ('நல்லார் ஒருவர் உளரேல் – என்கிற ‘பாடலை’ (?!) ஒளவையார் எழுதினார்’ என்பது ஓர் அமைச்சரின் சமீபத்திய உளறல். ‘உளறேல்’ என்று திருவள்ளுவர் எழுதியிருக்கலாம் போல).

"ஆரம்பிக்கலாமா?” என்று 'விக்ரம்' டீஸரில் காணப்பட்ட தலையை சாய்க்கும் உடல்மொழியைக் காட்டி சிரிக்க வைத்தார் கமல். பிரசாரத்திற்கு முதலில் வந்தவர் பாலாஜி. மீண்டும் தனது அஹிம்சை முகமூடியை எடுத்து அணிந்து கொண்டார். ‘டேமேஜ் கன்ட்ரோல்’ பாணியில் சரிந்திருக்கும் தனது பிம்பத்தை கண்ணீர்த் துளிகளின் மூலம் சரிசெய்து கொள்ள முயன்றார்.

'போன சீஸன்ல கடலை சாப்பிட்டு ஜெயிச்சவங்கன்னு சொன்னது தப்பாம். ஆக்சுவலி அவங்க சாப்பிட்டது ஒடச்ச கடலையாம். நாதஸ் இப்ப திருந்திட்டானாம். அதுக்காக மன்னிப்பு கேட்கறானாம். தன்னோட திருந்திய கதை வருங்கால இளைஞர்களுக்கு ஒரு வரலாறா இருக்குமாம்’ - இப்படிப்பட்ட சாயல் கொண்ட விளக்கத்தை உருக்கமான உடல்மொழியில் சொன்னார் பாலாஜி. (ஆனால், இரவு நடந்த ஒரு சம்பவத்தின் மூலம் பாலாஜி மாறவில்லையோ என்று தோன்றுகிறது).

அடுத்து வந்தவர் புன்னகைச் செல்வி ‘ரம்யா’. "என்னுடைய உணர்ச்சிகள் போலி கிடையாது. நான் எந்தத் திரையும் போட்டுக்கல. யாரையும் காயப்படுத்தியது கிடையாது. நாமினேட் செய்யறதைக் கூட வேற வழியில்லாமத்தான் செய்றேன். என் கிட்ட நெகட்டிவிட்டியே கிடையாது. ஒன்லி பாசிட்டிவிட்டிதான். அதைத்தான் பிராக்டிஸ் பண்றேன்" என்று நேர்மறையாக சொல்லி விட்டுச் சென்றார். ('நீங்க நம்பலைன்னாலும் அதான் நெசம்’ என்கிற தொனி அதில் கலந்திருந்தது).

பிக்பாஸ் – நாள் 91

அடுத்து வந்தவர் ஆஜித். இவர்தான் இன்று வெளியேறப் போகிறார் என்று கமலுக்குத் தெரியும். இருந்தாலும் ‘வந்துட்ட... சொல்லி வையி’ என்பது போல் கமல் பார்த்துக் கொண்டிருந்தார். "டாஸ்க்லாம் கடமைக்குப் பண்ணதில்லை. என் தகுதியைத் தாண்டி முயற்சி பண்ணியிருக்கேன். பொய் சொன்னதில்லை. மரியாதை கொடுத்திருக்கேன். சில சமயங்கள்ல மட்டும்தான் புறணி பேசியிருக்கேன். ‘ஹப்பாடா. ஒருவழியா வாயைத் திறந்திட்டியா?’ன்னு நேத்து நீங்க சொன்னது சந்தோஷம்" என்று கமலிடம் விடைபெற்றார் ஆஜித்.

அடுத்து வந்த ஷிவானிக்கு நூற்றி ஆறு நாட்களும் இருப்பதுதான் ஆசையாம். அதுக்காக முயற்சி பண்ணியிருக்காங்கலாம் (?!) இன்னமும் கூட அதிக முயற்சிகள் எடுப்பாங்களாம். நிறைய போராட்டங்களைச் சந்திச்சிருக்காங்களாம். மக்கள் மனதில் ஒரு நல்ல இடத்தில் இருப்பதுதான் இவரது லட்சியமாம்.

அடுத்ததாக வந்த கேபி வழக்கம் போல் சிரித்து விட்டு, " ‘காணவில்லை'ன்னு முதல்ல எனக்கு போர்டு மாட்டியிருந்தாங்க. (தொலைந்து போன என்னை தேடிக் கண்டுபிடிச்சு நல்வாழ்வு தந்ததே ‘லவ் பெட்தான்’) நேர்மறைதான் என் அடையாளம். விழுந்தாலும் திரும்ப எழுவேன். தேவையில்லாத விஷயத்தை செஞ்சதில்லை" என்று சொல்லி விட்டுச் சென்றார்.

அடுத்து வந்தவர் ஆரி. 'இருப்பா... தண்ணி குடிச்சிட்டு வந்துடறேன்’ என்று கமலே ஒரு பிரேக் எடுத்திருக்கலாம். ஏனெனில் வழக்கமாகவே ‘பிரசார’ தொனியில்தான் ஆரி பேசுவார். இப்போது சலங்கையும் கட்டிவிட்டார்கள். ஆனால் ஒன்று அண்டர்லைன் செய்து சொல்ல வேண்டும். இந்தப் பிரசார மேடையை முறையாகவும் சிறப்பாகவும் பயன்படுத்திக் கொண்டவர் ஆரி மட்டுமே. கமல் முன்பு சொன்னவற்றையெல்லாம் இப்போது மேற்கோள் காட்டி கமலையே குளிர வைத்தார் ஆரி.

பிக்பாஸ் – நாள் 91

“சமூகத்தின் பிரதிபலிப்புதான் இந்த நிகழ்ச்சின்னு நீங்க சொல்லியிருக்கீங்க. இங்க நான் நானாக இருந்தால் சமூகத்துலயும் பொறுப்புள்ள குடிமகனா இருக்க முடியும் என்கிற பொறுப்பை உணர்ந்திருக்கிறேன். கேப்டன் பொறுப்பை சிறப்பாக கையாண்டிருக்கேன். உணவு வீணாவதைப் பெரிதும் தடுத்திருக்கேன். வாய்ப்பு கிடைத்தவர்கள்/கிடைக்காதவர்கள் என்று இரு பிரிவினர் மட்டுமே உலகில் இருக்கிறார்கள். கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்ள முயல்கிறேன். அதுக்கு தகுதிப்படுத்திக்கிட்டா வெற்றி தானாக வந்து சேரும்" என்று நீண்ட பொழிப்புரை செய்த ஆரி, "ஈடுபாட்டோட வேலை செய்யறவனுக்கு அங்கீகாரம் வரணும். மக்கள் ஆதரிப்பார்கள் என்கிற நம்பிக்கையுண்டு" என்று விடைபெற்ற போது கமலின் முகத்திலும் திருப்தி தெரிந்தது.

அடுத்து வந்த சோம், "நான் இதுவரை Boring performer வாங்கினதில்லை. கேப்டன் வாய்ப்புகளை மயிரிழையில் தவற விட்டிருக்கேன். பத்து வருஷமா அவமானங்களைப் பார்த்திருக்கேன். இந்த அரிய வாய்ப்பை சரியாக பயன்படுத்தியிருக்கேன்" என்ற சோம் ‘விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி’ என்கிற 'பாஸ் என்கிற பாஸ்கரன்' திரைப்படத்தின் பன்ச் டயலாக்கில் அதிக நம்பிக்கையுள்ளவர் என்பதை தெரிவித்து விட்டுச் சென்றார். இவர் இறுதியில் ஒரு வார்த்தைக்காக தடுமாறிய போது கமல் எடுத்துத் தந்தது சிறப்பு. இது போன்ற பிரசாரங்களில் சுயபச்சாதாபம் கலக்கவே கூடாது. புத்திசாலியான மக்கள் அதை விரும்பமாட்டார்கள்.

அடுத்து வந்த ரியோ கீதையின் வாக்கியத்திற்கு புதிய அர்த்தம் தந்தார். "‘கடமையைச் செய். பலனை எதிர்பாராதே’ன்னு சொல்லுவாங்க. கடமையை ஒழுங்கா செஞ்சா பலன் தன்னால வந்துரும்னு அர்த்தம். நான் நல்லா விளையாடியிருக்கேன். பிடிச்சா ஓட்டுப் போடுங்க. பிடிக்காட்டியும் பரவாயில்லை" என்றார். வெற்றியின் மீது ஆசையில்லாதது போல் பேசினால் மக்களுக்குப் பிடிக்கும் என்று நினைப்பதும் தவறு. பிரசாரங்களில் எதிர்மறையாகப் பேசக்கூடாது. ‘சரி... அப்ப இவனுக்கு வேணாம் போல’ என்று மக்கள் நினைத்து விட வாய்ப்புண்டு.

‘பாய்ஸ்’ திரைப்படத்தில் ஒரு பெண்ணைக் கவர்வது எப்படி என்று சில விடலை இளைஞர்கள் பேசிக் கொண்டிருப்பார்கள். "நாம பொண்ணுங்களை கண்டுக்காம இருந்தா அந்தப் பசங்களைத்தான் பொண்ணுகளுக்குப் பிடிக்கும்" என்று ஓர் இளைஞன் ஐடியா சொல்வான். "போடா டுபுக்குன்னு போயிட்டே இருப்பாளுங்க" என்று இன்னொருவன் அந்த ஐடியாவைத் தூக்கி குப்பைத் தொட்டியில் போடுவான். ரியோவின் பிரசார உரை இந்தக் காட்சியை நினைவுப்படுத்தியது.

பிக்பாஸ் – நாள் 91

பிரசாரம் முடிந்ததும் அனைவருக்கும் சேர்த்து கைத்தட்டி பாராட்டினார் கமல். அடுத்து Caller of the week. போனில் வந்தவரின் பெயர் சிலம்பரசன். (என்னடா... பேரே வில்லங்கமா இருக்கு?!). கமலிடம் ஏதோ முக்கியமாக கேட்கப் போகிறார் என்று பார்த்தால் ‘உங்கள் நான்’ என்ற டேக்லைனை இப்போதெல்லாம் கமல் சொல்வதில்லையாம். அதை அவர் மிஸ் பண்ணுகிறாராம். (ரொம்ப முக்கியம்!).

ஆனால் ரம்யாவிடம் கேள்வி கேட்ட போது சிலம்பரசனின் குறும்பு வெளிப்பட்டது. "குழந்தை டாக்டரான நீங்க எப்ப மேல படிச்சு பெரிய டாக்டராகி அறுவை சிகிச்சை எல்லாம் பண்ணப் போறீங்க? யாரைப் பத்தியும் பின்னாடி பேசாம ஆரி மாதிரி நெத்தில அடிக்கற மாதிரி கேள்வி கேளுங்களேன்" என்று ரம்யாவிற்கே ஊசி குத்தினார். ரம்யா அதை defend செய்யாமல் "என்னை மாற்றிக் கொள்கிறேன்" என்றது சிறப்பு. "ஓ... இதைத்தான் சேஃப் கேம்’ன்னு சொல்லிட்டே இருக்காங்களா" என்று புரிந்தது போல் தலையாட்டி அழைப்பாளருக்கு நன்றி சொன்னார் ரம்யா.

அடுத்து ஒரு ஜாலியான டாஸ்க். தனக்கு வரும் புகைப்படத்தில் உள்ள போட்டியாளரைப் பற்றி ஒவ்வொருவரும் கருத்து சொல்ல வேண்டும்.

முதலில் எடுத்த ரியோவிற்கு சோம் வந்தார். "ஒருத்தர்கிட்ட பிடிக்காத விஷயத்தை சுட்டிக் காட்டிட்டு விட்டுடுவான். அதற்காக சண்டை போட மாட்டான். எல்லோர்கிட்டயும் நட்பு பாராட்டுவான். அதான் எனக்கு பிடிச்ச விஷயம்" என்றார்.

சோமிற்கு வந்தவர் ஆஜித். “இவன்கிட்ட கேம் பிளான் அப்படின்ற சமாச்சாரமே இருக்கற மாதிரியே தெரியல. டாஸ்க்லாம் நல்லாத்தான் பண்ணுவான். ஆனா மத்த விஷயங்களில் அமைதியா இருப்பான். அப்படியே என்னைப் பார்க்கற மாதிரியே இருக்கு” என்றார் சோம்.

பிக்பாஸ் – நாள் 91

ஆரிக்கு வந்த புகைப்படம் அவரது பிரியமான எதிரியான ரம்யா. “நல்ல entertainer... நகைச்சுவை உணர்வு இருக்கு. விளையாட்டில் நல்ல உத்தியைப் பயன்படுத்தறாங்க" என்ற ஆரி... "காலர் டாஸ்க்கில் பார்த்தீங்கன்னா. ஷிவானிக்குப் பதிலா ரமேஷை…" என்று சென்ற நூற்றாண்டில் நிகழ்ந்த விஷயத்தை மறுபடியும் தோண்டியெடுக்க முற்பட்ட போது "எங்கேயோ போயிட்டீங்களே ஆரி..." என்று கமல் இடைமறித்தார். இதற்கு சிரித்து மகிழ்ந்தார் ரம்யா. "அவர் வெளிப்படையா கருத்து சொல்லலாம்" என்று முடித்துக் கொண்டார் ஆரி.

அடுத்து வந்த கேபி சொல்ல வேண்டியது பாலாவைப் பற்றி. “தப்பு செய்வான். திருந்துவான்... அப்புறம் திருந்துவான்... மறுபடியும் தப்பு செய்வான். மத்தபடி நல்ல பையன்தான். ஆனா அதையே ஒரு உத்தியா வெச்சிருக்கானோன்னு தோணுது” என்று கேபி சொன்ன அப்சர்வேஷன் சிறப்பு.

ஒருவர் தவறு செய்து விட்டு ‘திருந்திட்டேன் சார்’ என்று சீன் போட்டால் தவறு செய்யும் போதும் சரி, திருந்தும் போதும் சரி, அவர் மீது அதிக கவனம் விழும். ஒருவேளை பாலாஜி இதைத்தான் பின்பற்றுகிறாரோ என்னமோ. “கூட இருக்கறவங்களை பத்திரமா பார்த்துப்பான். நாமினேட் செய்ய மாட்டான்" என்று போகிற போக்கில் பாலாஜியை பலமாக தட்டி விட்டுச் சென்றார் கேபி.

அடுத்து வந்த ஷிவானி, கேபியைப் பற்றி சொல்ல வேண்டும். "Fun/ஜாலி... சண்டை போட மாட்டாங்க. ஸோ... ஸ்வீட்" என்று நற்சான்றிதழ்களாக வழங்கி விட்டுச் சென்றார். அடுத்ததாக ஆஜித். இவர் ஷிவானியைப் பற்றி சொல்ல வேண்டும். ஓர் ஆடு இன்னொரு ஆட்டைப் பற்றி பேசுவது போன்றது இது. "அவங்க கிட்ட உத்தின்னு எதுவும் இல்ல. அவங்க பேர் வந்தா மட்டும் நிமிர்ந்து பார்ப்பாங்க" என்று சரியாகச் சொன்னார் ஆஜித்.

ரம்யா என்கிற கிளி எடுத்தது ரியோ என்கிற சீட்டு. ‘இவ கிட்டயா மாட்டினோம்’ என்பது போல் சர்காஸ்டிக் கும்பிடு வைத்தார் ரியோ. "ரியோ ஜாலியான ஆளு. யாரையும் புண்படுத்தக்கூடாதுன்னு நெனப்பாரு. அடிமனசுல வேற ஒண்ணு இருக்கும். ஆனா பாதுகாப்பா வெளில ஒண்ணு சொல்லுவாரு" என்று கடப்பாறை அளவிற்கான ஊசியை இறக்கிவிட்டுச் சென்றார் ரம்யா.

பிக்பாஸ் – நாள் 91

பாலாஜிக்கு ஆரியா வந்து மாட்ட வேண்டும்?! ஏற்கெனவே பாலாஜி கொலைவெறியில் இருந்ததால் இப்போதும் புகார் பட்டியலைத் தூசு தட்டி எடுத்து வாசித்தார். "குறை சொல்லிட்டே இருப்பாரு. ஒருத்தரை பாராட்டினா கூட முழுசா சொல்ல மாட்டாரு. அரை உண்மைகளை மட்டும் சொல்லுவாரு" என்று காண்டுடன் சொல்லி விட்டு அமர்ந்தார்.

அடுத்ததாக ‘நாமினேஷன்’ பட்டியலில் இருப்பவர்களின் விவகாரத்திற்கு வந்தார் கமல். "சோம்... ஏன் தனியா உக்காந்திருக்கீங்க?” என்று கேட்ட கமல், "ஒருவேளை சேவ் ஆயிட்டதா நெனச்சிட்டீங்களா?" என்று கேட்டு, "ஆம்... நீங்கள் காப்பாற்றப்பட்டீர்கள்" என்று தெரிவித்ததும் ‘லவ் பெட்’ அணி உற்சாகத்தில் துள்ளிக் குதித்தது.

பொதுவாக ரம்யா தனது அதிருப்தியான முகபாவங்களை புன்னகையால் மூடிக் கொள்வார். ஆனால் சோம் காப்பாற்றப்பட்டது தெரிந்ததும் ரம்யாவின் முகத்தில் அதிருப்தியும் கவலையும் வெளிப்படையாக தெரிந்தது. (இந்தக் கேமராகாரன் வேற விடாம ஃபோகஸ் பண்ணிட்டே இருந்தான்). தம்பி வேறு வந்து ஆருடம் சொல்லி விட்டிருந்ததால் அது சார்ந்த குழப்பத்திலும் அச்சத்திலும் ரம்யா இருந்தார் போலிருக்கிறது.

“உங்க தம்பி ஒண்ணு சொல்லிட்டு போனார்ல... நீங்க இன்னிக்கு போகாம இருந்தீங்கன்னா அது பத்தி யோசிங்க” என்று ரம்யாவிற்கு ஆலோசனை தந்தார் ஆஜித். "அய்யய்யோ... இவன்லாம் பன்ச் டயலாக் பேசறானே' என்று ரம்யாவின் மைண்ட் வாய்ஸ் ஓடியிருக்க வேண்டும். “நீ ஒருவேளை வெளியே போனா... அதுக்கு காரணம் நீ கிடையாது –ன்னுதான் தம்பி சொன்னான். அதனால நான் ஏன் யோசிக்கணும்” என்ற ரம்யா "ஒண்ணும் புரியலை... போடா" என்றார்.

“‘டைட்டில் வின்னர்–ன்னு என்னை சொல்ல வேணாம்னு ரெண்டாவது வாரத்துல இருந்தே சொல்லிட்டு இருக்கேன். அது வாரா வாரம் மாறிட்டே இருக்கும். மேலும் மத்தவங்களைக் காயப்படுத்தும்" என்று ரம்யா சொன்ன காரணம் சரியானது. பெருந்தன்மையானதும் கூட. "நான்தான் இந்த வாரம் போவேன்" என்று ஷிவானி ஆரம்பிக்க, "ஹலோ... நான்தான் க்யூல முன்னாடி வந்தேன்" என்று ஆஜித் ஜாலியாக அடம்பிடித்தார்.

பெருமாள் முருகன் எழுதிய ‘கூளமாதாரி’
‘வாரம் ஒரு புத்தகம்’ பகுதியில் இந்த வாரம் கமல் பரிந்துரை செய்தது, பெருமாள் முருகன் எழுதிய ‘கூளமாதாரி’. தாழ்த்தப்பட்ட இனக்குழுவைச் சேர்ந்த, ஆடு மேய்க்கும் சிறார்களின் வாழ்வியலை யதார்த்தமாக சித்தரித்திருக்கும் நாவல் இது. இதை எழுதிய பெருமாள் முருகன் ஓர் ஆசிரியரும் கூட. இவரின் ‘மாதொருபாகன்’ என்கிற புதினம் சில காரணங்களால் சர்ச்சைக்கு உள்ளானது. பல அற்புதமான சிறுகதைகளையும் பதிப்புத்துறை சார்ந்த சிறந்த கட்டுரைகளையும் அபாரமான நாவல்களையும் எழுதியிருக்கும் பெருமாள்முருகன், நவீன தமிழ் இலக்கியத்தின் ஒரு முக்கியமான படைப்பாளி.

அடுத்ததாக எவிக்ஷன் கார்டுடன் மேடைக்கு வந்தார் கமல். ‘ஸ்டோர் ரூமில் இரண்டு பெட்டிகள் இருக்கும்’ என்று அடுத்த விளையாட்டை கமல் அறிவிக்கும் போது பேய் படத்தின் திகில் காட்சியைப் பார்த்த அதிர்ச்சியான எஃபெக்ட்டைத் தந்தார் கேபி. இந்த விளையாட்டிற்கு முன்பாக ‘ஷிவானி’ காப்பாற்றப்பட்ட செய்தியை தெரிவித்தார் கமல். எனில் ரம்யாவின் டென்ஷன் இன்னமும் உயர்ந்திருக்கும். (ரம்யாவிற்கு முன்பாக ஷிவானியா... பயங்கர அநியாயம் இதெல்லாம்).

பெட்டியின் மேல் பச்சை நிறத்தில் ரம்யாவின் பெயரும் சிவப்பு நிறத்தில் ஆஜித்தின் பெயரும் எழுதப்பட்டிருந்த போதே புரிந்து போயிற்று. என்றாலும் விளையாட்டை சற்று இழுத்து ‘ஆஜித்’ என்கிற பெயரை வெளியேற்றப்படும் பெயராக அறிவித்தார் கமல். இதை எதிர்பார்த்தது போல் ஆஜித் எழுந்து நின்றார். "நல்லா விளையாடினேடா தம்பி" என்று ஆஜித்தை அரவணைத்து பாராட்டினார் ‘அண்ணன்’ பாலாஜி... ‘பயந்துட்டியா குமாரு’ என்று சோம் ரம்யாவை விசாரிக்க, "பயப்படலை... ஆனா கால்லலாம் நடுங்குச்சு" என்று கெத்தாக பதில் சொன்னார் ரம்யா.

உண்டியலை உடைத்த ஆஜித் அதிலிருந்த நாணயங்களை பாலாஜி, ரம்யா, கேபி ஆகியோர்களுக்கு பகிர்ந்தளித்தார். கீழே கிடந்த உண்டியலின் துண்டுகள் யார் காலிலாவது குத்தி விடுமோ என்று நமக்குத்தான் பயமாக இருந்தது. அர்ச்சனாவைப் போல் ஆஜித்தும் அவற்றை உடனே அப்புறப்படுத்தியிருக்கலாம்.

பிறகு கேபியின் வேண்டுகோளுக்கு இணங்க ‘காற்று வெளியிடை’ படத்திலிருந்து பாடினார். ‘ஒலிகளின் தேடல் என்பதெல்லாம் மௌனத்தில் முடிகிறதே... மௌனத்தின் தேடல் என்பதெல்லாம் ஞானத்தில் முடிகிறதே’ என்று வைரமுத்துவின் ‘வாவ்’ வரிகளை சிறப்பாக பாடினார். ஆனால், ‘நன்னிலவே நீ நல்லை அல்லை’ என்பதை ‘நள்ளிரவே’ என்று மாற்றிப் பாடிவிட்டார்.

பிக்பாஸ் – நாள் 91

“நீ நல்லாத்தாண்டா விளையாடினே" என்று எல்லோரும் ஆஜித்தை உற்சாகப்படுத்தி வழியனுப்பினார்கள். ஆஜித் விடைபெறும் போது பாலாஜி வந்து கட்டிப்பிடிக்க, "பார்த்து வார்த்தையை விடுங்க" என்று அப்போது ஆஜித் சொன்ன உபதேசம் திருவாசகம்.

ஏறத்தாழ சமவயது தோழர் என்பதால் கேபி அதிகம் கண்கலங்கினார். "போவான்னு நெனக்கல. இந்தமுறைதான் நான் அவனை நாமினேட் பண்ணேன். முன்னாடி நாமினேட் ஆகும் போது இந்தப் பாட்டைத்தான் பாடினான்" என்று பல விஷயங்களை நினைவுகூர்ந்து நெகிழ்ந்து அழுதார் கேபி.

"அனிதாவும் ஆஜித் பயபுள்ளையும்தான் நிறைய காயின்களை சம்பாதிச்சு வெச்சிருந்தாங்க" என்று தம்பியின் பெருமை பற்றி புகழ் பாடினார் பாலாஜி.

மேடைக்கு வந்த ஆஜித், "உங்களை எங்க குடும்பத்திற்கே ரொம்ப பிடிக்கும். இப்பயாவது உங்க கூட கைகுலுக்கலாம், கட்டிப்பிடிக்கலாம்னு நெனச்சேன்" என்று ஆதங்கப்பட "விரைவில் நிலைமை சீராகும்" என்று ஆறுதல் சொன்னார் கமல். “நீங்க ஆரம்பத்துலயே வெளியே போற நிலைமை ஏற்பட்டுச்சு. அப்புறம் 13 வாரங்கள் தாக்குப்பிடிச்சிட்டீங்க... இல்லையா?" என்று கமல் கேட்டதை சங்கடத்துடன் ஆமோதித்தார் ஆஜித்.

"ஓகே... நீங்க ஒரு நல்ல பாடகர். அதனால்தான் குரல் வளத்தை வீணாக்காம சத்தம் போடாம இருந்தீங்க போல. பாடகர்கள்லாம் அப்படித்தான் இருப்பாங்க. இந்த வெளிச்சத்தை பயன்படுத்திக் கொள்ளுங்கள். இனிமே உங்களின் பெயரை நாடு அறியும்" என்று ஆஜித்திற்கு வாழ்த்து சொன்ன கமல், அகம் டிவி வழியாக போட்டியாளர்களை சந்திக்க வைத்தார்.

பிக்பாஸ் – நாள் 91

இதில் பாலாஜி, கேபி, ரம்யா ஆகியோருக்கு மட்டும் ஸ்பெஷல் நன்றியை ஆஜித் தெரிவித்த விதம் நெகிழ்ச்சிக்குரியது. குறிப்பாக பாலாஜியை வழிகாட்டும் அண்ணனாக ஆஜித் ஏற்றுக் கொண்டது நெகிழ்வை ஏற்படுத்தும் உறவு. ஆனால் அட்வைஸ் சொல்லி அறுவை செய்த ஆரியின் அருமை பிறகுதான் ஆஜித்திற்குப் புரிந்தது போல. ‘அக்கா’ ரம்யாவின் பாசம் ‘தோழி’ கேபியின் அன்பு ஆகியவற்றிற்கு நன்றி சொன்னார் ஆஜித். இவரின் பயண வீடியோ வழக்கம் போல் உண்மையிலேயே அற்புதம். பிக்பாஸ் டீமிற்கு பாராட்டு. குறிப்பாக பேன்ட் ஜிப் போட மறந்து பின்பு மேடையில் ஆட்டத்திற்கு இடையில் சங்கடத்துடன் போட்ட காட்சி சுவாரஸ்யம். இதற்கு வாய் விட்டு சிரித்தார் ஆஜித்.

ஆஜித்தை வாழ்த்தி அனுப்பி விட்டு கமலும் விடைபெற்றார். மறக்காமல் ‘உங்கள் நான்’ என்றார். (பின்னே சிலம்பரசன் சொன்னா கேட்காம இருக்க முடியுமா?).

அது யாருக்காக இருந்தாலும் வெளியே இருந்து வரும் அழைப்புகளை வைத்து ஆராய்ச்சி செய்வது ரம்யாவின் வழக்கம். இந்த முறை அவருக்கே வந்ததால் அதைப் பற்றி ஷிவானியுடன் ஆராய்ச்சியில் இறங்கினார். சில விஷயங்களை ஷிவானி தெளிவு செய்தார். பின்பு வந்த ரியோவும் அதை வழிமொழிந்தார்.

ஆரம்ப காலக்கட்டங்களில் ரம்யா யாரைப் பற்றியும் புறணி பேசியதில்லை. அவ்வாறு பேசியவர்களையும் தடுத்துவிடுவார். ஆனால் ஆரியுடன் மோதல் ஏற்பட்ட பிறகு அவரைப் பற்றி மட்டும் மற்றவர்களிடம் ஜாலியாக கலாய்த்தார். அது harmless humour ஆகத்தான் இருந்தது. இன்னொருவருக்கு குழி தோண்டும் வில்லங்கமான புறணியாக இல்லை.

ஆனால், சண்டைக்கோழியாக சிலிர்த்து மோதி கடுமையான வார்த்தைகளை பேசுபவர்களுக்கு தரும் மதிப்பு கூட தன் ஆட்சேபங்களை புன்னகையுடன் மென்மையாக சொல்பவர்களுக்கு இல்லை என்பது விசித்திரமாக இருக்கிறது. ஆனால் சூழல் கற்றுத் தந்த பாடத்தினால் ரம்யாவும் இப்போது விவாத ஜோதியில் ஆவேசமாக ஐக்கியமாகத் துவங்கியிருக்கிறார்.

பிக்பாஸ் – நாள் 91

ஆனால் சர்ச்சைகள் நிகழ்ந்து கொண்டிருக்கும் பல சமயங்களில் ரம்யா கள்ள மெளனத்துடன் இருந்தார் என்பது உண்மை. ஷிவானி, ஆஜித், சோம் உட்பட பலரும் அப்படித்தான் இருந்தார்கள். போலவே தன்னை நேரடியாக பாதிக்கும் விஷயங்களைத் தவிர பிறவற்றில் அவர் அதிகம் தலையிடவில்லை. ஆனால் சனம், அனிதா போன்றவர்கள் பாதிப்புகளை அடையும் போது அவர்களுக்கு ஆதரவாகவும் துணையாகவும் ரம்யா நின்றார் என்பதையும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.

பாலாஜியும், ஷிவானியும் நள்ளிரவிற்கு மேல் ‘குசுகுசு’வென்று பேசிக் கொண்டிருந்தார்கள். முக்கியமாக ஒன்றுமில்லை. பழைய புராணம்தான். "ஆரி என்னைச் சோம்பேறின்னு சொல்லிட்டாரு. நான் நல்லாத்தான் வேலை செஞ்சேன்" என்று அதே பல்லவியை புகாராகவும் சுயபச்சாதாபத்துடனும் ஷிவானியிடம் புலம்பிக் கொண்டிருந்தார் பாலாஜி. "நீயும் ஒவரா வாயை விட்டிருக்கக்கூடாது. அதனாலதான் பேர் கெட்டுப் போச்சு" என்று ஷிவானியும் தகுந்த ஆலோசனையைத் தந்து கொண்டிருந்தார். கமல் சொல்வதைக் கேட்காவிடினும் ஷிவானி சொல்வதையாவது பாலாஜி கேட்பது சிறப்பு.

ரம்யா தன்னைப் பற்றி சொன்ன காரணங்களை ரியோ இன்னொரு பக்கம் ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தார்.

"என்கிட்ட இருந்த வேலைக்காரங்க எல்லோரும் கூட வெளியே போயிடலாம்.. ஆனா இருட்டில்.. அகல் விளக்கின் துணையோடு.. ஒரு உருவம் மட்டும் தனியா இந்த ஃபாக்டரில வேலை செஞ்சுட்டு இருக்கும். அதுதான் இந்த ராஜூ!" என்று ‘பாசமலர்’ திரைப்படத்தில் உருக்கமான வசனத்தைப் பேசுவார் சிவாஜி.

அது போல் பிக்பாஸ் வீட்டின் இருளில் ஓர் உருவம் மட்டும் தனியாக வேலை செய்து கொண்டிருந்தது. அது ஆரி. வீட்டை தனியாளாக நின்று துடைத்துக் கொண்டிருந்தார். இதை தாமதமாக பார்த்த ரியோவும் சோமுவும், "என்ன ப்ரோ... கூப்பிட்டிருந்தா நாங்க வந்திருக்க மாட்டோமா" என்று பதற “ஹவுஸ் கீப்பிங் டீமைச் சேர்ந்த பாலாஜியே பார்த்துட்டு கம்முன்னு போயிட்டான். ஆஜித்தும் இப்ப இல்லை... எனில் தானாக வந்து கேட்டிருக்க வேண்டாமா?” என்று ஆரி எரிச்சலுடன் சொன்னதில் நியாயமுள்ளது.

பிக்பாஸ் – நாள் 91

‘பழைய குருடி... கதவைத் திறடி’ கதையாக பாலாஜி திரும்பவும் முருங்கை மரத்தில் ஏறிக் கொண்டார் போலிருக்கிறது. அது ஆரிக்குச் சாதகமாக மாறும் என்கிற புத்தி கூட அவருக்கு இல்லை. கோபமும் வன்மமும் அவர் கண்களை மறைக்கிறது.

ஆக... ஆஜித் என்கிற போட்டியாளரும் வெளியேறி விட்ட நிலையில் சுமாரான போட்டியாளராக உள்ளவர் ஷிவானி மட்டுமே. எனில் ஆட்டம் இன்னமும் சூடாகலாம். பொறுத்திருந்து பார்ப்போம். (வேற வழி?!).


source https://cinema.vikatan.com/bigg-boss-tamil/aajeedh-evicted-bigg-boss-tamil-season-4-day-91-highlights

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக