Ad

திங்கள், 30 ஆகஸ்ட், 2021

``போராடும் விவசாயிகளின் மண்டையை உடையுங்கள்!" - காவல்துறைக்கு உத்தரவிட்ட நீதிபதி!

`` உங்களுடைய வேலை ரொம்ப ஈஸி தான். கையில லத்திய எடுத்துக்கோங்க, போராடுற விவசாயிங்க யாராக இருந்தாலும் சரி, அடிச்சு மண்டைய உடைங்க! புரிஞ்சதா?" என ஆவேசமாகக் கூறுகிறார் அதிகாரி ஒருவர், எதிரணியில் லத்தியுடன் தயாராக நிற்கும் காவல்துறையினர் ``எஸ் சார்" என கோரஸாக தலையசைக்கிறார்கள். இந்த காணொளிதான் தற்போது இணையத்தில் வைரலாகப் பரவி வருகிறது. இந்த காணொளி ஹரியானா மாநிலத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. காரணம் இந்த உத்தரவை பிறப்பித்தவர் யாரோ ஒரு காவல்துறை மேலதிகாரி அல்ல; மாவட்ட துணைநிலை நீதிபதியாக இருக்கும் ஒரு ஐஏஎஸ் அதிகாரி!

காவல்துறைக்கு உத்தவிடும் ஆயுஷ் சின்ஹா

மத்திய அரசு கொண்டுவந்த மூன்று வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக்கோரி, பஞ்சாப்-ஹரியானா விவசாயிகள் கடந்த ஆண்டு நவம்பர் முதல் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். தடியடிகள், உயிர் பலிகள், அவதூறுகள், சமாதான பேச்சுவார்த்தைகள் என அனைத்து கட்டங்களையும் தாண்டி, தொடர்ந்து வருகிறது விவசாயிகளின் போராட்டம். குறிப்பாக, தலைநகர் டெல்லியில் கடந்த 9 மாதங்களாகப் போராட்டம் நடந்துவருகிறது. பா.ஜ.க ஆளும் ஹரியானா மாநிலத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. இதுகுறித்து கட்சி நிர்வாகிளுடன் ஆலோசனை நடத்துவதற்காக, ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார் நேற்று முன்தினம், கர்னல் மாவட்டத்திற்குச் சென்றுகொண்டிருந்தார். அப்போது, பஸ்தாரா சுங்க சாவடி அருகே கூடியிருந்த விவசாயிகள், முதல்வர் முதல்வர் மனோகர் லால் கட்டார், பாஜக மாநில தலைவர் ஓபி. தங்கார் உள்ளிட்டோரின் கார்கள் வரும் சாலையை வழிமறித்து போராட்டத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. (ஆனால், விவசாயிகள் தரப்பில் ஏற்கனவே திட்டமிட்டபடி அமைதிவழி பேரணியே நடைபெற்றதாகக் கூறப்படுகிறது).

Also Read: Farmers Protest: `வேளாண் சட்டங்கள் வாபஸ் ஆகும் வரை போராட்டம் தொடரும்!' - விவசாயிகள் உறுதி

ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார்

இதையடுத்து, அம்மாநில காவல்துறையினர், விவசாயிகள் மீது கடுமையான தடியடி தாக்குதல் நடத்தினர். இதில், பல விவசாயிகள் காயமடைந்தனர். பத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் ரத்தம் வழிய மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். விவசாயிகள் மீதான, போலீஸாரின் கண்மூடித்தனமான தாக்குதலைக் கண்டித்து காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள், விவசாயிகள் போராட்டக்குழு தலைவர் ராகேஷ் திகைத் உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

விவசாயிகள் மீது தாக்குதல் நடத்துவதற்கு முன்பாக, காவல்துறையினரிடம் அரசு அதிகாரி ஒருவர் பேசிய பேச்சு இணையத்தில் வெளியாகி கடும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. ``போராடும் விவசாயிகளின் மண்டையை உடையுங்கள்" என்றபடியான உரையாடல் அமைந்த அக்காணொளியில், காவல்துறையினருக்கு உத்தரவிட்டவர் ஆயுஷ் சின்ஹா எனும் ஐ.ஏ.எஸ் அதிகாரி. இவர் ஹரியானா மாநிலம், கர்னல் மாவட்டத்தின் துணைநிலை நீதிபதியாகவும் (Sub Divisional Magistrate) இருக்கிறார். இந்த காணொளி குறித்து பேசிய ஆயுஷ் சின்ஹா, `` நிலைமை கையைமீறிச் சென்றால், தேவைகேற்ப நடைவடிக்கை எடுங்கள் என்றுதான் நான் காவல்துறையினருக்கு உத்தவிட்டேன்" என விளக்கமளித்துள்ளார்.

மேகாலயா ஆளுநர் சத்ய பால் மாலிக்

இந்த சம்பவத்தை குறிப்பிட்டு மேகாலயா ஆளுநர் சத்திய பால் மாலிக், ``விசாயிகள் மீது ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார் லத்தியை நீட்டியுள்ளார். விவசாயிகள் மீது தடியடி நடத்தியதற்காக அவர் மன்னிப்பு கேட்க வேண்டும்! தடியடிக்கு காரணமாக இருந்த உயரதிகாரி பணிநீக்கம் செய்யப்பட வேண்டும்" என கண்டனக்குரல் எழுப்பியுள்ளார்.



source https://www.vikatan.com/government-and-politics/politics/haryana-magistrate-controversial-speak-goes-viral

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக