Ad

செவ்வாய், 5 ஜனவரி, 2021

மேடையில் ஒரே இருக்கை... கார்ப்பரேட் ஸ்பான்ஸர்... தனி ஹெலிகாப்டர் பயணம்! - கமலைச் சுற்றும் சர்ச்சைகள்

ஹெலிகாப்டரில் பிரசாரப் பயணம் மேற்கொண்டது குறித்து வந்த விமர்சனங்களுக்கு இப்படிப் பதில் அளித்தார் நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவருமான கமல்ஹாசன். ஆனால், இதுமட்டுமல்ல, கமல்ஹாசன் பிரசாரம் தொடங்கியதில் இருந்தே அவர்மீது பல்வேறு விமர்சனங்கள் தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்டு வருகின்றன. எம்.ஜி.ஆரின் நீட்சி நான் என அவர் சொன்னது மிகப்பெரிய விவாதப் பொருளானது. அடுத்ததாக, மக்கள் நீதி மய்ய பிரசார மேடையில் அவருக்கு மட்டுமே இருக்கை போடப்படுகிறது. மற்றவர்கள் அனைவரும் நின்றுகொண்டே இருக்க வேண்டியிருக்கிறது. சுயமரியாதை, சம உரிமை குறித்து பேசும் கமல்ஹாசனே இப்படி நடந்துகொள்ளலாமா என்கிற விமர்சனங்கள் அவர்மீது முன்வைக்கப்பட்டன. தவிர, அவரின் பிரசாசரச் செலவுகளை கார்ப்பரேட் நிறுவனங்கள்தான் பார்த்துக்கொள்கின்றன, வரும்போதே கார்ப்பரேட் நிறுவனங்களின் தயவில் வரும் கமல் எப்படி ஏழை, எளிய மக்களுக்கான் ஆட்சியைத் தரமுடியும் போன்ற விமர்சங்களையும் அவரின்மீது சிலர் முன்வைப்பதைப் பார்க்க முடிகிறது.

கமல் தேர்தல் பரப்புரை

அதிலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த பேராசியர் அருணன், தொடர்ச்சியாக கமல்ஹாசனின் செயல்பாடுகளை மிகக் கடுமையாக விமர்சித்து வருகிறார். 2016-ல் நடந்த சட்டமன்றத் தேர்தலில் ஊழல் ஒழிப்பை முன்வைத்து, இரண்டு திராவிடக் கட்சிகளுக்கு மாற்றாக உருவான மக்கள் நலக் கூட்டணியில் அங்கம் வகித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த ஒருவரே, தற்போது மாற்றத்தை, ஊழல் ஒழிப்பை முன்வைத்துப் பிரசாரத்தில் ஈடுபட்டுவரும் கமல்ஹாசனை எதிர்த்து மிகக் கடுமையாக விமர்சனம் செய்வது ஏன், அவரிடம் பேசினோம்,

பேராசிரியர் அருணன்:

''நேர்மைதான் என்னுடைய கொள்கை என்று சொல்லும் கமல், வருமான வரி செலுத்தியது தொடர்பாக அவரிடம் கேட்கப்பட கேள்விக்கு, அது தொடர்பாக வருமான வரித்துறைதான் கேள்வி கேட்கவேண்டும் என்கிறார். அவர் வெறும் நடிகராக மட்டும் இருந்துவிட்டால் அவரிடம் யாரும் போய் கேட்கப் போவதில்லை. ஆனால்,பொது வாழ்வுக்கு வந்தபிறகு அதுவும் முதல்வர் வேட்பாளராக தேர்தலில் போட்டியிடப் போகும் ஒருவரிடம், அவரின் நேர்மை குறித்து பொதுவெளியில் கேட்கத்தான் செய்வார்கள். அதற்கு பதில் சொல்லவேண்டுமே தவிர, கேள்வி கேட்பவர்களைச் சாடக்கூடாது. தமிழ்நாட்டுக்குள்ளேயே ஹெலிகாப்டரில் பிரசாரத்துக்குச் செல்கிறார். அதற்கான நிதி எங்கிருந்து வந்தது, அதுகுறித்துத் தெரிவிக்கவேண்டும் என கேள்வி எழுப்பப்பட்டதற்கு, நான் விமானத்தில்கூட போவேன் எனப் பதிலளிக்கிறார்...என் சொந்தப் பணத்தில்தான் போகிறேன் என அவர் சொன்னால், அதுகுறித்து அவர் கணக்குச் சொல்லவேண்டும்.

பேராசிரியர் அருணன்

2016-ல் நாங்கள் மக்கள் நலக் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டபோது இருந்த நிலைமை இப்போது இல்லை. ஜி.எஸ்.டி வரி விதிப்பு, குடியுரிமை திருத்தச் சட்டம், நீட், காஷ்மீர் மாநில அந்தஸ்து பறிப்பு, மூன்று வேளாண் சட்டங்கள் ஆகியவையெல்லாம் 2016-க்கு முன்பு இல்லை. இன்றைக்கு தமிழக மக்களின் பிரதான எதிரியாக, மோடி தலைமையிலான மத்திய அரசும் பா.ஜ.கவும்தான் இருக்கிறது. அவர்களுக்கு அனைத்து விதத்திலும் ஆதரவளிக்கும் வகையிலான ஆட்சிதான் தமிழகத்திலும் நடந்துவருகிறது. அதனால், இவர்களை எப்படித் தோற்கடிப்பது என்கிற வகையில்தான் எதிர்க்கட்சிகளின் அரசியல், பிரசார வியூகங்கள்தான் இருக்கவேண்டும். ஆனால், இவர்களைக் கண்டுகொள்ளாமல், பொதுவாக ஊழல் ஒழிப்பு எனப் பேசுவது எப்படிச் சரியாக இருக்கும். அப்படியே பார்த்தாலும் மாநில அரசின் ஊழல்களைப் பட்டியலிடும் கமல்ஹாசன் மத்திய அரசின் ஊழல்களைப் பற்றி வாய் திறப்பதே இல்லை. "தேர்தல் பத்திரம்" என்கிற பெயரில், டாடா குழுமத்திடம் இருந்து மட்டும் கடந்த ஒரு வருடத்தில் 300 கோடிக்கும் மேல் பா.ஜ.கவும் நாற்பது கோடி ரூபாய் அ.தி.மு.கவும் வாங்கியிருப்பது ஆர்.டி.ஐ மூலம் தெரிய வந்திருக்கிறது.

ஊழல் என்பது நம் பொருளாதாரக் கட்டமைப்போடு தொடர்புடையது. தேர்தல் செலவு உள்ளிட்ட தேர்தல் சீர்த்திருத்தங்கள் குறித்து கமல் பேசுவதே இல்லை. அதேபோல, விமானம், ரயில்வே தனிமார் மயமாக்கலை கமல் தீவிரமாக எதிர்ப்பதே இல்லை. கமலின் ஊழல் எதிர்ப்புப் பிரசாரம் மேலோட்டமானது. அதை வெறுமனே பிரசார யுக்தியாக மட்டுமே கமல் பயன்படுத்துகிறார் என்பதே என் கணிப்பு '' என்கிறார் அவர்.

கமலின் ஊழல் ஒழிப்பை அருணன் விமர்சனம் செய்ய, மாற்றத்தை முன்வைத்து வருகிறோம் எனச் சொல்லும் கமல் இதற்கு முன்பிருந்த கட்சிகளைவிட மிக மோசமாக நடந்து கொள்கிறார் என்கிற குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர், திராவிடக் கட்சிகளுக்கு நாங்கள்தான் மாற்று என இந்தத் தேர்தலிலும் தனித்துக் களமிறங்கும் நாம் தமிழர் கட்சியினர். அந்தக் கட்சியின் மாநில இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர், இடும்பாவனம் கார்த்திக் இதுகுறித்துப் பேசும்போது,

இடும்பாவனம் கார்த்திக்

இடும்பாவனம் கார்த்திக் ;

'' ஆடம்பரம், பகட்டு, பணத்தை வாரி இறைத்தல் என இதுநாள் வரை தமிழக அரசியலில் எதைப் பார்த்து மக்கள் வெறுத்துப் போனார்களோ அதையே மாற்றம் எனச் சொல்லி அரசியல் செய்யவரும் கமல்ஹாசனும் செய்கிறார். சொல்லப்போனால் கமல்ஹாசனின் பிரசாரமுறை ஏற்கெனவே இருந்த அரசியலை விட மிக மோசமாகவே இருக்கிறது. பெரும்பாலும் மேல்தட்டு வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள்தான் உள்நாட்டு விமான சேவையைப் பயன்படுத்துபவார்கள். அதையும் விடுத்து தனி ஹெலிகாப்டரில் கமல் செல்கிறார் என்றால் அது எவ்வளவு பெரிய மேட்டுக்குடி அரசியல் என்பதைப் பார்க்கவேண்டும். அதேபோல, தி.மு.கவுடன் கூட்டணி வைக்கமாட்டேன் என்று கமல் இன்னும் வெளிப்படையாகச் சொல்லவில்லை. ஒருபுறம் திராவிடக் கட்சிகளுக்கு மாற்று என்கிறார், மறுபுறம் புகழ்கிறார்.

அதேபோல, மத்திய அரசின் ஊழலைக் கமல் சாடுவதே இல்லை, மாநில அரசின் ஊழல்களைப் பற்றி மட்டுமே பேசுகிறார். அதையும் மிகவும் மேம்போக்காகவே பேசுகிறார். நாடாளுமன்றத்தில் மக்கள் நீதி மய்யம் கணிசமான வாக்குகளை வாங்கியது என்பது உண்மைதான். ஆனால், மாநகரப் பகுதிகளில் மட்டுமே வாங்கியிருக்கிறார்கள். ஆனால், கடந்த இரண்டு ஆண்டுகளில் அதிலும் மிகப்பெரிய தொய்வு ஏற்பட்டிருக்கிறது. ஆளும்கட்சிக்கு ஆதரவான அரசியலை மட்டுமே செய்துவரும் அவரை தமிழக மக்கள் ஒரு போதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அவரின் பரப்புரை பாணியே முதலில் தமிழக மக்களுக்குப் புரியப் போவதில்லை. பலமான கட்சிகளிடம் தங்களின் பேரத்தை உயர்த்திக்கொள்ள மட்டுமே அவர் அரசியல் செய்து வருகிறார்'' என்கிறார் அவர்.

கமல்

மேற்கண்ட இருவரின் விமர்சனங்கள் மட்டுமல்ல, ஊழல் ஒழிப்பை முன்வைக்கும் கமல் முதலில், தன் கட்சிக்கு எங்கிருந்து நிதி வருகிறது என்பதை வெளிப்படையாகத் தெரிவிக்கவேண்டும். தவிர, அவரின் கட்சியில் பல ஓய்வுபெற்ற அரசு அதிகாரிகள் இருக்கிறார்கள், பணியில் இருக்கும்போது அவர்களே மிகப்பெரிய ஊழல் பெருச்சாலிகள்தான். அவர்களை உடன்வைத்துக்கொண்டு கமல் ஊழலை ஒழிக்கப்போகிறாரா என்பது போன்ற கடுமையான விமர்சனங்களும் சமூக செயற்பாட்டாளர்கள், அரசியல் விமர்சகர்களால் கமலின்மீது முன்வைக்கப்படுகிறது. மேற்கண்ட அனைத்துக் குற்றச்சாட்டுகளையும் கேள்விகளாக, மக்கள் நீதி மய்யத்தின் செய்தித் தொடர்பாளர் முரளி அப்பாஸின் முன்வைத்தோம்.

''தனி ஹெலிகாப்டர் பயணம் குறித்த விமர்சனத்தை எப்படிப் பார்க்கிறீர்கள்?''

''பல்வேறு கூட்டங்களில் கலந்துகொள்ள வேண்டும் என்கிற அவசியத்தைப் பொறுத்து தேவைக்காகத்தான் ஹெலிகாப்டரில் எங்கள் தலைவர் பயணம் செய்தாரே தவிர ஆடம்பரத்துக்காக அல்ல. அதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும்''

''மக்கள் மத்தியில் இது ஒரு இடைவெளியை ஏற்படுத்தாதா?''

''மக்கள் இதைப் பற்றி பொருட்படுத்தவே இல்லை. பேராசியர் அருணன் போன்ற ஒரு சிலர்தான் வேண்டுமென்றே அரசியல் செய்து வருகின்றனர். கூட்டணி தர்மத்துக்காகப் பேசிவருகிறார் அவர். பா.ஜ.கவின் கலரை எங்களுக்குப் பூசப் பார்க்கிறார்''

Arunan twit

''மத்திய அரசின் மீது ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைப்பதில்லை என்கிற விமர்சனங்கள் உங்கள் தலைவர் மீது முன்வைக்கப்படுகின்றனவே?''

''கடந்த இரண்டு ஆண்டுகளில் எங்களைவிட பா.ஜ.கவை விமர்சனம் செய்தவர்கள் யாரும் இல்லை. சான்றுகள் இல்லாமல் நாங்கள் எந்த ஊழல் குற்றச்சாட்டையும் முன்வைக்க முடியாது. தமிழகத்தில் நாங்கள் முன்வைப்பவை கூட மிக சாதாரண விஷயங்களே. தமிழக அரசியலில் மாற்றம் ஏற்படக்கூடாது என்பதற்காகவே பா.ஜ.கவையும் மதச்சார்பின்மையையும் சிலர் பயன்படுத்தி வருகின்றனர். தற்போது, தமிழகத்தில் யார் ஆட்சிக்கு வரவேண்டும் என்பதற்கான தேர்தல் மட்டுமே நடைபெற இருக்கிறது''

''உங்களுக்கு கார்ப்பரேட் நிறுவனங்கள்தான் ஸ்பான்சர் செய்கின்றன. உங்கள் கட்சியின் நிதி வருவாய் குறித்து வெளிப்படையாகத் தெரிவிக்க வேண்டும் என்கிற குரல்கள் எழுகின்றனவே?''

''மாற்றத்துக்கான, இரண்டு கட்சிகளை விடுத்து, மூன்றாவது கட்சிக்கான மனப்பான்மை மக்கள் மத்தியில் எழுந்திருக்கிறது. அதை மடைமாற்றவே இப்படியெல்லாம் சிலர் பேசி வருகிறார்கள்''

Also Read: கமல் : மக்கள் நீதி மய்யத்தின் 7 அம்சத் திட்டங்கள்... நடைமுறையில் சாத்தியமா?#TNElection2021

'' தி.மு.கவுடன் கூட்டணி குறித்து கமல் மௌனம் காப்பது விமர்சிக்கப்படுகிறதே?

''மாற்றத்தை முன்வைத்து வரும் நாங்கள் எப்படி தி.மு.கவுடன் கூட்டணி வைக்கமுடியும். அது எங்கள் சுயதன்மையைப் பாதிக்கும். எங்கள் தலைவரை முதல்வர் வேட்பாளராக முன்வைத்துதான் நாங்கள் தேர்தலைச் சந்திக்க இருக்கிறோம்''

'' மக்கள் நீதி மய்யத்தின் அரசியல் மேல்தட்டு வர்க்கத்துக்கான அரசியல், இது தமிழகத்தில் எடுபடாது என்று சொல்லப்படுவது பற்றி?

''ஆருடம் சொல்வதற்கு அவர்களுக்கு உரிமை இருக்கிறது. மக்கள் உற்சாகமாகவே இருக்கிறார்கள். எங்களுக்கு பலத்த வரவேற்புக் கொடுக்கிறார்கள்''

கமலுக்கான பெஞ்ச்

''உங்கள் கட்சியில் இருக்கும் சில ஓய்வுபெற்ற அரசு அதிகாரிகளின் மீதே ஊழல் குற்றச்சாட்டுகள் முன்வைக்கபடுகின்றனவே?''

''யூகத்தின் அடிப்படையில் யாரும் எந்தக் குற்றச்சாட்டையும் முன்வைக்கலாம். ஆதாரத்தைக் கொடுத்தால் நிச்சயமாக அதன் மீது எங்கள் தலைவர் நடவடிக்கை எடுப்பார்''

''கட்சியில் மற்ற நிர்வாகிகள் நின்று கொண்டிருக்க, கமலுக்கு மட்டும் மேடையில் இருக்கை போடுவது கடுமையாக விமர்சிக்கப்படுகிறதே?''

''கூட்டத்தை ஏற்பாடு செய்பவர்கள்தான் அப்படிப் போடுகிறார்கள். அந்த இருக்கையில் எங்கள் தலைவர் அமருவதே இல்லை. அதையும் தலைவர் மாற்றச் சொல்லிவிட்டார். எங்கள் இரண்டாம் கட்டத் தலைவர்களை மக்களிடம் அறிமுகப்படுத்தவேண்டும் என்பதற்காகவே அவர்கள் நிற்கிறார்கள். எங்கள் பொதுக்கூட்டத்தைப் பார்த்தால் அது தெரியும்.''



source https://www.vikatan.com/government-and-politics/politics/story-about-propaganda-meeting-controversies-surrounding-kamal

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக