ஒளிபரப்பு சட்டத் திருத்த வரைவு மசோதா ஜூன் 18-ஆம் தேதி வெளியிடப்பட்டதிலிருந்தே இந்தியா முழுக்க உள்ள பல திரைக்கலைஞர்கள் தங்களுடைய எதிர்ப்புகளைத் தெரிவித்து வருகிறார்கள். இயக்குநர்கள் வெற்றிமாறன், அனுராக் காஷ்யப், நந்திதா தாஸ், பர்ஹான் அக்தர் உள்ளிட்ட 1,400-க்கும் மேற்பட்ட கலைஞர்கள் புதிய சட்டத் திருத்தத்தை எதிர்த்து மத்திய அரசுக்குக் கடிதம் எழுதியதோடு ‘ஏற்கெனவே கலைஞர்கள் பல்வேறு அச்சுறுத்தலுக்கு ஆளாகியிருக்கும் சூழலில் இந்தப் புதிய சட்டத் திருத்த வரைவு அதை இன்னும் வலுவாக்கும்’ எனக் குறிப்பிட்டிருந்தனர். மேலும், ‘தணிக்கைச் சான்றிதழ் தொடர்பாக முடிவெடுக்கும் உச்ச அதிகாரம் மத்திய அரசுக்கு இருப்பது, கருத்துச் சுதந்திரத்தைக் கேள்விக்குள்ளாக்கும் செயல்’ எனவும் அந்தக் கடிதத்தில் எழுதியிருந்தனர்.
நடிகர் கமல்ஹாசன் "சினிமா, ஊடகம், கல்வி ஆகிய மூன்றும் இந்தியாவில் பலரும் அறிந்த மூன்று குரங்களாக மட்டுமே இருக்க முடியாது எனவும் அதனால் வரவிடுக்கும் தீமைக்கு எதிராகக் குரல் கொடுப்பதே ஜனநாயகத்தைக் காக்கும் சிறந்த மருந்தாக இருக்கும்" எனவும் குறிப்பிட்டு புதிய ஒளிபரப்பு சட்டத் திருத்த வரைவிற்கு எதிரான தன் நிலைப்பாட்டைத் தெரிவித்திருந்தார். நடிகர் சூர்யாவும் “சட்டம் என்பது கருத்துச் சுதந்திரத்தைக் காப்பதற்காக... குரல்வளையை நெறிப்பதற்காக அல்ல” எனக் குறிப்பு சமூக வலைத்தளங்களில் தனது எதிர்ப்பைப் பதிவிட்டுள்ளார்.
ஒளிபரப்பு சட்டத் திருத்த வரைவு மசோதாவுக்கு திரைக்கலைஞர்கள் எதிர்ப்பு தருவது குறித்து பேசுவதற்கு முன் அதில் மேற்கொள்ளப்பட்டுள்ள திருத்தங்கள் குறித்து பார்க்கலாம். ‘ஒளிபரப்பு சட்டத்தில் 2021-இன்படி மேற்கொள்ளப்பட்ட திருத்தங்கள் மூலம் தணிக்கை வாரியம் சான்றிதழ் அளித்த பின்னரும் அந்தத் திரைப்படத்தில் ஏதாவது விதி மீறல்கள் இருப்பதாக மத்திய அரசு அதில் திருத்தங்களை மேற்கொள்ளும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதுவரை யூ, யூ/ஏ, ஏ என மூன்று சான்றிதழ்கள் அளிக்கப்பட்டன. ஆனால், இனி யூ/ஏ 7+, யூ/ஏ 13+, யூ/ஏ 17+ என மூன்று வகையாகப் பிரித்து அளிக்கப்பட்ட உள்ளது. தணிக்கை வாரியம் அளிக்கும் சான்றிதழ் தற்போது வரை 10 ஆண்டுகளுக்குத்தான் செல்லுபடியாகும். ஆனால், இனி அந்தச் சான்றிதழ் நிரந்தரமாகச் செல்லுபடியாகும் எனவும் திருத்தப்பட்டுள்ளது.
திரைப்படங்களைத் திருடினால் இனி மூன்று மாதம் முதல் அதிகபட்சம் மூன்று ஆண்டுகளாகச் சிறைத் தண்டனை விதிப்பதை இந்தச் சட்டம் முன்மொழிவதோடு மூன்று லட்சம் முதல் திரைப்படத் தயாரிப்பு செலவில் 5 சதவிகிதம் வரை அபராதமாக வசூலிக்கப்படும்’ எனவும் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மற்ற திருத்தங்களைவிட தணிக்கை செய்து வெளியான படத்தை மத்திய அரசு மீண்டும் தணிக்கை செய்யும் என்ற வரைவுக்குத்தான் பல்வேறு எதிர்ப்புகள் எழுந்துள்ளன. மத்திய அரசு கொண்டு வந்துள்ள சட்டத்திருத்தத்தை எதிர்ப்பதற்கான காரணம் என்ன என திரைப்பட இயக்குநரும் மக்கள் நீதி மய்யத்தின் அரசியல் பிரமுகருமான முரளி அப்பாஸிடம் பேசினோம், “திருத்தச் சட்டங்களில் உள்ள எல்லாமும் முன்னரே வந்திருக்க வேண்டியது. இப்போதாவது வந்ததே என்று சந்தோசப்படத்தான் வேண்டியிருக்கிறது. ஆனால், தணிக்கை செய்து திரைக்கு வந்த படத்தின்மீது முரண்பாடு இருந்தால் அதை மேல்முறையீடு செய்யும்போது மும்பையில் இருக்கும் அமைப்பில் மேல்முறையீடு செய்து மறு தணிக்கை செய்து வாங்கிக்கொள்ளலாம். இல்லையென்றால் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து சில கோரிக்கைகள் வைக்கலாம். அதன்பின் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் அந்தப் படத்தைத் தொடர்ந்து திரையிடுவதா வேண்டாமா என முடிவு செய்யப்படும்.
தற்போது செய்துள்ள சட்டத்திருத்தின்படி தணிக்கை செய்த படத்தின்மீது மாற்றுக்கருத்து வைக்கப்பட்டால் அதில் மத்திய அரசு தலையிடும் எனக் கூறப்பட்டுள்ளது. இது மிகப்பெரிய ஆபத்தானது. படைப்பில் இருக்கும் சுதந்திரத்தில் தலையிடும் சர்வாதிகாரத்தனமானது” என்றவர்...
“சினிமா வெறும் பொழுதுபோக்கிற்கானது மட்டுமல்ல. பல வரலாற்று சமூகப்பிரச்னைகளை, அன்றைய கால அரசியல் சூழலை மக்களுடன் பேசப் பயன்படுத்தப்பட்ட மிகப்பெரிய ஊடகம். எந்த விமர்சனங்களையும் படைப்பாளனால் மட்டும்தான் சுயச் சார்பின்றி அணுக முடியும். தலைவர்கள் அவர்கள் சார்ந்த அரசியல் சார்புடன்தான் எந்தப் பிரச்னையையும் அணுகுவார்கள். இனி அதற்கு வாய்ப்பில்லாமல் போகும். படைப்பில் அரசியலோ அரசாங்கமோ தலையிடக் கூடாது. தணிக்கைத்துறையில் தற்போதுவரை ஆளும் அரசின் சார்புடையவர்களை நியமித்து தங்களுக்கு எதிரான கருத்துகள் சொல்லப்படுகின்றனவா இல்லையா என்பதைக் கண்காணிக்கும் கங்காணிகளாக வைத்திருக்கும் சூழலில் இந்தத் திருத்தம் தணிக்கை குழுவை மேலும் நீர்த்துப்போகச் செய்துவிடும். கமர்சியல் படங்களுக்கு இந்தப் பிரச்னை இல்லை. ஆனால், பரியேறும் பெருமாள், அசுரன், கர்ணன் போன்ற படங்களுக்கு இந்தச் சட்டத்தால் மிகப்பெரிய பிரச்னை உருவாகும். எந்த ஒன்றையும் விமர்சனத்துக்கு உள்ளாக்கும் அரசியல் சூழலேயே இல்லாமல் போய்விடும். இந்தியாவில் கலை என்பதே பெரிய கேள்விக்குறியாகிவிடும்.
எந்தப் படைப்பிற்குமே இல்லாத தணிக்கை முறையைத் திரைப்படத்திற்கு மட்டும் வைத்ததே தவறு எனும்போது அந்தத் தணிக்கையை மேலும் சிக்கலுக்குள்ளாக்குவது திரைக்கலைஞர்களின் படைப்பு சுதந்திரத்தை முழுவதுமாக அழித்துவிடும் ஆபத்தைக் கொண்டிருக்கிறது இந்தச் சட்டத்திருத்தம்” எனச் சட்டம் அமலானால் எழ வாய்ப்புள்ள சிக்கல்கள் குறித்து விவரித்தார்.
சட்டத்திற்குத் திரைக்கலைஞர்கள் மத்தியில் எழுந்துள்ள எதிர்ப்பு குறித்து பா.ஜ.க செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதியிடம் பேசினோம் “சட்டத்திருத்தங்களில் தேவையான சில மாற்றங்களைத்தான் செய்துள்ளதே தவிரப் புதிதாக எதுவும் கொண்டுவரவில்லை. பல்வேறு திரைப்படங்கள் வெளியான பின்னர் பொது அமைதிக்குப் பாதிப்பை ஏற்படுத்துகின்றன என மாநில அரசால் தடை செய்யப்பட்டுள்ளன. தொடர்ந்து இதேபோலப் பிரச்னைகள் எழும்போது மத்திய அரசு அதைத் தன் கையில் எடுத்து தணிக்கைசெய்து வெளியிடுவதற்கோ நிறுத்துவதற்கோ உத்தரவிடுவதில் எந்தத் தவறும் இல்லை. தணிக்கை செய்த ஒரு படத்தில் மத்திய அரசு தலையிடாது. ஆனால், தணிக்கை செய்த படங்கள் மீது எழும் பிரச்னைகளில் தலையிட மத்திய அரசு முறையான சட்டங்கள் இயற்றினால் அதற்கு முழு ஆதரவு அளிக்கப்படும் என கர்நாடகா உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. அரசியல் நியமனங்கள்தான் இதனால் வரையிலும் பிரச்னையாக இருந்தது. ஒரு குறிப்பிட்ட மதத்தையோ, சாதியையோ, குழுவையோ, சம்பவங்களையோ விமர்சனம் செய்து எடுக்கப்பட்ட திரைப்படங்கள் தணிக்கைக்குப் பிறகு பிரச்னை எழுமானால் மேல்முறையீடு செய்து, அதில் மத்திய அரசு தலையிடுவதில் என்ன பிரச்னை இருக்கப் போகிறது?
உரிய சட்டங்கள் நிறைவேற்றிவிட்டால் அதில் அரசியல் தலையீடுகள் தவிர்க்கப்படும். மதம் சார்ந்தோ, நம்பிக்கையையோ விமர்சனம் செய்தால் தவறு. அவை கருத்துச் சுதந்திரத்திற்கு அப்பாற்பட்டது. கருத்துச் சுதந்திரம் என்பதற்கும் ஓர் எல்லை இருக்கிறது. அதற்கு உட்பட்டுத்தான் படைப்புகள் இருக்க வேண்டும்” எனச் சட்டத்திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டிய சூழல் குறித்து விளக்கினார்.
source https://www.vikatan.com/government-and-politics/politics/why-actors-and-directors-are-raised-their-voice-against-cinematograph-amendment-bill-2021
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக