Ad

வெள்ளி, 25 டிசம்பர், 2020

விழுப்புரம்: `மோடியே வந்தாலும் தடுக்க முடியாது!’ - கொதித்த ஸ்டாலின்

தமிழகத்தில் 2021-ல் நடக்கவிருக்கும் சட்டமன்றத் தேர்தலையொட்டி அ.தி.மு.க, தி.மு.க, மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட அரசியல் கட்சிகள் தேர்தல் பிரசாரங்களை தொடங்கியிருக்கின்றன. டிசம்பர் 23-ம் தேதி தி.மு.க தலைவர் ஸ்டாலின் தலைமையில்`அ.தி.மு.வை நிராகரிப்போம்’ என்ற தலைப்பில் கிராம சபைக் கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டது. ஆனால், கிராம சபை என்ற பெயரில் அரசியல் கூட்டம் நடத்துவதற்கு அனுமதிக்கக் கூடாது என்று மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிட்டது தமிழக அரசு. அதனடிப்படையில் விழுப்புரம் மாவட்டம், மரக்காணத்தில் தி.மு.க சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கிராம சபைக் கூட்டத்துக்கு அனுமதி அளிக்க மறுத்துவிட்டது காவல்துறை.

தி.மு.க மக்கள் கிராம சபைக் கூட்டத்தில் ஸ்டாலின்

மீறினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்ற அறிவிப்பு நோட்டீசை மாவட்டச் செயலாளர் செஞ்சி மஸ்தானிடம் அளித்திருந்தார் பொறுப்புக் காவல் ஆய்வாளர் சரவணன். ஆனால் அதற்கு முன்னதாக `அ.தி.மு.க அரசின் அவலங்களை அம்பலப்படுத்தும் தி.மு.க கிராமசபை பிரசாரக் கூட்டங்களை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது என்றும், இனி `மக்கள் வார்டுசபைக் கூட்டம்’ என்ற பெயரில் நடத்தப்படும் என்று ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டிருந்தார். அதன்படி விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் பேரூராட்சி 12-வது வார்டு செல்லியம்மன் கோயில் தெருவில் ஆலமரத்தின் கீழ் நடைபெற்ற மக்கள் வார்டுசபைக் கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட தி.மு.க தலைவர் ஸ்டாலின், ``இந்தக் கூட்டத்தை நடத்தக் கூடாது என பல வகைகளில் தடையை ஏற்படுத்தினார்கள்.

சீப்பை ஒளித்து வைத்துக்கொண்டால் திருமணம் நின்றுவிடாது. இங்கு கூடும் கூட்டத்தை பார்த்து எடப்பாடி பழனிசாமி பயத்தில் தூக்கத்தைத் தொலைத்துவிட்டிருக்கிறார். மோடியே வந்தாலும் இந்த கிராம சபைக் கூட்டத்தை தடுத்து நிறுத்த முடியாது. இந்த பெயர் மாற்றம் கூட யாருக்கும் பயந்துகொண்டு செய்யவில்லை. கிராம சபைக் கூட்டங்கள் வாயிலாக மக்களை சந்திக்க வேண்டும். இன்றைக்கு முதல்வராக இருக்கிற எடப்பாடி பழனிசாமி, சசிகலா காலில் மண்புழு போல ஊர்ந்து போய் விபத்தால் முதல்வரானவர். மக்களைப் பற்றி கவலைப்படாத இந்த ஆட்சிக்கு மக்கள் முடிவு கட்ட வேண்டும். தி.மு.க மீது நீங்கள் பெரும் நம்பிக்கையை வைத்திருப்பது இங்கு கூடியிருப்பதன் மூலம் தெரிகிறது. எடப்பாடி, தன்னுடைய உறவினர்களுக்கு நெடுஞ்சாலைத்துறை டெண்டரைக் கொடுத்ததில் ஊழல் நடந்திருக்கிறது என்று தி.மு.க உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது. பழனிசாமி முதல்வராக இருப்பதால் சி.பி.ஐ விசாரிக்க வேண்டுமென நீதிமன்றம் கூறியது. ஆனால், உத்தரவை அமல்படுத்தக்கூடாது என உச்சநீதிமன்றம் சென்று தடையாணை பெற்றார் எடப்பாடி.

ஸ்டாலின்

தன் மீது தவறு இல்லையென்றால் அவர் அதனை எதிர்க்கொண்டிருக்க வேண்டும். விசாரணை நடந்தால் உண்மை வெளியே வந்துவிடும், மாட்டிக்கொள்வோம், பதவி போய்விடும் என்பதால்தான் பயந்துகொண்டு தடை பெற்றார். ஆனால், இன்னும் 4 மாதங்களுக்குப் பிறகு அந்த தடையை தி.மு.க உடைத்துவிடும். அ.தி.மு.க-வின் அனைத்து அமைச்சர்களும் சொத்துக்களை வாங்கிக் குவித்திருக்கின்றனர். மின்சார வாரியத்தில் ஊழல் நடந்திருக்கிறது. மத்திய அரசு கொரோனா காலத்தில் கொடுத்த அரிசியை வெளிமாநிலத்துக்குக் கடத்தி அமைச்சர் காமராஜ் ஊழல் செய்திருப்பதை ஆதாரத்துடன் கவர்னரிடம் அளித்திருக்கிறோம்.

Also Read: “ஸ்டாலின் பங்காளி... ரஜினி பகையாளி!”

அதைப் பார்த்துவிட்டுதான் எடப்பாடி புலம்ப ஆரம்பித்துவிட்டார். கவர்னர் நடவடிக்கை எடுத்துவிடுவார். அப்படி இல்லையென்றாலும், தி.மு.க ஆட்சிக்கு வந்ததும் நடவடிக்கை எடுக்கும். அதன் காரணமாகத்தான் எடப்பாடி பயத்தில் ஏதேதோ பேசிக்கொண்டிருக்கிறார். நிலைமை இப்படி இருக்க தி.மு.க-வை ஊழல் கட்சி, குடும்பக் கட்சி என்று போகிற இடத்தில் எல்லாம் பேசி வருகிறார் எடப்பாடி. திருடனாக, ஊழல்வாதியாக இருந்து கொண்டு தி.மு.க-வைப் பார்த்து ஊழல் கட்சி என்று சொல்கிறார். தி.மு.க மீதான சர்க்காரியா கமிஷன் ஊழலை நிரூபிக்க முடியவில்லை. ஆ.ராசா, கனிமொழி ஆகியோர் தங்கள் மீதான வழக்குகளை எதிர்க்கொண்டு வெளியே வந்திருக்கின்றனர். ஊழல் வழக்கிலே குற்றம்சாட்டப்பட்ட ஜெயலலிதா உள்ளிட்டவர்களுக்கு 4 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.100 கோடி அபராதமும் விதிக்கப்பட்டது. ஜெயலலிதா இறந்துவிட்டதால் அவர் பெயர் விடுவிக்கப்பட்டது. சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் எங்கே இருக்கிறார்கள் எல்லோருக்கும் தெரியும். ஊழல் வழக்கில் தண்டனை பெற்றது அ.தி.மு.க-தான். தி.மு.க தலைவர்கள் யாராவது ஊழல் வழக்கில் இதுவரை தண்டனை பெற்றிருக்கிறார்களா ?

Also Read: `தேர்தலை நடத்துங்க; இல்ல கிராமத்தில் அமைச்சர்கள் குடியிருங்க'- கிராம சபைக் கூட்டத்தில் மக்கள் ஆவேசம்

அரசியலில் குடும்பக் கட்சியாக இருக்கலாம். ஆனால், அ.தி.மு.க-வைப் போன்று ஊழல் குடும்பக் கட்சியாக இருக்கக் கூடாது. கலெக்‌ஷன், கமிஷன், கரப்ஷன் இதுதான் இந்த ஆட்சியின் கொள்கையாக இருக்கிறது. ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் தி.மு.க தொடர்ந்து மக்களுக்காக பயணிக்கிறது. 10 ஆண்டு காலம் ஆட்சியில் இல்லை என்பதால் நாங்கள் ஓய்வெடுத்துக்கொண்டோமா ? துறவறத்துக்கு செல்லவில்லையே? மக்கள் பிரச்னைகளை கையில் எடுத்து போராடினோம்” என்றார்.

தொடர்ந்து, `விவசாயிகளை வஞ்சித்த அ.தி.மு.க, தமிழகத்தை தாகத்தில் தவிக்கவிட்ட அ.தி.மு.க, சட்டம் ஒழுங்கைச் சந்தி சிரிக்க வைத்த அ.தி.மு.கவை நிராகரிக்கிறோம்’ என முழக்கமிட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.



source https://www.vikatan.com/government-and-politics/politics/stalin-slams-admk-government-in-villupuram-people-meet-function

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக