நடிகர் ரஜினிகாந்த் வரும் 31 -ம் தேதி கட்சி குறித்த அறிவிப்பை வெளியிட இருந்த சூழலில், `அண்ணாத்த' படப்பிடிப்புக்காக ஹைதராபாத் புறப்பட்டு சென்றார். தொடர்ந்து படப்பிடிப்பில் கலந்து வந்த நிலையில், படக்குழுவில் சிலருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதாக படப்பிடிப்பு பாதியில் நிறுத்தப்பட்டது.
இந்த நிலையில் ரஜினியும் தன்னை ஹைதராபாத்தில் தனிமைப்படுத்திக் கொண்டார். இந்த சூழலில் இன்று நடிகர் ரஜினிகாந்த், ஹைதராபாத்தில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
அதில், ``ஐதராபாத்தில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் ரஜினிகாந்த் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு ரத்த அழுத்தத்தில் ஏற்பட்டுள்ள மாறுபாடு காரணமாக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு கொரோனா தொற்று இல்லை, கொரோனா அறிகுறிகளும் இல்லை” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரஜினியின் உடல்நிலை தொடர்பாக அவருக்கு நெருக்கமான சிலரை தொடர்பு கொண்டு பேசினோம், ``கடந்த மார்ச் மாதமே ரஜினி வழக்கமான பரிசோதனைக்காக சிங்கப்பூர் செல்ல வேண்டியது. ஆனால் கொரோனா அச்சம் காரணமாக அது தள்ளிப்போனது.
இந்த சூழலில் தான் அண்ணாத்த படப்பிடிப்பு தொடங்கியது. படப்பிடிப்பு நடைபெற்ற இடத்தில் அதிகபடியான குளிர் நிலவியது. பனி காரணமாக அவருக்கு சளி பிரச்னை ஏற்பட்டது. கொரோனா பாதிப்பு இல்லை என்றாலும், சளி காரணமாக மூச்சு விடுவதில் சிரமம் இருந்தது. இந்த சமயத்தில் தான் படப்பிடிப்பு தளத்தில் சிலருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த சமயத்தில் ரஜினிக்கும் முதற்கட்ட பரிசோதனை செய்யப்பட்டது. அதில் நெகட்டிவ் என்று ரிசல்ட் வந்தது.
என்றாலும், படப்பிடிப்பை ரத்து செய்துவிட்டு தன்னை தனிமைப் படுத்திக்கொண்டார். இந்த சூழலில் தான் இன்று காலையில் அவருக்கு மூச்சு விடுவதில் சிரமம் இருந்ததோடு, அவருக்கு ரத்த அழுத்தமும் அதிகமாக இருந்தது. இன்று காலையில் இரண்டாம் கட்ட கொரோனா பரிசோதனைக்காக (ஸ்கேன் மூலம் பரிசோதனை) மருத்துவமனை செல்லும் சூழல் ஏற்பட்டது. இரண்டாம் கட்ட கொரோனா பரிசோதனையிலும் ரிசல்ட் ரெகட்டிவ் என்று தான் வந்தது. என்றாலும், அது குறித்து அவர் நினைத்துக்கொண்டே இருந்த காரணத்தால் ரத்த அழுத்ததில் மாறுபாடு இருந்திருக்கிறது. மேலும் தனிமைப்படுத்துதலில், ஹைதராபாத்தில் இருந்து கொண்டே கட்சி பணிகளில், கவனம் செலுத்திய ரஜினி, பூத் கமிட்டி உறுப்பினர்கள் தேர்வு பணியில் தொய்வு இருந்ததாக அப்செட்டில் இருந்தாராம். இதுவும் ரத்த அழுத்ததுக்கு காரணமாக சொல்லப்படுகிறது.
இதன் காரணமாக மருத்துவமனை நிர்வாகம் அவரை சில மணிநேரம், சிகிச்சை பெற்று ரத்த அழுத்தம் சீரானதும் செல்ல வலியுறுத்தியுள்ளனர். அதனால் தான் அவர் மருத்துவமனையில் இருக்க சம்மதித்தார். இந்த சூழலில் மருத்துவமனை நிர்வாகம், ரஜினியிடம் கலந்தாலோசிக்காமல், மருத்துவ அறிக்கை வெளியிட்டுவிட்டது. இதனால், சாதாரண விவகாரம், பெரிதாக்கப்பட்டுவிட்டதாக ரஜினி கடிந்து கொண்டாராம். தனது உடல் நிலை குறித்து நலம் விசாரிப்பவர்களிடம், அவரே பதிலளித்து வருகிறார். ரத்த அழுத்தம் சீரானதும் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகி விடுவார்” என்றனர் விரிவாக.
source https://www.vikatan.com/news/healthy/rajinis-health-condition-is-stable-in-apollo-hospital-says-sources
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக