Ad

வெள்ளி, 25 டிசம்பர், 2020

கனவுகளுக்கு வயதில்லை... 64 வயதில் 'டாக்டர் சீட்' வாங்கிய நம்பிக்கை மனிதர்!

எல்லோருக்கும் வாழ்க்கை அவர்கள் விரும்பியதை உடனே வழங்குவதில்லை. கிடைப்பதை ஏற்றுக்கொண்டு சமரசத்தோடு வாழ்பவர்கள்தான் பெரும்பாலானோர். ஆனால், ஒரு சிலரோ அத்தனை எளிதாகத் தங்களின் விருப்பங்களைக் கனவுகளைக் கைவிட்டு விடுவதில்லை. வாய்ப்புக் கிடைக்கிறபோதெல்லாம் அதை நோக்கியே நடைபோடுகிறார்கள். ஒருகட்டத்தில் அந்த முயற்சியில் வெல்கிறார்கள். அப்படி ஒரு நம்பிக்கையூட்டும் மனிதர்தான் ஜெய் கிஷோர் பிரதான்.

ஒடிசா மாநிலம் பர்கார் மாவட்டத்தில் அட்டாபிரா என்னும் ஊரில் பிறந்தவர்தான் பிரதான். சிறுவயதிலிருந்தே எம்.பி.பி.எஸ் படித்து மருத்துவராக வேண்டும் என்பதுதான் கனவு. ஆனால் காலம் அப்போது அந்தக் கனவைக் குலைத்துப்போட்டது. மருத்துவ நுழைவுத் தேர்வு எழுதி அதில் தோல்வியடைந்தார். வேறு வழியின்றி வங்கிப் பணிகளுக்கான தேர்வில் கலந்துகொண்டு வெற்றிபெற்று 1983-ம் ஆண்டு எஸ்.பி.ஐ வங்கியில் பணிக்குச் சேர்ந்தார்.

வங்கிப் பணியில் மனம் முழுமையாக ஈடுபடவில்லை. மருத்துவக் கனவு தொடர்ந்தது. அதேவேளையில் அதைவிட்டுவிட்டு மருத்துவத் தேர்வுக்குப் படிக்கவும் குடும்பத்தின் சூழ்நிலை இடம்தரவில்லை. வாழ்க்கை சுழலத் தொடங்கியது. திருமணமானது. மூன்று பிள்ளைகள். இரண்டு மகள்கள் ஒரு மகன். வங்கிப்பணியில் இணை மேலாளர் நிலைக்கு உயர்ந்தார். 33 ஆண்டு வங்கிப்பணியை நிறைவு செய்து 2016-ம் ஆண்டு ஓய்வும் பெற்றுவிட்டார்.

அவரது இரண்டு மகள்களும் மருத்துவ நுழைவுத்தேர்வுக்காகப் படிக்கத் தொடங்கினர். அப்போது பிரதான் அவர்களுக்கு படிப்பில் உதவி செய்யத் தொடங்கினார். அவரால் பாடங்களைப் படித்து உடனே புரிந்துகொள்ள முடிந்தது. இந்த நிலையில் 2019-ம் ஆண்டு உச்சநீதி மன்றம் நீட் தொடர்பாக தீர்ப்பு ஒன்றில் நீட் தேர்வு எழுதுவதற்கான வயது உச்சவரம்பை நீக்கியது. பிரதானின் கனவு மீண்டும் உயிர்பெற்றது. இருமகள்களும் பிரதானை ஊக்கப்படுத்தினர். பிரதான் நீட் தேர்வு எழுத முடிவு செய்தார். கடந்த நீட் தேர்வில் கலந்துகொண்டு வெற்றியும் பெற்றார். அதன் பயனாக பிரதானுக்கு சம்பல்பூரில் இருக்கும் விம்சார் மருத்துவக் கல்லூரியில் சேர அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது.

இதுகுறித்து விம்சார் மருத்துவக் கல்லூரியின் முதல்வர் பிரஜாமோகன் குறிப்பிடுகையில்,

“தற்போது மருத்துவப் படிப்பில் சேர்வதற்கு அதிகபட்ச வயது வரம்பு ஏதுமில்லை. அந்தவகையில் பிரதானே மருத்துவப் படிப்பில் சேர்ந்துள்ள வயதான மாணவராக இருப்பார். நான் அவரை என் வகுப்புத் தோழனைப்போல்தான் பார்ப்பேன். இது ஒரு புது அனுபவம். வரும்காலத்தில் பாடத்திட்டத்தில் இருக்கும் அறிவியல் தொடர்பான விஷயங்களைப் புரிந்துகொள்வதிலும் அவருக்குப் பிரச்னைகள் ஏதும் இருக்காது என்று நம்புகிறேன்” என்று சொல்லியிருக்கிறார்.

சாதிக்கும் மனிதர்களுக்குத்தான் சோதனைகளும் வரும் என்பார்கள். அது பிரதான் வாழ்வில் நிஜமானது. அவரின் ஒரு மகள் கடந்த மாதம் எதிர்பாராதவிதமாக இறந்துவிட்டார். இது அவர்கள் குடும்பத்தையே உலுக்கிவிட்டது. மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்த மகிழ்ச்சியைக் கொண்டாட முடியாமல் தவிக்கிறார்.

இதுகுறித்து செய்தியாளர்கள் பிரதானிடம் கேட்டபோது அவர் கலங்கிய கண்களோடு பேசினார்.

“மருத்துவப் படிப்பு என் லட்சியம். அதை இந்த வயதில் அடைய முடிந்தது குறித்து எனக்கு மிக்க மகிழ்ச்சி. ஆனால் இதைப் பெரிய அளவில் கொண்டாட முடியாமல் போனதற்குக் காரணம் என் மகள். சமீபத்தில் அவர் காலமாகி எங்களைத் துயரத்தில் தள்ளிவிட்டார். நான் மருத்துவம் படிக்க வேண்டும் என்று அவள் விரும்பினாள். அவள் நினைவாகவே நான் மருத்துவத்தைப் படிக்க விரும்புகிறேன்.

நான் மருத்துவப் படிப்பை முடிக்கும்போது எனக்கு 69 வயதாகியிருக்கும். என்றாலும் நான் படித்துமுடித்து வேலைக்குப் போய் சம்பாதிக்க வேண்டிய கட்டாயம் எனக்கு இல்லை என்பதால் தொடர்ந்து மருத்துவத்தைத் தனியாகப் பயிற்சி செய்வேன். அதுதான் நான் என் மகளுக்குச் செய்யும் அஞ்சலியாக இருக்கும்” என்று குறிப்பிட்டார் பிரதான்.

சின்னச் சின்னத் தோல்விகளுக்கெல்லாம் மனம் உடைந்துபோகும் இளைஞர்களுக்கு பிரதானின் வாழ்க்கை ஒரு பாடம்.



source https://www.vikatan.com/oddities/education/this-64-year-old-man-joined-mbbs-after-clearing-neet

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக