தி.மு.க-வின் கோட்டையெனச் சொல்லப்படும் திருப்பத்தூர் நகரின் மாயப்பிம்பத்தை அக்கட்சி நிர்வாகிகளே தகர்த்துவருகிறார்கள். அந்த அளவுக்குச் சர்ச்சையும் சங்கடமும் நகர தி.மு.க-வை வட்டமிடுகிறது. உட்கட்சி பூசலால் தி.மு.க தடுமாறுவதற்குக் காரணமே, நகரச் செயலாளராக உள்ள எஸ்.ஆர் என்கிற ராஜேந்திரன்தான் என்று கைகாட்டுகிறார்கள் முன்னணி நிர்வாகிகள். ``மற்ற அணிகளின் நிர்வாகிகளை அரவணைப்பதில்லை. மிரட்டும் தொனியில் செயல்படுகிறார். தி.மு.க-வின் மூத்த தலைவரும் பொருளாளராகவும் உள்ள துரைமுருகனை எதிர்ப்பதையே ராஜேந்திரன் முழுநேரப் பணியாக செய்துவருகிறார். துரைமுருகன் சொன்னால், நான் கேட்கணுமா எனத் திமிராகப் பேசுகிறார்’’ என்று அடுக்கடுக்கான புகார்களையும் அறிவாலயத்தில் வாசித்துள்ளனர் அந்த முன்னணி நிர்வாகிகள்.
நம்மிடம் பேசிய திருப்பத்தூர் தி.மு.க புள்ளிகள் சிலர், ``ராஜேந்திரன் தொடர்ந்து 20 ஆண்டுகளாக நகரச் செயலாளர் பொறுப்பில் இருந்துவருகிறார். ராஜேந்திரனின் மிரட்டல்களால் வேறு யாரும் நகரச் செயலாளர் பதவிக்குப் போட்டியிடுவதில்லை. இந்த நிலையில், வேலூர் மேற்கு மாவட்ட (திருப்பத்தூர் மாவட்டம்) மாணவரணி அமைப்பாளரான டி.கே.மோகன் என்பவரின் தலைமையில் புது டீம் உருவானது. இதனால், கடுப்பான ராஜேந்திரன் திருப்பத்தூர் நகரில் மோகனின் செயல்பாடுகளுக்கு முட்டுக்கட்டை போட முயற்சித்துவருகிறார். அமைப்பு ரீதியாகக் கடந்த முறை நடைபெற்ற தேர்தலில் நகரச் செயலாளர் பொறுப்புக்கு மோகன் போட்டியிட்டார். அப்போதும், ராணிப்பேட்டை எம்.எல்.ஏ காந்தியின் ஆசியால் ராஜேந்திரன் மீண்டும் நகரச் செயலாளர் பொறுப்புக்கு வந்துவிட்டார்.
அதைத்தொடர்ந்து, கடந்த சட்டமன்றத் தேர்தலிலும், திருப்பத்தூர் தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்து தலைமையில் மனு கொடுத்தார் மாணவரணி அமைப்பாளர் மோகன். ராஜேந்திரனும் எம்.எல்.ஏ பதவிக்குக் குறி வைத்தார். இவர்களின் மோதலால், திருப்பத்தூர் ஒன்றிய செயலாளராக உள்ள நல்லதம்பிக்கு சீட் கொடுத்தது தலைமை. ஆத்திரமடைந்த ராஜேந்திரன், வேட்பாளராகக் களமிறக்கப்பட்ட நல்லதம்பியை திருப்பத்தூர் நகருக்குள் நுழையவிடாமல் தடுத்தார். தலைமை தலையிட்டதால், நல்லதம்பியிடம் இருந்து பெரும் தொகையை பெற்றுக் கொண்டு ஓட்டு சேகரிக்க நகருக்குள் அனுமதித்தார் ராஜேந்திரன். அப்போதும், மாணவரணி அமைப்பாளர் மோகன்தான் நல்லதம்பிக்கு ஆதரவாக வாக்கு சேகரித்து வெற்றிபெறுவதற்கும் உதவினார்.
நல்லதம்பி எம்.எல்.ஏ-வாக வெற்றிபெற்ற பின்னர், மாவட்டச் செயலாளர் தேவராஜி, மாணவரணி அமைப்பாளர் மோகன் ஆகியோர் திருப்பத்தூரில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவிக்கப் புடைசூழ வந்தனர். மாவட்டச் செயலாளர் காரை ராஜேந்திரன் ஆட்கள் அடித்து நொறுக்கினர். அந்த நேரத்தில் பெரிய மோதலும் வெடித்தது. பத்திரிகைகளிலும் செய்திகள் வெளியாகின. இந்த குரூப் பாலிடிக்ஸின் நீட்சிதான், இப்போதும் தொடர்கிறது. திருப்பத்தூர் நகரில் நல்லதம்பி எம்.எல்.ஏ-வை இதுவரை எந்த நிகழ்ச்சியையும் நடத்தவிட்டதே இல்லை. அந்த அளவுக்கு ராஜேந்திரனின் அட்டகாசம் தொடர்கிறது. இதனிடையே, மாவட்டச் செயலாளர் பொறுப்பிலிருந்து தேவராஜி விலக்கப்பட்டு மீண்டும் அப்பொறுப்பில் சமீபத்தில்தான் நியமிக்கப்பட்டார்.
Also Read: `தி.மு.க-வில் இளம் மகளிர் அணி!’ - ராஜினாமா கொந்தளிப்பில் கனிமொழி?
மரியாதை நிமித்தமாகத் திருப்பத்தூர் நகர நிர்வாகிகளை சந்திக்க வந்த மாவட்டச் செயலாளர் தேவராஜியின் கார் மீது மீண்டும் தாக்குதல் நடத்தியது ராஜேந்திரனின் தரப்பு. கட்டப்பஞ்சாயத்து, சிறுபான்மையினருக்கு எதிரான போக்கு என ராஜேந்திரன் மீது பல்வேறு சர்ச்சைகளும் சுழலுகின்றன. ஜூன் மாத தொடக்கத்தில், திருப்பத்தூர் கோட்டைத் தெருவைச் சேர்ந்த இஸ்லாமியப் பெண்ணை கிளினிக்கில் அடைத்து வைத்து கொடூரமாகத் தாக்கினர். இந்த சம்பவத்துக்கும் நகரச் செயலாளர் ராஜேந்திரன்தான் காரணம். இளம்பெண்ணைத் தாக்கும் வீடியோ காட்சிகளும் சமூக வலைத்தளங்களில் வைரலாகின. அதுமட்டுமின்றி, `திருப்பத்தூரில் கட்சிப் பணியை செய்யவிடாமல் நகரச் செயலாளர் ராஜேந்திரன் தடுக்கிறார்’ என்று குற்றம்சாட்டி வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளராக உள்ள ராஜாங்கம் என்ற நிர்வாகியும் அறிவாலயத்துக்குக் கடந்தமாதம் புகார் கடிதம் அனுப்பினார்.
இவ்வளவு சர்ச்சைக்குப் பின்னால் ஓடிக்கொண்டிருக்கும் நகரச் செயலாளர் ராஜேந்திரன் பதவி வெறியில் மாணவரணி அமைப்பாளர் மோகனை ஓரம்கட்ட கங்கணம் கட்டிக்கொண்டு சுற்றுகிறார். நகர நிர்வாகிகளைத் திரட்டி மோகன் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க தீர்மானமும் போட்டு தலைமைக்கு அந்த நகலை அனுப்பியிருக்கிறார். இவையெல்லாம் வரும் சட்டமன்றத் தேர்தலில் திருப்பத்தூர் தொகுதியில் நிச்சயமாக எதிரொலிக்கும். தி.மு.க-வுக்கு பின்னடைவாகக்கூட அமைந்துவிடும். 20 வருடமாக நகரச் செயலாளர் நாற்காலியை தேய்ததுபோதும். ராஜேந்திரனை பொறுப்பிலிருந்து எடுத்தால்மட்டுமே தி.மு.க-வின் கோட்டையாக திருப்பத்தூர் நீடிக்கும்’’ என்றனர் காட்டமாக.
புகார் குறித்து நகரச் செயலாளர் ராஜேந்திரனிடம் பேசினோம். ``மாணவரணி அமைப்பாளர் மோகன் வட்டித் தொழில் செய்கிறார். இதனால், கட்சிக்கு கெட்டப் பெயர் ஏற்படுகிறது. மோகன் மீது நடவடிக்கை எடுக்கச் சொல்லி தலைமையிடம் வலியுறுத்தியிருக்கிறோம். பொறுப்பிலிருந்து மோகனை எடுக்கவில்லையென்றால் எங்களை எடுத்துவிடட்டும். தவறு என்றால் தவறுதான்’’ என்றார்.
மாணவரணி அமைப்பாளர் மோகனிடம் இதுதொடர்பாக கேட்டபோது,``என்னை எதிர்ப்பதை மட்டுமே அரசியலாகச் செய்கிறார் நகரச் செயலாளர் ராஜேந்திரன். நான் அவரைக் குறை சொல்ல விரும்பவில்லை. யார் தவறானவர்கள் என்று இங்குள்ள அனைத்து நிர்வாகிகளுக்குமே தெரியும்’’ என்பதோடு முடித்துக் கொண்டார்.
source https://www.vikatan.com/news/politics/tirupattur-dmk-official-rajendren-works-only-for-posting-alleges-cadres
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக