சென்னையைச் சேர்ந்த ஶ்ரீவத்சன், தனது கேமராவால் இந்தியக் கலாசாரங்களைப் பிரதிபலிக்கும் கலைஞன். செவித்திறன், பேச்சுத்திறன் குறைபாடு உடையவர். இதனால், ஆறு ஆண்டுகளுக்கு முன்புவரை வீடு, வேலை எனக் குறுகிய வட்டாரத்துக்குள்ளேயே தன்னைச் சுருக்கிக்கொண்டிருந்தவர். புகைப்படக்கலையை நேசித்தார். அது, இவரை இந்தியா முழுக்க அழைத்துச் சென்றது. இவர் எடுத்த புகைப்படங்கள் ஒவ்வொன்றும் இந்தியக் கலாசாரங்களைக் கதையாகச் சொல்கின்றன.
அண்ணாநகரிலுள்ள அலுவலகத்தில் ஶ்ரீவத்சனைச் சந்தித்தேன். தடுமாற்றத்துடன் பேசினாலும், ஶ்ரீவத்சனின் பேச்சு முழுக்க கேமரா மீதான நேசத்தை அழுத்தமாகப் பிரதிபலித்தன.
"நார்மல் ஸ்கூல்லதான் படிச்சேன். சிறப்பு கவனிப்பு இருக்காது. உதடு அசைவுகளை வெச்சுதான் என் முன்னாடி பேசுறவங்க சொல்றதைப் புரிஞ்சுப்பேன். போர்டுல திரும்பி நின்னு டீச்சர், புரொஃபஸர் பாடம் நடத்தும்போதெல்லாம் எனக்கு எதுவும் கேட்காது. எனவே, ஸ்கூல்ல பொம்மை மாதிரி உட்கார்ந்துட்டு வந்திடுவேன். பெற்றோர் ஊக்கம் கொடுத்தாங்க. சவாலா இருந்தாலும், நானே சுயமா படிச்சேன். படிப்பைத் தவிர வேறு உலகம் தெரியாது.
எனக்கிருக்கும் பிரச்னையால சின்ன வயசுல இருந்து யார்கிட்டயும் சரியா பேச மாட்டேன். மத்தவங்களும் என்கிட்ட பேச மாட்டாங்க. அதனால, வெளியுலகமே தெரியாம குறுகிய வட்டத்துக்குள்ளயே அகப்பட்டுக்கிடந்தேன். இன்ஜினீயரிங் முடிச்சுட்டு ஐ.டி வேலை செய்தேன். அதிலும் நிறைய சவால்கள். அப்போ என்னைப் புதுப்பிக்க போட்டோகிராபியில கவனம் செலுத்தினேன். ஒருகட்டத்துல அதுவே என்னைச் சுவாரஸ்யமான பாதையில் வழிநடத்துச்சு" - உற்சாகம் குறையாமல் பேசும் ஶ்ரீவத்சன், ஆறு வருடங்களுக்கு முன்புதான் தனியாக வெளியூர்களுக்குச் செல்லவே தொடங்கியிருக்கிறார்.
"அதுவரை மக்களின் பேச்சு, பழக்க வழக்கமெல்லாம் எதுவும் எனக்குத் தெரியாது. அதனால, வெளியூர்களுக்குப் போகும்போது புதுப்புது பிரச்னைகளை எதிர்கொண்டேன். அவற்றையெல்லாம் சந்தோஷமா ஏத்துக்கிட்டேன். அப்போதான் பிரச்னைக்கான தீர்வும், புதிய வாழ்க்கைக்கான நம்பிக்கையும் கிடைச்சுது. வேலையை விட்டுட்டு போட்டோகிராபியை கரியரா தேர்வு செஞ்சேன். தொடக்கத்துல நிறையவே சொதப்பியிருக்கேன். பிறகு, நிதானமா தனிமையில் உட்கார்ந்து யோசிச்சேன். சும்மா எதையோ படம் பிடிச்சோம்னு இல்லாம, எடுக்கும் படங்கள் மக்களின் உணர்வுகளை, வாழ்வியலை, கலாசாரத்தைத் தத்ரூபமா வெளிப்படுத்தணும்னு உணர்ந்தேன். அதன்படி ரசனையா போட்டோ எடுக்க கத்துகிட்டேன்.
வெளி மாநிலங்கள்ல 10 நாளுக்கும் மேலயே தங்குவேன். அப்போல்லாம் தங்கும் இடம், எங்லெல்லாம் போகணும்னு முன்கூட்டியே திட்டமிட்டுக்குவேன். ஏதாவதோர் இடத்துக்குப் போகணும்னா, அட்ரஸ் கேட்கும்போது பல்வேறு சிக்கல்கள் வரும். ஒருவர் இல்லாட்டியும் இன்னொருத்தர் நிச்சயம் வழிகாட்டுவாங்க. பேச்சுத்திறன் குறைபாட்டால் தடுமாற்றத்தோடு நான் சொல்ற விஷயத்தைத் தப்பா புரிஞ்சுப்பாங்களோன்னு இப்பவரை பயம் இருக்குது. ஆனா, அதை வெளிக்காட்டிக்க மாட்டேன். முடிஞ்சவரை கூகுள் பண்ணி தெரிஞ்சுப்பேன். ஆனா, தடுமாற்றத்தோடு மக்களோடு பேசவே விருப்பப்படுவேன்.
திரிபுரா, நாகலாந்து ஆகிய ரெண்டு மாநிலங்களைத் தவிர, இந்தியாவின் எல்லா மாநிலங்களுக்கும் போயிருக்கேன். நான் பயணம் செய்ற இடத்துல வாரக்கணக்கில் தங்குவேன். ஆனா, அந்தச் சூழல்ல என் மனசுக்குப் பிடிச்ச காட்சிகள் தென்பட்டால் மட்டுமே போட்டோஸ் எடுப்பேன். இல்லைன்னா, ஒரு படம்கூட எடுக்காம திரும்பி வந்திடுவேன். வெளியுலகத்துல பல்வேறு மனிதர்களைச் சந்திக்கிறதால, என்னால சுதந்திரமா செயல்பட முடியுது. இலக்குகளைத் தீர்மானிச்சு நம்பிக்கையோடு இருக்க முடியுது.
குறைபாடு இருக்குனு குறிப்பிட்ட வட்டத்துக்குள் இருந்திருந்தா, என் வாழ்க்கையும் முடங்கியிருக்கும். இப்ப சுதந்திரப் பறவைபோல என் மனசு வாழ்க்கையும் சிறகடிச்சுப் பறக்குது. பழங்குடி மக்களுடன் பழக ஆசைப்படறேன். அதுக்காக சில பழங்குடி இன மக்களின் மொழிகளைக் கத்துக்கறேன். எவரெஸ்ட் மலைப் பகுதிக்கு போட்டோ எடுக்கவும், ட்ரெக்கிங் போகவும் ஆசையிருக்கு. இப்படித் தொடர்ந்து நிறைய விஷயங்களைச் செய்யணும்னு திட்டமிட்டிருக்கேன்" என்கிற ஶ்ரீவத்சன், இதுவரை இந்தியா முழுவதும் பயணித்து 500-க்கும் மேற்பட்ட கலாசார விழாக்களைப் புகைப்படம் எடுத்திருக்கிறார்.
போட்டோகிராபி பயணத்தில் சில முக்கிய தருணங்கள் குறித்துப் பேசுபவர், “உத்தரப் பிரதேசம் மாநிலம் பர்சனா `லத் மார் ஹோலி’ பண்டிகையில் முதல்முறை போனப்போ ஒருவிதமான பய உணர்வுல என்னால போட்டோ எடுக்க முடியலை. பிறகு தொடர்ச்சியா நாலு வருஷமா போட்டோ எடுத்திருக்கேன். அங்குள்ள ராதா ராணி மந்திர் கோயிலில் மதுரா ஹோலி பண்டிகைக்கு 10 நாள்களுக்கு முன்பே ஹோலி பண்டிகையைச் சிறப்பாகக் கொண்டாடுவாங்க. கோயிலைச் சுற்றியிருக்கும் பால்கனியில் இருந்தபடியே கலர் பொடிகளை வீசுவாங்க. மக்களும் கலர் பொடி பூசிக்குவாங்க. ஒரே இடத்தில் 30,000-க்கும் மேற்பட்டோர் உடலில் வண்ணம் பூசிக்கும் அந்த இடமே வண்ண மயமா இருக்கும். புதுசா போறவங்களால 10 நிமிஷத்துக்குமேல் அந்த இடத்தில் இருக்க முடியாது.
லடாக்ல மலை உச்சியில் இருக்கும் ஷாந்தி ஸ்டுபா (shanti stupa) பகுதியில இருந்து பார்த்தால், பிரபலமான அரண்மனை (leh palace) தெரியும். அங்க மேகக்கூட்டங்கள் அடிக்கடி மாறி, அரண்மனைமீது பல வண்ணங்கள்ல சூரிய ஒளியின் நிழல் விழும். மாலை நேரக் கடும் குளிர், முன்கூட்டியே முழு பௌர்ணமி நிலவு பிரகாசிப்பது, மறையும் சூரியனின் நிழல் அரண்மனைமீது தங்க நிறத்தில் பிரதிபலிப்பது, சுற்றியிருக்கும் மலைக் குன்றுகள் வெவ்வேறு நிறங்களில் தென்படுவதுனு போட்டோகிராபிக்கு அரிதான சூழல் 20 விநாடிகளுக்கு மட்டும் கிடைச்சுது. அப்போ அந்த அரண்மனையை மையப்படுத்தி போட்டோ எடுத்தது மறக்க முடியாத அனுபவம்.
கொல்கத்தாவில் துர்கா பூஜை வெகு பிரபலம். நவராத்திரி விழாவின் 10 நாள்களுக்கு மக்கள் தங்கள் வீட்டில் துர்க்கையின் சிலையை வெச்சு வழிபடுவாங்க. அந்த 10 நாள்களும் இரவிலிருந்து அதிகாலை வரை கடவுளை வணங்கி நடனமாடி மகிழ்வாங்க. வழிபட்ட கடவுள் சிலையைக் கடைசி நாள் தண்ணீரில் விடும்போது கண்கலங்கிடுவாங்க.
இந்த எல்லா உணர்வுகளையும் 10 நாள்கள் அங்கேயே தங்கியிருந்து போட்டோஸ் எடுத்தது வித்தியாசமான அனுபவம். இதுபோல நூற்றுக்கணக்கான பயண அனுபவங்கள் எனக்குக் கிடைச்சிருக்கு” என்னும் கண்கள் மின்னக் கூறிச் சிரிக்கிறார் ஶ்ரீவத்சன்.
source https://www.vikatan.com/arts/miscellaneous/travel-photographer-srivatsan-shares-his-photography-experience
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக