Ad

திங்கள், 24 ஆகஸ்ட், 2020

கேலிகிராஃபியில் அசத்தும் அரசுப்பள்ளிகள்... விகடன் செய்தியால் கைகோக்கும் ஆசிரியர்கள்!

கரூரைச் சேர்ந்த அரசுப் பள்ளி ஆசிரியர் ஒருவர், மாணவர்களின் ஆங்கில கையெழுத்தை அழகாக்கும் கேலிகிராஃபி என்கிற 7 நாள் பயிற்சி தருவதைப் பற்றி, விகடன் இணையதளத்தில் கட்டுரை வெளியிட்டிருந்தோம். இந்த நிலையில், விகடனின் செய்தியைப் படித்த உலக அளவில் உள்ள பலரும், அந்த ஆசிரியரிடம் கேலிகிராஃபியைக் கற்க ஆர்வம் காட்டி வருகிறார்கள். அதைவிட, தமிழகம் முழுக்க உள்ள பல அரசுப் பள்ளி ஆசிரியர்கள், தங்கள் மாணவர்களுக்கு இந்த கேலிகிராஃபியை சொல்லித்தர ஆர்வம் காட்டிவருவது, கல்வி ஆர்வலர்களின் பாராட்டைப் பெற்றிருக்கிறது.

மருதவனம் மாணவர் எழுதிய கையெழுத்து

Also Read: கரூர்: கேலிகிராஃபி; 7 நாள்; 7 வீடியோக்கள்! - அசத்தும் அரசுப் பள்ளி ஆசிரியர்

கரூர் மாவட்டம், குளித்தலை ஒன்றியத்தில் உள்ள பொய்யாமணியில் இயங்கி வரும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், பட்டதாரி ஆசிரியராகப் பணியாற்றி வருபவர் பூபதி அன்பழகன். இவர்தான், 7 நாள்களில் 7 வீடியோக்கள் மூலம், மாணவர்களின் ஆங்கில கையெழுத்தை அழகாக்கும் பயிற்சியை, தனது மாணவர்களுக்கும், தமிழகத்தில் உள்ள சில அரசுப் பள்ளி மாணவர்களுக்கும் கொடுத்து வருகிறார். இதுகுறித்து, விகடன் இணையதளத்தில் கடந்த மாதம் 10-ம் தேதி, செய்தி ஒன்று வெளியிட்டோம்.

பூபதி அன்பழகன்

இந்தச் செய்தி, விகடன் வாசகர்களிடம் போய் சேர, பலரும் தங்கள் பிள்ளைகளுக்கு கேலிகிராஃபி பயிற்சிதரும்படி, தன்னை அணுகிவருவதாக பூபதி அன்பழகன் மகிழ்ச்சியோடு சொல்கிறார். "விகடன் செய்தியைப் படிச்சுட்டு, வெளிநாடுகளில் இருந்தெல்லாம், என்னை கேலிகிராஃபி பயிற்சி கொடுக்கும்படி அணுகுகிறார்கள். அதைவிட, தமிழகத்தில் அடிப்படை வசதிகளே இல்லாத கிராமங்களில் இருந்தெல்லாம், பலநூறு மாணவர்கள் இதைக் கத்துக்க ஆர்வம் காட்டுவது ஆச்சர்யத்தை ஏற்படுத்துது" என்றார்.

விகடன் செய்தியைப் படித்தபின், தனது பள்ளி மாணவர்களுக்கு பூபதி அன்பழகன் மூலம் கேலிகிராஃபி சொல்லித்தருகிறார், ஆசிரியை அமுதா. இவர், திருவாரூர் மாவட்டம், மருதவனம் என்ற கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் பட்டதாரி ஆசிரியையாக பணியாற்றிவருகிறார். அவரிடம் பேசினோம்.

"இது மிகவும் பின்தங்கிய கிராமம். இங்கு வசிக்கும் மக்களில் 80 சதவிகிதம் பேர் கூலிவேலை பார்ப்பவர்கள்தான். குடிசை வீடுகள்தான் இங்கு அதிகம் இருக்கும். இப்படிப்பட்ட சூழலில் இருந்துதான் மாணவர்கள் அரசுப் பள்ளிக்கு படிக்க வர்றாங்க. அவங்களுக்கு நல்ல விஷயங்களைக் கற்றுத்தரணும்னு நான் நினைப்பேன். அந்த வகையில்தான், தனியார் பள்ளி மாணவர்களுக்கு மட்டும் கிடைத்த கேலிகிராஃபி கற்பிக்கும் வாய்ப்பை விகடன் மூலம் ஏற்படுத்திக்க முடிஞ்சது. இங்கு பலரிடமும் ஆண்ட்ராய்டு மொபைல்களே கிடையாது.

அமுதா

ஒரு தெருவுக்கு ஒருத்தர்கிட்ட செல்போன் இருக்கு. அதனால், அவர்கள் மூலமாகப் பசங்களுக்கு தினமும் கேலிகிராஃபி பயிற்சி கொடுக்க ஆரம்பித்தோம். அதற்காக, தனி வாட்ஸ்அப் குரூப் ஆரம்பிச்சு, அதுல பூபதி சாரையும் சேர்த்தோம். அவர் தினமும் அனுப்பும் வீடியோவை, அந்தந்தப் பகுதி மாணவர்களுக்கு அனுப்புவேன். அதன்மூலமாக, அனைத்து மாணவர்களும், இதை ஆர்வமா கத்துக்கத் தொடங்கினாங்க.

மாணவர்கள் எழுதிப்பழகுவதையும், வாட்ஸ்அப் மூலமா எங்களுக்கு அனுப்ப சொல்லுவோம். அதைப்பார்த்து பூபதி சார் உடனே கரெக்ஷன் சொல்லுவார். எந்த நேரமா இருந்தாலும், சலிக்காம அவர் எங்க மாணவர்களுக்கு இதைக் கற்றுத்தந்தார். அதனால், எங்கப் பள்ளியைச் சேர்ந்த 22 மாணவர்கள் இதை ஆர்வமா கத்துக்கிட்டு, இப்போ அழகா ஆங்கில எழுத்துகளை எழுதுறாங்க. இதைப் பார்த்து ஆர்வமான மத்தப் பள்ளி மாணவர்கள் 25 பேர், 'எங்களுக்கும் கத்துத்தாங்க'னு சொல்லி, அவங்களும் கத்துக்குகிறாங்க.

விடத்தாக்குளம் மாணவி எழுதிய அழகிய கையெழுத்து

அதேபோல், 5 கல்லூரி மாணவர்களும் எங்ககிட்ட கேலிகிராஃபி கத்துக்கிறாங்க. தனியார் பள்ளி மாணவர்களுக்கு மட்டும் கிடைத்து, அரசுப் பள்ளி மாணவர்களுக்கு எட்டாக்கனியாக இருந்த இந்த கேலிகிராஃபி எழுத்துப்பயிற்சி மாதிரியான 'காஸ்ட்லி' விஷயங்கள், இப்போ அரசுப் பள்ளி மாணவர்களுக்கும் கிடைச்சிருக்கு. இதை சமூகநீதியாக பார்க்கிறேன். இதற்கு காரணமான, பூபதி சாருக்கும், எங்களுக்கு அவரை அறிமுகப்படுத்திய விகடனுக்கும் கோடி நன்றிகள்" என்றார் உணர்ச்சி மேலிட.

அடுத்து, சிவகங்கை மாவட்டம், விடத்தாக்குளத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் பட்டதாரி ஆசிரியையாக பணியாற்றிவரும் முத்துகுமாரியும், தனது பள்ளி மாணவர்களுக்கு ஆர்வமுடன் இந்த கேலிகிராஃபி எழுத்துப் பயிற்சியைக் கொடுத்து வருகிறார். அவரிடம் பேசினோம்.

"இந்தக் கிராமமும் பின்தங்கிய மக்கள் அதிகம் நிறைந்த கிராமம்தான். இங்குள்ள பலர், ஆண்ட்ராய்டு மொபைலையே ஆச்சர்யமான பொருளா பார்க்குற நிலைமையில்தான் இருக்காங்க. விகடன் செய்தி மூலமா, பூபதி சார் கேலிகிராஃபி சொல்லித்தருவதைப் பார்த்து, நண்பர் மூலமா அவர் நம்பர் பிடிச்சு, அவரிடம் பேசினோம். ஆர்வமா எங்க பசங்களுக்கு அதை சொல்லித்தர ஒத்துக்கிட்டார்.

முத்துக்குமாரி

தினமும் ஆண்ட்ராய்டு மொபைல் இருக்கும் மாணவர்கள் மூலமா 30 மாணவர்களுக்கு கேலிகிராஃபி கத்துத்தர ஆரம்பித்தோம். தினமும் 15 நிமிடங்கள் வரை கத்துத்தந்தோம். அனைவரும் அழகா எழுத ஆரம்பிச்சாங்க. அவங்களைப் பார்த்துட்டு, சுத்தியுள்ள மத்த பள்ளி மாணவர்கள் 20 பேரும் இதைக் கத்துக்க ஆரம்பிச்சுருக்காங்க. எளிய கிராமத்துப் பிள்ளைகளுக்கு நல்ல விஷயத்தை சொல்லித்தருகிறோம் என்ற மனநிறைவு ஏற்பட்டிருக்கிறது" என்றார்.



source https://www.vikatan.com/news/education/government-school-students-started-learning-calligraphy-through-karur-teacher

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக