Ad

திங்கள், 24 ஆகஸ்ட், 2020

தனியாருக்கு பர்மிட்; அரசு பஸ்ஸுக்கு `தடா' - கொரோனா காலத்திலும் விடாத கொள்ளை!

இது கொரோனா காலம். அரசாங்கம் 2.0, 3.0 எனத் தளர்வுகளை அறிவிக்கும்போதெல்லாம், `பொதுப் போக்குவரத்து குறித்த அறிவிப்பு வராதா?’ என ஏங்கித் தவிக்கின்றனர் எளிய மக்கள். சென்னையில், புறநகர் ரயில்களை நம்பியே லட்சக்கணக்கானோர் நகரங்களில் பணிபுரிகின்றனர். வீடுகளில் டூவீலர் இருந்தாலும் அதற்கான எரிபொருள் செலவை பலரால் ஈடுகட்ட முடிவதில்லை என்பதுதான் நிஜம்.

அரசுப் பேருந்து

பணிக்குச் செல்லும் பதற்றத்தில் சாலைகளில் விரையும் வாகனங்களில் லிஃப்ட் கேட்பவர்களின் எண்ணிக்கையும், அரசு ஊழியர்களுக்காக மட்டுமே இயக்கப்படும் அரசுப் பேருந்து நடத்துநர்களிடம் பொதுமக்கள் உதவி கேட்பதும் அன்றாட நிகழ்வாகிவிட்டன. தனிமனித இடைவெளி, அளவான பயணிகள் என்பதெல்லாம் காலை நேரப் பதற்றத்தில் கண்ணுக்குத் தெரிவதில்லை.

என்னவாகின 22,203 பேருந்துகள்?

இந்நிலையில், நான்கைந்து மாதங்களாக ஓடாமலிருக்கும் அரசுப் பேருந்துகளின் நிலை என்னவானது... கொரோனா முடிந்து அவற்றை மீண்டும் இயக்கத் தொடங்கினால் விளைவுகள் விபரீதமாக இருக்குமா போன்ற கேள்விகளும் எழத் தொடங்கியுள்ளன.

அரசுப் பேருந்துகள்

`` இல்லை... அப்படி நடப்பதற்கு வாய்ப்பில்லை. மாநிலம் முழுவதும் 22,203 அரசுப் பேருந்துகள் உள்ளன. லாக்டௌன், வாகனம் இயங்காமல் இருப்பது உள்ளிட்ட சில காரணங்கள் இருந்தாலும், பேருந்து பராமரிப்பு ஊழியர்களும் டெக்னிக்கல் ஊழியர்களும் கடந்த மூன்று மாதங்களாக வேலைக்குச் சென்றுவருகின்றனர். எஃப்.சி வேலை உட்பட அனைத்தையும் சரியாகச் செய்துவருகின்றனர்.

வாகனங்களை நகர்த்தி இயக்கிப் பார்ப்பது, பரிசோதிப்பது என எப்போதும் இயங்கும்நிலையிலேயே வாகனங்களை வைத்திருக்கிறார்கள். நான்கு மாத காலம் அவகாசம் கிடைத்த காரணத்தால், சின்னச் சின்ன வேலைகளையும் பார்த்து நல்ல நிலையில் வைத்திருக்கின்றனர். நாளைக்கே அரசு அறிவித்தாலும் ஓடக்கூடிய நிலையில் வாகனங்கள் உள்ளன" என விவரித்தார் அரசுப் போக்குவரத்து ஊழியர் சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் (சி.ஐ.டி.யூ) ஆறுமுக நயினார். தொடர்ந்து பேசியவர்,

மாறிப்போன மக்கள் மனநிலை?

`` போக்குவரத்துக் கழகத்தில் 1.25 லட்சம் தொழிலாளர்கள் இருக்கிறார்கள். போக்குவரத்துக் கழகம் கடும் நிதிப் பிரச்னையில் உள்ளது. கடன் வாங்கித்தான் சம்பளம் கொடுத்திருக்கிறார்கள். கடன்களும் அதிகமாகியுள்ளன. அரசாங்கம் வேண்டுமென்றே பொதுப் போக்குவரத்து வாகனங்களை இயக்காமல் இருக்கிறதோ என்ற சந்தேகம் எங்களுக்கு வருகிறது. மாநிலம் முழுக்க நாளொன்றுக்கு 2.10 கோடிப் பேர் பேருந்துகளில் பயணித்துவந்தனர். இடையில் பேருந்துக் கட்டணத்தை உயர்த்தி, வாகனத்தின் எண்ணிக்கையையும் குறைத்தனர். இதனால் பயணிகளின் எண்ணிக்கையும் குறைந்தது.

அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்

கொரோனா காலத்தில் பயணிகளின் மனநிலையும் மாறிவருகிறது. நான்கு மாதகாலமாக பேருந்து இயங்காததால், மக்கள் வேறு மனநிலைக்கு மாறிவிட்டனர். `மீண்டும் பேருந்து ஓடத் தொடங்கினால், இந்த மக்கள் பேருந்தை நாடி வருவார்களா?’ என்ற கேள்வியும் எழுகிறது. மக்கள் மனநிலையை மாற்றும் நோக்கில் அரசு செயல்படுகிறதோ எனச் சந்தேகப்படுகிறோம். பொதுத்துறையை இழுத்து மூடுவதுதான் அரசின் நோக்கமாக இருக்கிறது. பேருந்துகளை இயக்குவதை நஷ்டமாகப் பார்க்கக் கூடாது. அவை மக்களுக்குப் பயன்படுகின்றன. பயணம் அதிகமானால், பொருளாதாரம் வளரும். தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு போக்குவரத்துக் கழகம் மறைமுகமாக உதவி செய்கிறது" என்றார்.

வளர்ச்சிக்கான ஆதாரம்?

`` தமிழ்நாடு, மகாராஷ்ட்ரா, குஜராத் உள்ளிட்ட முன்னேறிய மாநிலங்களில் அரசுப் பேருந்துகள் அதிகமான அளவில் இயக்கப்படுகின்றன. குஜராத், மகாராஷ்ட்ரா மாநிலங்களில் 25,000 பேருந்துகளும் கர்நாடகா, ஆந்திர மாநிலங்களில் 25,000 பேருந்துகளும் கேரளாவில் 7,000 பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.

அரசுப் பேருந்துகளே இயக்கப்படாத மத்தியப்பிரதேசம், உத்தரப்பிரதேசம், பீகார் உள்ளிட்ட மாநிலங்களின் வளர்ச்சியை இத்துடன் பொருத்திப் பார்க்கலாம். இந்த கொரோனா காலத்திலும் கேரளா, மகாராஷ்ட்ராவில் வாகனங்கள் ஓடுகின்றன. பேருந்து மூலமாகத்தான் கொரோனா பரவுகிறது என்பதற்கு எந்தவித ஆதாரங்களும் இல்லை. அனைத்திலும் பாதுகாப்பாக இருக்க வேண்டும்; தொழிலாளிகளுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. கிராமப்புறத்தைச் சேர்ந்தவர்களில் சுமார் ஒன்றரை கோடிப் பேர் டவுன் பஸ்களில்தான் பயணிக்கின்றனர். இவற்றை அரசு கவனத்தில் எடுத்துக்கொள்ளவில்லை" என்று சொல்லி வேதனைப்படுகின்றனர் போக்குவரத்துக் கழக ஊழியர்கள் சிலர்.

Also Read: `3 மணிநேரத்துக்கே முடியல... அவங்களுக்கு ராயல் சல்யூட்!’- கவச உடை பணியில் அரசுப் பேருந்து ஓட்டுநர்

புதிய கடன் ரூ.1,500 கோடி!

``பேருந்துகள் இயக்கப்படாததால், கடும் கடன் நெருக்கடியில் சிக்கித்தவிக்கிறது போக்குவரத்துக் கழகம். போக்குவரத்துக் கழகம் 7,304 கோடி ரூபாய் நஷ்டத்தில் இயங்குகிறது. அதிலும், 2,109 கோடி ரூபாய் கூடுதல் நஷ்டத்தில் இயங்கிவருவதாக 2017-18 -ம் ஆண்டு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், கொரோனா காலத்தில் வாகனம் இயக்கப்படாததால், கூடுதலாக 1,500 கோடி ரூபாய் வரையில் கடன் வாங்கப்பட்டிருக்கிறது. டி.டி.எஃப்.சி என்ற போக்குவரத்துக் கழக நிறுவனம் மூலம் ஸ்டேட் வங்கியில் கடன் வாங்கி ஊழியர்களுக்குச் சம்பளம் கொடுக்கப்பட்டிருக்கிறது.

Also Read: தமிழகம்: `பொது போக்குவரத்து; சென்னையில் தளர்வுகள்?’ - புதிய ஊரடங்கில் என்ன எதிர்பார்க்கலாம்?

கடன் வாங்கிக்கொண்டே போனாலும், சுழற்சிமுறையில் அதை ஈடுகட்ட முடியும். உதாரணமாக, அரசுப் பேருந்து வாகனங்களுக்கு நாளொன்றுக்கு 18 லட்சம் லிட்டர் டீசல் செலவாகிறது. இந்த வாகனங்ளுக்கான டீசலை இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் 45 நாள் கிரெடிட்டில் கொடுத்து வந்தது. சுழற்சிமுறையில் பணமும் கொடுக்கப்பட்டு வந்தது. இப்போது வாகனம் ஓடாததால், ஓடிய காலத்துக்குரிய 45 நாள் பணத்தை உடனே செலுத்தியாக வேண்டும். டீசலுக்கு மட்டுமே 700 கோடி ரூபாய் பணத்தைச் செலுத்தியாக வேண்டும். இதை எப்படி ஈடுகட்டப் போகிறார்கள் என்று தெரியவில்லை.

வாகனத்தை நிறுத்திவைத்திருப்பதால் எந்தப் பயனும் இல்லை. பணச் சுழற்சி இல்லாமல் போவதால், பெருத்த நஷ்டத்தை சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ஊழியர்களிடமிருந்து பிடித்த எல்.ஐ.சி-க்கான பணம், சொசைட்டிக்குக் கொடுத்த பணம் என 300 கோடி ரூபாயை போக்குவரத்துக் கழகம் இன்னும் தரவில்லை. தொழிலாளர்களுக்கு நெட் சம்பளத்தை மட்டும் கொடுத்துவிட்டு, பிடித்தம் செய்ததற்குக் கணக்கும் காட்டிவிட்டார்கள். இவையெல்லாம் பெரும் பிரச்னையாக உருவெடுக்கப்போகின்றன" என்கின்றனர் போக்குவரத்துக் கழக அதிகாரிகள்.

Also Read: `வர்றதுக்கு முன்னாடி காப்பதுதான் நல்லது!’ - நெகிழவைக்கும் அரசுப் பேருந்து ஓட்டுநர் #FightCOVID19

திருத்தப்பட்ட இ-வாகனக் கொள்கை 2019!

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களை லாபகரமாக இயக்குவதற்கான வழிவகைகளைக் கண்டறிவதற்கு மாற்றாக, `இ - வாகனக் கொள்கை 2019' என்ற பெயரில் தனியார் வாகனங்களை வாடகைக்கு எடுத்து இயக்குவதற்கான முறையில், `மோட்டார் வாகனச் சட்ட விதிகள் 1989’ திருத்தப்பட்டுள்ளது. இந்தச் சட்டத் திருத்தத்தில் புதிதாக, `பிரிவு 288 ஏ’ என்பதைக் கூடுதலாகச் சேர்த்து ஜுலை 27-ம் தேதி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இதைப் பற்றிப் பேசும் அதிகாரிகள் சிலர், ``மோட்டார் வாகனச் சட்டப்படி, பெரும்பாலான வழித்தடங்கள் தேசியமயமாக்கப்பட்டவை. இந்த வழித்தடங்களில் தனியார் வாகனங்களை ஓட்டுவதற்கு பர்மிட் தேவை. யார் பெயரில் வாகனம் இருக்கிறதோ அவர்களுக்குத்தான் பர்மிட் கொடுக்கப்படும். அரசின் பர்மிட்டைத் தனியாருக்குக் கொடுப்பதற்கு வாய்ப்புகள் இல்லை. அதற்கான வழியைத் திறந்துவிடுவதற்குத்தான் சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்திருக்கிறார்கள். `எங்கள் ரூட்டில், எங்கள் பர்மிட்டில் வேறு வண்டிகளும் ஓடலாம்’ என்பதுதான் இதன் அர்த்தம். போக்குவரத்துக் கழகத்தை மறைமுகமாக தனியார்மயப்படுத்தும் வேலைகளை ஜரூராகத் தொடங்கிவிட்டனர்'' என ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.

Also Read: `ஒரு மாத சம்பளம்; பயணிகளுக்கு இலவச மாஸ்க்!’ - அசத்தும் தேனி அரசுப் பேருந்து நடத்துநர்

அரசுப் போக்குவரத்துக்கழகத்தின் மீதான குற்றச்சாட்டு குறித்து விளக்கமறிய அதன் நிர்வாக இயக்குநர் கணேசனைத் தொடர்பு கொண்டோம். நமது அழைப்பை அவர் ஏற்காததால், எஸ்.எம்.எஸ் அனுப்பினோம். அவரிடமிருந்து விளக்கம் கிடைக்கப்பெற்றால் உரிய பரிசீலனைக்குப் பின் அதையும் வெளியிடத் தயாராகவே இருக்கிறோம்.

இந்நிலையில் இந்த விவகாரம் குறித்துப் பேசும் அதிகாரிகள் சிலர், `` கொரோனா காலத்தில் வாகனத்தை இயக்கலாமா என்பது குறித்து அரசுதான் முடிவு செய்ய வேண்டும். இது அரசின் கொள்கை முடிவு. இதில் நாங்கள் கருத்துச் சொல்ல முடியாது. எங்களுக்கு எப்போது உத்தரவு வந்தாலும் மறுகணமே வாகனத்தை இயக்குவதற்குத் தயாராக இருக்கிறோம். தவிர, கடன் நெருக்கடி, இ-பஸ் பர்மிட் ஆகியவற்றைப் பற்றி நாங்கள் சொல்வதற்கு எதுவும் இல்லை" என்கின்றனர்.

`அரசின் வருவாய் குறைந்துபோனதால்தான் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன. அவற்றைவிடவும் பொதுப் போக்குவரத்தைத் திறந்துவிடுவதால் என்ன நஷ்டம் ஏற்பட்டுவிடப் போகிறது?’ என்ற குரல்களும் அடித்தட்டிலிருந்து ஒலித்துக்கொண்டிருக்கின்றன.



source https://www.vikatan.com/government-and-politics/politics/what-is-the-condition-of-tn-transport-corporation-in-lock-down-period-ground-report

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக