கடந்த ஏழு மாத காலமாக நம் முழு கவனமும் கொரோனாவை சுற்றியே இருந்து வரும் நிலையில், ஆங்காங்கே நடந்து வரும் சில ஆராய்ச்சிகள் மற்ற உடல்நலப் பிரச்னைகள் குறித்தும் நினைவூட்டுகின்றன. அந்த வகையில், சமீபத்தில் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகமும் (ICMR) மற்றும் பெங்களூரு தேசிய நோய் தகவல் ஆராய்ச்சி மையமும் (NCDIR) இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில்,
``கடந்த நான்கு ஆண்டுகளில் இந்தியாவில் புற்றுநோய் பாதித்தவர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது. 2016-ல் 12.6 லட்சம் என்றிருந்த இந்த எண்ணிக்கை 2020-ல் 13.9 லட்சமாக அதிகரித்துள்ளது. இதே நிலை நீடித்தால் வரும் 2025-ம் ஆண்டில் புற்றுநோய் நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 15.7 லட்சத்தை எட்டக்கூடும்.
இந்த ஆண்டு கணக்கெடுப்பில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஆண்களின் எண்ணிக்கை 6.8 லட்சமாகவும், பெண்களின் எண்ணிக்கை 7.1 லட்சமாகவும் உள்ளது. 2025-ல் இந்த எண்ணிக்கை உயர்ந்து 7.6 லட்சம் ஆண்களும், 8.1 லட்சம் பெண்களும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருக்கலாம். இந்தியாவில் உள்ள புற்றுநோய்களில் அதிகபட்சமாக 27.1 சதவிகித புற்றுநோய் புகையிலையின் காரணமாக ஏற்படுவதாகக் கண்டறியப்பட்டுள்ளது. பெண்களுக்கு ஏற்படும் மார்பகப் புற்றுநோய் 14.8 சதவிகிதமாகவும், கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் 5.4 சதவிகிதமாகவும் உள்ளது. புகைப்பழக்கம் உள்ள பெரும்பாலானோர் நுரையீரல் புற்றுநோய்க்கு ஆளாகின்றனர்" என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்த சதவிகித பட்டியலில் முதலிடம் பிடித்திருப்பது `நுரையீரல் புற்றுநோய்!'. புகை பிடிக்கும் பழக்கம் உள்ளவர்களுக்கு கொரோனா எளிதில் பரவ வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ள நிலையில், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் வெளியிட்டுள்ள `நுரையீரல் புற்றுநோய்' குறித்த இந்த எச்சரிக்கையும் நம்மை மேலும் அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது.
நுரையீரல் புற்றுநோய் எவற்றின் காரணமாக ஏற்படலாம்... அதிலிருந்து எவ்வாறு தற்காத்துக்கொள்வது... இதற்கான சிகிச்சை என்ன... நுரையீரல் மருத்துவர் எஸ்.ஜெயராமனிடம் கேட்டோம்.
புற்றுநோய்
ஒருவரின் உடலில் ஏற்படும் செல்களின் அபரிமித, கட்டுப்பாடற்ற வளர்ச்சியின் காரணமாகப் புற்றுநோய் ஏற்படுகிறது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள்வரை யார் வேண்டுமானாலும் இதனால் பாதிக்கப்படலாம். இன்றைய காலகட்டத்தில் அதிக உயிரிழப்பு ஏற்பட முக்கியக் காரணங்களுள் ஒன்றாகப் புற்றுநோய் உள்ளது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பெரும்பாலானோர் இதனால் பாதிக்கப்படுகிறார்கள்.
வாழ்க்கைமுறை, உணவுமுறை, சுற்றுச்சூழல் எனப் பலவித காரணங்களால் புற்றுநோய் ஏற்படலாம். புற்றுநோய் ஏற்படக் காரணமாகும் வேதிப் பொருள்களை நாம் `கார்சினோஜென் (Carcinogen)' என்று அழைப்போம். நிக்கல், குரோமியம், அணு உலைகளிலிருந்து வெளியேறும் ரசாயனங்கள், கதிர்வீச்சுகள், புற ஊதா கதிர்கள் (ultraviolet rays), வாகனத்திலிருந்து வெளியேறும் கார்பன் மோனாக்ஸைடு (Carbon monoxide), புகையிலை போன்றவற்றை கார்சினோஜெனுக்கான எடுத்துக்காட்டுகளாகச் சொல்லலாம். பெண்களுக்கு ஏற்படும் மார்பக, கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய்கள் அவர்களின் உடலின் ஹார்மோன் சுரப்பு பிரச்னைகளால் ஏற்படுகின்றன.
Also Read: `இந்தி தெரியவில்லையா.. வெளியேறுங்கள்!' ஆயுஷ் பயிற்சி வகுப்பில் தமிழக மருத்துவர்களுக்கு நடந்தது என்ன?
நுரையீரல் புற்றுநோய்
உலகளவில் அதிக உயிரிழப்பை ஏற்படுத்தக்கூடிய புற்றுநோய்களில் முதலிடத்தில் இருப்பது நுரையீரல் புற்றுநோய் (Lung cancer). இதற்கு முக்கியக் காரணம் புகைப்பழக்கம். நுரையீரல் புற்றுநோய் பெண்களைவிட ஆண்களைத்தான் அதிகம் தாக்கும் என்ற ஒரு கருத்து உள்ளது. முன்பெல்லாம் பெண்களைவிட அதிகமாக ஆண்கள்தாம் வேலைபோன்ற காரணங்களுக்காக வெளியில் அதிகம் செல்வார்கள். சுற்றுப்புறத்தில் இருக்கும் காற்று மாசு காரணமாக அவர்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் இருந்திருக்கலாம். ஆனால் தற்போது பெண்கள், ஆண்கள் அனைவருமே படிப்பு, வேலை இன்னும் பிற காரணங்களுக்காக வெளியில் செல்வதால் ஆண், பெண் பாகுபாடின்றி யாருக்கு வேண்டுமானாலும் இந்தப் பாதிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.
நுரையீரல் புற்றுநோய் ஏற்படுவதற்கான முக்கியக் காரணமாக மருத்துவ உலகம் சொல்வது புகைப்பழக்கம். 90 சதவிகித நுரையீரல் புற்றுநோய் பாதிப்புகள் புகை பிடிப்பதால் ஏற்படுகிறது. மேலும் காற்றுமாசு, சிகரெட் புகை, ரேடான் வாயு, மரபியல் ஆகியவை நுரையீரல் புற்றுநோய் ஏற்படக் காரணிகளாகக் கருதப்படுகின்றன. ஒருவர் மணிக்கணக்கில் புகைத்துக்கொண்டிருந்தாலோ, புகைப்பவரின் அருகில் நின்றுகொண்டிருந்தாலோ சுவாசத்தின் வழியே நுரையீரலுக்குள் செல்லும் சிகரெட் புகை, நுரையீரல் செல்களைப் பாதித்து புற்றுநோயை ஏற்படுத்துகிறது.
Also Read: இந்தியாவில் அதிகரிக்கும் கல்லீரல் சிரோசிஸ் மரணங்கள்... காரணம் என்ன?
ஆரம்பகட்டத்தில் நுரையீரல் புற்றுநோயைக் கண்டறிவது கடினம். ஏனெனில், இதற்கான அறிகுறிகளைச் சாதாரண சுவாசத்தொற்று எனக் கருதிக் கடந்துவிடுவோம். சில நேரங்களில், அறிகுறிகள் ஏதும் தென்படுவது கிடையாது. புற்றுநோய் கட்டி வளர்ந்த பிறகோ, நோய் முற்றிய பிறகோதான் நுரையீரல் புற்றுநோய் பெரும்பாலும் கண்டறியப்படுகிறது. முன்கூட்டியே கண்டறிந்தால், நுரையீரல் புற்றுநோயைக் குணப்படுத்துவது சுலபம்.
நுரையீரல் புற்றுநோய்க்கான அறிகுறிகள் மூன்று வகைகள் உள்ளன. முதல் வகையில் எந்தவித அறிகுறிகளும் தென்படாது. வேறு ஏதாவது உடல்நல பிரச்னைக்கு எக்ஸ்ரே எடுத்துப் பார்க்கும்போது நுரையீரல் பகுதியில் வெள்ளையாக ஏதேனும் தென்படும். பிறகு நுரையீரலைச் சோதித்தால் அவருக்குப் புற்றுநோய் இருப்பது தெரியவரும். இந்த வகையினரைத்தான் ஆரம்பத்திலேயே கண்டறிவது கடினம்.
இரண்டாம் வகையில் தீராத இருமல், இருமலின்போது ரத்தம் வெளியேறுதல், மூச்சுத்திணறல், காய்ச்சல், நெஞ்சுவலி, உடல் எடை இழப்பு, பசியின்மை போன்ற நுரையீரல் புற்றுநோய்க்கான அறிகுறிகள் வெளிப்படையாகவே தெரியவரும்.
மூன்றாம் வகையில் நுரையீரலில் பரவியிருக்கும் கட்டி மூளை, கல்லீரல் போன்ற மற்ற உடல் பாகங்களுக்குப் பரவி தலைச்சுற்றல், பக்கவாதம், மஞ்சள் காமாலை போன்றவற்றை ஏற்படுத்தும். என்ன பிரச்னை என்று உடலை ஸ்கேன் செய்து பார்க்கும்போது நுரையீரல் புற்றுநோய் ஏற்பட்டு அது உடலின் மற்ற பாகங்களுக்குப் பரவியிருப்பது தெரியவரும்.
புற்றுநோய் கண்டறியப்பட்ட பின் என்ன செய்ய வேண்டும்?
புற்றுநோய் கண்டறியப்பட்டால் தாமதப்படுத்தாமல் உடனடியாக சிகிச்சையைத் தொடங்கிவிட வேண்டும். புற்றுநோயின் நிலையைப் பொறுத்து மூன்று வகையான சிகிச்சைகள் வழங்கப்படுகின்றன. முதலாவது சிகிச்சைமுறை `அறுவை சிகிச்சை.' இதில் நுரையீரலில் புற்றுக் கட்டி வளர்ந்திருக்கும் பாகம் மட்டும் அறுவைசிகிச்சை மூலம் வெட்டி நீக்கப்படுகிறது. இதற்கு அடுத்த சிகிச்சை முறை `கீமோதெரபி (chemotherapy)'. புற்றுநோய் சிகிச்சைக்கான மருந்துகள் மற்றும் ரசாயனங்களை வால்வுகள் வழியே பாதிக்கப்பட்டவரின் உடலுக்குள் செலுத்தி சிகிச்சை அளிக்கும் முறைக்கு கீமோதெரபி என்று பெயர்.
கீமோதெரபிக்கு அடுத்த சிகிச்சை முறை கதிரியக்க சிகிச்சை முறை (Radiation therapy). இது பாதிக்கப்பட்டவரின் உடலில் மீது கதிரியக்கத்தைச் செலுத்தி புற்றுசெல்களை அழிக்கும் முறை.
தற்காத்துக்கொள்ள என்ன செய்வது?
புகைப்பழக்கம் உள்ளவர்கள் அதை முழுவதுமாகக் கைவிட வேண்டும். வாகன நெரிசல், காற்று மாசு உள்ள இடங்களில் வசிப்பவர்கள் வெளியில் செல்லும்போது மாஸ்க் அணிந்து செல்லலாம்.
ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும் ரசாயனங்கள் அதிகமுள்ள உணவுகளையும், துரித உணவுகளையும் தவிர்க்க வேண்டும்.
பெற்றோர்களுக்குப் புற்றுநோய் ஏற்பட்டால் எதிர்காலத்தில் பிள்ளைகளுக்கும் ஏற்படச் சாத்தியக்கூறுகள் உள்ளன. அதனால் புற்றுநோய் பாதிக்கப்பட்ட பெற்றோர்களின் பிள்ளைகள் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டியது அவசியம். புற்றுநோய்க்கான லேசான அறிகுறிகள் ஏதாவது தென்பட்டாலும் உடனடியாக மருத்துவரை அணுகிப் பரிசோதித்துக்கொள்வது நல்லது. அணு உலைகள் அமைக்கப்பட்டிருக்கும் இடங்களுக்கு அருகில் வசிப்பதைத் தவிர்க்க வேண்டும்" என்றார் நுரையீரல் மருத்துவர் எஸ்.ஜெயராமன்.
source https://www.vikatan.com/health/healthy/doctor-explains-causes-of-lung-cancer-and-how-to-prevent-it
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக