Ad

சனி, 22 ஆகஸ்ட், 2020

Sunday Lockdown: `டாஸ்மாக் விற்பனை', `அதிகாரிகளுக்கு ஓய்வு' - ஒரு நாள் முழு ஊரடங்கால் என்ன நன்மை?

தமிழ்நாட்டின் பெரும்பாலான வீடுகளில் ஞாயிற்றுக்கிழமை என்றால் அசைவச் சாப்பாடுதான் ஸ்பெஷல். ஆகையால் ஞாயிற்றுக்கிழமையின் காலை வேளைகளில் கறிக்கடைகளிலும், மீன் மார்க்கெட்டிலும் நம்மவர்கள் வரிசைகட்டி நிற்பது வழக்கம். தமிழகத்தில் கடந்த ஜூலை 5-ம் தேதியிலிருந்து அந்த மாதத்திலுள்ள எல்லா ஞாயிற்றுகிழைமகளிலும் எந்தவிதத் தளர்வுமின்றி முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டார். அது இந்த ஆகஸ்ட் மாதத்திலும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது.

கறிக்கடை

இதன் காரணமாக ஞாயிற்றுக்கிழமை காலையில் வரிசைகட்டி கறி, மீன் வாங்கிய நம்மவர்களெல்லாம் சனிக்கிழமையே கூடைகளோடும் பைகளோடும் மாமிசக் கடைகளுக்குப் படையெடுக்கத் தொடங்கினர். ஃப்ரெஷ்ஷாக அசைவம் வாங்கிச் சமைக்கும் பழக்கம்கொண்ட நம்மவர்களை, சனிக்கிழமையே கறியை வாங்கி ஃப்ரீஸரில் போட்டுச் சமைக்கவைத்துவிட்டது இந்த ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு. இரவு 7 மணியோடு கடைகள் அடைக்கப்பட்டுவிடுவதால், மாலை நேரங்களில் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காமல் முண்டியடித்துக்கொண்டு அசைவம் வாங்குகிறார்கள் நம்மவர்கள். காசிமேடு மீன் மார்க்கெட்டில் சனிக்கிழமை கூடும் கூட்டத்தை வாரா வாரம் செய்தித்தாள்களில் பார்க்க முடிகிறது.

மக்கள் கூட்டம்

Also Read: ``இறைச்சிக்கடைகளை மூட முடிவெடுத்தால் பொது இடங்களில் கறி சமைத்து சாப்பிடுவோம்!'' - சீமான் எச்சரிக்கை

அசைவம் வாங்கும் கடைகளில் மட்டுமல்ல... சூப்பர் மார்க்கெட், மளிகைக் கடைகள், காய்கறிக் கடைகள் என எல்லாக் கடைகளிலுமே சனிக்கிழமையன்று அதிக அளவில் மக்கள் கூடுவது வழக்கமாகிவிட்டது. டாஸ்மாக் கடைகளிலும் சனிக்கிழமை அன்று விற்பனை பட்டையைக் கிளப்புகிறது.

சமூக வலைதளங்களில் மக்கள் கூட்டம் கூட்டமாகக் கூடும் புகைப்படங்களைப் பகிர்ந்து,``ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு காரணமாகத்தான் சனிக்கிழமைகளில் எல்லா இடங்களில் கூட்டம் கூட்டமாகக் கூடுகிறார்கள். இதன் விளைவாக, பல்லாயிரம் பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது'' என்று தமிழக அரசின் இந்த நடவடிக்கையை நொந்துகொள்கிறார்கள் சில நெட்டிசன்கள். இது ஒவ்வொரு வாரமும் வெவ்வேறு புகைப்படங்களோடு தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது.

அதேநேரத்தில் சில சமூக வலைதளவாசிகள் அரசின் இந்த நடவடிக்கையை வேறு கோணத்தில் அணுகுகிறார்கள்.

``டாஸ்மாக் கடைகளின் வியாபாரத்தைப் பெருக்க வேண்டுமென்பதற்காகத்தான் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை கடை இல்லை என்பதால் மதுப்பிரியர்கள் பலரும் சனிக்கிழமை சரக்கு வாங்குவதில் ஆர்வம்காட்டுகிறார்கள். எப்போதும் 10 ரூபாய் அதிகம்வைத்து விற்கப்படும் மது பாட்டில் சனிக்கிழமைகளில் 30 ரூபாய் வரை அதிகம் வைத்து விற்பனை செய்யப்படுகிறது. குடிமகன்களும் `நாளை கடை இருக்காது' என்பதை மனதில் வைத்துக்கொண்டு எவ்வளவு விலையென்றாலும் கொடுத்து, அமைதியாக பாட்டில்களை வாங்கிக்கொண்டு வீடு திரும்புகிறார்கள்" எனும் நெட்டிசன்கள் சிலர் `ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்குக்கு' பகீர் காரணம் ஒன்றை முன்வைக்கிறார்கள்.

டாஸ்மாக்

இந்தக் கருத்து உண்மைதானா என்று அறிந்துகொள்ள, கடந்த ஜூலை 4-ம் தேதி, அதாவது முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்ட ஞாயிற்றுக்கிழமைக்கு முந்தைய நாளான சனிக்கிழமை அன்று தமிழகத்தில் டாஸ்மாக் விற்பனை நிலவரம் என்னவென்று பார்த்தோம். அன்று ஒரே நாளில் 171 கோடி ரூபாய்க்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளது.

அதையடுத்து வந்த சனிக்கிழமைகளில், ஜூலை 11-ம் தேதியன்று 170 கோடி ரூபாய்க்கும் ஜூலை 18-ம் தேதியன்று 183 கோடி ரூபாய்க்கும் ஜூலை 25-ம் தேதியன்று 177 கோடி ரூபாய்க்கும் மது விற்பனையாகியுள்ளன. இந்த மாதம் 1-ம் தேதியன்று 188.86 கோடி ரூபாய்க்கும் 8-ம் தேதியன்று 189.38 கோடி ரூபாய்க்கும் மது வகைகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

கடந்த ஆகஸ்ட் 15, சனிக்கிழமை அன்று சுதந்திர தினம் என்பதால் மதுக்கடைகளுக்கு விடுமுறைவிடப்பட்டன. தொடர்ந்து இரண்டு நாள்கள் மதுக்கடைகள் விடுமுறை என்பதால், ஆகஸ்ட் 14, வெள்ளிக்கிழமை அன்று மட்டும் ரூ. 248 கோடி ரூபாய்க்கு மது விற்பனையாகியுள்ளது.

டாஸ்மாக்
ஊரடங்கு காரணமாக ஆட்டம்கண்டிருந்த தமிழகப் பொருளாதாரம் குடிமகன்களால் சற்றே ஸ்டெடி ஆகியுள்ளது என்பதை டாஸ்மாக் வியாபாரக் கணக்குகள் நமக்கு உணர்த்துகின்றன.

பொதுவாகவே, டாஸ்மாக் கடைகள் ஒரு நாளோ இரண்டு நாளோ விடுமுறையென்றால், அந்த விடுமுறைக்கு முன்பான நாளில் டாஸ்மாக் விற்பனை பல மடங்கு அதிகரிக்கும் என்பது தமிழகத்தில் சகஜமான ஒரு விஷயம். மேற்கண்ட டாஸ்மாக் விற்பனைக் கணக்கானது அந்த மது பாட்டில்களில் போடப்பட்டிருக்கும் விலை மதிப்பைவைத்து மட்டுமே கணக்கிடப்பட்டுள்ளது. மதுக்கடைகளில் பாட்டிலுக்கு 10 முதல் 30 ரூபாய்வரை அதிகம் பெறுவதெல்லாம் இந்தக் கணக்கில் வராது. எனவே, டாஸ்மாக் விற்பனையை அதிகரிக்கவே இந்த `ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு’ என்ற கருத்தை முழுமையாக ஏற்றுக்கொள்ள முடியாது.

இந்த ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு எதற்கு என்பது குறித்து அரசியல் நோக்கர்கள் சில கருத்துகளை முன்வைக்கிறார்கள்.

``வாரத்தில் ஆறு நாள்கள் ஊரடங்கைத் தளர்த்திவிட்டு, ஞாயிறு ஒரு நாள் மட்டும் முழு ஊரடங்கை அமல்படுத்தினால் கொரோனாவைக் கட்டுப்படுத்திவிடலாமா... கொரோனா மற்ற கிழமைகளில் பரவாதா... கொரானாவுக்கு கிழமையெல்லாம் தெரியுமா... எனப் பலர் கிண்டலும் கேலியுமாகப் பேசிவருகிறார்கள். ஆனால், `வாரத்தில் ஒரு நாள் மட்டுமாவது மக்கள் நெருக்கத்தைக் குறைக்கலாம்’ என்பதற்காக எடுக்கப்பட்ட முடிவு இது. சென்னையில் இப்போது ஒரு சில துறையினரைத் தவிர்த்து பெரும்பாலானவர்கள் அலுவலகங்களுக்குச் செல்ல ஆரம்பித்துவிட்டார்கள். அதேபோல, இந்தத் தொழிலாளர்களில் மூன்றில் ஒரு பங்கினருக்கு மட்டுமே சனி, ஞாயிறு என இரண்டு நாள்களும் விடுமுறையாக இருக்கும். ஆனால், அனைவருக்குமே ஞாயிறு விடுமுறையாக இருக்கும். அப்படி அனைவருக்குமே விடுமுறையாக இருக்கும் ஒரு நாளில் தளர்வுகளை நீக்கினால், தேவைக்காக மட்டுமன்றி, வெறுமனே பொழுதுபோக்குக்காகவும் வெளியே செல்ல ஆரம்பிப்பார்கள்.

`சரி அப்படியானால், ஞாயிறு மட்டுமே விடுமுறை கிடைப்பவர்கள் அத்தியாவசியத் தேவைகளுக்கு என்ன செய்வார்கள்?’ என்கிற கேள்வி எழும். அவர்கள், தினமும் காலை அலுவலகத்துக்கு செல்வதற்கு முன்பாகவோ, மாலை அலுவலகம் முடிந்த பின்போ வந்து வாங்கிக்கொள்ளலாம். அதுவும் முடியாதபட்சத்தில் அலுவலகத்தில் ஒரு மணி நேரம், இரண்டு மணி நேரம் பர்மிஷன் கேட்டு தங்களுக்குத் தேவையான பொருள்களை வாங்கிக்கொள்ளலாம். ஆனால், இந்தக் காரணத்துக்காக ஞாயிறு முழு ஊரடங்கை நீக்கினால், தேவைக்காக மட்டுமல்லாமல், அனைவருமே வெளியில் சுற்ற அதிக வாய்ப்பிருக்கிறது. அதனால், ஒப்பீட்டளவில் கொரோனா பரவலை ஓரளவுக்குக் கட்டுப்படுத்தும் ஒரு யுக்திதான் இது. இதில் கேலிக்கோ கிண்டலுக்கோ வேலையில்லை" என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.

ஞாயிறு ஊரடங்கு

அரசுத் தரப்பு அதிகாரிகள் சிலரும் ``வாரத்தில் ஒரு நாளாவது ஊரடங்கு இருந்தால்தான் கொரோனா பரவும் விகிதம் கொஞ்சமாவது குறையும். அதனால்தான் ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் ஊரடங்கு கடைப்பிடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது'' என்கிற கருத்தையே முன்வைக்கிறார்கள். இதற்குக் காரணமாக மற்றொரு விஷயமும் அதிகாரிகள் தரப்பிலிருந்து சொல்லப்படுகிறது. அந்தக் காரணம் பின்வருமாறு...

மேலும், ``ஞாயிற்றுக்கிழமை அன்று மக்கள் அனைவரும் வீட்டுக்குள்ளேயே முடங்கிவிடுவதால், 10 சதவிகித காவல்துறையினர் மட்டுமே பாதுகாப்புப் பணியில் ஈடுபடுகின்றனர். கடந்த நான்கு மாதங்களுக்கு மேலாக, தினமும் இரவும் பகலும் வேலை பார்த்த காவல்துறையினர் பலருக்கும் ஞாயிற்றுக்கிழமை கொஞ்சம் ஓய்வு கிடைக்கிறது. சுகாதாரத்துறையைச் சேர்ந்த அதிகாரிகளும், ஐ.ஏ.எஸ் அதிகாரிகளும் இடைவிடாமல் உழைத்துக்கொண்டிருப்பதால், ஞாயிற்றுக்கிழமை சற்று ரிலாக்ஸாக வேலை செய்யட்டும் என்பதற்காகவும்தான் ஞாயிறன்று முழு ஊரடங்கு என்கிற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது" என்றும் அதிகாரிகள் தரப்பில் சொல்லப்படுகிறது.

முழு ஊரடங்கு -சென்னை

Also Read: முதியவர்களுக்கு கொரோனா மட்டும் ஆபத்தல்ல... NCRB டேட்டா சொல்வது என்ன?

அதிகாரிகள் தரப்பில் சொல்லப்படுவதுபோலவே ஞாயிற்றுக்கிழமைகளில் மிகக் குறைந்த அளவிலான காவல்துறையினர் மட்டுமே ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ளதைக் காண முடிகிறது. மக்கள் வெளியே வராத காரணத்தால், கொரோனா பணிகளில் இடைவிடாமல் ஈடுபட்டுள்ள மற்ற துறைகளைச் சேர்ந்த அரசு அதிகாரிகளுக்கும் நிச்சயம் அன்றைய தினத்தில் வேலைப் பளு குறைவாகத்தான் இருக்கும் என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது.



source https://www.vikatan.com/government-and-politics/policies/why-tamilnadu-govt-imposed-complete-lockdown-only-on-sundays

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக