Ad

வியாழன், 20 ஆகஸ்ட், 2020

சிவகங்கை: `விவசாயம் செய்ய வந்தோம்; இப்ப தட்டி பின்றோம்!’ - வேதனை பகிரும் பெண்கள்

சிவகங்கையில் இருந்து மேலூர் செல்லும் சாலையில் உள்ளது கூட்டுறவுபட்டி. இங்கு 10-க்கும் மேற்பட்ட பெண்கள் தங்களின் வீட்டிற்கு எதிரே உள்ள மர நிழலில் தென்னங் கீற்றுகள் மூலம் தட்டி பின்னும் காட்சி நம்மை ஈர்த்தது. உடனே வாகனத்தை நிறுத்தி கவனித்தோம்.

தட்டி பின்னும் பெண்கள்

கூந்தலில் எண்ணெய் வைத்து ஜடை பின்னுவது போல், தட்டிக்கு தண்ணீர் தெளித்து ஒவ்வொரு கீற்றாய் பின்னி ஒழுங்குபடித்தினர். இரண்டு கைகளையும் வைத்து ஈர கீற்றுகளை இழுப்பு சத்தத்துடன் பின்னி முடித்தனர். பின்னி முடித்த தட்டிகளை புளியமரத்தில் பக்குவமாய் சாய்த்து வைத்தனர்.

முதுகு வலியால், இளைப்பாற கட்டிலில் அமர்ந்திருந்த பொன்னம்மாள் பாட்டி, ``எங்களுக்கு சொந்த ஊர் தேனி, சின்னமனூர் பக்கம். வெவசாயம் செய்ய சம்சாரிகளா இங்க வந்தோம். மூணு பங்கா பிரிச்சு காட்ட உழுது பயிரு, பச்ச போடுவோம். ரெம்ப வருசமா வெவசாயம் தான் செஞ்சோம். காதுல, கழுத்துல கிடக்கிறது கூட அடகு வச்சு பச்சையா மாத்தினோம்.

தட்டி

அப்டியே நிலைம போகப், போக.., தண்ணி பத்தாம விளைச்சல் இல்ல. மழை, தண்ணியும் கூடுமானதா இல்ல. அதனால தென்ன மட்ட எடுத்து வந்து தட்டி பின்ன ஆரம்பிச்சோம். 20 வருசமா தட்டி தான் பின்னுறோம். பெரிய அளவு வெவசாயம் இல்ல.

எதோ கைல கிடைக்கிறத போட்டு எடுக்கிறோம். நாங்க மட்டுமில்லாம எங்க மக, மயேன், பேரன், பேத்தினு எல்லாரும் தட்டிதே பின்றோம். மானாமதுரை, மதகுபட்டி, கீழப்பூங்குடி, முத்துப்பட்டி சிங்கம்புணாரினு.. இப்புடி எல்லா பக்கமும் இருந்து தட்டி எடுத்தாருவோம். ஒரு தட்டி 100 ரூவா, 150 ரூவானு சைசுக்கு தக்கன விப்போம். ஒரு தட்டிக்கு வெட்டுக் கூலி 10 ரூவா போய்ரும். மொத்தமா லாரில தட்டி எடுத்தார ஆயர்ரூவா வரைக்கும் கொடுப்போம்.

பொன்னம்மாள் பாட்டி

இப்ப கொரோனா நேரத்துல பெருசா தட்டி வியாபாரமும் இல்லாம போயிருச்சு. முன்னாடியெல்லாம் கோயில் கும்பாபிஷேகத்துக்கு நிறையா விக்கும். ஆனா இப்ப துணி மாதிரி வாங்கி கட்டிக்கிறாங்க. தை பொங்களுக்கு நிறைய தட்டி போகும். பழைய தட்டிய கிழிச்சு போட்டுட்டு புது தட்டி கட்டுவாங்க.

இந்த வருசம் பொங்க கொண்டாடுவாங்களானே தெரியல. இந்த தட்டி வியாபாரம் தான் எங்களுக்கு. பாவப்பட்டு அரசு நிவாரணம் வழங்கனும். தட்டி எடுத்து மொத்தமாக விற்க கடன் உதவி செய்யனும். கண்டிப்பா அந்த பணத்த சீக்கரத்துலையே கட்டிருவோம்" என்றார் நம்பிக்கையாக.

தட்டி பின்னும் பெண்கள்

விவசாய பிழைப்பு தேடி சின்னமன்னூரில் இருந்து கூட்டுறவு பட்டிக்கு வந்த 10க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வறட்சியால் விவசாயம் செய்ய முடியாமல் தவிக்கின்றனர். தெரிந்த தட்டி செய்யும் தொழிலை வைத்து வாழ்க்கை நடத்துகின்றனர். மொத்தமாக தென்னங்கீற்று எடுக்க இவர்களுக்கு அரசு கடன் உதவி தேவைப்படுகிறது. இவர்களுக்கு அரசு உதவி செய்து ஊக்கப்படுத்தவேண்டும் என்பதே இந்த குடும்பத்தினரின் கோரிக்கை!



source https://www.vikatan.com/news/agriculture/sivaganga-women-who-came-for-agriculture-but-today-they-are-doing-other-job

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக