Ad

சனி, 22 ஆகஸ்ட், 2020

நெல்லை: `வன விலங்கு வேட்டை; பழத்தில் வைத்த வெடி!’ - அதிர்ச்சியில் விவசாயிகள்

நெல்லை மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையில் மான், மிளா உள்ளிட்ட வன விலங்குகள் அதிகம் உள்ளன. இந்த விலங்குகளை வேட்டையாடும் கும்பல் காட்டுக்குச் சென்று தங்கியிருந்து வேட்டையில் ஈடுபட்டு வந்தார்கள்.

வ்ன விலங்குகள் வசிக்கும் மலைப்பகுதி

தற்போது வனத்துறையினரின் கெடுபிடி காரணமாகக் காட்டுக்குள் செல்ல முடியாத நிலையில் வேட்டையாடும் கும்பலைச் சேர்ந்தவர்கள் இருக்கிறார்கள். அதனால் தண்ணீர் தேடி வரும் விலங்குகளை யாருக்கும் தெரியாமல் வேட்டையாடி வருகிறார்கள்.

தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக மக்கள் நடமாட்டம் குறைவாக இருப்பதால் வன விலங்குகள் மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரம் வரை தாராளமாக வந்து செல்கின்றன. மான், மிளா, முயல் உள்ளிட்டவை மக்கள் வசிக்கும் பகுதிக்கு வந்து தண்ணீர் குடித்துச் செல்கின்றன.

Also Read: லாக்டௌன் நேரத்தில் அதிகரிக்கும் விலங்குகள் வேட்டை... சமூக வலைதளத்தில் பதிவேற்றும் அவலம்!

குடியிருப்பு பகுதிக்கு அருகில் வரக்கூடிய மான் உள்ளிட்ட விலங்குகளைக் குறிவைத்து சமூக விரோதிகள் வேட்டையில் ஈடுபட்டு வருகிறார்கள். நெல்லை மாவட்டம் பத்தமடை அருகேயுள்ள இடைஞ்சான் குளத்துக்கு வன விலங்குகள் தண்ணீர் தேடி வருகின்றன.

வன விலங்குகளை வேட்டையாடும் கும்பலிடம் இருந்து விலங்குகளைப் பாதுகாக்கும் வகையில் வேட்டைத் தடுப்புக் காவலர்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்த நிலையில், தண்ணீர் தேடி வன விலங்குகள் குளத்துக்கு வருவதைக் குறிவைக்கும் சமூக விரோதிகள், பழத்தில் வெடிமருத்து வைத்து விடுகிறார்கள்.

பழத்தில் வெடிவைத்துக் கொல்லப்பட்ட ஆடு

பத்தமடையைச் சேர்ந்த மாரியப்பன் என்பவரின் ஆடுகள் இன்று இடைஞ்சான் குளத்துக்கு தண்ணீர் குடிக்கச் சென்றன. அப்போது அங்கு கிடந்த பழத்தை ஒரு ஆடு கடித்தபோது அது வெடித்துச் சிதறியது. இதில் அதே இடத்திலேயே வாய் மற்றும் தலை சிதறி ஆடு உயிரிழந்தது. உடனடியாக அங்கிருந்த ஆடுகளை வேறு பகுதிக்குத் திருப்பிச் சென்றதால் அவை தப்பின.

உயிரிழந்த ஆடு, இரு தினங்களுக்கு முன்பு தான் குட்டிகளை ஈன்றது. அதனால் அதன் உரிமையாளர் மாரியப்பன் மிகுந்த சோகம் அடைந்து கதறி அழுதார். தினந்தோறும் 5,000 ஆடு, மாடுகள் வரக்கூடிய குளத்தின் அருகே வெடி வைக்கப்பட்ட பழம் கிடந்ததால் அப்பகுதி விவசாயிகள் கலக்கம் அடைந்துள்ளனர்.

ஆடுகள்

அதே பகுதியில் ஏற்கெனவே மிளா உயிரிழந்து, அதை இழுத்துச் சென்ற சுவடு இருப்பதாக அப்பகுதி விவசாயிகள் குற்றம் சாட்டுகிறார்கள். இது போன்று வன விலங்குகள் உயிரிழக்கக் காரணமாக இருக்கும் சமூக விரோதிகளைக் கைது செய்து தண்டனை கிடைக்கச் செய்ய வேண்டும் என்றும் விவசாயிகள் தெரிவித்தனர்.



source https://www.vikatan.com/news/general-news/hunters-kept-bomb-in-fruits-for-deer-that-killed-a-goat

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக