வேண்டிய வரங்களைப் பெற்று நற்பலன்களை அடைந்திடும் வகையில் நம் முன்னோர்கள் ஏற்படுத்தி வைத்த விரதங்கள் ஏராளம். அவற்றுள் ஒன்று புண்ணிய பலன்களை அள்ளித் தந்திடும் புதாஷ்டமி விரதம்.
ஒரு மாதத்தில் அமாவாசை அல்லது பௌர்ணமிக்கு பிறகு வரும் எட்டாவது திதியானது 'அஷ்டமி' எனப்படும். இந்த அஷ்டமி திதி புதன் கிழமையன்று அமையப் பெற்றால் அத்தினத்திற்கு 'புதாஷ்டமி' என்று பெயர்.
அளப்பரிய நன்மைகளை அள்ளித்தரும் வழிபாட்டிற்குரிய விரத தினமாக இது அமைவது சிறப்பானதாகும். பொதுவாக அஷ்டமி தினமானது காளி, துர்கை, பைரவர், சப்தகன்னியர் போன்ற தெய்வங்களுக்குரிய வழிபாட்டு தினமாக அமையப்பெறும்.
அவ்வகையில் இந்த புதாஷ்டமியும் அஷ்டமாதர்களை வழிபடுவதற்குரிய சிறப்பான விரத தினமாக நமது பெரியோர்களால் சொல்லப்பட்டிருக்கிறது.
முன்னொரு காலத்தில் கௌசிகன் என்ற அந்தணன் மற்றும் அவருடைய சகோதரி விஜயை ஆகியோர் கங்கைக்கரையில் வாழ்ந்திருந்தனர். ஒரு நாள் மேய்ச்சலில் இருந்த அவர்களுடைய அரியவகை எருது ஒன்று காணாமல் போய்விட பதறித் தவித்து அலைந்தனர்.
அப்பொழுது, பசியால் வாடிய கௌசிகன், கங்கைக்கரையில் புதாஷ்டமி விரதபூஜையில் ஈடுபட்டிருந்த தேவமகளிரைக் கண்டு, பசிக்கு உணவினை யாசித்தான். பூஜையில் சிரத்தையாக ஈடுபடுவோருக்கு மட்டுமே தர இயலும் என்று அவர்கள் சொல்ல, இருவரும் அப்பூஜையில் பங்கேற்று, அவர்கள் அளித்த பிரசாதத்தினை உண்டு இவ்விரத பூஜையின் மகிமையையும் செவியுற்றனர்.
அதன் பலனாக, தொலைந்த எருது கிடைத்ததுடன்; அவனது வாழ்வும் வளம்பெறத் துவங்கியது. விஜயை நற்கணவனைப் பெற்றாள். கௌசிகனும் அயோத்தியின் அரசன் ஆனான்" எனப் புராணங்கள் சொல்கின்றன.
"இந்த புதாஷ்டமி விரதம் மேற்கொள்வது எப்படி?" என்று ஆன்மிக சொற்பொழிவாளர் திருக்கோடிக்காவல் சுஜாதாவைக் கேட்டோம்.
"அன்றைய தினத்தில் இயன்றவரை பானகம், வெல்லம், வெல்லப்பாகு மட்டுமே உண்டு உபவாஸம் இருப்பது சிறப்பு. மாவிலைகளால் தைக்கப்பட்ட இலையில் கற்கண்டு சேர்த்த அன்னத்தினை இட்டு நிவேதித்து அஷ்டமாதர்களான பிராமி, மாகேஸ்வரி, கௌமாரி, வைஷ்ணவி, வாராஹி, இந்திராணி, சண்டி, மற்றும் சாமுண்டி ஆகியோரை வழிபடுவதாலும், அவ்வன்னத்தை தானம் செய்வதாலும் அறிவாற்றல் சிறக்கும். மூளைபலம் உண்டாகும். முன்னோர்கள் ஆசிகள் கிட்டிடும். இந்த நாளில் எழுதுபொருள்களை தானம் செய்வதால் வித்யா கடாக்ஷம் உண்டாகும்.
புதன் கிரகமானது புத்தி்க்கு உரிய காரகத்துவம் உடைய கிரகம். கற்றலில் மந்தமானவர்கள், மூளைத்திறன் குறைந்தவர்கள், அதைரியசாலிகள், மந்தபுத்தி உடையவர்கள், படிப்பினைக் கண்டு அஞ்சுபவர்கள், குழப்பமான சிந்தனாவாதிகள், தாழ்வு மனப்பான்மை உடையவர்கள் ஆகியோர் புதாஷ்டமி அன்று விரதம் இருந்து இறைவழிபாடு செய்திட, அப்பிரச்னைகளிலிருந்து நிரந்தர நிவாரணம் பெறுவர் என்பது ஜோதிடவியல் கூற்று.
இயன்றவர்கள் அக்னிபூர்வமாக உண்டான எட்டு விதமான முறைகளில் தீபம், தூபம், கற்பூரம், சாம்பிராணி, ஹாரத்தி ஆகிய பூஜா உபசாரங்கள்; ஹோமம், அன்னம் விளக்கேற்றுதல் ஆகிய எட்டு விதங்களில் வழிபடுவதால் உத்தமமான பலன்கள் உண்டாகும்."
எனவே சகல புண்ணிய பலன்களையும் அள்ளித் தந்திடும் இந்த புதாஷ்டமி விரத தினத்தன்று, இயன்றளவு சிவாலய வழிபாடு செய்து அளப்பறிய நற்பலன்களை அடைவோம்!
source https://www.vikatan.com/spiritual/gods/the-glory-and-benefits-of-budh-ashtami-vrat
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக