Ad

புதன், 26 ஆகஸ்ட், 2020

நடவு முதல் கவாத்து வரை... முருங்கை சாகுபடியில் மகசூல் எடுப்பது எப்படி?

முருங்கையை இயற்கை முறையில் சாகுபடி செய்து நல்ல மகசூலும் எடுத்து வருகிறர் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த இயற்கை விவசாயி அரவிந்தன். ஒரு ஏக்கர் நிலத்தில் முருங்கைச் சாகுபடி குறித்து அவர் கூறிய தகவல்கள் பாடமாக இங்கே...

``முருங்கைச் சாகுபடிக்குச் செம்மண் ஏற்றது. தனிப்பட்டம் எதுவுமில்லை என்றாலும் ஐப்பசி, கார்த்திகை போன்ற அதிக மழை பெய்யும் மாதங்களில் நடவு செய்யக் கூடாது. தேர்வு செய்த நிலத்தில், ஒரு வாரம் இடைவெளியில் இரண்டு முறை உழவு செய்ய வேண்டும். வரிசைக்கு வரிசை மற்றும் குச்சிக்குக் குச்சி 20 அடி இடைவெளியில், ஒரு அடி ஆழத்தில் குழிகள் எடுக்க வேண்டும். இந்தக் கணக்கில் ஒரு ஏக்கரில் 100 குழிகள்வரை எடுக்கலாம். குழிகளை 4 நாள்கள் ஆறவிட்டு, குச்சிகளை அரை அடி ஆழத்தில் நடவு செய்ய வேண்டும்.

குழிக்குள் 100 கிராம் வேப்பம் பிண்ணாக்கு போட்டால் வேர்ப்பகுதியைப் பூச்சிகள் தாக்காமல் தடுக்கலாம். குச்சியை நட்டுவிட்டு மண் அணைத்து அன்றே தண்ணீர் விட வேண்டும். நடவு செய்யப்படும் குச்சிகள், கை மணிக்கட்டு தடிமன் சுற்றளவில், இரண்டரை அடி உயரத்தில் இருக்க வேண்டும். அவ்வாறு இருந்தால்தான் வளர்ச்சி வேகமாக இருக்கும். அதிக காய்ப்பு, காய்கள் திரட்சியின் அடிப்படையில் தாய் மரத்தைத் தேர்வு செய்து குச்சிகளைச் சேகரித்துக்கொள்ள வேண்டும். தேவைப்பட்டால், நடவுக்கு முன்பு குச்சியின் ஒரு முனையை ஜீவாமிர்தத்தில் முக்கி எடுத்து நடலாம்.

அரவிந்தன்

குச்சிகளில் முளைத்த இலைகளில் இலைப்புழுக்களின் தாக்குதல் இருக்கும். இதைத்தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 10-ம் நாளில் 10 லிட்டர் தண்ணீரில் இஞ்சி, பூண்டு, மிளகாய்க்கரைசல் 150 மி.லி கலந்து கைத்தெளிப்பானால் தெளிக்க வேண்டும். ஒருவாரம் இடைவெளியில் மூன்று முறை இப்படித் தெளிக்க வேண்டும். 20-ம் நாளிலிருந்து 15 நாள்களுக்கு ஒருமுறை ஏக்கருக்கு 200 லிட்டர் ஜீவாமிர்தத்தைச் சொட்டு நீர் மூலம் கொடுக்கலாம்.

3-ம் மாதத்தில் தூர்ப்பகுதியில் 10 கிலோ மட்கிய தொழுவுரத்தை அடியுரமாக வைக்க வேண்டும். தொடர்ந்து 6 மாதத்திற்கு ஒரு முறை இப்படி வைக்க வேண்டும். 90-ம் நாளுக்கு மேல் பூப்பூக்கத் தொடங்கும். 120 முதல் 130-ம் நாளில் காய் பறிக்கலாம். முருங்கையைப் பொறுத்தவரையில், பூப்பூக்கும் நேரம், மழைக்காலம், மேகமூட்டம் ஆகிய காலத்தில் நூற்புழுக்களின் தாக்குதல் இருக்கும்.

இவை, இலை, பூ, காம்புகளைச் சாப்பிடும். இவற்றைத் தவிர்க்கப் பூப்பூப்பதற்கு முன்பாகவே 10 லிட்டர் தண்ணீரில் 150 மி.லி மூலிகைப் பூச்சிவிரட்டி அல்லது இஞ்சி, பூண்டு, மிளகாய்க்கரைசலைக் கலந்து கைத்தெளிப்பானால் தெளிக்கலாம். இரண்டாம் வருடத்திலிருந்துதான் காய்ப்பு அதிகரிக்கும். ஆண்டிற்கு 8 மாதங்கள்வரை காய்கள் பறிக்கலாம். அதிகமாக மழை பெய்யும் நேரத்தில் காய்ப்பு இருக்காது. 3 மாதங்களுக்கு ஒருமுறை களை எடுக்க வேண்டும். ஆண்டுக்கு ஒரு முறை கவாத்துச் செய்து வந்தால் தொடர்ந்து காய்ப்பு இருக்கும்.

அதிக மகசூலுக்குக் கவாத்து அவசியம்!

ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் கவாத்து செய்தால் நல்லது. ஆண்டிற்கு ஒருமுறை கவாத்துச் செய்வது அவசியம். குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுக்கு ஒருமுறையாவது கவாத்துச் செய்ய வேண்டும். இதனால், காய்ப்புத் தன்மை அதிகரிப்பதுடன், காய்களின் தரமும் குறையாமல் இருக்கும். மரங்களின் பராமரிப்பையும் காய்கள் பறிப்பையும் எளிதாக்கும் விதமாக அடர்த்தியாகவும், உயரமாகவும் வளர்வதைத் தடுக்கலாம்.

கவாத்துச் செய்யும்போது மரத்தின் நான்கு புறக்கிளைகளையும் வெட்டிவிட வேண்டும். தூர்ப்பகுதியில் வெட்டும்போது தூர்ப்பகுதி இரண்டாகப் பிளவுபட்டுவிடாமல் வெட்ட வேண்டும். அவ்வாறு பிளவுபட்டால், பிளவுப்பகுதியில் பூச்சித்தாக்குதல் ஏற்படும். எனவே, கவாத்துச் செய்வதில் அதிக கவனம் தேவை.

> அதிக மகசூல் மற்றும் மழைக்காலத்திலும் மங்காத பச்சைநிறம் உடைய இரண்டு முருங்கை ரகங்களின் மகரந்தங்களை இணைத்துப் புது ரக முருங்கையை உருவாக்கி இருக்கிறார் விவசாயி அரவிந்தன்.

அவரது வெற்றிக் கதையும் அனுபவப் பகிர்வும் பசுமை விகடன் இதழில் முழுமையாக இங்கே > 3.5 ஏக்கர், ஆண்டுக்கு ரூ. 7 லட்சம்! - பெரிய வருமானம் தரும் பெயரில்லா முருங்கை! கட்டுரையை முழுமையாக படிக்க க்ளிக் செய்க - https://bit.ly/2Eo52oi

அறுவடை செய்த முருங்கைக் காய்களுடன் அரவிந்தன்

சிறப்புச் சலுகைகள்:

> ஆனந்த விகடன் தொடங்கி பசுமை விகடன் வரை விகடன் இதழ்கள் அனைத்தையும் டிஜிட்டலில் சுடச்சுட வாசித்து பயன்பெறுவதுடன், 15 ஆண்டு கால பொக்கிஷங்களிலும் வலம்வர... ரூ.1499 மதிப்பிலான 1 வருட டிஜிட்டல் சந்தாவை ரூ.999-க்குப் பெற இங்கே க்ளிக் செய்க > https://bit.ly/3h3Rdth

> விகடன் App-ஐ டவுன்லோடு செய்து ரெஜிஸ்டர் செய்தால், ரூ.149 மதிப்புள்ள ஒரு மாத Vikatan Digital Pack-ஐ முற்றிலும் இலவசமாகப் பெறலாம். விகடன் ஆப் டவுன்லோடு செய்து, இந்தச் சலுகையைப் பெற https://bit.ly/2VRp3JV

Pasumai Youtube Channel

இதுபோன்ற விவசாயம் தொடர்பான செய்திகள் மற்றும் பயனுள்ள வீடியோக்களைக் காண பசுமை விகடன் யூ-டியூப் சேனலுக்கு வாங்க. பசுமை விகடன் சேனலை சப்ஸ்கிரைப் செய்ய: bit.ly/pasumaiYoutube



source https://www.vikatan.com/news/agriculture/tips-to-increase-yield-in-organic-drumstick-cultivation

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக