Ad

திங்கள், 4 ஜனவரி, 2021

புதுச்சேரி: அனுமதிக் கடிதம்; முகக்கவசம்! - 9 மாதங்களுக்குப் பிறகு திறக்கப்பட்ட பள்ளிகள்

கொரோனா தொற்று நாடெங்கும் தீவிரமாக பரவத் தொடங்கியதையடுத்து முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கையாக, 2020 மார்ச் மாதம் இறுதியில் புதுச்சேரியில் அனைத்துப் பள்ளிகளும் மூடப்பட்டன. அதையடுத்து மத்திய அரசு அறிவித்த ஊரடங்கு தளர்வுகளுக்குப் பின்னர் அக்டோபர் மாதம் பள்ளிகள் திறக்கப்பட்டு, 9 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பெற்றோர்கள் அனுமதியுடன் சந்தேகங்களை நிவர்த்தி செய்துகொள்வதற்கான வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.

அரசுப் பள்ளி

டிசம்பர் மாத தொடக்கத்தில் புதுச்சேரியில் கொரோனா தொற்றின் தீவிரம் வெகுவாக குறைந்ததால், ஜனவர் 4-ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்றும், 1 முதல் 12-ம் வகுப்பு வரையுள்ள மாணவர்கள் பள்ளிக்கு வந்து சந்தேகங்களை தீர்த்துக் கொள்ளலாம் என்று அறிவித்திருந்தது கல்வித்துறை. மேலும் அந்த அறிவிப்பில் வாரத்தில் 6 நாள்கள் காலை 10 மணி முதல் 1 மணி வரை மட்டுமே வகுப்புகள் நடத்தப்படும் என்றும், வருகைப் பதிவேடுகள் கிடையாது என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.

அதேபோல ஜனவரி 18-ம் தேதியிலிருந்து பள்ளிகள் முழு நேரமாக இயங்கும் என்று தெரிவித்திருந்தது. ஆனால் மாணவர்களை பள்ளிகளுக்குள் அனுமதிக்க கண்டிப்பாக பெற்றோர்களின் விருப்பக் கடிதம் தேவை என்றும் பள்ளி மற்றும் வகுப்பறைகளில் கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும் என்றும் பள்ளி நிர்வாகங்களுக்கு உத்தரவிட்டது கல்வித்துறை.

வகுப்பறையில் மாணவர்கள்

மாணவர்களின் வருகை அதிகளவில் இருந்தால் 1,3,5,7,9,11 மாணவர்களுக்கு ஒரு நாளும், 2,4,6,8,10,12 மாணவர்களுக்கு மறுநாளும் வகுப்புகள் வைத்துக்கொள்ளலாம் என்று அனைத்துப் பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பினார் கல்வித்துறை இயக்குநர் ருத்ரகவுடு. இதற்கிடையில் பள்ளிகள் திறப்பது குறித்து மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்று பெற்றோர்களும், அரசியல் கட்சித் தலைவர்களும் கல்வித்துறையிடம் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

மேலும், ”தனியார் கல்வி நிறுவனங்கள் வசூல் வேட்டைகளை நடத்துவதற்காகத்தான், தற்போது கல்வியாண்டு முடிவதற்கு 3 மாதங்களே இருக்கும் நிலையில் பள்ளிகளை திறந்துவிட்டிருக்கிறது அரசு” என்று சமூக வலைத்தளங்களில் விமர்சித்துவருகின்றன சமூக அமைப்புகள். அதேசமயம் விகடனிடம் பேசிய கல்வித்துறை அமைச்சர் கமலக்கண்ணன், “பள்ளிகள் திறக்கப்படுவதில் மாற்றம் கிடையாது. கொரோனா விதிமுறைகளுடன் பள்ளிகள் செயல்படும்” என்றார்.

Also Read: திருச்செந்தூர்: 9 மாதங்களுக்குப் பிறகு கடலில் புனித நீராட அனுமதி! மகிழ்ச்சியில் பக்தர்கள்!

அதன்படி இன்று அரசு மற்றும் தனியார் பள்ளிகள் அனைத்தும் திறக்கப்பட்டன. பள்ளிக்கு வருகைதந்த அனைத்து மாணவர்களிடமும் பெற்றோர்களின் விருப்பக் கடிதம் பெறப்பட்டதுடன், அவர்கள் முகக்கவசம் அணிந்ததை உறுதிப்படுத்தி, கைகளில் சானிடைசர் போடப்பட்ட பின்னர் வகுப்பறைகளுக்குள் அனுமதிக்கப்பட்டனர். வகுப்பறைக்குள் 3 மாணவர்கள் அமரக்கூடிய மேசையில் இரண்டு பேர் மட்டுமே அமர வைக்கப்பட்டிருந்தனர்.



source https://www.vikatan.com/government-and-politics/education/schools-reopened-after-9-months-with-mask-and-permission-letter-in-puducherry

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக