Ad

வெள்ளி, 2 ஜூலை, 2021

பி.டி.ஆர் வெளியிடப்போகும் `வெள்ளை அறிக்கை', அப்படி என்றால் என்ன, எதற்காக அது வெளியிடப்படுகிறது?

வருகிற ஜூலை மாதத்தில் `வெள்ளை அறிக்கை' வெளியிடப்படும் என முதலமைச்சர் ஸ்டாலினும், நிதியமைச்சர் பி.டி.ஆரும் அறிவித்திருக்கும் நிலையில், வெள்ளை அறிக்கை என்றால் என்ன, தி.மு.க அரசு வெள்ளை அறிக்கையை வெளியிடுவதற்கான காரணம் என்ன, வெள்ளை அறிக்கையில் சொல்லப்படும் விஷயங்கள் என்னவாக இருக்கும் என்கிற பல்வேறு கேள்விகளுடன் பொருளாதார நிபுணர் ஜோதி சிவஞானத்திடம் கேட்டோம். அவர் அது பற்றி விளக்கமாக எடுத்துச் சொன்னார்.

வெள்ளை அறிக்கை என்றால் என்ன?

``பலரும் நினைப்பது போல வெள்ளை நிறத்துக்கும் வெள்ளை அறிக்கைக்கும் எந்தத் தொடர்புமில்லை. கறுப்புப் பணம் எப்படி கறுப்பாக இருப்பதில்லையோ. அது போலத்தான். வெள்ளை அறிக்கை என்பது, ஒரு அரசாங்கமோ, ஒரு அமைப்போ, ஒரு நிறுவனமோ ஒரு பிரச்னைக்கு எடுக்கப்பட்ட தீர்மானத்தின் `வெளிப்படையான' அதிகாரபூர்வமான அறிவிப்பு ஆகும்.

ஜோதி சிவஞானம்

அதாவது, அரசின் தற்போதைய நிதி நிலைமையை, எதிர்கால நடவடிக்கைகளை மக்களிடத்தில் வெளிப்படையாகத் தெரிவித்து அவர்களைத் தெளிவுபடுத்தும் அறிக்கை. இன்னும் சுருக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால், வெள்ளை அறிக்கை என்பது `வெளிப்படையான' விளக்கம் தரும் அறிக்கை.

ஜூலை மாதம் தமிழ்நாடு அரசு வெளியிடவுள்ள வெள்ளை அறிக்கையில், நமது மாநிலத்தின் கடன் சுமைக்கு என்ன காரணம் என விளக்கப்பட வாய்ப்புள்ளது. ஏனெனில், தற்போது மாநில அரசாங்கம் கடன் சுமையால் முழுவதுமாக மூழ்கிப் போயிருக்கிறது. நடப்பு 2021-2022-ம் நிதி ஆண்டின் முடிவில், தமிழகத்தின் கடன் 5.7 லட்சம் கோடி ரூபாயாக இருக்கும் என அ.தி.மு.க அரசின் கடந்த பட்ஜெட் தெரிவிக்கிறது.

Also Read: ரூ.4.85 லட்சம் கோடி to ரூ.5.70 லட்சம் கோடி... அதிகரிக்கும் தமிழகத்தின் கடன்!

ஏற்கெனவே வாங்கிய சுமார் ரூ.4.85 லட்சம் கடனுக்காக, ஆண்டுக்கு சுமார் 50,000 கோடி ரூபாயைக் வட்டியாகக் கட்டிவரும் நிலையில், மேலும் கடன் சுமை அதிகரிப்பது பிரச்னைக்கு உரிய விஷயம். 2011-ம் ஆண்டு ஒரு லட்சம் கோடி ரூபாயாக இருந்த தமிழகத்தின் கடன் சுமை, 2020 - 21-ம் நிதியாண்டில் சுமார் 5 லட்சம் கோடியாக அதிகரித்திருக்கிறது.

பட்ஜெட்

மேலும், 2014-ம் ஆண்டு முதல் தமிழ்நாடு அரசு தனது வருவாய் இலக்கை எட்டவில்லை. செலவினங்கள் தொடர்ந்து அதிகரித்ததால், வருவாய் பற்றாக்குறையும் ஏற்படத் தொடங்கியது. வருவாய் இன்றி திட்டங்களை நிறைவேற்ற கடன்கள் வாங்கியதாலும், அந்தக் கடனுக்கு செலுத்த வேண்டிய வட்டியாலும் ஆண்டுதோறும் செலவினம் அதிகரித்து, பற்றாக்குறை நீடிக்கிறது. கடன்களை எதற்கு வாங்கினார்கள், எப்போது வாங்கினார்கள், அதன் பயன்பாட்டு விவரங்கள் என்ன என்பதை தி.மு.க அரசின் வெள்ளை அறிக்கை நிச்சயமாக விளக்கும் என்று நான் எதிர்பார்க்கிறேன்.

தமிழகத்தின் கடன் சுமைக்கு கொரோனா மட்டுமே காரணம் இல்லை. கடந்த ஏழு வருடங்களாகவே தமிழகம் பல்வேறு நிதிச் சிக்கலை சந்தித்து வருகிறது. கொரோனா, அந்த நிதிப் பிரச்னைகளை இன்னும் அதிகமாக்கி இருக்கிறது அவ்வளவுதான்.

வெள்ளை அறிக்கை எப்படி இருக்க வேண்டும்?

வெள்ளை அறிக்கையில் சொல்லப்படும் விஷயங்கள், அது குறித்த விளக்கங்கள் தரவு வாரியாகவும், புள்ளி விவரங்களை எளிமையான தொனியில் விளக்கும் விதமாகவும் இருக்க வேண்டியது அவசியம்.

பணம்

உடல் நலத்தில் ஏதேனும் பிரச்னை என்றால், அதற்கான மருத்துவரைப் பார்த்து, அவர் எழுதிக் கொடுக்கும் பரிசோதனைகளை மேற்கொண்டு, என்ன பிரச்னை என்பதை தெளிவாகக் கண்டறிந்து, அதற்கு முறையான பரிசோதனையை மேற்கொள்வது போல, இந்த வெள்ளை அறிக்கை சார்ந்த நடவடிக்கையும் இருக்க வேண்டும். வெள்ளை அறிக்கை என்பது, கடன் மற்றும் இதர பிரச்னைகளில் சிக்கிக்கொண்டிருக்கும் தமிழகத்தின் `எக்ஸ்ரே ரிப்போர்ட்' ஆக இருக்க வேண்டும்.

இந்த அறிக்கையை தயார் செய்து, அது மக்களின் பார்வைக்கு கொண்டு வந்தபின், தமிழக அரசின் முழுமையான நிதி நெருக்கடி என்ன என்பது கடைக்கோடி மக்களுக்கும் தெரியவரும். உள்ளதை உள்ளபடியே சொல்லும் அறிக்கை என்பதால், இதிலுள்ள தரவுகள் குறித்து யார் வேண்டுமானாலும் கேள்விகளை எழுப்பலாம். விவாதத்துக்கு உள்ளாக்கலாம்.

Also Read: பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன்: "நாங்கள் எதிர்பார்த்ததைவிட நிலைமை மோசம்"

நிறைவேறுமா தி.மு.க-வின் வாக்குறுதிகள்!

வெள்ளை அறிக்கை வெளியிட்டு, `கடந்தகால அ.தி.மு.க ஆட்சியின் லட்சணத்தால் தமிழகத்தின் நிதி நிலைமை இதுதான். பணம் சேர்ந்த பிறகு வாக்குறுதியளித்த திட்டங்களை நிறைவேற்றுகிறோம்’ என்று தி.மு.க சொல்ல நினைப்பதாக பேசப்படுகின்றன.

ஆனால், உண்மை அதுவல்ல. ஆட்சியில் அமர்ந்த சில வாரங்களிலேயே அடித்தட்டு மக்கள் நேரடியாகப் பயன்பெரும் வகையில் ரூ.4,000 நிவாரணத்தை அறிவித்தது, மாநகரப் பேருந்துகளில் பெண்களுக்கு இலவசமாகப் பயணிக்க அனுமதித்தது போன்றவற்றை முதலமைச்சர் ஸ்டாலின் நிறைவேற்றியிருக்கிறார். ஆகையால், வாக்குறுதிகளை ஓரம் கட்டுவது தி.மு.க அரசின் நோக்கம் இல்லை.

கொடுத்த வாக்குறுதிகளுக்கான நிதியை எங்கிருந்து பெறுவது, எப்படி அதை முறைப்படுத்துவது என்பதில்தான் சிக்கல். முதலில் பிரச்னைகளைக் கண்டுபிடிக்க வேண்டும். அப்போதுதான் அதைக் களைந்து, புதிய திட்டங்களுக்கான வழியை நேர் செய்ய முடியும். கொடுத்த வாக்குறுதிகளை ஒவ்வொன்றாக நிறைவேற்ற முடியும். மேலும், ஏற்கெனவே இருக்கும் சிக்கல்களை வைத்துக்கொண்டு தமிழகத்தின் நிதிநிலை பட்ஜெட்டைத் தயார் செய்வதென்பது கடினமான விஷயம்.

ஸ்டாலின்

Also Read: `அறநிலையத் துறைக்குத்தான் ஆசைப்பட்டேன்; ஆனால்..!' - பி.டி.ஆர் பகிர்ந்த சுவாரஸ்யம்

வெள்ளை அறிக்கைக்குப் பின், தமிழக பட்ஜெட்டை வெளியிடுவதுதான் சரியாக இருக்கும். அப்போதுதான் அது தெளிவாகவும் இருக்கும். ஆகமொத்தம், தி.மு.க அரசின் இந்த வெள்ளை அறிக்கையில், பட்ஜெட்டுக்குள் இருக்கும் ஒவ்வொரு துறை சார்ந்த நிதி அம்சங்களை மட்டுமல்லாமல், பட்ஜெட் தாண்டிய நிதி நடவடிக்கைகளையும் அலசும் அறிக்கையாக இருக்கும்" என்றார் தெளிவாக.

தமிழ்நாட்டின் நிதிநிலை கவலைக்குரியதாக இருக்கும் இச்சூழ்நிலையில் வெளியாகும் தி.மு.க அரசின் இந்த வெள்ளை அறிக்கைக்காக பாமர மக்கள் முதல் தொழில் துறையினர்கள் என அனைவரும் `வெயிட்டிங்'!



source https://www.vikatan.com/business/news/why-tamilnadu-govt-to-release-white-paper-on-states-financial-position

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக