சட்டசபை தேர்தல் நெருங்கிவரும் நிலையில், பிரதான கட்சிகள் பரப்புரையை தொடங்கிவிட்டன. கடந்த சட்டசபை தேர்தலில் நூலிழையில்தான் தி.மு.க, தனது வெற்றி வாய்ப்பை அ.தி.மு.க.விடம் பறிகொடுத்தது. அதற்கு முக்கிய காரணம் கொங்கு மண்டலம். இங்கு பெரும்பாலான தொகுதிகளில் தி.மு.க தோல்வியை தழுவியது. அதனால்தான், தி.மு.க ஆட்சியை பிடிக்க முடியவில்லை. தி.மு.க-வின் தோல்விக்கு, கட்சியின் உட்கட்சி பூசல் மற்றொரு முக்கிய காரணமாக கூறப்பட்டது.
Also Read: சட்டப்பேரவைத் தேர்தல் 2021: ஒவைசி கூட்டணி.... தி.மு.க-வா, ம.நீ.ம-வா, நாம் தமிழரா?
இதனால், வருகின்றன சட்டசபை தேர்தலில் உள்கட்சி பூசலை சமாளிக்க தி.மு.க தலைமை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதிருப்தியில் இருந்த சீனியர் நிர்வாகிகளுக்கு பதவி கொடுத்து உற்சாகப்படுத்தியது.
அப்படி இருந்தும் பதவி சண்டையில் மல்லுக்கட்டி கொண்டிருக்கின்றனர் கொங்கு மண்டல உடன்பிறப்புகள். திருப்பூர் தெற்கு மாவட்டம், பொள்ளாச்சி தெற்கு ஒன்றிய தி.மு.க-வில் சமீபத்தில் பொறுப்புகள் போடப்பட்டன. இதில், அங்குள்ள சில உடன்பிறப்புகளுக்கு உடன்பாடில்லை என்று போர்கொடி எழுப்பினர் . இதையடுத்து, பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகசுந்தரம் பணத்தை வாங்கிவிட்டு, பரிந்துரை செய்தவர்களுக்கே பதவி கொடுக்கப்பட்டதாக புகார் கூறினர்.
இதுதொடர்பாக, தி.மு.க வாட்ஸ்அப் குழுக்களில் செய்திகளும் பரவின. அந்தத் தகவல்களை பரப்பியதும் தி.மு.க உடன்பிறப்புகள்தான். இதில் ஆத்திரமடைந்த எம்.பி, சண்முகசுந்தரம் அந்த தகவலை பரப்பிய தி.முக.-வினர் மீது காவல்துறையில் புகாரளித்துள்ளார்.
அந்தப் புகாரில், "சில விஷமிகள் நான் கட்சியில் எனக்கு வேண்டிய நபர்களிடம் பணத்தை வாங்கிக் கொண்டு, கட்சியில் பொறுப்பாளர்களை நியமித்ததாக வாட்ஸ்அப்பில் அவதூறு பரப்பி வருகின்றனர். விஷமிகளின் செயல் என் பெயருக்கு களங்கம் விளைவிப்பதுடன், தி.மு.க-வுக்கு அவப்பெயரை ஏற்படுத்தும். இது தொண்டர்களிடையே மனஉளைச்சலையும், கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது. எனவே, அவதூறு பரப்புபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கூறியுள்ளார்.
இதுதொடர்பாக தி.மு.க ஒன்றிய குழு உறுப்பினர் உள்பட் 6 பேர் மீது போலீஸில் புகாரளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, முதல்கட்டமாக 4 தி.மு.க பிரமுகர்களுக்கு போலீஸ் சம்மன் அனுப்பியுள்ளது.
இதுகுறித்து தி.மு.க ஒன்றிய குழு உறுப்பினர் பாலகணேஷ், "நான் ஒன்றிய செயலாளர் பதவி கேட்டேன். எங்களது ஒன்றியத்தை பிரித்தபோது, நாங்கள் சில நிர்வாகிகளுடன் முதன்மை செயலாளர் நேரு, கொறடா சக்கரபாணியிடம் முறையிட்டோம். எங்களுக்கு தான் ஆதரவாளர்களும் அதிகம். ஆனால், எங்கள் மாவட்ட பொறுப்பாளர் ஜெயராமகிருஷ்ணன் எம்.எல்.ஏ-வும், எம்.பி.சண்முகசுந்தரமும் உறவினர்கள். அதனால், எம்.பி சொல்வதை அவர் தட்டமாட்டார். இது எங்க கட்சி குழுவில் நடந்த விவகாரம்.
அதை கட்சி தலைமையை கேட்காமல், எம்.பி நேரடியாக காவல்துறையில் புகார் கொடுத்துவிட்டார். காவல்துறை சம்மன் தொடர்பாக எங்கள் தலைமைக்கு தகவல் கொடுத்துள்ளோம். நாங்கள் போஸ்டர் ஒட்டி, கொடிபிடித்து கட்சியில் வளர்ந்தோம். சண்முகசுந்தரம் 2014 தேர்தலில் தோற்று சென்றுவிட்டார். பிறகு 2019 தேர்தலில் சீட் கிடைத்தப் பிறகுதான் களத்துக்கு வந்தார். அவர் பிசினஸ் மேன்.
கட்சிக்கு உழைத்த எங்களுக்கு பதவி கொடுக்காவிடின், நாங்கள் கட்சியில் இருந்து கூண்டோடு ராஜினாமா செய்துவிடுவோம். அதேபோல, எம்.பி சண்முகசுந்தரத்தின் ஆதிக்கத்தை சரிசெய்யாவிடின், கொங்கு மண்டலத்தில் தி.மு.க வெற்றி பெற முடியாது" என்றார்.
தி.மு.க உறுப்பினர் முத்துக்குமாரசாமி, "பாலகணேஷ் தான் அந்தக் குழுவின் அட்மின். பதவி போட்டதில் முறைகேடு நடந்ததாக செய்தி வந்தது. அதை நான் விசாரித்துவிட்டு அந்தக் குழுவுக்கு ஃபார்வர்டு செய்தேன். மற்றபடி, எனக்கு வேறு எந்த நோக்கமும் இல்லை. இது உள்கட்சி விவகாரம். சம்பந்தப்பட்டவர்களை அழைத்து பேசியிருந்தாலே பிரச்னை முடிந்திருக்கும்.
இதுபோன்ற விவகாரங்கள் அ.தி.மு.க-வில் நடந்திருந்தால் வெளியிலேயே வந்திருக்காது. ஆனால், தவறை சுட்டி காட்டியதற்காக இப்படி செய்வது வருத்தமாக இருக்கிறது. ஆட்சியில் இல்லாதபோதே சொந்தக் கட்சிக்காரர்கள் மீது இப்படி செய்கிறார்கள் என்றால், ஆட்சிக்கு வந்தால் என்ன மாதிரியான நடவடிக்கை எடுப்பார்கள் என்று கவலையாக இருக்கிறது” என்றார்
இதுகுறித்து பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகசுந்தரம் கூறுகையில், "நிர்வாகிகளை நியமிப்பது மாவட்ட பொறுப்பாளரும், தலைமை கழகமும் தான். இதில் எனது தலையீடு எதுவும் இல்லை. என் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் விதமாக அவதூறு பரப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க சொல்லி காவல்துறையில் புகாரளித்துள்ளேன். தவறு செய்திருந்தால் நான் கவலைப்பட வேண்டும். நான் எப்படி நடந்துகொள்வேன் என்று தலைமைக்கு தெரியும். இது சாதாரண பிரச்னை தான்.
இதை நான் பெரிய விஷயமாக எல்லாம் கொண்டு போக விரும்பவில்லை. தவறு செய்தவர்களை கண்டுபிடித்து, தலைமையிடம் தகவல் சொல்லுவேன். தேர்தல் நேரம் என்பதால், எதிர்க்கட்சிகள் இதுபோன்ற விஷயங்களை பெரிதுப்படுத்துவதை தவிர்க்க முடியாது" என்றார்.
உள்கட்சி பூசலை சரிசெய்யாவிடின் கொங்கு மண்டலம் தி.மு.க-வுக்கு மீண்டும் தலைவலியை கொடுக்கலாம்!
source https://www.vikatan.com/government-and-politics/politics/dmk-mp-complaint-against-his-party-cadres-kongu-belt-party-issues
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக