Ad

திங்கள், 4 ஜனவரி, 2021

பிள்ளைக்கு வலிப்பு, விட்டுவிட்டு தற்கொலைக்கு முயன்ற பெண் மருத்துவர்... திருப்பூர் அதிர்ச்சி!

குடும்ப பிரச்னைகள், பொருளாதார பிரச்னைகளால் பெண்கள் மனமுடைந்து தற்கொலை செய்துகொள்வதைத் தடுப்பதற்கான முயற்சிகளை, அரசின் சமூக நலத்துறை முதல் தனியார் தொண்டு நிறுவனங்கள் வரை பலரும் மேற்கொண்டு வருகின்றனர். 'எந்தச் சூழ்நிலையிலும் வாழ்வதற்கு வழியிருக்கிறது' என்ற நம்பிக்கையை அவர்களுக்குக் கொடுத்தபடி இருக்கிறார்கள். இந்நிலையில், மருத்துவர் ஒருவரே தற்கொலைக்கு முயன்ற சோகம் அதிர்ச்சியை இன்னும் அதிகப்படுத்தியுள்ளது.

தனது 5 வயது மகளை அநாதரவாகக் குப்பைக்கூடத்தில் போட்டுவிட்டு எலி மருந்து தின்று தற்கொலைக்கு முயன்றுள்ளார் பெங்களூரைச் சேர்ந்த டாக்டர் சைலஜா குமாரி. காது, மூக்கு, தொண்டை மருத்துவரான இவர் பெங்களூரில் தனியாக கிளினிக் வைத்தும் இரண்டு மருத்துவமனைகளில் பகுதி நேரமாகப் பணியாற்றியும் வந்துள்ளார். இவரின் கணவர் தர்மபிரசாத். பொறியாளரான இவர் தஞ்சாவூரைச் சேர்ந்தவர். இந்தத் தம்பதியின் மகள் க்யாரா யு.கே.ஜி படித்து வருகிறாள்.

மனச் சோர்வு

சைலஜா குமாரிக்கும் தர்மபிரசாத்துக்கும் இடையிலான கருத்து வேறுபாடு காரணமாக கடந்த நான்கு ஆண்டுகளாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். கடந்த ஆறு மாதங்களுக்கு முன்புதான் இருவரும் விவாகரத்துக்கு விண்ணப்பித்திருக்கிறார்கள். சைலஜா குமாரியின் அம்மா, மனநலம் பாதிக்கப்பட்டவர் மற்றும் மாற்றுத்திறனாளி. அப்பாவின் பராமரிப்பில் இருக்கிறார்.

கொரோனா பொதுமுடக்கத்தின் காரணமாக சைலஜாகுமாரியின் கிளினிக்கில் போதிய வருமானம் கிடைக்கப் பெறாமல் அதை மூடும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், அமெரிக்காவுக்கு மருத்துவப் பணிக்குச் செல்ல விண்ணப்பித்திருந்த நிலையில் அதுவும் கிடைக்காமல் போயிருக்கிறது. இதுபோன்ற பின்னடைவுகளால் துவண்டுபோனார் சைலஜா குமாரி. தனது தேவைகளுக்கான போதிய வருமானம் இன்றி, ஆதரவற்ற நிலைக்கு ஆளானார்.

இந்நிலையில் வீட்டைவிட்டுக் கிளம்புவதென முடிவு செய்து கிளம்பியவர், இறுதியாகத் திருப்பூர் மாவட்டம் சேவூர் அருகே உள்ள தண்டுக்காரம்பாளையத்தில் தன் வாழ்வையே முடித்துக்கொள்ளத் தீர்மானித்திருக்கிறார்.

வீட்டை விட்டுக் கிளம்பியதிலிருந்து மகள் க்யாராவுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டிருக்கிறது. போதிய உணவும் கொடுக்கப்படவில்லை. அவளுக்கு காய்ச்சல் அடிக்கவே இருமல் மருந்து கொடுத்திருக்கிறார். வெறும் வயிற்றில் அளவுக்கு அதிகமாக மருந்து கொடுத்ததால் க்யாராவுக்கு வலிப்பு வந்திருக்கிறது. என்ன செய்வதெனத் தெரியாமல் அவளை அருகே இருந்த குப்பைக்கூடத்தில் போட்டுவிட்டு, அங்கிருந்து இரண்டு கிலோ மீட்டர் தள்ளிச் சென்று எலி மருந்து சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

தற்கொலை முயற்சி/ Representational Image

தண்டுக்காரம்பாளையத்தைச் சேர்ந்த பொதுமக்கள் இருவரையும் மீட்டு அவிநாசி அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். தீவிர சிகிச்சைக்காக அங்கிருந்து அவர்கள் கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

ஆறு நாள்கள் ஆன நிலையில் சைலஜா குமாரிக்கு எந்த பாதிப்பும் இன்றி குணமடைந்துவிட்டார் என்றும் அவரின் மகள் க்யாராவுக்கு வென்டிலேட்டர் உதவியுடன் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

இது குறித்து கோவை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் குழந்தைகள் நலப் பிரிவின் தலைமை மருத்துவர் பூமாவிடம் பேசினோம்.

``குழந்தை அனுமதிக்கப்பட்டபோது இருந்த உடல் நிலையிலிருந்து கொஞ்சம் முன்னேற்றம் இருக்கிறது. இன்னும் வென்டிலேட்டர் உதவியுடன்தான் சுவாசிக்க முடிகிறது. தொடர்ந்து வலிப்பு வந்த நிலையில் தற்போது அது கட்டுக்குள் வந்திருக்கிறது. சிறுநீரகம் மற்றும் கல்லீரலின் இயக்கம் நன்றாக இருக்கிறது. வயிற்றில் ரத்தக்கசிவு ஏற்பட்டது. அதுவும் தற்போது கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. குழந்தைக்கு இன்னும் தீவிர சிகிச்சை தேவைப்படுகிறது. இருமல் மருந்தை அதிகளவில் கொடுத்ததால் வலிப்பு வந்ததன் விளைவா, இல்லை ஏற்கெனவே குழந்தைக்கு உடல் நலப் பிரச்னை இருந்ததா எனத் தெரியவில்லை. எல்லாவற்றுக்கும் சேர்த்து சிகிச்சை அளித்துக் கொண்டிருக்கிறோம்” என்கிறார் மருத்துவர் பூமா.

சைலஜா குமாரி எதிர்கொண்டது இக்கட்டான நிலைதான். இதுபோன்று அநாதரவான சூழலுக்கு பெண்கள் ஆளாகும்போது அதை எதிர்கொள்வதற்கான மனதிடத்தை வளர்த்துக் கொள்வதை வலியுறுத்திப் பேசினார், உளவியல் மருத்துவர் மோகன வெங்கடாசலபதி.

உளவியல் மருத்துவர் மோகன வெங்கடாசலபதி

``எதற்குமே தற்கொலை தீர்வல்ல என்பதை காலம் காலமாகச் சொல்லிக்கொண்டிருக்கிறோம். ஒரு மருத்துவரே இப்படியொரு முடிவை எடுக்கலாமா என்கிற கேள்வி இயல்பாக எழும். தற்கொலை முடிவை பொறுத்தவரை அதற்கு விதிவிலக்கானவர்கள் என யாருமே இருக்க முடியாது. உலகளவில் நடந்த தற்கொலைகளின் வரலாற்றை எடுத்துப் பார்த்தாலே அது புலனாகும். சூழலை எதிர்கொள்ளத் திடமற்ற மனநிலைதான் சைலஜா குமாரியை தற்கொலையை நோக்கித் தள்ளியிருக்கிறது.

கணவருடனான உறவு முறிவு, வேலையின்மை, வெளிநாடு செல்லும் வாய்ப்பு கிடைக்கப் பெறாதது, பெற்றோர் ஆதரவு இல்லாதது என்பன போன்ற காரணங்கள் சேர்ந்து கொடுத்த அழுத்தத்தின் விளைவாக அவர் தற்கொலை செய்யும் முடிவுக்கு வந்திருக்கலாம். தற்கொலைக்காக வைக்கப்படும் எந்தக் காரணங்களும் செல்லுபடியாகாது.

குழந்தைகளுக்குச் சிறுவயதிலிருந்தே வலிகளை சுமக்கக் கற்றுக்கொடுக்க வேண்டும். ஏற்றத் தாழ்வுகளைச் சமாளித்து எதிர்கொண்டு வரும் திடத்தை அவர்களுக்குள் உருவாக்க வேண்டும். எந்த ஒரு சூழலும் நிரந்தரமல்ல, அந்நிலையை மாற்றியமைக்க முடியும் என்கிற நம்பிக்கையை அவர்கள் மனதில் விதைக்கவேண்டும்.

Depression/ Representational Image

சைலஜா குமாரி, கடந்த பல நாள்களாகத் தீராத மனச்சோர்வுக்கு ஆட்பட்டிருக்கக் கூடும். அதன் விளைவாகவே அவர் இந்த முடிவுக்கு வந்திருப்பார். எனவே, மனச்சோர்வு ஏற்பட்டால் மருத்துவ உதவியை நாடுவது அவசியம்” என்கிறார் மோகன வெங்கடாஜலபதி.

கிராமப்புறங்களில் இருந்தெல்லாம் எழுந்துவரும் பெண் சாதனையாளர்களை நாடு கொண்டாடிக் கொண்டிருக்கும் காலம் இது. அந்தளவுக்குப் பெண்கள் வெற்றிப் பாதையில் செல்ல ஆரம்பித்திருக்கிறார்கள். இருந்தாலும், மருத்துவர் ஒருவர் குடும்பப் பிரச்னையால் மனச்சோர்வுக்கு உள்ளானதும் மருத்துவராக இருந்தும் பொருளாதாரச் சிக்கல்களுக்கு ஆளாகி தற்கொலை முடிவெடுத்து இருப்பதும், பெண்கள் உலகின் சிக்கல்களை அரசும் சமூகமும் இன்னும் உற்றுநோக்கிக் களைய ஆவன செய்யவேண்டும் என்பதையே உணர்த்துகிறது.

- கி.ச.திலீபன்



source https://www.vikatan.com/news/women/in-tiruppur-doctor-mom-attempted-suicide-by-leaving-her-ailing-daughter

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக