Ad

புதன், 9 டிசம்பர், 2020

உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி தாயாரிடம் ரூ.2.5 கோடி மோசடி! - மேனேஜரை வளைத்த நாக்பூர் போலீஸ்

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் ஆகாஷ்வானி ஸ்கொயர் பகுதியில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டேவின் குடும்பத்துக்குச் சொந்தமான சீஸன் லான் (Season Lawn) என்ற இடம் இருக்கிறது. எஸ்.ஏ.பாப்டேவின் தாயாரான முக்தா பாப்டே, அந்த சொத்தைப் பராமரித்து வருகிறார். திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு வாடகைக்கு விடப்படும் அந்த இடத்தைப் பார்த்துக் கொள்வதற்காக பாப்டே குடும்பத்தினர் டபாஸ் கோஷ் என்பவரைக் கடந்த 2007-ம் ஆண்டு நியமித்திருக்கிறார்கள்.

எஸ்.ஏ.பாப்டே

Also Read: புதிய தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே யார்? அவருக்கும் நாமக்கல் ஆஞ்சநேயருக்கும் என்ன தொடர்பு?

டபாஸ் கோஷுக்கு மாதாந்திர சம்பளமும் திருமணம் போன்ற நிகழ்ச்சிகளுக்காக வரும் வாடகைப் பணத்தில் கமிஷனும் பாப்டே குடும்பத்தினர் கொடுத்து வந்துள்ளனர். இந்தநிலையில், டபாஸ் கோஷ், கோடிக்கணக்கில் பணத்தை ஏமாற்றியதாக முக்தா பாப்டே நாக்பூர் போலீஸில் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் புகார் கொடுத்திருக்கிறார். அவரது புகார் குறித்து சிறப்புப் புலனாய்வுப் பிரிவினரும் பொருளாதாரக் குற்றப்பிரிவினரும் விசாரணை நடத்தினர். துணை ஆணையர் வினிதா சாஹு தலைமையில் சிறப்புப் படை போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர்.

இதுகுறித்து பேசிய நாக்பூர் காவல் கண்காணிப்பாளர் அமிதேஷ் குமார்,``முக்தா பாப்டேவின் வயது முதிர்வைத் தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட டபாஸ், பல நிகழ்ச்சிகள் புக் செய்யப்பட்ட நிலையில், அதற்கான பணத்தைக் கொடுக்கவில்லை. அதேபோல், அந்த மண்டபத்தில் பொருத்தப்பட்டிருந்த சூரிய ஒளி மின்சார அமைப்புக்கான பராமரிப்பு போன்றவற்றுக்கும் பணம் கொடுக்காமல் இருந்திருக்கிறார்.

மோசடி

கொரோனா காலத்தில் புக் செய்யப்பட்டிருந்த பல நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்ட பின்னர், நிகழ்ச்சிகளுக்காக முன்பணம் கொடுத்தவர்களுக்குப் பணம் திரும்பப் போய் சேரவில்லை. இதையடுத்தே, டபாஸின் மோசடி முக்தாவுக்குத் தெரியவந்திருக்கிறது. டபாஸ், தனது மனைவியின் துணையோடு 2017-ம் ஆண்டு முதலே இதுபோன்ற மோசடியில் ஈடுபட்டு வந்திருக்கிறார். விசாரணையில் அவர், ரூ.2.5 கோடி அளவுக்கு பாப்டே குடும்பத்தினரிடம் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்திருக்கிறது. இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டிருக்கிறார்’’ என்றார். நாக்பூரில் கடந்த 8-ம் தேதி இரவு டபாஸ் கோஷைக் கைது செய்த போலீஸார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்திருக்கிறார்கள். அவரை டிசம்பர் 16-ம் தேதி வரை நீதிமன்றக் காவல் அளிக்கப்பட்டிருக்கிறது.



source https://www.vikatan.com/news/crime/business-manager-arrested-over-duping-over-25-crore-rupees-from-cji-sa-bobdes-mother

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக