புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே கண்ணனிப்பட்டியைச் சேர்ந்தவர் காடப்பன். இவரது மகள் உமா மகேஸ்வரி (23). பி.எஸ்சி படித்துள்ளார். திருமயம் அருகே கோனாப்பட்டைச் சேர்ந்த முருகப்பன் மகன் சிவக்குமார் (27) என்பவருக்கு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு உமா மகேஸ்வரியைத் திருமணம் செய்துகொடுத்துள்ளார். திருமணம் முடிந்த சில மாதங்களுக்குள் சிங்கப்பூருக்குச் சென்ற சிவக்குமார், கடந்த 4 மாதங்களுக்கு முன்புதான், சொந்த ஊருக்கு வந்துள்ளார். திருமணமான சில தினங்களிலிருந்தே கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்படுவது வழக்கமாம்.
தற்போது, சிவக்குமார் சொந்த ஊரில் இருக்கும் நிலையில் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்தநிலையில் கடந்த வாரம் இருவருக்கும் இடையே நடைபெற்ற தகராறில் உமா மகேஸ்வரி கோபித்துக்கொண்டு பெற்றோர் வீட்டிற்குச் சென்று விட்டார். சிவக்குமாரின் பெற்றோர் மற்றும் உறவினர்கள், உமா மகேஸ்வரியின் பெற்றோரிடம் சமாதானம் செய்து உமா மகேஸ்வரியை மீண்டும், தங்கள் வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
ஆனாலும், அன்று இரவே கணவன் மனைவிக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே இரவே காடப்பனைத் தொடர்பு கொண்ட உமா மகேஸ்வரி, தன்னை வீட்டிற்கு அழைத்துச் செல்லுமாறு கூறியதாகச் சொல்லப்படுகிறது. இந்த நிலையில், அடுத்த நாள் காலை காடப்பனைப் போனில் தொடர்புகொண்ட முருகப்பன், உமா மகேஸ்வரி தற்கொலை செய்து கொண்டு இறந்துவிட்டதாகக் கூறியுள்ளார்.
மகள் இறந்த செய்தி கேட்டு கண்ணனிப்பட்டியில் இருந்து காடப்பன் மற்றும் அவரது மனைவி இருவரும் வந்த சிறிது நேரத்திற்குள் கோனாப்பட்டு வந்தனர். அவர்கள் வந்த சிறிது நேரத்திற்குள்ளே அவசர அவசரமாக போலீஸாருக்குக் கூட கூறாமல் உமா மகேஸ்வரியின் உடலை எரித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த சூழலில், தங்கள் மகளை அடித்துக் கொலை செய்திருக்கின்றனர், மகளின் சாவில் சந்தேகம் இருப்பதாகக் கூறி உமா மகேஸ்வரியின் பெற்றோர் திருமயம் போலீஸில் புகார் கொடுத்தனர்.
Also Read: திருநங்கை தாரா சந்தேக மரணம்: பாண்டிபஜார் எஸ்.எஸ்.ஐ, ஏட்டு காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்
அவர்களின் புகாரில்,``மகள் தற்கொலை செய்து இறந்துவிட்டதாகக் கூறினர். நேரடியாகச் சென்று பார்த்தபோது, கழுத்து, முகம் போன்ற பகுதிகளில் காயம் இருந்தது. இதுபற்றி கேட்டபோது, அதற்குப் பதில் கூற மறுத்து, உடனே யாருக்கும் தெரியாமல் அடக்கம் செய்வதில் குறியாக இருந்தனர். எங்கள் உறவினர்கள் யாரும் வருவதற்குள் போலீஸாருக்குத் தகவல் தெரிவிக்காமல் மகளை எரித்துவிட்டனர்.
சிவக்குமாருக்குத் தவறான பழக்கம் இருந்துள்ளது. இதனைத் தட்டிக்கேட்ட எங்கள் மகள் உமா மகேஸ்வரியைத் திட்டமிட்டு கொலை செய்துவிட்டனர். உரிய விசாரணை நடத்தி அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றனர். இதுபற்றி திருமயம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
source https://www.vikatan.com/news/crime/pudukottai-parents-files-complaint-over-daughters-suspicious-death
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக