Ad

செவ்வாய், 25 ஆகஸ்ட், 2020

`ஆறு ரூபாய் மாஸ்க்கும் அரசுப் பணம் விரயமும்’ - கடுப்பில் மக்கள்... தவிப்பில் அதிகாரிகள்!

தமிழக அரசு சார்பில் நியாயவிலைக் கடைகளில் வழங்கிய மாஸ்க் தரமில்லாமல் இருப்பதால், மக்களிடம் கடும் அதிருப்தி எழுந்திருக்கிறது. இதைச் சமாளிக்க முடியாமல் அதிகாரிகள் திணறிவருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தலைமைச் செயலகம்

தமிழக அரசு கொரோனா நோய்த் தொற்றைத் தவிர்க்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, `தமிழக அரசின் குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் தலா இரண்டு முகக்கவசங்கள் இலவசமாக வழங்கப்படும்’ என்று அறிவித்தது தமிழக அரசு. ஆகஸ்ட் மாதம் 5-ம் தேதி முதல் நியாயவிலைக் கடைகளில் ஒவ்வொரு குடும்ப அட்டைதாரருக்கும், அவர்களின் குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கையைப் பொறுத்து மாஸ்க் வழங்கப்படும் என்று குறிப்பிட்டிருந்தனர்.

அரசு அறிவித்தபடி ஆகஸ்ட் 5-ம் தேதி நியாயவிலைக் கடைகளில் மாஸ்க் வழங்கப்படவில்லை. திருவள்ளுர் மாவட்டத்தில் மட்டும் ஒரு கடையில் வழங்கிய மாஸ்க்கை, பொதுமக்கள் திருப்பிக் கொடுத்துவிட்டதாகத் தகவல் வெளியானது. மிகவும் மோசமாகவும், தரமற்ற நிலையிலும் அரசு வழங்கும் மாஸ்க் இருப்பதாக மக்களிடமிருந்து புகார் எழுந்துள்ளது. இதனால் பிற இடங்களுக்கு மாஸ்க் அனுப்புவதைத் தற்காலிகமாக நிறுத்திவைத்தனர். ஆனால், இப்போது வேறு வழியில்லாமல் அந்த மாஸ்க்கைப் பல இடங்களிலும் வழங்க ஆரம்பித்துள்ளனர். பல இடங்களில் மாஸ்க்கை வாங்கிப் பார்த்த மக்கள் அதைக் கடைக்காரர்களிடமே திருப்பிக் கொடுத்திருக்கிறார்கள். இது குறித்த புகார்கள் தொடர்ந்துவரவே இப்போது அதிகாரிகளுக்குச் சிக்கல் எழுந்திருக்கிறது.

நியாய விலைக்கடை

இது குறித்து தலைமைச் செயலகத்தில் பணியாற்றும் உயர் அதிகாரிகளிடம் விசாரித்தபோது, ``தமிழக அரசு மாஸ்க் வழங்கும் திட்டத்தை அறிவித்தபோது அந்தத் திட்டத்தைப் பேரிடர் மேலாண்மைத்துறை வசம் ஒப்படைத்தது. அந்தத் துறைதான் மாஸ்க் கொள்முதலை மேற்கொண்டுவருகிறது. இந்த மாஸ்க்குகளை வழங்க முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்தும் ஒரு தொகையை ஒதுக்கயிருப்பது சர்ச்சைக்குள்ளானது. இப்போது தரமற்ற மாஸ்க் வழங்கி, அது அரசுக்குக் கெட்ட பெயரை ஏற்படுத்தியிருப்பதால் அதிகாரிகள் தரப்பிலும் மனக்கசப்பு ஏற்பட்டுள்ளது’’ என்கிறார்கள்.

தமிழக பேரிடர் மேலாண்மைத்துறையினர் இந்த மாஸ்க் கொள்முதலுக்கு பல்வேறு நிறுவனங்களைத் தொடர்பு கொண்டிருக்கிறார்கள். பல நிறுவனங்கள், `ஒன்பது ரூபாய்க்குக் குறைவாக இது போன்ற மாஸ்க்கைத் தயாரிக்க முடியாது’ என்று கூறியிருக்கின்றன. ஆனால், திருப்பூரைச் சேர்ந்த ஒரு நிறுவனம் மட்டும், `6.75 ரூபாய்க்கு மாஸ்க் தயாரித்துத் தருகிறோம்’ என்று உறுதி கொடுத்து ஒப்பந்தத்தை எடுத்திருக்கிறது.

கிட்டத்தட்ட 90 கோடி ரூபாய் வரை இதற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. முதற்கட்டமாக நான்கு கோடி மாஸ்க்குகள் தயாராகி அரசின் கைக்கு வந்துவிட்டன. அந்த மாஸ்க்கைப் பார்த்த அதிகாரிகள் அதிர்ந்துபோய்விட்டனர். மிகவும் மெல்லிய துணியில் தயாரிக்கப்பட்ட அந்த மாஸ்க்கை நியாயவிலைக் கடைகளில் கொடுத்தபோது பல இடங்களில் மக்கள் அதைத் திருப்பிக் கொடுத்துவிட்டனர். இதனால் அதிகாரிகள் கலக்கம் அடைந்துள்ளனர்.

மாஸ்க்

இது குறித்து நம்மிடம் பேசிய சுகாதாரத்துறையினர் ``ஏற்கெனவே கொரோனாவுக்கான பல்வேறு உபகரணங்கள் சுகாதாரத்துறை மூலமே கொள்முதல் செய்யப்பட்டன. ஆனால், பொதுமக்களுக்கு வழங்கப்படும் மாஸ்க்கை மட்டும் எதற்காக பேரிடர்துறை வசம் ஒப்படைத்தார்கள் என்பது புரியவில்லை. எந்த நிறுவனத்தாலும் ஆறு ரூபாய்க்கு மாஸ்க் தயாரிக்க முடியாது என்று தவிர்த்தபோது, ஒரு நிறுவனம் அதைச் செய்வதாக ஒப்புதல் கொடுத்தபோதே கொஞ்சம் உஷாரா இருந்திருக்க வேண்டும். முதற்கட்டமாகத் தயாரித்துவந்த மாஸ்க்கைப் பார்த்த பிறகு அந்த நிறுவனத்திடம் கடும் அதிருப்தியை அதிகாரிகள் வெளிப்படுத்தினார்கள். அதற்குப் பிறகு வேறு ஒரு துணியில் மாஸ்க் தயாரிக்கப்பட்டது. இதனால் இரண்டு துறைகளிலுமுள்ள அதிகாரிகள் மத்தியில் மனக்கசப்பும் ஏற்பட்டுள்ளது. எதற்காக சுகாதாரத்துறையினரிடம் இந்த மாஸ்க் கொள்முதல் பணியை வழங்கவில்லை என்று தெரியவில்லை. தரமான மாஸ்க்கை சுகாதாரத்துறையே வாங்கிக்கொடுத்திருக்கும்” என்று அந்த அதிகாரிகள் வருத்தம் தொனிக்கப் பேசினர்.

Also Read: Sunday Lockdown: `டாஸ்மாக் விற்பனை', `அதிகாரிகளுக்கு ஓய்வு' - ஒரு நாள் முழு ஊரடங்கால் என்ன நன்மை?

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

``ஏற்கெனவே சுகாதாரத்துறை மூலம் கொள்முதல் செய்யப்பட்ட பொருள்களின் மூலம் பெறப்பட்ட கமிஷன் தொகையே மலைக்கும் அளவுக்கு உள்ளது. இது தெரிந்துதான் முதல்வர் சுகாதாரத்துறையின் வசம் இந்தப் பொறுப்பை ஒப்படைவில்லை என்று சொல்கிறார்கள். இந்த மாஸ்க் வழங்கியதில் மிகப்பெரிய முறைகேடும் நடந்திருக்கிறது. இரண்டு துறைகளிலுமுள்ள அதிகாரிகள் மத்தியில் இந்த விவகாரத்தை முன்வைத்து பனிப்போரும் நடந்துவருகிறது. இதில் பாதிக்கப்படுவது சராசரி மக்களும், அரசின் பல கோடி ரூபாய் பணமும்தான்’’ என்கிறார்கள் பேரிடர் மேலாண்மை வாரியத்துறையில் உள்ளவர்கள். இது ஒருபுறமிருக்க, ஏற்கெனவே பத்தாம் வகுப்பு தேர்வு,11 -ம் வகுப்பு பொதுத் தேர்வெழுத இருந்த மாணவர்களுக்காக 47 லட்சம் மாஸ்க் சமூக நலத்துறை மூலம் கொள்முதல் செய்யப்பட்டு பள்ளிக்கல்வித்துறை மூலம் மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த மாஸ்க்குகளையும் திருப்பூரைச் சேர்ந்த நிறுவனம்தான் டென்டர் எடுத்திருக்கிறது. இதிலும் முறைகேடுகள் நடந்திருப்பதாக சர்ச்சைகள் எழுந்துள்ளன.



source https://www.vikatan.com/government-and-politics/politics/story-about-non-standard-mask-offered-in-tamilnadu-ration-shops

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக