Ad

வியாழன், 20 ஆகஸ்ட், 2020

சென்னை: `தங்கையின் காதல், தொழில் போட்டி; சுதந்திர தின சம்பவம்!' - பழிக்குப் பழியாக ரவுடி கொலை

சென்னை வியாசர்பாடி சத்தியமூர்த்தி நகர் 12-வது பிளாக்கைச் சேர்ந்தவர் காளிதாஸ் இவரின் மகன் விஜயதாஸ் (36). இவரின் மனைவி ரேஷ்மா. இந்தத் தம்பதியினருக்கு 2 குழந்தைகள் உள்ளனர். விஜயதாஸ், நேற்றிரவு 10 மணியளவில் வியாசர்பாடி சத்தியமூர்த்தி நகர் மெயின் ரோடு, அசோக் பில்லர் அருகே சென்றார். அப்போது அவரை வழிமறித்த மர்ம கும்பல், விஜயதாஸை சரமாரியாக வெட்டிவிட்டு மின்னல் வேகத்தில் தப்பியது. சம்பவ இடத்திலேயே விஜயதாஸ் ரத்தவெள்ளத்தில் உயிருக்குப்போராடிக் கொண்டிருந்தார்.

சடலமாக விஜயதாஸ்

இதுகுறித்து தகவலறிந்ததும் விஜயதாஸின் சகோதரர், சம்பவ இடத்துக்கு வந்து அவரை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்தத் தகவல் வியாசர்பாடி காவல் நிலையத்துக்குத் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக உதவி கமிஷனர் அரிக்குமார் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் தியாகராஜன் மற்றும் போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்றனர். பின்னர், விஜயதாஸின் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். கொலை நடந்த இடத்தில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராப் பதிவுகளை போலீஸார் ஆய்வு செய்தபோது கொலையாளிகள் குறித்த தகவல்கள் கிடைத்தன. இந்தக் கொலை தொடர்பாக வியாசர்பாடி போலீஸார் மூன்று பேரிடம் விசாரித்து வருகின்றனர். விசாரணை முடிவில் விஜயதாஸ் கொலைக்கான காரணம் தெரியவரும் என போலீஸார் தெரிவித்தனர்.

யார் இந்த விஜயதாஸ்?

விஜயதாஸ் மீது வியாசர்பாடி காவல் நிலையத்தில் வழக்குகள் நிலுவையில் உள்ளன. மேலும் இவர், சரித்திரப் பதிவேடு குற்றவாளி. இவர் மீது 2 கொலை வழக்குகள் உள்பட 5 வழக்குகள் உள்ளன. சென்னையைக் கலக்கிய பிரபல ரவுடி ஒருவரின் கூட்டாளியான விஜயதாஸ், கடந்த ஆண்டு சுதந்திரத் தினத்தன்று தன்னுடைய தங்கையின் காதல் கணவரை வெட்டிக் கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டார். அந்த வழக்கில் சிறைக்குச் சென்ற விஜயதாஸ் மீது குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதனால் சிறையிலிருந்து சமீபத்தில்தான் விஜயதாஸ் வெளியில் வந்தார்.

விஜயதாஸ்

கடந்த ஆண்டு சுதந்திரதினத்தன்று தங்கையின் கணவரைக் கொலை செய்ததற்கு பழிக்குப்பழியாக விஜயதாஸ் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் போலீஸார் விசாரித்து வருகின்றனர். விஜயதாஸின் தங்கை கணவர் ஜெயக்குமார், கொலை செய்யப்பட்ட இடத்தின் அருகில்தான் தற்போது விஜயதாஸ் கொல்லப்பட்டுள்ளார். இது சந்தேகத்தை போலீஸாருக்கு ஊர்ஜிதப்படுத்தியுள்ளது. இதற்கிடையில் ரவுடி விஜயதாஸின் தரப்புக்கும் அவரின் எதிர்தரப்பான இன்னொரு ரவுடி கும்பலுக்கும் நீண்டகாலமாக முன்விரோதம் இருந்து வருகிறது. அதனால், சிறையிலிருந்து வந்த விஜயதாஸை ஸ்கெட்ச் போட்டு ஒரு கும்பல் கொலை செய்திருக்கலாம் என்ற கோணத்திலும் போலீஸார் விசாரித்துவருகின்றனர்.

தங்கைக்காக நடந்த கொலை - ப்ளாஷ்பேக்

விஜயதாஸின் சகோதரியின் கணவர், சென்னை வியாசர்பாடி கல்யான்புரத்தைச் சேர்ந்த ஜெயகுமார்(40). இவர், ஒப்பந்தப் பணிகளைச் செய்துவந்தார். 2019-ம் ஆண்டு ஆகஸ்ட் 15-ம் தேதி அசோக் நகர் பில்லர் அருகே நடந்து சென்றபோது ஜெயக்குமார் கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இந்தக் கொலை குறித்து போலீஸார் விசாரித்தபோது பல்வேறு தகவல்கள் வெளிவந்தன. ஜெயக்குமாரின் மனைவி கௌசல்யா. இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

Also Read: சென்னை : மருமகனுக்கு பதிலாக மாமனார் கொலை! - சிறைக்குச் சென்றதால் உயிர் தப்பிய ரௌடி

விஜயதாஸ்

கௌசல்யாவின் காதல் திருமணத்தை அவரின் குடும்பத்தினர் ஏற்றுக்கொள்ளவில்லை. அதனால், ஜெயக்குமாரைக் கொலை செய்ய கௌசல்யாவின் சகோதரர் விஜயதாஸ் திட்டமிட்டார். இதற்கிடையில் கௌசல்யாவுக்கும் ஜெயக்குமாருக்கும் கருத்துவேறுபாடு ஏறபட்டு இருவரும் பிரிந்தனர். தங்கையின் வாழ்க்கை கேள்விகுறியானது, ஒப்பந்தப்பணியில் ஜெயக்குமாருக்கும் விஜயதாஸிக்கும் இடையே மோதல் ஆகிய காரணங்களால் கூலிப்படை ஏவி ஜெயக்குமார் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் கைதான விஜயதாஸ் சமீபத்தில் வெளியில் வந்த நிலையில்தான் அவர் கொலை செய்யப்பட்டுள்ளார். அதனால் ஜெயக்குமார் கொலைக்கு பழிக்குப்பழிவாங்க விஜயதாஸ் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்திலும் போலீஸ் விசாரணை நடந்துவருகிறது.

ஜெயக்குமார் கொலை செய்யப்பட்ட சுதந்திர தினத்தன்றே விஜயதாஸை கொலை செய்ய ஒரு டீம் ஸ்கெட்ச் போட்டுள்ளது. ஆனால் சுதந்திர தினத்தில் கொலை செய்ய முடியாததால் நேற்றிரவு விஜயதாஸ் கொலை செய்யப்பட்ட தகவல் வியாசர்பாடி போலீஸாருக்கு கிடைத்துள்ளது.



source https://www.vikatan.com/news/crime/chennai-rowdy-murdered-near-ashok-pillar

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக