Ad

புதன், 31 மார்ச், 2021

ஜாஷ் ஹேசில்வுட் விலகல்... சென்னை சூப்பர் கிங்ஸ் புதிதாக யாரை வாங்கலாம்? #IPL

2021 ஐபிஎல் தொடரிலிருந்து விலகியிருக்கிறார் சென்னை சூப்பர் கிங்ஸ் வேகப்பந்துவீச்சாளர் ஜாஷ் ஹேசில்வுட். தொடர்ந்து பயோபபிள்களில் இருந்து வருவதால் ஓய்வு எடுப்பதற்காக இந்த முடிவை எடுத்திருக்கிறார் அவர். ஒரு முக்கியமான வீரரை இழந்திருக்கும் சூப்பர் கிங்ஸ் அவருக்குப் பதில் யாரை அணியில் சேர்க்கலாம்… அலசுவோம்.

கடந்த ஆண்டு நடந்த ஏலத்தில் சூப்பர் கிங்ஸால் அடிப்படை விலையான 2 கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்டார் ஹேசில்வுட். மொத்தம் 3 போட்டிகளில் மட்டுமே ஆடியவர், 1 விக்கெட் மட்டுமே வீழ்த்தினார். இந்நிலையில் இன்று ஆஸ்திரேலிய வீரர்களுடன் அவரும் இந்தியாவுக்கு வந்து ஐபிஎல் அணியோடு இணைவதாக இருந்தது. அப்படியிருக்கையில் இந்த முடிவை அறிவித்திருக்கிறார் அவர்.

கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் தொடர்ந்து குவாரன்டீன், பயோ பபிள் என்று இருந்துவருவதால், ஓய்வு வேண்டுமென்று கூறியிருக்கிறார் அவர். 2 மாதங்கள் வீட்டில் தங்கி குடும்பத்தோடு ஓய்வெடுக்கப்போவதாகச் சொல்லியிருக்கிறார். இந்தக் காலகட்டத்தில் ஆஸ்திரேலியாவில் நடக்கும் உள்ளூர் தொடரான ஷெஃபீல்ட் ஷீல்ட் இறுதிப் போட்டியிலும் கவனம் செலுத்த விரும்புகிறார் அவர்.

சரி, ஹேசில்வுட் விலகியிருக்கும் நிலையில் சென்னை அணி யாரை வாங்கலாம்?

கடந்த ஆண்டு ஏலத்தில் இடம்பெற்றபோது, ஹேசில்வுட்டின் அடிப்படை விலை 2 கோடி ரூபாயாக இருந்ததால் சென்னை அணி யாரை வேண்டுமேனாலும் அவருக்குப் பதில் ஒப்பந்தம் செய்யலாம். ஆனால், அவர் இந்த ஆண்டுக்கான ஏலத்துக்கு ஒப்பந்தம் செய்தவராக இருக்கவேண்டும். அவ்வளவுதான்.

Josh Hazlewood

சென்னை அணியைப் பொறுத்தவரை ஒரு வேகப்பந்துவீச்சாளரைத்தான் வாங்கவேண்டும் என்பதில்லை. அவர்களால் எல்லா காம்பினேஷன்களிலும் இந்திய வீரர்களை களமிறக்க முடியும் என்பதால், வெளிநாட்டு வீரர்களையும் அதற்கு ஏற்றதுபோல் வாங்கலாம். ஏற்கெனவே பிராவோ, சாம் கரண், எங்கிடி என 3 வேகப்பந்துவீச்சாளர்கள் இருப்பதால், தாஹிருக்கு பேக் அப் வீரர் வாங்கலாம். இல்லை டுப்ளெஸ்ஸிக்கு பேக் அப் ஆக ஒரு ஓப்பனரைக்கூட வாங்கலாம். இப்படி நிறைய ஆப்ஷன்கள் இருப்பதால், ஒவ்வொரு பொசிஷனிலும் இருக்கும் சில வீரர்களைப் பற்றிப் பார்த்துவிடுவோம்.

வேகப்பந்துவீச்சாளர்கள் - பெரண்டார்ஃப் / வில்லியான்

ஹேசில்வுட்டுக்குப் பதில் ஒரு வேகப்பந்துவீச்சாளரையே வாங்கவேண்டுமெனில், சென்னைக்கு நிறைய ஆப்ஷன்கள் இருக்கிறது. ஐபிஎல் அனுபவம் கொண்ட பல பௌலர்கள் இந்த ஏலத்தில் விலை போகவில்லை. ஷெல்டன் காட்ரல், பில்லி ஸ்டேன்லேக், ஜேசன் பெரண்டார்ஃப், ஹார்ட்டஸ் விலியான், இசுரு உடானா, ஷான் அபாட், ஒஷேன் தாமஸ், ஸ்காட் குகுலீன் என ஒரு பெரும் படையே இருக்கிறது. ரீஸ் டாப்ளி, ஜெரால்ட் கோட்ஸி போன்று ஐபிஎல் அனுபவம் இல்லாதவர்களும் இருக்கிறார்கள். ஆனால், அதில் யார் சூப்பர் கிங்ஸுக்கு நல்ல ஆப்ஷனாக இருப்பார்கள் என்று பார்த்தால் - பெரண்டார்ஃப், ஸ்டேன்லேக் இருவரையும் சொல்லலாம்.

Jason Behrendorff

ஜேசன் பெரண்டார்ஃப் ஏற்கெனவே மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஆடியிருக்கிறார். ஹேசில்வுட்டை (6 அடி 5 அங்குலம்) போல் இவரும் உயரமான (6 அடி 4 அங்குலம்) வீரர். பௌன்சர்கள் வீசுவதில் கில்லாடி. இந்தியாவில் டி20 போட்டிகள் விளையாடிய அனுபவம் ஓரளவு கொண்டவர். இந்த பிக்பேஷ் சீசனில் 16 போட்டிகளில் 16 விக்கெட்டுகள் வீழ்த்தியிருக்கிறார். இவர் நல்ல ஆப்ஷனாக இருப்பார். ஒருவேளை இவர் இடது கை வேகப்பந்துவீச்சாளர் என்று கருதினால், ஸ்டான்லேக் நல்ல ஆப்ஷன். அதேசமயம், கடந்த ஆண்டு கிங்ஸ் லெவன் பஞ்சாப் (இப்போது பஞ்சாப் கிங்ஸ்) அணிக்கு ஆடிய ஹார்டஸ் விலியான், இந்த ஆண்டு சூப்பர் கிங்ஸ் அணியின் நெட் பௌலராக இருக்கிறார். அதனால், அவரையேகூட சென்னை ஒப்பந்தம் செய்வதற்கு வாய்ப்புகள் நிறைய இருக்கிறது.

ஸ்பின்னர்கள் - ஆதில் ரஷீத் / கிறிஸ் கிரீன்

பியூஷ் சாவ்லாவைக் கழட்டிவிட்டுருப்பதால் இந்த சீசன் தாஹிர் எப்படியும் ஆடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒருவேளை பராசக்தி எக்ஸ்பிரஸிடம் முந்தைய வேகம் இல்லையெனில், அவருக்குப் பதில் ஒரு நல்ல லெக் ஸ்பின் ஆப்ஷனாக ஆதில் ரஷீத் இருப்பார். இந்திய அணிக்கெதிரான ஒருநாள், டி20 தொடர்களில் சிறப்பாகச் செயல்பட்டார். கோலியை பல போட்டிகளில் தடுமாறவைத்தார். பவர்ப்ளேவிலும் பந்துவீசக்கூடியவர் என்பது கூடுதல் பலம்.

Adil Rashid

லெக் ஸ்பின் ஆப்ஷன் வேண்டாம், ஆஃப் ஸ்பின்னருக்குப் போகலாம் என்று நினைத்தால் கிறிஸ் கிரீனை வாங்கலாம். ஆஃப் ஸ்பின்னர் வேண்டும் என்பதற்காகத்தான் மொயின் அலியை போட்டி போட்டு வாங்கினார்கள். கிரீன் அவருக்கு பேக் அப் வீரராக இருப்பார். அவரைப் போல் பேட்டிங் செய்யக்கூடியவர் இல்லைதான். ஆனால், தீபக் சஹார், ஷர்துல் தாக்கூர் வரை பேட்டிங் செய்வார்கள் என்பதால், அவர்கள் அளவுக்கு இவரும் பேட்டிங் செய்யக்கூடியவர் என்பதாலும், கிரீன் நல்ல ஆப்ஷனாக இருப்பார்.

ஓப்பனர்கள் - அலெக்ஸ் ஹேல்ஸ் / ஈவின் லூயிஸ்

கடந்த சீசனில் சிறப்பாகச் செயல்பட்ட ருத்துராஜ் கெய்க்வாட் இந்த சீசனில் ஒரு ஓப்பனர் ஸ்லாட்டை தனதாக்கிவிடுவார். அவரோடு டுப்ளெஸ்ஸி ஆடுவாரா, நல்ல ஃபார்மில் இருக்கும் உத்தப்பா ஆடுவாரா என்று கேள்வி இருக்கிறது. ஒருவேளை ஃபாஃப் தான் முதல் சாய்ஸ் ஓப்பனர் என்றால், அவருக்கு ஒரு பேக் அப் வைத்துக்கொள்வது நல்லது. ஃபின்ச், குப்தில் என நிறைய வீரர்கள் இருந்தாலும், அந்த இடத்துக்கு அலெக்ஸ் ஹேல்ஸ் நல்ல ஆப்ஷனாக இருப்பார். ஜேசன் ராயை வாங்கியிருக்கலாம். ஆனால், சன்ரைசர்ஸ் முந்திக்கொண்டுவிட்டது. இந்த பிக்பேஷ் சீசனில் 161.6 என்ற ஸ்டிரைக் ரேட்டில் 543 ரன்கள் குவித்திருக்கும் ஹேல்ஸ் நிச்சயம் நல்ல பேக் அப் வீரராக இருப்பார். ஒருவேளை ஃபாஃபை ஓவர்டேக் செய்து இவரேகூட ஓப்பனிங் இறங்கலாம்.

Alex Hales

ருத்துராஜ், ஜெகதீசன், உத்தப்பா, ஃபாஃப் என எல்லோரும் வலது கை பேட்ஸ்மேன்களாக இருப்பதால், ஈவின் லூயிஸ் ஒரு நல்ல மாற்றாக இருப்பார். டுவைன் ஸ்மித், டுவைன் பிராவோ என மும்பை இந்தியன்ஸில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் சென்னையின் சூப்பர் ஸ்டார்களாக விளங்கியிருக்கிறார்கள். அந்த வகையில் லூயிஸையும் நம்பலாம். இலங்கைக்கு எதிரான சமீபத்திய ஒருநாள் தொடரில் அடுத்தடுத்த அரைசதம், சதம் என்று அடித்து நல்ல ஃபார்மில் இருக்கிறார் லூயிஸ்.

மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் - மார்னஸ் லாபுஷேன் / டெவான் கான்வே

ரெய்னா, ராயுடு, தோனி என பல வீரர்கள் இருப்பதால் மிடில் ஆர்டரில் பெரிய தேவை இருக்காது. ஆனால், சில சமயங்களில் சிஎஸ்கே என்ன பிளானில் வீரர்களை வாங்குகிறது, வைத்திருக்கிறது என்பதே புரியாத புதிராக இருக்கிறது. உதாரணம் - மிட்செல் சேன்ட்னர்! அதனால், இந்த ஏரியாவிலும் இரண்டு நல்ல ஆப்ஷன்களைப் பார்ப்போம். அதுமட்டுமல்லாமல், இந்த இரண்டு வீரர்களையும் ஓப்பனர்களாகக்கூட இறக்கிவிடலாம்.

Marnus Labuschagne

முதல் வீரர் - குட்டி ஸ்டீவ் ஸ்மித் லாபுஷேன். டெஸ்ட் மட்டுமல்லாது, அனைத்து ஃபார்மேட்களிலும் தன் திறமையை நிரூபித்துக்கொண்டிருக்கிறார். இந்த பிக்பேஷ் சீசனில் 6 போட்டிகளில் 10 விக்கெட்டுகள் வீழ்த்தி பந்துவீச்சிலும் அசத்தினார். அதனால், ஆல்ரவுண்டர் ஸ்லாட்டையும் இவரால் நிரப்ப முடியும். அடுத்தது, இப்போது முரட்டு ஃபார்மில் இருக்கும் டெவான் கான்வே. நியூசிலாந்தைச் சேர்ந்த இந்த இடதுகை பேட்ஸ்மேன் கடந்த ஆண்டு சென்னை மிஸ் செய்த முரட்டு ஹிட்டர் வகையறா. மொயின் அலி செட் ஆகவில்லையெனில், மிடில் ஆர்டரில் ஹிட்டராக இவரைப் பயன்படுத்தலாம்.



source https://sports.vikatan.com/ipl/who-could-replace-josh-hazlewood-in-csk-squad

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக