Ad

ஞாயிறு, 20 டிசம்பர், 2020

`கல்விக்கட்டணம் தேவையில்ல’; `கட்டாவிட்டால் தேர்வெழுத முடியாது!' என்னதான் நடக்கிறது எஸ்.ஆர்.எம்-ல்?

''பச்சமுத்து அறிவிப்பெல்லாம் பச்சைப் பொய்யா?'' என குமுறுகிறார்கள் டெல்டா மாணவர்கள்... “கஜா புயல் காரணமாக பாதிக்கப்பட்ட டெல்டா பகுதியைச் சேர்ந்த மாணவர்களுக்கு எஸ்.ஆர்.எம் கல்விக்குழும கல்வி நிறுவனங்களில் கல்விக்கட்டணம் மற்றும் விடுதிக் கட்டணம் முற்றிலுமாக ரத்து செய்யப்படுகிறது. அவர்களுடைய கல்லூரிக்காலம் முழுமையும் இலவசமாகவே கல்வி அளிக்கப்படும்“ என அப்போது வாக்குறுதி அளித்தார் எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழக வேந்தரும் இந்திய ஜனநாயக கட்சியின் நிறுவனத் தலைவருமான பாரிவேந்தர் (பச்சமுத்து).

பாரிவேந்தர் எம்.பி

இது அந்த மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் பேருதவியாக அமைந்தது. இதற்காக பல தரப்பிலிருந்தும் பச்சமுத்துவை பாராட்டினர். மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர், பாரிவேந்தரை பாராட்டி நீண்ட அறிக்கையே வெளியிட்டார்.

இந்நிலையில், 'அதெல்லாம் பழையகதை. இப்போது கட்டணத்தைச் செலுத்தியாக வேண்டும். இல்லையென்றால் தேர்வு எழுதமுடியாது' என்று அழுத்தம் கொடுக்கப்படுவதால், பெற்றோர்களும் மாணவர்களும் தவியாய்த் தவித்து வருகின்றனர். அதிலும் கொரோனா பாதிப்பிலிருந்து இன்னமும் மீளமுடியாமல் தவித்துக் கொண்டிருக்கும் சூழலில் இந்த விஷயம் அவர்களைப் பேரிடியாகத் தாக்கியிருக்கிறது.

மறக்க முடியாத கஜா புயல்!

2018-ம் ஆண்டின் இறுதியில் டெல்டா மாவட்டங்களைத் தாக்கியது கஜா புயல். அந்த பாதிப்பிலிருந்து மீளமுடியாமல் இப்போதும் மக்கள் தவித்துதான் வருகின்றனர். புயல் ஏற்படுத்திய பாதிப்பு, அவர்களைப் பல வருடங்களைப் பின்னோக்கி இழுத்துச்சென்றுவிட்டது. புயல் பாதிப்புகளைப் பார்வையிடுவதற்காக தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களுக்குச் சென்றபோதுதான், “எஸ்.ஆர்.எம் குழும கல்வி நிறுவனங்களில் படிக்கும் இந்த நான்கு மாவட்ட மாணவர்கள் எந்தக் கட்டணமும் செலுத்தாமல் படிப்பு காலம் முழுவதையும் தொடரலாம்“

கஜா புயல் ஏற்படுத்திய பாதிப்பு

என்கிற பெருமைக்குரிய அறிவிப்பை வெளியிட்ட பாரிவேந்தர், “இந்த 4 மாவட்டங்களிலிருந்து படிக்கும் 650 மாணவர்களுக்கான நான்காண்டு கட்டணம் 48 கோடி ரூபாய். இது மொத்தமாக ரத்து செய்யப்பட்டிருப்பதால் பெற்றோரின் சுமை பெருமளவு குறைக்கப்பட்டுள்ளது” என மீடியாக்களுக்கும் பேட்டி அளித்தார்.

இதைத் தொடர்ந்து உடனடி நடவடிக்கையாக 2019-20 ஆண்டுக்கான கட்டணம் ரத்து செய்யப்படவே, மாணவர்களும் பெற்றோர்களும் நிம்மதியடைந்தனர். ஆனால், தற்போது அறிவிப்புக்கு நேர்மாறாக, 2020-21-ஆண்டுக்கான கட்டணங்களைக் கட்டச் சொல்லி பேராசிரியர்கள் மற்றும் அலுவலக நிர்வாகிகள் தரப்பிலிருந்து ஆன்லைன் வகுப்புகளிலும், மெயில் மூலமாகவும் அழுத்தங்கள் கொடுக்கப்படுவதாக குமுறுகின்றனர் மாணவர்களும் பெற்றோர்களும்.

பாரிவேந்தர்

”பாரிவேந்தர் கட்டண சலுகை கொடுத்துள்ளார் என்று சொன்னால், அதெல்லாம் எங்களுக்குத் தெரியாது. அது அந்த ஆண்டோடு முடிந்துவிட்டது. கட்டித்தான் ஆகவேண்டும். இல்லையென்றால், தேர்வு எழுதமுடியாது. தேவையில்லாமல் சிக்கலை ஏற்படுத்தி, எதிர்காலத்தை வீணடித்துக் கொள்ளாதீர்கள் என்று அன்பாக பேசுவதுபோல மிரட்டுகிறார்கள். இதைப்பற்றி நிர்வாகத்தின் கவனத்துக்குக் கொண்டு செல்ல முயற்சிக்கிறோம். ஆனால் அதற்கு பலன் ஏதும் இல்லை. பல்கலைக்கழக வேந்தருக்கு (பாரிவேந்தர்) தெரியாமலேயேதான் நிர்வாகத்தில் இருக்கும் சிலர் இப்படி செய்வதாக நினைக்கிறோம்.

ஐ.ஜே.கே

அவருக்குத் தெரிந்தால் கண்டிப்பாகப் பணத்தைக் கட்ட சொல்லமாட்டார். கஜா புயல் பாதிப்பிலிருந்தே மீளாத சூழலில், கொரோனா தாக்குதலும் சேர்ந்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளோம். எங்களில் பெரும்பாலானவர்கள் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவர்களே. தற்போதைய சூழலில் கடன் வாங்கிக்கூட பீஸ் கட்ட முடியாது என்பதுதான் உண்மை. எங்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும். பாரிவேந்தர் தன்னுடைய வாக்குறுதியைக் காப்பாற்ற வேண்டும்'' என தழுதழுக்கின்றனர் மாணவர்கள்.

இதுதொடர்பாக கருத்துக்களை அறிய பாரிவேந்தரை பலமுறை தொடர்புகொண்டோம். அவர் போனை எடுக்கவில்லை. அவருடைய பி.ஏ வான அருணாசலத்தை தொடர்புகொண்டு கேட்டபோது, “நீங்கள் சொல்வது முற்றிலும் தவறு. ஒவ்வொரு செமஸ்டர் முடிந்த பிறகும் மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் பணம் கட்டச்சொல்லி எஸ்எம்எஸ் செல்வது வாடிக்கையே. கம்ப்யூட்டர் மூலம் ஆட்டோமேட்டிக்காக அது சென்றுவிடும். ஏற்கெனவே கட்டண விலக்கு பெறுவதற்கான சான்று அளித்திருக்கும் மாணவர்கள், அதுகுறித்து நிர்வாகத்திடம் தெரிவித்தால், கட்டண விலக்கு அளிக்கப்பட்டுவிடும்.

பச்சமுத்து அறிக்கை

இந்த ஆண்டும் அப்படித்தான் எஸ்.எம்.எஸ் சென்றுள்ளது. அந்த நான்கு மாவட்ட மாணவர்கள், அந்த மெசேஜை அலுவலகத்தில் காட்டினால் கட்டணவிலக்கு கொடுத்துவிடுவார்கள். அய்யா ஏற்கெனவே அறிவித்ததுபோல் கல்விக்கட்டணம் ரத்து செய்தது, செய்ததுதான். எந்த மாற்றமும் இல்லை. இன்னும் பாதிக்கப்பட்டவர்கள் இருந்தாலும் சொல்லுங்கள் உதவி செய்கிறோம். எந்த அரசியல் கட்சியினரும் உதவ முன்வராத சூழலில், நாங்கள்தான் இத்தகைய உதவிகளைச் செய்துவருகிறோம். இப்படி உதவி செய்பவர்களைத்தான் விமர்சிப்பார்கள்'' என்றார் காட்டமாக.

இந்த விஷயத்தை சம்பந்தபட்ட மாணவர்களின் பெற்றோர்கள் சிலரிடம் சொன்னபோது, ''எஸ்.எம்.எஸ் எல்லாம் ஏதும் வருவதில்லை. டெல்டா மாவட்டத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்டவர் என்று வருவாய்த்துறை சான்றிதழை வாங்கிக் கொடுக்கச் சொன்னார்கள்... கொடுத்தோம். பாரிவேந்தர் சொன்னபடியே கட்டண சலுகையும் கிடைத்தது. இந்த ஆண்டு திடீரென்று கட்டணத்தைக் கட்டச் சொல்கிறார்கள். ஆன் லைன் வகுப்புகளில்தான் அழுத்தம் கொடுக்கிறார்கள். ஒரு சிலருக்கு மெயில் வந்திருப்பதாகவும் தெரிகிறது.

கட்டணச் சலுகை தொடரும் என்றால், அதை வெளிப்படையாகவே அறிவித்து அனைத்து மாணவர்களுக்கும் எஸ்.எம்.எஸ் மற்றும் மெயில் மூலமாக தெரிவித்துவிடலாமே. அதைச் செய்யாமல், எஸ்.எம்.எஸ்ஸை கொண்டுவந்து காட்டினால் சலுகை என்று சொல்வது ஏன்? அதிலும் வராத ஒரு எஸ்.எம்.எஸ்ஸை எப்படி காண்பிப்பது. அதுமட்டுமல்ல, கொரோனா காரணமாக மாணவர்கள் கல்லூரிக்கு வரக்கூடாது என்று சொல்லப்பட்டுள்ளது. அப்படியிருக்க, கொண்டுவந்து கல்லூரி அலுவலகத்தில் காட்டச் சொல்வது என்ன நியாயம்.

மாணவர்கள் நேரடியாக வந்தால், இன்னும் பலமாக மிரட்டி பணத்தை வாங்கிவிடலாம் என்று திட்டமிட்டே இதைச் செய்கிறார்கள் என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது. அதிலும் வரும் ஜனவரி முதல் வாரத்தில் தேர்வுகள் துவங்கவுள்ள சூழலில், கடுமையான அழுத்தம் கொடுக்கிறார்கள். கட்டண சலுகை என்று மீடியாக்களில் வெளிப்படையாக அறிவித்த பாரிவேந்தர், அது தொடரும் அதில் எந்த மாற்றமும் இல்லை என்று மீண்டும் மீடியாக்கள் வாயிலாகவே அறிவிப்பதுதான் நல்லது. இல்லையென்றால் மொத்தமும் ஏமாற்று வேலை என்றுதான் எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கும்'' என்று வேதனை பொங்கக் குறிப்பிட்டனர்.

பாரிவேந்தர்

மேற்கொண்டு விளக்கம் அறிய பாரிவேந்தரின் பி.ஏ-வான அருணாசலத்தைத் தொடர்புகொண்டபோது, அவர் போனை எடுக்கவில்லை. கஜா பாதிப்புகளைப் பார்வையிடச் சென்றபோது பாரிவேந்தர் வெளியிட்ட அறிவிப்பின் வீடியோவையும், அவருடைய இந்திய ஜனநாயக கட்சியின் இணையதளத்திலும் நான்கு ஆண்டுகளுக்கு அனைத்துக் கட்டணங்களும் ரத்து என்பது தெள்ளத்தெளிவாகவே சொல்லப்பட்டுள்ளது. ஒருவேளை இப்படி அறிவிக்கவே இல்லை என்றால், படிப்பைத் தொடர்வதா அல்லது வேறு ஏதாவது செய்வதா என்கிற முடிவை மாணவர்களும் பெற்றோர்களும் அப்போதே எடுத்திருப்பார்கள். அவருடைய அறிவிப்பை நம்பியதால் தற்போது நட்டாற்றில் நிற்கிறார்கள்.

பாவம்... கஜா, கொரோனா, வரிசையில் எஸ்.ஆர்.எம் என்பதும் தற்போது அந்த மாணவர்களுக்கும் அவர்களின் குடும்பத்துக்கும் மிரட்டலான ஒன்றாகவே மாறி நிற்கிறது!



source https://www.vikatan.com/news/education/whats-happening-at-srm-university-regarding-education-fees

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக