Ad

வெள்ளி, 8 ஜனவரி, 2021

ஆர்ப்பாட்டக்காரர்களா, தேசபக்தர்களா... ட்ரம்ப்பின் ட்விட்டர் கணக்கு நிரந்தரமாக தடை செய்யப்பட்டது ஏன்?

பிரபல சமூக வலைதளமான ட்விட்டர் தங்கள் தளத்திலிருந்து அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பை நிரந்தரமாகத் தடைசெய்வதாக அறிவித்திருக்கிறது. இரு தினங்களுக்கு முன்புதான் Civic Integrity policy-யை மீறியதாக அவரது கணக்கைத் தற்காலிகமாகத் தடைசெய்வதாக அறிவித்தது ட்விட்டர். அமெரிக்கா தேர்தலில் ஜோ பைடனுடன் போட்டியிட்டுத் தோல்வியுற்ற பிறகும் தோல்வியை ஏற்க மறுத்து வருகிறார் ட்ரம்ப். தேர்தலில் முறைகேடு நடந்துவிட்டதாகத் தொடர்ந்து பொய் பரப்புரைகளில் ஈடுபட்டுவந்தார். இதன் விளைவாக அவரது ஆதரவாளர்கள் தொடர்ந்து போராட்டங்களிலும், வன்முறையிலும் ஈடுபட்டுவருகின்றனர்.
US Capitol Violence

இரு தினங்களுக்கு முன்பு அமெரிக்க US Capitol பாராளுமன்ற வளாகத்தை முற்றுகையிட்டு வன்முறையில் ஈடுபட்டனர் ட்ரம்ப் ஆதரவாளர்கள். இதில் இதுவரை ஐந்து பேர் உயிரிழந்திருக்கின்றனர். இதற்கு முக்கிய காரணம் ட்ரம்ப்பின் பதிவுகள்தான் என முக்கிய சமூக வலைதளங்கள் அனைத்துமே ட்ரம்ப் கணக்கை தற்காலிகமாகத் தடைசெய்தது. ஜோ பைடன் பதவி ஏற்கும் வரை ட்ரம்ப் கணக்கு செயல்பட அனுமதிக்கப்படாது என ஃபேஸ்புக் அறிவித்திருந்தது. தொடர்ந்து இது போன்ற பதிவுகள் பதிவிடப்பட்டால் நிரந்தரமாக கணக்கு தடைசெய்யப்படும் என எச்சரித்தது ட்விட்டர். இப்போது அதைத்தான் செய்திருக்கிறது ட்விட்டர்.

சட்டவிரோத செயல்களில் ஈடுபட மக்களைத் தூண்டுவதாக அவரது ட்வீட்கள் அமைந்துள்ளன என ட்விட்டர் குறிப்பிட்டுள்ளது. இது குறித்து ட்விட்டரின் அறிக்கையிலிருந்து சில வரிகள்,

“Due to the ongoing tensions in the United States, and an uptick in the global conversation in regards to the people who violently stormed the Capitol on January 6, 2021, these two Tweets must be read in the context of broader events in the country and the ways in which the President’s statements can be mobilized by different audiences, including to incite violence, as well as in the context of the pattern of behavior from this account in recent weeks."
Trump Account Banned

கடுமையான இந்த நடவடிக்கைக்கு என்ன காரணம் என இன்னும் விரிவாக விவரித்துள்ளது ட்விட்டர்.

ட்விட்டர் சொல்லும் காரணங்கள்,

  • ஜோ பைடன் பதவி ஏற்கும் விழாவில் பங்குகொள்ள மாட்டேன் எனத் திட்டவட்டமாக ட்ரம்ப் அறிவித்திருப்பது தேர்தல் முறையாக நடக்கவில்லை என்றே அவரது ஆதரவாளர்களால் புரிந்துகொள்ளப்படும். மீண்டும் கலவரங்கள் வெடிக்கும். 'Orderly Transition' என அவர் கொடுத்த வாக்குறுதிக்கு எதிரான நிலைப்பாடு இது.

  • இது மட்டுமல்லாமல் தான் பங்குகொள்ளவில்லை எனக் குறிப்பிடுவதன் மூலம் 'பதவியேற்கும் விழாவில் கலவரங்கள் செய்யலாம். நான் இருக்க மாட்டேன்' என மறைமுகமாக ஆதரவாளர்களுக்குத் தெரிவிக்கிறார் ட்ரம்ப்.

  • தனது ஆதரவாளர்களைக் குறிப்பிட 'American Patriots' என்ற சொல்லாடலைப் பயன்படுத்துகிறார் ட்ரம்ப். இது US Capitol கலவரத்தில் ஈடுபட்டவர்களை ஆதரிப்பதாக அமைத்துள்ளது.

  • “GIANT VOICE long into the future”, “They will not be disrespected or treated unfairly in any way, shape or form!!!” என்கிறார் ட்ரம்ப். இதுவும் பதவி மாற்றத்திற்கு ஒத்துழைப்பு தருவேன் என அவர் தெரிவித்ததற்கு எதிரான கருத்துகளாக இருக்கின்றன. இது ட்ரம்ப்தான் உண்மையில் தேர்தலை வென்றார் என நினைப்பவர்களை மேலும் ஊக்கப்படுத்துகிறது.

ஏற்கெனவே மீண்டும் கலவரங்களில் ஈடுபட ட்ரம்ப் ஆதரவாளர்கள் தயாராக இருக்கின்றனர். ஜனவரி 17-ம் தேதி மீண்டும் US Capitol வளாகத்தை முற்றுகையிட சில கும்பல்கள் திட்டமிட்டு வருகின்றன. இந்நிலையில் ட்ரம்ப் கணக்கை நிரந்தரமாக நீக்குவதைத் தவிர வேறு வழி இல்லை என்று இந்த முடிவை எடுத்திருக்கிறது ட்விட்டர்.

ட்ரம்ப் மக்களை சென்றடையும் முக்கியமான மேடையாக ட்விட்டர் இருந்து வருகிறது. 8 கோடிக்கும் அதிகமான பேர் பின்தொடரும் ட்ரம்ப்பின் ட்விட்டர் கணக்கு மிகவும் ஆக்ட்டிவாக இருக்கும் ட்விட்டர் கணக்குகளில் ஒன்று. உலகோடு இதன்மூலம்தான் உரையாடிக்கொண்டிருந்தார் ட்ரம்ப். இந்தத்தடை என்பது தனிப்பட்ட முறையில் ட்ரம்புக்கு மிகப்பெரிய பின்னடைவு.
Donald Trump

அமெரிக்க அதிபரின் அதிகாரப்பூர்வ கணக்கான @POTUS தடைசெய்யப்படுமா எனத் தெளிவாகத் தெரிவிக்கவில்லை ட்விட்டர். ட்ரம்ப் புதிதாக வேறு கணக்குகள் தொடங்க முயன்றாலும் உடனடியாக அவை முடக்கப்படும் எனத் தெரிவித்திருக்கிறது.

சில வருடங்களாகவே, அமெரிக்க தேர்தலுக்கும் முன்பிருந்தே பலரும் ட்ரம்ப் கணக்கு முடக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து வருகின்றனர். விஷ பரப்புரைகளைப் பல வருடங்களாக ட்விட்டரில் அவர் மேற்கொண்டுவருகிறார். US Capitol கலவரங்களுக்குப் பிறகு இந்த குரல்கள் இன்னும் வலுவடையவே செய்தன. ட்விட்டர் ஊழியர்கள் 300 பேர் ட்ரம்ப்பைத் தடைசெய்ய வேண்டும் என்கிற மனுவில் கையெழுத்திட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுவரை ட்ரம்ப்பை தடைசெய்திருக்கும் டெக் நிறுவனங்கள்...

  • ஃபேஸ்புக்- குறைந்தது ஜோ பைடன் பதவியேற்கும் வரையாவது ட்ரம்ப் கணக்கு முடக்கப்படும்.

  • ட்விட்டர்- @realDonaldTrump மற்றும் @TeamTrump கணக்குகளுக்கு நிரந்தர தடை. ட்ரம்ப் குழுவின் டிஜிட்டல் இயக்குநர் கேரி கோபியின் கணக்கின் வழி ட்வீட் செய்ய முயன்றதால் அதுவும் தற்காலிகமாக முடக்கம்.

  • ஸ்னாப்சாட்- நிரந்தர தடை

  • யூடியூப்- ட்ரம்ப்பின் தீவிர ஆதரவாளர் ஸ்டீவ் பெனான் பாட்கேஸ்ட் தடை, பல்வேறு வீடியோக்கள் நீக்கம். பல்வேறு சேனல்களுக்கு எச்சரிக்கை.

  • ஷாப்பிஃபை- ட்ரம்ப்பின் ஆன்லைன் வர்த்தக ஸ்டோருக்கு தடை

  • டிஸ்கார்டு- “The Donald” என்னும் ட்ரம்ப் ஆதரவு சர்வருக்கு தடை.

  • ட்விட்ச்- ட்ரம்ப் சேனல் முடக்கம்

  • பின்ட்ரெஸ்ட்- ட்ரம்ப் ஆதரவு ஹேஷ்டேக் பதிவுகள் முடக்கம்.

அமெரிக்க அதிபராக ஜோ பைடன் பதவியேற்க சுமார் 10 நாட்களே இருக்கின்றன. அதற்குள் அமெரிக்காவில் இன்னும் என்னவெல்லாம் நடக்கப்போகிறதோ!?


source https://www.vikatan.com/technology/tech-news/trump-permanently-banned-twitter-states-reason

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக