தங்கச்சிமடம் கடல் பகுதியில் மிதந்து வந்த சாக்கு மூட்டையில் இருந்து 10,000 டோஸ் ஊசி மருந்தை மண்டபம் கடலோரக் காவல் படையினர் கைபற்றினர். மனித உடலில் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் இந்த மருந்து, இலங்கைக்கு கடத்தி செல்லும் போது கடலில் தவறி விழுந்து இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இதுகுறித்து கடலோரக் காவல் படையினர் மற்றும் புலனாய்வு பிரிவினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தமிழகக் கடலோர பகுதிகளில் இருந்து கஞ்சா, பீடி இலை, கடல் அட்டை போன்றவை இலங்கைக்கு கடத்தும் சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வந்தன. கடந்த சில மாதங்களாக இந்த கடத்தல் பொருட்கள் பட்டியலில் சமையலுக்குப் பயன்படுத்தும் விரலி மஞ்சளும் இடம் பிடித்தது. இலங்கையில் மஞ்சள் உள்ளிட்ட விவசாயப் பொருட்களின் உற்பத்தியைப் பெருக்கும் வகையில் வெளிநாடுகளில் இருந்து மஞ்சள் இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் இலங்கையில் சமையல் மஞ்சளுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுகிறது.
Also Read: இலங்கை விதித்த இறக்குமதி தடை, தொடர் வீழ்ச்சியில் மஞ்சள் விலை... காரணம் என்ன?
இதனை சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட கடத்தல் கும்பல் மஞ்சள் கடத்தலில் ஈடுபட்டு வருகிறது. ஈரோடு பகுதிகளில் இருந்து மொத்தமாக மஞ்சளைக் கொள்முதல் செய்யும் தமிழகக் கடத்தல் கும்பலை சேர்ந்தவர்கள் அவற்றை தூத்துக்குடி, ராமநாதபுரம் மற்றும் தஞ்சை மாவட்டக் கடலோர பகுதிகள் வழியாக இலங்கைக்கு கடத்தி வருகின்றனர். இந்த மஞ்சள் கடத்தல் தொடர்ச்சியாக நடந்து வரும் நிலையில், அவ்வப்போது சில ஆயிரம் கிலோ கணக்கிலான கடத்தல் மஞ்சள்களை போலீஸார் கைப்பற்றி வருகின்றனர்.

இந்நிலையில் இன்று காலை தங்கச்சிமடம் வடக்குக் கடல் பகுதியில் சந்தேகப்படும் நிலையில் மூட்டை ஒன்று மிதப்பதாக மண்டபத்தில் உள்ள இந்திய கடலோரக் காவல் படையினருக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து அப்பகுதிக்கு வந்த கடலோரக் காவல் படையினர் கடலில் மிதந்த சாக்கு மூட்டையை மீட்டு சோதனை செய்தனர். சோதனையின்போது அந்த மூட்டையினுள் 2 மில்லி அளவு கொண்ட ஊசி மருந்து இருப்பது தெரியவந்தது. அந்த மூட்டையினுள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் விட்டமின் B1, B6, B12 + Calcium Pantothenate என்ற ஊசிமருந்து கொண்ட சுமார் 10,000 குப்பிகள் இருந்துள்ளது.

இதையடுத்து அவற்றை மண்டபம் கடலோரக் காவல் படை நிலையத்திற்கு கொண்டு வந்தனர். இந்த ஊசி மருந்து தமிழக கடலோரப் பகுதியில் இருந்து இலங்கைக்கு கடத்தி செல்லப்பட்ட போது கடலில் தவறி விழுந்து மிதந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது. அவற்றை கடத்தியவர்கள் யார் என்பது குறித்து போலீஸார் மற்றும் புலனாய்வு துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
source https://www.vikatan.com/news/crime/coast-guard-seizes-anti-depressant-bottles-floating-in-the-sea
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக