டிசம்பர் மாதம் 29-ம் தேதி முதல் தனது தேர்தல் பிரசாரத்தை மேற்கொண்டு வரும் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்களில் பிரசாரப் பயணம் செல்வதற்காக மதுரை வந்தார்.
விமான நிலையம் அருகே, பெருங்குடியில் மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் ராஜன் செல்லப்பா தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. அந்தக் கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, "அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள். எல்லோருக்கும் நோயற்ற வாழ்வாக அமைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
2021 தேர்தல் நெருங்கிக் கொண்டு இருக்கிறது. ஏப்ரல் மாதம் நடைபெறும் தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்க வேண்டுகிறேன். தொடர்ந்து பல்வேறு நல்ல திட்டங்களை வழங்க அ.தி.மு.க-வுக்கு மீண்டும் வாய்ப்பளிக்க வேண்டும்.
அ.தி.மு.க அரசு மக்கள் எண்ணுவதை நிறைவேற்றும் அரசாக விளங்குகிறது. ஜெயலலிதா கொண்டு வந்த அனைத்து திட்டங்களையும் சிந்தாமல் சிதறாமல் மக்களுக்கு வழங்கி வருகிறோம்.
தி.மு.க தலைவர் வேண்டுமென்றே அவதூறு பிரசாரங்களை செய்து வருகிறார். எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் நாட்டுக்காக வாழ்ந்து மறைந்தார்கள்.
ஆனால், கருணாநிதி ஆட்சியில் அவர்கள் குடும்பம்தான் பிழைத்தது. தி.மு.க-வின் வாரிசு அரசியலுக்கு முடிவு கட்டுவதாக இந்த தேர்தல் அமைய வேண்டும்.
மு.க.ஸ்டாலின் மகன் அரசியலுக்கு வந்துள்ள நிலையில், அடுத்து பேரனும் அரசியலுக்கு வரத் தயராக உள்ளார். தி.மு.க ஆட்சி ஏழைகளுக்கான ஆட்சியாக எப்போதும் இருந்ததில்லை.
இது உங்கள் அரசு. மக்கள் அரசு. அம்மா வழியில் நடக்கும் அரசு. தொடர்ந்து நல்ல பல திட்டங்கள் உங்களுக்கு கிடைத்திட இரட்டை இலைக்கு வாக்களிக்க வேண்டுகிறோம்.
தி.மு.க-வில் சாதாரண தொண்டர்கள் அதிகாரத்திற்கு வர முடியாது. நல்ல பல திட்டங்கள் தொடர இரட்டை இலைக்கு வாக்களியுங்கள்" என்றார்.
source https://www.vikatan.com/news/politics/cm-palanisami-slams-mk-stalin-in-madurai-meeting
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக