Ad

சனி, 19 டிசம்பர், 2020

அமைச்சர் வீரமணியை எதிர்க்கும் அக்காள் மகன்! -சட்டமன்றத் தேர்தலுக்குத் தயாரான ஜோலார்பேட்டை

வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் கே.சி.வீரமணி, திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை தொகுதியிலிருந்து சட்டமன்றத்துக்கு இரண்டு முறை தேர்ந்தெடுக்கப்பட்டவர். 2011 மற்றும் 2016-ல் நடந்த சட்டமன்றத் தேர்தல்களில் தொடர்ச்சியாக இரண்டு முறை வெற்றிபெற்ற வீரமணி, மூன்றாவது முறையாக 2021-லும் ஜோலார்பேட்டையையே குறிவைத்துள்ளார். கட்சிக்காக நீண்ட காலம் உழைத்த அ.தி.மு.க நிர்வாகிகள் பலர், வீரமணி மீண்டும் போட்டியிடுவதை விரும்பவில்லை என்கிறார்கள். அதே நேரம், வீரமணியின் செல்வாக்கை எதிர்த்து அ.தி.மு.க தலைமையில் குரல்கொடுக்க எந்தவொரு நிர்வாகிகளுக்கும் தைரியமில்லை. அமைச்சருக்கு ஆளும்கட்சியில் இருப்பவர்கள் அடங்கிப்போவதில் ஆச்சர்யமில்லை. ஆனால், தி.மு.க-வில் இருப்பவர்களும் அடக்கிவாசிப்பதுதான் தொகுதி மக்களை அதிர்ச்சியடைய வைக்கிறது.

பெரியார்தாசன்

இந்த நிலையில், அமைச்சர் வீரமணியை எதிர்த்து இப்போதே தேர்தல் பிரசாரம் செய்ய ஆரம்பித்துவிட்டார் அவரது அக்காள் மகனும் தி.மு.க-வின் மாவட்ட பிரதிநிதியுமான பெரியார்தாசன். வீரமணி, திராவிடர் கழக பின்னணி குடும்பத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும், நேரடி அரசியலுக்குள் அவரை அழைத்துவந்தது அவரது அக்காள் கணவரும் பெரியார்தாசனின் தந்தையுமான சாம்ராஜன் என்பவர்தான். பெரியார்தாசன் ஆரம்பத்தில் அ.தி.மு.க-வில்தான் இருந்தார். தாய்மாமன் வீரமணிக்குத் தேவையான உதவிகளை செய்துவந்தார். ஜோலார்பேட்டை தொகுதியில் வீரமணிக்கு இருக்கும் செல்வாக்கை விடவும் பெரியார்தாசனுக்குத்தான் கூடுதல் மவுசு இருக்கிறது என்கிறார்கள் சிலர்.

ஏனெனில், 2001-ல் ஜோலார்பேட்டை நகரமன்ற கவுன்சிலராகவும், 2006 மற்றும் 2011-ல் ஜோலார்பேட்டை நகரமன்றத் துணைத் தலைவராகவும் பெரியார்தாசன் பதவி வகித்துள்ளார். அ.தி.மு.க-வில் நகர எம்.ஜி.ஆர் இளைஞரணி செயலாளராகவும் நீண்டகாலம் பொறுப்பு வகித்துள்ளார். பெரியார்தாசனின் வளர்ச்சியை தாய்மாமன் வீரமணி விரும்பவில்லை எனக்கூறப்படுகிறது. பெரியார்தாசனின் செயல்பாடுகளைத் தடுத்து அ.தி.மு.க-விலிருந்து ஓரம் கட்ட நினைத்ததாகவும் சொல்கிறார்கள். இதையடுத்து, கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு அ.தி.மு.க-விலிருந்து விலகிய பெரியார்தாசன் தி.மு.க தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்துக்கொண்டார்.

அமைச்சர் வீரமணி

இதில், சுவாரஸ்யம் என்னவென்றால், 2011 உள்ளாட்சித் தேர்தலின்போது, நகரமன்றத் துணைத் தலைவராக பெரியார்தாசன் தேர்வு செய்யப்படுவதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார் அமைச்சர் வீரமணி. அ.தி.மு.க சார்பில் வேறொரு கவுன்சிலரை துணைத் தலைவர் தேர்வுக்கு முன்னிறுத்தினார் வீரமணி. அப்போதே அமைச்சரை எதிர்த்து துணைத் தலைவர் பொறுப்புக்குப் போட்டியிட்டு வெற்றியையும் தட்டிப்பறித்தார் பெரியார்தாசன். தி.மு.க-வுக்கு பெரியார்தாசன் வந்த பின்னர் அ.தி.மு.க-விலிருந்த சில இளைஞர் பட்டாளமும் தி.மு.க பக்கம் வந்ததாக கூறப்படுகிறது.

‘‘வரும் தேர்தலில், ஜோலார்பேட்டை தொகுதியில் அ.தி.மு.க-வுக்கு ஏற்படப் போகும் பின்னடைவு, அமைச்சர் வீரமணி மீதான அதிருப்தியாகத்தான் இருக்கும்’’ என்று இப்போதே பிரசாரத்தை கையில் எடுத்து தொகுதி மக்களைச் சந்திக்க ஆரம்பித்துவிட்டார் பெரியார்தாசன். தி.மு.க-வினரும் அவருடன் கைகோத்து வலம் வருவதால், அமைச்சர் வீரமணி தரப்பினர் கடும் அப்செட்டில் இருக்கிறார்களாம்.



source https://www.vikatan.com/news/politics/jolarpet-minister-veeramanis-sister-son-working-against-veeramani-for-upcoming-2021-election

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக