Ad

வெள்ளி, 21 ஆகஸ்ட், 2020

நீலகிரி: `மவராசன் நல்லா இருக்கணும்!’ - 8 ஆண்டுகளாக தவித்த நோயாளியை நெகிழ வைத்த மருத்துவர்

நீலகிரி மாவட்டம் குன்னூர் கேத்தி பாலாடா அருகில் உள்ள செலவிப் நகர் கிராமத்தில் வாழ்ந்துவரும் வரும் காளிமுத்து என்ற முதியவர் கடந்த 8 ஆண்டுகளாக பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு ஒரு பக்க கை கால்கள் செயலிழந்த நிலையில் அவதிப்பட்டு வருகிறார்.

முதியவர் காளிமுத்து

இவரது வீட்டில் கழிப்பறை வசதி இல்லை. சொந்தமாக கழிப்பறை கட்டவும் பொருளாதார வசதி இல்லாத காரணத்தால் நாள்தோறும் ஒரு கி.மீ தூரம் நடந்து சென்று திறந்த வெளியை‌ பயன்படுத்தி வந்தார். காட்டுமாடு, கரடி உள்ளிட்ட வன விலங்குகள் நிறைந்த பகுதி என்பதால் மனித விலங்கு எதிர்கொள்ளல் ஏற்படும் அபாயமும் இருந்தது.

8 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு கழிவறை கட்டமுடியாமல் தவித்துவந்த இவரின் தவிப்பு குறித்து விகடனில் செய்தி வெளியிட்டிருந்தோம்.

கழிவறை

இதனை அறிந்த இளம் மருத்துவர் ஒருவர் தனது நண்பர்கள் உதவியுடன் இந்த முதியவருக்கு தற்போது கழிவறை ஒன்றை கட்டிக்கொடுத்துள்ளார்.

இந்த பேருதவி குறித்து நம்மிடம் பகிர்ந்த முதியவர் காளிமுத்து, "8 வருஷமா எவ்வளவோ போராடுனேன்... எதுவுமே நடக்கல. பல நேரம் சாப்படுடாமலே பட்டினியா படுத்துக்குவேன். மவராசன் யாருன்னே தெரியாது. டாக்டர்னு சொல்லி வீட்டுக்கு வந்தார். நாங்க இருக்கோம் எதுக்கும் கவலப்படாதிங்கனு சொன்னார். எங்ககிட்ட ஒரு பைசா கூட வாங்கல. வீட்டுக்கு ஆள் அனுப்பி கட்டுமான வேலைய பாத்துக்கிட்டாங்க. சொன்ன மாதிரியே கட்டிக்கொடுத்துட்டார்.

டைல்ஸ் எல்லாம் ஒட்டி, பெயிண்ட் அடிச்சி நல்ல தரமாவே கட்டிக்கொடுத்தார். எனக்கு வேர எதுவும் வேண்டாம். அந்த டாக்டருக்கு கோடி புண்ணியம்" என‌ கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தார்.

கேத்தி அரசு மருத்துவமனையில் பணியாற்றி வரும் மருத்துவர் கிரணிடம் பேசினோம், ``நம்மள பத்தி எதுவும் எழுத வேணாம். மக்களுக்கு நல்லது நடந்தா போதும். அவரின் தேவையை விகடன் மூலமாக தெரிந்துக்கொண்டேன். நண்பர்கள் உதவியுடன் 30 ஆயிரம் ரூபாய் செலவில் கழிவறை கட்டிக்கொடுத்தோம். தொடர் மழை காரணமாக சற்று தாமதமானது. இல்லை என்றால் இன்னும் விரைவாக கட்டி முடித்திருப்போம்.

மருத்துவர் கிரண்

இதே ஊரில் இன்னும் சில வீடுகளில் கழிப்பறை வசதி இல்லை. நண்பர்கள் உதவியுடன் அவர்களுக்கும் கட்டித்தர முயன்று வருகிறோம். ஏதோ நம்மால் முடிந்த சிறிய உதவி" என்றார்.



source https://www.vikatan.com/news/general-news/in-nilgiri-a-doctor-helped-poor-man-for-building-toilet

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக