சீன அரசின் கடுங்கோபத்துக்கு உள்ளாகி இருக்கும் ஜாக் மா கடந்த இரண்டு மாதங்களாக வெளியில் தலைகாட்டவில்லை. அவர் காணாமல் போய்விட்டாரா அல்லது எங்கே, ஏன் மறைந்து இருக்கிறார் என்கிற கேள்வி எழுந்து, சீனாவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது.
கடந்த அக்டோபர் மாதம் 24-ஆம் தேதி அன்று சீன அரசாங்கம் தொழில் நிறுவனங்கள் மீது விதித்துவரும் கட்டுப்பாடுகள் குறித்து பல விமர்சனங்களை முன்வைத்தார். தொழில் நிறுவனங்கள் மீது கட்டுப்பாடுகளை விதிப்பவர்கள் ‘வயோதிகர்கள் மன்றம்’ (Old men Culb) என்றும், காலத்துக்கேற்ப இவர்கள் மாறவேண்டும் என்றும் தனது கருத்தினை முன்வைத்தார்.
இதனைத் தொடர்ந்து அலிபாபாவின் ஆன்ட் நிறுவனம் ஐ.பி.ஒ. வரவிருந்தது. இதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் முடிந்துவிட்ட நிலையில், இந்த ஐ.பி.ஒ.வை நிறுத்தியது சீன அரசாங்கம்.
இதனைத் தொடர்ந்து அலிபாபா நிறுவனம் மீது அடுத்தடுத்து நடவடிக்கை எடுக்கத் தொடங்கியது சீன அரசாங்கம். சில நாள்களுக்கு முன்பு, அலிபாபா நிறுவனம் போட்டியாளர்களுக்கு உரிய வாய்ப்பினைத் தராமல், நயவஞ்சமாக செயல்பட்டிருக்கிறது என்று புதிய விசாரணையைத் தொடங்கியது.
அலிபாபா நிறுவனத்தின்மீது சீன அரசாங்கம் இப்படித் தொடர் தாக்குதல் நடத்திவரும் நிலையில், கடந்த இரண்டு மாதங்களாக வெளியில் வராமலே இருக்கிறாராம் அலிபாபாவின் தலைவர் ஜாக் மா. புதிய தொழில்முனைவோர்களைக் கண்டறியும் தொலைக்காட்சி நிகழ்ச்சியின் நடுவர் குழுவில் ஜாக் மா இடம்பெறுவார் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால், நவம்பர் மாத இறுதியில் இந்த நிகழ்ச்சியின் நடுவர் குழுவில் ஜாக் மாவுக்குப் பதிலாக, அலிபாபா நிறுவனத்தின் வேறொரு உயரதிகாரி இடம்பெற்றார். ஜாக் மாவுக்கு வேறு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வேண்டிய கட்டாயம் இருப்பதால், அவர் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவில்லை என அலிபாபா தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
ஆனால், உண்மை இதுதானா அல்லது சீன அரசின் நெருக்கடி தாங்காமல் ஜாக் மா மறைந்திருக்கிறாரா அல்லது சீன அரசாங்கம் அவரை வலுக்கட்டாயமாக வீட்டில் இருத்தி வைத்திருக்கிறதா என பலவிதமான கேள்விகளை எழுப்பி வருகின்றனர் ஜாக் மாவின் நலம் விரும்பிகள். காரணம், மக்களின் கண்களில் படாமல் விலகி இருக்க ஜாக் மா எப்போதும் விரும்பியதில்லை. சீன பிசினஸ் உலகில் தன்னை ஒரு ஹீரோவாக மக்கள் பார்க்கிறார்கள் என்பதை நன்கு புரிந்துகொண்ட ஜாக் மா, சமூக மாற்றங்களுக்கான கருத்துகளை தொடர்ந்து முன்வைத்தார். 2017-ல் கன் ஷூ தாவோ (Gong Shou Dao) என்கிற குறும்படத்தில் குங்ஃபூ மாஸ்டராக நடித்தார்.
2019-ல் காமன் டெஸ்டினி (Comman Destiny) என்கிற படத்திலும் நடத்து, உலகம் முழுக்க உள்ள ஜாக் மா ரசிகர்களின் மனதைக் கொள்ள கொண்டார்.
இப்படிச் செயல்படுபவர் தற்போது கடந்த இரண்டு மாதங்களாக தலைமறைவாக இருப்பது பற்றி உலகத் தொழிலதிபர்கள் பெரும் கவலை அடைந்துள்ளனர். சீன அரசின் நல்லதாரவைப் பெற நிறுவனத்தை மாற்றி அமைக்கும் வேலையில் அவர் பிசியாக இருப்பதால், அவர் வெளியில் தலைகாட்டவில்லை என்று சிலர் சொல்கின்றனர்.
அலிபாபா என்பது உலகப் புகழ்பெற்ற நிறுவனம் என்பதால், ஜாக் மாவுக்கு என்னவாகி இருக்குமோ என்று உலகமே பதற்றத்தில் இருக்கிறது. இந்தப் பதற்றத்தைத் தணிக்க வேண்டிய கடமை சீன அரசுக்கும் அலிபாபா நிறுவனத்துக்கும் நிச்சயம் உண்டு!
source https://www.vikatan.com/business/news/alibaba-founder-jack-ma-suspected-missing-in-china
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக