Ad

புதன், 9 டிசம்பர், 2020

நாகப்பட்டினம்: மும்மதத் தலைவர்களிடம் ஆசிபெற்ற எடப்பாடி பழனிசாமி!

நிவர், புரெவி புயல்களால் பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளை பார்வையிட நேற்று ( டிசம்பர் 9 ) நாகப்பட்டினத்துக் வந்திருந்தார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி. வரும் சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க .கூட்டணியில் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள எடப்பாடி பழனிசாமி, இந்த விசிட்டை எல்லா மதங்களையும் சமமாகக் கருதும் ஆன்மிக அரசியல்வாதியாக தன்னைக்  காட்டிக் கொள்ளவும் பயன்படுத்திக் கொண்டார். அதன்படி நாகூர் தர்கா, வேளாங்கண்ணி தேவாலயம், தருமபுரம் ஆதின மடம் ஆகிய மூன்று இடங்களுக்கும் சென்று தரிசனம் செய்து ஆசி பெற்றார்.

எடப்பாடி பழனிசாமி

நேற்று காலையில் நாகூர் தர்கா வந்தடைந்த தமிழக முதல்வருக்கு, தர்கா நிர்வாகத்தின் சார்பாகவும், நாகூர் தர்காவின் பரம்பரை கலிபா மஸ்தான் சாஹிப் உள்ளிட்ட சாஹிபுமார்கள் சார்பாகவும், மங்கள வாத்தியங்கள் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து நாகூர் ஆண்டவர் சந்நிதிக்கு வந்த முதல்வரை இஸ்லாமியர்கள் தொப்பி அணிவித்து  தர்கா பரம்பரை கலீபா மஸ்தான் சாஹிப் தலைமையில் துஆ ஓதப்பட்டது. தர்கா சார்பில் அவருக்கு நினைவுப் பரிசும்  வழங்கப்பட்டது.

அதன்பின் மதியம் வேளாங்கண்ணி அன்னை ஆரோக்கிய மேரி மாதா தேவாலயத்துக்கு வருகைதந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு, பேராலய அதிபர் தலைமையில் சிறப்பான  வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து தேவாலயத்தில் நடந்த சிறப்புத் திருப்பலி பிரார்த்தனையில் கலந்துகொண்ட முதல்வருக்கு, மாதா சொரூபம் நினைவுப் பரிசாக பேராலய நிர்வாகம் சார்பில் வழங்கப்பட்டது.

நாகூர் தர்காவில் எடப்பாடி பழனிசாமி

மாலையில் தருமபுர ஆதீனம் 27-வது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகளை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சந்தித்து அருளாசி பெற்றார். அப்போது குருமகாசந்நிதானம் பாதம் தொட்டு வணங்கிய முதல்வருக்கு ஐம்பொன்னாலான காமதேனு சிலை, பன்னிரு திருமுறைகள், திருக்குறள் புத்தகங்கள், முருகனின் திருவுருவப் படத்தையும் வழங்கி, ருத்ராட்ச மாலை அணிவித்து  அருளாசி வழங்கினார்.

Also Read: திருச்சி: `தலையாட்ட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி!’- கே.என்.நேரு

தொடர்ந்து புதிய மயிலாடுதுறை மாவட்டம் அமைய நடவடிக்கை எடுத்த தமிழக முதல்வருக்கு குருமகாசந்நிதானம் வாழ்த்துக்களைத் தெரிவித்தார். அப்போது புதிய மயிலாடுதுறை மாவட்டத்துக்கு ஆட்சியரகம் உள்ளிட்ட நிர்வாகக் கட்டடங்கள் கட்டுவதற்கு நிலம் வழங்கிய குருமகாசந்நிதானத்துக்கு  எடப்பாடி பழனிசாமி நன்றி தெரிவித்தார்.

வேளாங்கண்ணியில் எடப்பாடி பழனிசாமி

இப்படி ஒரே நாளில் மும்மத சமயப் பெரியோர்களைத்  தரிசித்து, 'தான் எல்லா மதங்களையும் சமமாகப் பாவிக்கும் ஆன்மிக அரசியல்வாதி ' என்று நாட்டு மக்களுக்கு மறைமுகமாக தெரிவித்திருக்கிறார் எடப்பாடி பழனிசாமி என்கிறார்கள் ரத்தத்தின் ரத்தங்கள்.



source https://www.vikatan.com/government-and-politics/politics/cm-eps-gets-blessings-from-hindu-christian-muslim-leaders-in-nagapattinam

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக