Ad

புதன், 9 டிசம்பர், 2020

நிறைவடைந்தது வேல் யாத்திரை... பா.ஜ.க சாதித்தது என்ன?

தமிழ்க் கடவுள் முருகனின் ‘கந்தசஷ்டிக் கவசம்’ பாடலை `கறுப்பர் கூட்டம்’ யூடியூப் சேனலில் இழிவுபடுத்திவிட்டார்கள் என்று பா.ஜ.க கடும் எதிர்ப்பு தெரிவித்தது. கறுப்பர் கூட்டத்துக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் பா.ஜ.க-வினர் தமிழ்நாடு முழுவதும் வேல் பூஜை நடத்தினார்கள். அதைத் தொடர்ந்து, வேல் யாத்திரை நடத்தப்போவதாக பா.ஜ.க-வின் மாநிலத் தலைவர் எல்.முருகன் அறிவித்தார். அந்த வேல் யாத்திரை, அறுபடை வீடுகளான திருத்தணியில் நவம்பர் 6-ம் தேதி தொடங்கி திருச்செந்தூரில் டிசம்பர் 6-ம் தேதி நிறைவடையும் என்று அறிவிக்கப்பட்டது.

பா.ஜ.க தலைவர்கள்

வேல் யாத்திரை மூலமாக மக்கள் மத்தியில் மத வெறுப்புணர்வைத் தூண்டிவிட்டு, தமிழகத்தில் வன்முறைக்கு வித்திடுவதற்கு பா.ஜ.க முயல்கிறது என்று தி.மு.க தலைமையிலான கூட்டணிக் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. வேல் யாத்திரைக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடரப்பட்டது. அந்த வழக்கு விசாரணையின்போது, `கொரோனா சூழல் காரணமாக பா.ஜ.க-வின் வேல் யாத்திரைக்கு அனுமதி வழங்க முடியாது’ என்று தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. தனது கூட்டணிக் கட்சியான பா.ஜ.க-வின் வேல் யாத்திரைக்கு அ.தி.மு.க அரசு அனுமதி வழங்க மறுத்தது அரசியல் வட்டாரத்திலும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தடை விதிக்கப்பட்டாலும் `வேல் துள்ளி வரும்’ என்று எல்.முருகன் கூறினார். அப்போது பா.ஜ.க வெளியிட்ட அறிக்கையில், `திருத்தணியில் முருகனை தரிசித்துவிட்டு, தமிழக அரசியலில் திருப்புமுனையை ஏற்படுத்தக்கூடிய மற்றும் இந்து விரோத, தமிழின விரோத, தமிழ்க் கடவுள்களை அவமதிக்கும் தேசவிரோத சக்திகளை வேரறுக்கவும், கொரோனா நோய்த்தொற்று காலத்தில் ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மத்திய அரசின் நலத்திட்டங்களைக் கொண்டு சேர்க்கும் வகையிலும், தமிழக மக்கள் மகிழ்ச்சியாக, வளத்துடன், வலிமையுடன் நோய்நொடி இல்லாமல் வாழ்ந்து மகிழ வேண்டியும், அடுத்த ஆண்டு பா.ஜ.க ஆட்சிதான் என்ற லட்சியத்துடன் வடிவமைக்கப்பட்டிருக்கும் வெற்றிவேல் யாத்திரை நிகழ்ச்சியில் கலந்துகொள்ள பா.ஜ.க மாநிலத் தலைவர் எல்.முருகன் நவம்பர் 6-ம் தேதி சென்னை கோயம்பேட்டிலிருக்கும் தன் வீட்டிலிருந்து புறப்படுகிறார்’ என்று குறிப்பிடப்பட்டது.

அதன்படி, நவம்பர் 6-ம் தேதி காலையில் தன் இல்லத்திலிருந்து வேன் மூலம் திருத்தணிக்கு எல்.முருகன் கிளம்பினார். காவிச் சட்டையும் பச்சை நிற வேட்டியும் அணிந்திருந்த எல்.முருகன், கையில் வேல் ஏந்தியிருந்தார். சென்னையைத் தாண்டியவுடன் எல்.முருகன் பயணம் செய்த வேனை போலீஸார் தடுத்து நிறுத்தினர். அப்போது போலீஸாருக்கும், பா.ஜ.க-வினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பத்து வாகனங்களுக்கு மட்டும் போலீஸார் அனுமதி வழங்கினர். அதற்கு பா.ஜ.க-வினர் எதிர்ப்பு தெரிவித்தனர். அதனால் அந்த இடத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

வேல் யாத்திரை

அதன் பிறகு திருத்தணியில் முருகனை தரிசித்துவிட்டுவந்த எல்.முருகனும் மற்ற பா.ஜ.க-வினரும் தடையை மீறி வேல் யாத்திரையைத் தொங்க முற்பட்டனர். அவர்களை போலீஸார் கைத செய்து திருமண மண்டபத்தில் அடைத்துவைத்து, மாலையில் விடுவித்தனர். வேல் யாத்திரை தடுத்து நிறுத்தப்பட்டதற்குக் கண்டனம் தெரிவித்து தமிழகம் முழுவதும் பா.ஜ.க-வினர் சாலைமறியல் உள்ளிட்ட போராட்டங்களை நடத்தினர். அதன் பிறகு எல்.முருகன் தடையை மீறி வேல் யாத்திரை நடத்துவதும், அவரை போலீஸார் கைதுசெய்வதும் என்று தினமும் காட்சிகள் ஓடின. கடந்த திங்கள்கிழமை திருச்செந்தூரில் வேல் யாத்திரையை எல்.முருகன் நிறைவுசெய்தார். அதில், மத்தியப்பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சௌகான் மற்றும் பா.ஜ.க தலைவர்கள் பலர் பங்கேற்றனர்.

தடையை மீறி நடத்திய வேல் யாத்திரை மூலமாகக் கிடைத்த ஆதாயம் என்ன என்ற கேள்வியை பா.ஜ.க-வின் செய்தித் தொடர்பாளரான புரட்சிக்கவிதாசனிடம் முன்வைத்தோம்.

``இந்து தெய்வங்களை இழிவுசெய்தாலோ, கேலிசெய்தாலோ கேட்பதற்கு நாதியில்லை என்ற நிலை தமிழகத்தில் இருக்கக் கூடாது என்பதற்காகத்தான் இந்த வேல் யாத்திரை. இதற்கு முன் இந்து தெய்வங்கள் இழிவுபடுத்தப்பட்டால் எந்தக் கட்சியும் அதைத் தட்டிக்கேட்பதில்லை. திராவிட இயக்க மேடைகள் என்றால், அதில் இந்து தெய்வங்கள் இழிவுபடுத்தப்பட வேண்டும், இந்துக்களின் உணர்வுகள் புண்படுத்தப்பட வேண்டும் என்பதாகத்தான் இருந்தது. இனிமேல் அது நடக்காது. இந்து தெய்வங்களை இழிவுபடுத்துபவர்களை பா.ஜ.க தட்டிக்கேட்கும் என்ற எச்சரிக்கைதான் வேல் யாத்திரை.

வேல் யாத்திரை நடத்தினால் சட்டம், ஒழுங்கு கெட்டுவிடும், வன்முறை நடக்கும் என்றெல்லாம் தி.மு.க கூட்டணிக் கட்சிகள் கூறின. ஆனால், எந்தப் பிரச்னையும் இல்லாமல் வேல் யாத்திரையை வெற்றிகரமாக பா.ஜ.க நடத்தி முடித்திருக்கிறது. தடைகளை மீறி, பல நெருக்கடிகளுக்கு மத்தியில் இந்த யாத்திரையை மிகவும் அமைதியான முறையில் நடத்தி முடித்திருக்கிறோம். எனவே, இதை அனுமதிக்காத குற்றத்துக்கும் சாபத்துக்கும் தமிழக அரசு ஆளாகியிருக்கிறது. இந்த மாதிரி ஓர் அமைதியான இயக்கத்துக்கு ஏன் அனுமதி தர மறுத்தார்கள்?

புரட்சிக்கவிதாசன்

எங்கள் சித்தாந்தங்களையும் கொள்கைகளையும் மக்கள் மத்தியில் கொண்டு செல்வதற்கு நல்ல வாய்ப்பாக இது அமைந்தது. இந்த யாத்திரையின் மூலமாகப் பெரும் எண்ணிக்கையிலான மக்களைத் தொடர்புகொண்டிருக்கிறோம். எங்கள் கட்சியினர் மிகுந்த உற்சாகமடைந்திருக்கிறார்கள். இந்து மக்கள் மத்தியில் நல்ல விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கிறது. `இந்து மதத்துக்கு அச்சுறுத்தல் வந்தால் யார் குரல் கொடுப்பார்கள்?’ என்ற கேள்விக்கு பதிலாக இந்த யாத்திரை அமைந்துவிட்டது. கொரோனா பெருந்தொற்று காலத்தில் முடங்கிப்போயிருந்த சூழலில், பா.ஜ.க தனது தொண்டர்களை உற்சாகப்படுத்தி, தேர்தல் பணிகளுக்கு அவர்களை ஆயத்தப்படுத்தியிருக்கிறது. பொதுமக்கள் ஆதரவையும் நாங்கள் பெற்றிருக்கிறோம். மொத்தத்தில் வேல் யாத்திரை மிகப்பெரிய அளவில் வெற்றியடைந்திருக்கிறது” என்றார்.

இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த பேராசிரியர் அருணனிடம் பேசினோம். ``வேல் யாத்திரை விஷயத்தில் அ.தி.மு.க அரசுக்கும் பா.ஜ.க-வுக்கும் இடையே ஒரு கண்ணாமூச்சி விளையாட்டு நடைபெற்றது. வேல் யாத்திரையைத் தடைசெய்வதுபோல அ.தி.மு.க அரசு தடைசெய்தது. ஆனால், இவர்கள் ஒவ்வோர் ஊராகச் சென்று தவணை முறையில் வேல் யாத்திரை நடத்தினார்கள். இப்போது, திருச்செந்தூரில் அதை முடித்திருக்கிறார்கள். அது ஓர் அரசியல் யாத்திரை என்பது எல்லோருக்கும் தெரிந்ததுதான். தி.மு.க-வையும், தி.மு.க தலைமையிலான அணியில் இருக்கும் கட்சிகளையும் அந்த யாத்திரையில் தாக்கிப் பேசியிருக்கிறார்கள். `தி.மு.க அணியை சம்ஹாரம் செய்வோம்’ என்று பா.ஜ.க தலைவர் எல்.முருகன் பேசியிருக்கிறார்.

அருணன்

ஆனால், இந்த வேல் யாத்திரை படுதோல்வி அடைந்திருக்கிறது. அவர்களுக்கு மதத்தைவிட்டால் வேறு எதுவும் தெரியாது. மதம், கடவுள் என அனைத்தையும் அரசியலுடன் இணைப்பது என்பது ஏற்கெனவே எடுபடவில்லை. இந்த யாத்திரைக்கு பொதுமக்களிடம் எந்த வரவேற்பும் இல்லை. இதன் மூலம் அரசியல் ஆதாயம் அடையலாம் என்ற பா.ஜ.க-வின் கணக்கு பொய்த்துப்போய்விட்டது. அடுத்ததாக என்ன செய்யப்போகிறார்களோ தெரியவில்லை.

Also Read: ரஜினி வருகை: `அ.தி.மு.க கூட்டணி உடைய வாய்ப்பு... தி.மு.க கூட்டணியில் பேர வலிமை கூடும்!‘

எதிர்க்கட்சிகளை மட்டும் தாக்கிப் பேசி என்ன பயன்... எத்தனையோ மக்கள் பிரச்னைகள் இருக்கின்றன. முருகப் பெருமானுக்கு தமிழ்ப் பிரச்னை இருக்கிறது. அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆவது, தமிழில் குடமுழுக்கு, அறுபடை வீடுகளில் தமிழில் அர்ச்சனை என இதிலும் பல பிரச்னைகள் இருக்கின்றன. அந்தப் பிரச்னைகளைப் பற்றி இவர்கள் ஒரு வார்த்தைகூடப் பேசவில்லை. இதையெல்லாம் பேசாமல் இவர்கள் என்ன தமிழ்க் கடவுள்களைக் காப்பாற்றுவது?

எல்.முருகன்

விவசாயிகள் பிரச்னை, கொரோனா பிரச்னை, புயல் வெள்ள பாதிப்புகள், இட ஒதுக்கீடு பிரச்னை, உள்ஒதுக்கீடு பிரச்னை, தமிழ்வழியில் படிப்பவர்களுக்கு இட ஒதுக்கீடு என மக்கள் பிரச்னை எதைப் பற்றியும் இவர்களுக்கு கவலையில்லை. எஸ்.சி மக்கள், ஓ.பி.சி மக்களெல்லாம் இந்துக்கள் இல்லையா... தமிழ்வழியில் படித்தவர்கள் இந்துக்கள் இல்லையா... இந்துக்கள் இந்துக்கள் என்று பேசும் இவர்கள், மக்களின் வாழ்வாதாரப் பிரச்னைகள் பற்றி பேச ஏன் தயாராக இல்லை... மாறாக, உண்மையான இந்தப் பிரச்னைகளைத் திசை திருப்புவதற்குத்தான் முயல்கிறார்கள். அந்த உண்மையை மக்கள் புரிந்துகொண்டார்கள். எனவே, வேல் யாத்திரை மூலமாக அவர்களுக்கு எந்தவிதமான அரசியல் ஆதாயமும் கிடைக்கவில்லை” என்றார்.



source https://www.vikatan.com/government-and-politics/politics/vel-pilgrimage-completed-what-has-the-bjp-achieved

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக