சட்டசபைத் தேர்தல் நெருங்குவதால், கழகங்கள் மல்லுகட்டத் தொடங்கிவிட்டன. கோவை மாட்டத்தில், அமைச்சர் எஸ்.பி வேலுமணியின் தொண்டாமுத்தூர் தொகுதிக்கு வந்த தி.மு.க தலைவர் மு.க ஸ்டாலின், உள்ளாட்சித்துறை ஊழல்களை பட்டியலிட்டார். அதே கூட்டத்தில் பூங்கொடி என்ற அ.தி.மு.க பெண் சலசலப்பை ஏற்படுத்த, விவகாரம் பூதாகரமானது.
Also Read: கோவை: `அவங்களை வெளிய அனுப்புங்க’ - அ.தி.மு.க பெண் நிர்வாகியிடம் கொதித்த ஸ்டாலின்... என்ன நடந்தது?
இந்நிலையில், தி.மு.க-வின் மக்கள் கிராம சபைக் கூட்டம் மற்றும் ஸ்டாலினைக் கண்டித்து அதே தொண்டாமுத்தூரில் அ.தி.மு.க-வினர் கண்டன பொதுக்கூட்டத்தை நடத்தினர். தி.மு.க-வுக்கு போட்டியாக நடத்துவதால், அ.தி.மு.க-வில் மாஸ் காட்ட நினைத்தனர். அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, நடிகை விந்தியா ஆகியோர் சிறப்புப் பேச்சாளர்களாக வரவழைக்கப்பட்டனர்.
தி.மு.க எப்படி கோவை முழுவதும் வண்டியில் ஆட்களை ஏற்றிவந்து, கூட்டம் கூட்டியதோ, அதேபோல அ.தி.மு.க-வும் கோவை முழுவதும் இருந்து வண்டிகளில் ஆட்களை ஏற்றிவந்து கூட்டத்தைக் கூட்டினர். 4 மணிக்கு கூட்டம் தொடங்கும் என்று கூறினர். அழைத்து வரப்பட்ட பொதுமக்கள் 3 மணிக்கு ஸ்பாட்டில் ஆஜராகிவிட்டனர். அமைச்சர்கள் வருவதற்கு இரவு 8 மணி ஆகிவிட்டது. அதுவரை, ஆடல், பாடல், நாடகங்களைப் போட்டு பொழுதுபோக்கிக் கொண்டிருந்தனர்.
'பூங்கொடி மீது நடவடிக்கை எடுக்காவிட்டால், அ.தி.மு.க கூட்டத்துக்கு நாங்க 1,000 பேர் வந்து பிரச்னை பண்ணுவோம்' என்று தி.மு.க-வினர் போலீஸாரிடம் கூறியிருந்தனர். இதனால், அங்கு ஏகத்துக்கும் கெடுபிடி. அ.தி.மு.க வினரையே அனுமதிக்கவில்லை. 'குறிப்பிட்ட சிலருக்குதான் அனுமதி.. நீங்க அந்த வழியாப் போங்க' என்று போலீஸார் கறார் காட்டினர்.
பத்திரிகையாளர்களே நீண்ட நேர வாக்குவாதத்துக்குப் பிறகுதான் அனுமதிக்கப்பட்டனர். நாம்தமிழர் கட்சியில் இருந்து விலகி, சமீபத்தில் அ.தி.மு.க-வில் இணைந்த பேராசிரியர் கல்யாணசுந்தரத்துக்கு, அ.தி.மு.க-வில் இந்த பொதுக்கூட்டம் தான் கன்னிப்பேச்சு. அ,தி.மு.க-வில் இணைந்தது ஏன்?. தி.மு.க-வை ஏன் எதிர்க்க வேண்டும்? என்று தொடங்கி,
இதுவரை சமூகவலைதளங்களில் தி.மு.க மற்றும் ஸ்டாலின் குறித்த விமர்சனங்கள், வைரல் வீடியோக்கள் அனைத்தையும் அவர் பேசி முடிப்பதற்குள் ஒரு மணி நேரம் முடிந்துவிட்டது. பிறகு, அ.தி.மு.க மாவட்டச் செயலாளர்கள், சீனியர்கள் பேசினர். அப்போதுதான் வேலுமணி மேடையேறினார்.
கூட்டத்தில் பேசிய அமைச்சர் வேலுமணி, ``தி.மு.க கூட்டம் நடத்துகிறார்கள். நாமும் கூட்டம் நடத்த வேண்டும் என்று கழகத்தினர் கூறினர். எதற்கு, வேண்டாம் என்று நான் சொன்னேன். அவர்கள் உறுதியாக கூட்டம் போடவேண்டுமென்று கூறினார்கள். அ.தி.மு.க ஆட்சியைக் கலைக்க ஸ்டாலின் தில்லுமுல்லு வேலைகளைச் செய்தார். பிரிந்த கட்சியை ஒன்று சேர்த்ததால் என் மீதும், அமைச்சர் தங்கமணி மீதும் ஸ்டாலினுக்கு கோபம். தேர்தல் நேரத்தில் தி.மு.க-வினர் பொய்யான வாக்குறுதிகளை அளித்து மக்களைக் கவர்ந்து வாக்குகளை பெறுகின்றனர். ஸ்டாலின் உள்ளாட்சி துறை அமைச்சராக இருந்த போது எதுவும் செய்யவில்லை.
கோவையில் 50 ஆண்டுகளில் இல்லாத வளர்ச்சியை 5 ஆண்டுகளில் செய்துள்ளோம். மக்களை ஏமாற்றி ஆட்சியைப் பிடித்துவிடலாம் என தி.மு.க-வினர் நினைக்கின்றனர். ஸ்டாலினுக்கு உள்ளாட்சித்துறை பற்றியே எதுவும் தெரியாது. அவர் முதல்வராகி என்ன செய்யப் போகிறார்?. ஸ்டாலின் எப்போதும் பொய் பேசுவார். ஸ்டாலின் எந்த காலத்திலும் முதலமைச்சராக முடியாது. அதை அழகிரியே சொல்லிவிட்டார். எங்களை மணி.. மணி (பணம்) என்று சொல்கின்றீர்கள். கருணாநிதி, கலாநிதி, உதயநிதி, இன்பநிதி என்று நிதியை பெயருக்கு பின் வைத்துள்ளீர்கள்.. எனவே, எல்லாமே உங்களுக்கு பொருந்தும்" என்றார்.
இந்தப் பொதுக்கூட்டத்தை வெற்றிகரமாக முடிக்க வேண்டும் என்பதில் வேலுமணி உறுதியாக இருந்தார். இதனால், தனது சாதனைகளையும் பேச வேண்டும் என்று சொல்லி, ராஜேந்திரபாலாஜி, விந்தியாவுக்கு மேடையிலேயே அவ்வபோது எழுதிக் கொடுத்துக் கொண்டிருந்தார் வேலுமணி. எல்லோரும் மாஸ்க் அணிந்திருக்க, ராஜேந்திர பாலாஜி மட்டும் மாஸ்க் போடவில்லை. அவருக்கு விந்தியா மாஸ்க் கொடுத்தார். ஆனால், மாஸ்க் அணிந்தால் முகம் தெரியாது என மறுத்த ராஜேந்திரபாலாஜி, பிறகு சிறிது நேரம் மட்டும் மாஸ்க் அணிந்து அதை பின்னால் கொடுத்துவிட்டார்.
கூட்டம் தாமதமாகத் தொடங்கியதால் முடிவதற்கு, இரவு 10.30 ஆகிவிட்டது. இடையில் மக்கள் சிலர் அவ்வபோது எழுந்து கிளம்பி கொண்டிருந்தனர். காலியான இருக்கைகளை உடனடியாக நிரப்புங்கள் என்று கட்சியினருக்கு, கண்களால் வேலுமணி உத்தரவு போட்டுக் கொண்டிருந்தார்.
கூட்டத்தில் பேசிய விந்தியா, ``அமைச்சர் எஸ்.பி வேலுமணி விஸ்வாசத்தில் கர்ணன். வேலையில் கிருஷ்ணன். அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் பேச்சுக்கு நான் ரசிகை. மக்களுக்காக வாழ்பவர் எடப்பாடி பழனிசாமி. அடுத்தவர்களை குறைசொல்லி வாழ்வபர் புளுகுமூட்டை ஸ்டாலின். யார் கேட்டாலும் பதில் சொல்பவர்தான் தலைவர். எழுதிக் கொடுத்ததற்குப் பதிலளிப்பவர் தலைவரல்ல. அதற்கு பெயர் ரோபோ.
ஆற்றல் இருந்தால், திராணி இருந்தால் ஸ்டாலின் பதில் சொல்லட்டும். எங்களைக் கண்டு ஸ்டாலின் பயப்படுகிறார். பத்து வரி படிப்பதற்குள், ஸ்டாலின் பத்து முறை உளறுவார். ஆடித்தள்ளுபடி போல, நான்கு வருடங்களாக ஆட்சி மாறும் என ஸ்டாலின் சொல்லி வருகிறார். 400 வருடமானாலும் ஸ்டாலின் முதல்வராக முடியாது.
சீப்பை ஒளித்து வைத்தால் கல்யாணம் நிற்காது என ஸ்டாலின் சொல்கிறார். ஸ்டாலினுக்கு சீப்பு தேவையில்லை. அவர் வைத்துள்ளது வீக். ராஜேந்திர பாலாஜி பலூனை உடைத்ததை ஸ்டாலின் கிண்டலடிக்கிறார். பலுனை வெடிப்பது வெகுளித்தனம். பிரியாணி கடை, பியூட்டி பார்லரில் அடிப்பது வெறித்தனம். தி.மு.க இல்லையென்றாலே கலெக்சன், கரப்ஷன், கமிசன் இருக்காது. அ.தி.மு.க அமைச்சர்கள் மீதான ஊழல் புகார்களுக்கு ஆதாரமில்லை.
தி.மு.க இன்னும் இருக்க காரணம், டேலன்ட் எல்லாம் இல்லை பிரதர். எல்லாம் கிருபை.. கிருபை.. கிருபை.. ஸ்டாலின் சொல்லும் பொய்களை நம்பினால், உங்களுக்கு ஹிட்லர் ஆட்சிதான். தி.மு.க ஒரு கட்சியல்ல. ஒரு குடும்ப கம்பெனி. வேலுமணிக்கு ஸ்டாலின் எதிரியல்ல, உதிரி. தமிழ்நாட்டுக்கு தி.மு.க தேவையில்லை" என்றார்.
கடைசியாக மைக் பிடித்த ராஜேந்திரபாலாஜி வழக்கம் போல ஸ்டாலின் மற்றும் தி.மு.க.வினரை ஒருமையில், அச்சில் ஏற்ற முடியாத வார்த்தைகளால் அர்ச்சனை செய்தார். ``ஆட்சிக்கு வந்தால் அமைச்சர் வேலுமணியை விடமாட்டோம் என ஸ்டாலின் சொல்கிறார். ஸ்டாலினை நாங்கள் விடமாட்டோம். ஸ்டாலினுக்கு தமிழ்நாட்டில் வேலையில்லை. ஆந்திரா, தெலங்கானா பக்கம் ஓடிவிடுங்கள். கருணாநிதி அப்பாவுக்கு ஒரு பீப்பி, ஒரு கொட்டு தான் சொத்தாக இருந்தது. ஆனால், ஸ்டாலினுக்கு ஒன்றரை லட்சம் கோடி சொத்து உள்ளது. ஊழல் என்றாலே தி.மு.க- தான். ஊழல் நாயகன் என்றால் ஸ்டாலின் தான்.
ஸ்டாலினுக்கு டைம் சரியில்லை. திருநள்ளாறு சென்று சாமி கும்பிடுங்கள். கணக்கில் ஸ்டாலின் படு வீக். ஸ்டாலின் சொல்லும் கணக்கைப் பார்த்து மக்கள் சிரிக்கிறார்கள். ஸ்டாலின் படத்தில் வேண்டுமானால் முதலமைச்சராக நடிக்கலாம். எஸ்.பி.வேலுமணி அருமையான, அற்புதமான அமைச்சர். வன்முறையும், தி.மு.க-வும் ஒன்றாக பிறந்தது. ஸ்டாலின் ஒரு விஷப் பாம்பு. ஸ்டாலினுக்கு சொந்த மூளையில்லை.
அ.தி.மு.க-வை அழிக்க நினைக்கும் தி.மு.க-வின் கதையை, இந்த தேர்தலோடு முடிக்க வேண்டும். ஸ்டாலின் இந்துக் கடவுள்களை கேவலப்படுத்துகிறார். பிறகு எதற்காக இந்துக்களிடம் ஒட்டு கேட்கிறார்? இந்துக்கள் ஓட்டு இனிக்குது. எங்கள் கடவுள் கசக்குதா? இதேபோல, கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்களை சொன்னால் அவர்கள் போட்டு விடுவார்கள் என பயம் இருக்கிறது. அங்கே தீவிரமான இளைஞர்கள் இருக்கிறார்கள். இந்து மதம் சகிப்புத்தன்மையாக இருக்கும். நம்மை போல அங்கு சகிப்புத்தன்மையோடு இருக்கமாட்டார்கள்.
கொள்கை வேறு, கூட்டணி வேறு. இந்துக்களை மட்டுமல்லாமல், இஸ்லாமியர்களையும் ஸ்டாலின் ஏமாற்றிக் கொண்டிருக்கிறார். மூன்றாவது முறையாக அ.தி.மு.க ஆட்சிக்கு வரும். தி.மு.க-வினர் செய்த கொலை வழக்குகள் தொடர்பாக விசாரிக்க, விசாரணை ஆணையம் அமைக்கப்படும். அந்த ஆணையத்திற்கு என்னை தலைவராகப் போடுங்கள். அவர்களை நான் பார்த்துக் கொள்கிறேன். எனக்கு வேறு எதுவும் வேண்டாம்" என்றார்.
source https://www.vikatan.com/government-and-politics/politics/coimbatore-admk-public-meeting-report
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக