நாடு முழுவதும் உள்ள பல்வேறு விமான நிலையங்களை தனியார் ஒத்துழைப்புடன் மேம்படுத்த இருப்பதாக மத்திய அரசு அறிவித்தது. இந்தத் திட்டத்தின்கீழ் முதற்கட்டமாக ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர், அஸ்ஸாம் மாநிலம் கௌகாத்தி மற்றும் கேரளாவின் திருவனந்தபுரம் விமான நிலையங்களை தனியார் ஒத்துழைப்புடன் மேம்படுத்தும் திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் வழங்கியது. அதன்படி, இந்த விமான நிலையங்களை நிர்வகிக்கும் பொறுப்பு அதானி குழுமத்திடம் ஒப்படைக்கப்படும் என்று தெரிகிறது.
திருவனந்தபுரம் தவிர்த்து லக்னோ, அகமதாபாத், ஜெய்ப்பூர், மங்களூரு, மற்றும் கௌகாத்தி விமான நிலையங்களைப் பராமரிக்கும் பொறுப்பையும் அதானி குழுமம் பெற்றிருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. விமான நிலையங்களைத் தனியாரிடம் ஒப்படைக்கும் மத்திய அரசின் இந்த முடிவுக்கு பரவலாக எதிர்ப்புக் குரலும் எழுந்திருக்கிறது.
இந்தநிலையில், திருவனந்தபுரம் விமான நிலையத்தை நிர்வகிக்கும் பொறுப்பை அதானி குழுமத்திடம் ஒப்படைப்பது கடினமானது என்றும் மத்திய அரசின் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் எனவும் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் வலியுறுத்தியிருக்கிறார். இதுதொடர்பாக அவர் பிரதமர் மோடிக்குக் கடிதம் ஒன்றையும் எழுதியிருக்கிறார்.
கடிதத்தில் என்ன இருக்கிறது?
Also Read: கேரளா: `நான் அவசியத்துக்கு மட்டும் சிரிக்கும் ஆளாக்கும்!’ - மனம் திறந்த முதல்வர் பினராயி விஜயன்
``மாநில அரசோடு கலந்தாலோசிக்காமல் மத்திய அரசு எடுத்துள்ள இந்த முடிவுக்கு ஒத்துழைப்புக் கொடுப்பது கடினம். இது கேரள மக்களின் விருப்பத்துக்கு எதிரான முடிவு. இதனால், இந்த விவகாரத்தில் நீங்கள் (பிரதமர் மோடி), நேரடியாகத் தலையிட்டு, முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்’’ என்று பினராயி விஜயன் தெரிவித்திருக்கிறார்.
திருவனந்தபுரம் ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் விமான நிலையத்தின் வளர்ச்சிப் பணிக்காக கேரள அரசு அமைத்துள்ள சிறப்புக் குழுவின் (SPV) பணியைக் குறிப்பிட்டுள்ள அவர், இதுதொடர்பாக மாநில அரசு முன்வைத்த தொடர்ச்சியான கோரிக்கைகளுக்கு மத்திய அரசு செவிசாய்க்கவில்லை என்றும் குறிப்பிட்டிருக்கிறார். அதேபோல், கடந்த 2003ம் ஆண்டு விமானநிலைய தனியார்மயமாக்கல் குறித்த பேச்சு எழுந்தபோது, மாநில அரசின் கருத்துகள் கேட்கப்பட்ட பின்னரே முடிவெடுக்கப்படும் என மத்திய அரசு கொடுத்த உறுதிமொழியையும் நினைவுபடுத்துவதாக பினராயி விஜயன், தனது கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.
திருவனந்தபுரம் விமான நிலைய வளர்ச்சிப் பணியின் ஒருபகுதியாக சர்வதேச முனையம் அமைக்க, மாநில அரசு 23.57 ஏக்கர் நிலத்தை இலவசமாக ஒதுக்கி இருந்ததையும் பினராயி விஜயன் சுட்டிக்காட்டியிருக்கிறார்.
இதனால், தனியார் ஒத்துழைப்புத் திட்டத்தின் கீழ் திருவனந்தபுரம் விமான நிலையத்தைக் கொண்டுவருவதை மத்திய அரசு கைவிட வேண்டும் எனவும் கேரள முதலமைச்சர் பிரதமரிடம் கோரிக்கை வைத்திருக்கிறார்.
source https://www.vikatan.com/news/india/difficult-to-co-operate-says-kerala-cm-pinarayi-vijayan-over-thiruvanthapuram-airport-issue
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக