Ad

சனி, 24 ஜூலை, 2021

கிரெடிட் கார்டை அதிகம் பயன்படுத்துபவரா நீங்க? அப்போ இந்த 8 தவறுகளைச் செய்யாதீங்க!

நம்மில் பெரும்பாலோர் கடன் அட்டை (கிரெடிட் கார்டு) பயன்படுத்த தொடங்கி இருக்கிறோம். இதன் மூலம் வாங்கப்படும் பொருள்களுக்கு சுமார் 50 நாள்கள் வட்டி கிடையாது என்பது மிகவும் கவர்ச்சிகரமாக இருக்கிறது. அதேநேரத்தில், கிரெடிட் கார்டு நிலுவைத் தொகையை சரியாகத் திருப்பிச் செலுத்தாவிட்டால் ஆண்டுக்கு கிட்டத்தட்ட 45% வட்டி கட்ட வேண்டி வரும். எனவே, கிரெடிட் கார்டை மிகச் சரியாகப் பயன்படுத்துவது மிக முக்கியம்.

எனவே கிரெடிட் கார்டை பயன்படுத்தும் போது கவனமாக இருப்பது அவசியம். கிரெடிட் கார்டு பயன்பாட்டின்போது தவிர்க்க வேண்டிய 8 முக்கிய தவறுகள்...

1. கிரெடிட் கார்டு நிலுவைத் தொகையை தாமதமாகச் செலுத்துதல்

கிரெடிட் கார்டு நிலுவைத் தொகையை தாமதமாகச் செலுத்துவது மிகப் பெரிய தவறாகும். அப்படிச் செய்யும்பட்சத்தில் அதிக வட்டி (ஆண்டுக்கு 36% முதல் 48%.) மற்றும் அபராதங்களைச் செலுத்த வேண்டி வரும். அது மட்டுமல்லாமல் இந்தச் செயல் உங்கள் கடன் மதிப்பெண்ணையும் (கிரெடிட் ஸ்கோர்) பாதிக்கும். மாதம்தோறும் கிரெடிட் கார்டு நிலுவைத் தொகையை முன்கூட்டியே செலுத்துவதை உறுதி செய்வது கட்டாயம்.

Credit Card

Also Read: கிரெடிட் கார்டு பில் செலுத்துவதில் கூடுதல் எச்சரிக்கை! இழப்பைத் தவிர்த்திடுங்கள்...

2. ஒவ்வொரு மாதமும் குறைந்தபட்ச கட்டணம் செலுத்துதல்:

ஒவ்வொரு மாதமும் குறைந்தபட்ச கிரெடிட் கார்டு நிலுவைத் தொகையை மட்டுமே மீண்டும் மீண்டும் செலுத்துவது மூலம் நீங்கள் கடன் வலையில் சிக்கக்கூடும். இதன் விளைவாக, நீங்கள் நிலுவைத் தொகையை முழுவதுமாகத் திருப்பிச் செலுத்தும் வரை தேவையற்ற வட்டி கட்டி வர வேண்டியதாக இருக்கும்.

3. கிரெடிட் கார்டு: மாதாந்தர அறிக்கையை சரிபார்த்தல்:

கிரெடிட் கார்டின் பரிவர்த்தனைகளின் பட்டியலை மதிப்பாய்வு செய்ய மாத இறுதி வரை காத்திருக்க வேண்டாம். உங்கள் கிரெடிட் கார்டில் தவறான கட்டணங்கள் மற்றும் எந்தவொரு தவறான பதிவையும் அடையாளம் காண கிரெடிட் கார்டின் அறிக்கையை தவறாமல் சரிபார்க்க வேண்டும்.

4. கிரெடிட் கார்டு மூலம் பணம் எடுத்தல்:

உங்கள் கிரெடிட் கார்டு மூலம் பணம் எடுப்பதைத் தவிர்ப்பது நல்லது. அது மிகப்பெரிய தவறு. கிரெடிட் கார்டு மூலம் பணம் எடுப்பதற்கு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. மேலும் உடனடியாக வட்டி போட ஆரம்பித்துவிடுவார்கள். அதிக வட்டி (ஆண்டுக்கு 42% வரை) கட்ட வேண்டி வரும். ஒருவர் பணத்தை எடுத்த நாளிலிருந்து திருப்பிச் செலுத்தும் தேதி வரை வட்டி வசூலிக்கப்படுகிறது.

5. கடன் பயன்பாட்டு சதவிகிதத்தை 30%-க்கு மேல் வைத்திருத்தல்:

உங்கள் கடன் மதிப்பெண்ணை நிர்ணயிப்பதில் கடன் பயன்பாடு மிக முக்கியமான காரணிகளில் ஒன்றாகும். அதிகபட்ச கடன் பயன்பாட்டு விகிதத்தை 30%-க்கும் குறைவாகப் பராமரிப்பது முக்கியம்.

ஆர்.செல்வகுமார் சர்டிஃபைடு ஃபைனான்ஷியல் பிளானர், www.finselva.com

6. கிரெடிட் கார்டில் தேவையற்ற செலவுகள் செய்தல்:

உங்கள் கிரெடிட் கார்டை இலவச பணமாக நினைப்பதைத் தவிர்க்கவும். நீங்கள் வாங்கும் அனைத்துப் பொருள்களுக்கும் உரியத் தொகையை திருப்பிச் செலுத்த வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

7. கிரெடிட் கார்டு நிலுவைத் தொகையைக் கட்ட உரிய தேதி வரை காத்திருத்தல்:

உங்கள் கிரெடிட் கார்டு நிலுவைத் தொகையைச் செலுத்த வேண்டிய தேதி வரை காத்திருக்க வேண்டாம். பல நேரங்களில் பணம் செலுத்த வேண்டிய தேதி மறந்து போகும். இது அதிக அபாயத்தை அதிகரிக்கும்.

Also Read: சித்ரா மாதிரி நீங்களும் ஸ்மார்ட்டா கிரெடிட் கார்டு பயன்படுத்தலாம் தோழிகளே... எப்படி? #HerMoney

8. கிரெடிட் கார்டின் வெகுமதிகளைப் பற்றி எச்சரிக்கையாக இருங்கள்:

கிரெடிட் கார்டில் பெரும்பாலானவை விமான நிலைய ஓய்வறை சலுகைகள், ஹோட்டல் உணவு மற்றும் பிற சலுகைகளை இலவசமாக வழங்குகின்றன.

அவற்றில் பெரும்பாலானவற்றைச் செய்ய, நீங்கள் கிரெடிட் கார்டின் வெகுமதித் (ரிவார்ட்) திட்டத்தைப் பார்த்து அதற்கு தகுந்தவாறு உங்கள் செலவுகளை மேற்கொள்ள வேண்டும்.

- ஆர்.செல்வகுமார், சர்டிஃபைட் ஃபைனான்சியல் பிளானர். www.finselva.com



source https://www.vikatan.com/business/finance/8-mistakes-that-should-be-avoided-while-using-credit-card

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக