Ad

சனி, 22 ஆகஸ்ட், 2020

கலைக்கப்படப் போகிறதா டி.என்.பி.எஸ்.சி... `One Nation One Test' திட்டத்தின் நோக்கம் என்ன?

வங்கிப் பணியாளர் தேர்வாணையம், ரயில்வே பணியாளர் தேர்வாணையம் என மத்திய அரசின் பல்வேறு துறைகளுக்கான ஊழியர்களைத் தேர்வு செய்வதற்கு சுமார் 20 அமைப்புகள் இயங்கிவருகின்றன. அவை தனித்தனியாகத் தேர்வுகளை நடத்தி பணியாளர்களைத் தேர்வு செய்கின்றன. இந்த நிலையில், `மத்திய அரசுப் பணிகளுக்கு தேசிய அளவில் ஒரே தேர்வை எழுதினால் போதும்’ என்றும், அதற்காக புதிதாக ஓர் அமைப்பை ஏற்படுத்தப்போவதாகவும் மத்திய அரசு அறிவித்துள்ளது.

மோடி

மத்திய அமைச்சரவைக் கூட்டம், பிரதமர் மோடி தலைமையில் ஆகஸ்ட் 19-ம் தேதி நடைபெற்றது. அந்தக் கூட்டத்துக்குப் பிறகு, மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் மற்றும் மத்தியப் பணியாளர்துறை இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் ஆகியோர் செய்தியாளர்களிடம் பேசினர். அப்போது, மத்திய அரசுப் பதவிகளுக்கான பணியாளர்களைத் தேர்வு செய்வதற்கு `தேசிய அரசுப் பணியாளர் தேர்வு முகமை’ (National Recruitment Agency) என்கிற புதிய அமைப்பு ஒன்றை ஏற்படுத்துவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது என்றும், அந்த அமைப்பின் மூலமாக நாடு முழுவதும் ஒரே தேர்வு நடத்தப்படும் என்றும் பிரகாஷ் ஜவடேகர் கூறினார்.

``தற்போது அரசுப் பணியில் சேர விரும்புவோர் பல்வேறு போட்டித் தேர்வுகளை எழுத வேண்டியிருக்கிறது. பல தேர்வுகளை எழுதுவதால் அவர்களுக்கு கால விரயமும், பண விரயமும், வீண் அலைச்சலும் ஏற்படுகின்றன. இனிமேல் அதற்கு அவசியமில்லை. அரசுப் பணியில் சேர விரும்புவோர் இனிமேல் ஒரு பொதுத்தேர்வு எழுதினால் போதுமானது” என்று ஜிதேந்திர சிங் கூறினார். இது தொடர்பாக மத்தியப் பணியாளர்கள் அமைச்சகம் வெளியிட்டிருக்கும் ஓர் அறிக்கையில், `இளைஞர்களுக்கு, குறிப்பாக தொலைதூர கிராமங்களிலிருந்து வரக்கூடிய பெண்களுக்கு உதவும் வகையில் மாவட்டம்தோறும் தேர்வு மையங்களைத் தேசிய தேர்வாணைய முகமை ஏற்படுத்தும்” என்றும் கூறப்பட்டுள்ளது.

வைகோ

மத்திய அரசின் இந்த முடிவுக்கு தமிழகத்திலிருந்து முதல் எதிர்ப்புக் குரல், ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோவிடமிருந்து எழுந்துள்ளது. அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ``மேலோட்டமாகப் பார்த்தால், ஒரே தகுதித் தேர்வு என்பது மத்திய அரசுப் பணிகளில் சேர விரும்புவோருக்கு பயனுள்ளதாக இருப்பதாகத் தோன்றலாம். ஆனால், மத்திய அரசின் சூழ்ச்சி நிறைந்த வஞ்சகத் திட்டம் இதில் ஒளிந்துள்ளது. ‘மத்திய அரசின் குரூப் - பி மற்றும் குரூப் - சி போன்ற தொழில்நுட்பம் சாராத பணியிடங்களுக்கான பொதுத்தேர்வை தேசியப் பணியாளர் தேர்வு முகமை நடத்தும்.

அதில் பெறும் மதிப்பெண்களை, தற்போது செயல்பட்டுவரும் ரயில்வே பணியாளர் தேர்வாணையம், வங்கிப் பணியாளர் தேர்வாணையம் மற்றும் பணியாளர் தேர்வாணையம் ஆகிய மூன்று தேர்வாணையங்கள் பயன்படுத்திக்கொள்ளும். அடுத்தடுத்து மற்ற தேர்வு அமைப்புகளும் இதைப் பயன்படுத்திக்கொள்ளும். `இனிவரும் காலங்களில் மத்திய தேர்வாணையங்கள், மாநில தேர்வாணையங்கள், யூனியன் பிரதேச தேர்வாணையங்கள், பொதுத்துறை தேர்வாணையங்கள், தனியார்துறை ஆகியவற்றுக்கும் தேசியப் பணியாளர் தேர்வு முகமை சார்பில் நடத்தப்படும் தகுதித் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பணியாளர்கள் தேர்வு நடைபெறும்’ என்று மத்திய இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் கூறியுள்ளார்.

நாடாளுமன்றம்

இது ஒரு வஞ்சகத் திட்டம். இனிமேல், டி.என்.பி.எஸ்.பி மூலம் தேர்வு நடத்தி, தமிழக அரசின் பணியிடங்களில் நியமனங்கள் செய்வது என்பது அடியோடு ஒழித்துக்கட்டப்படும். வடநாட்டுத் தேர்வு மையங்களில் எப்படி தேர்வுகள் நடைபெறுகின்றன என்பது அனைவருக்கும் தெரியும். அங்கு நடைபெறுவதுபோல முறைகேடாக நடத்தப்படும் தேர்வுகள் மூலம் வடமாநிலத்தவரை தமிழ்நாட்டில் அரசுப் பணிகளில் அமர்த்துவதற்கு முயற்சி நடக்கிறது. இது கண்டனத்துக்குரியது. இதன் மூலம், தமிழகத்தில் வி.ஏ.ஓ உட்பட அனைத்துத் துறைகளின் பணியிடங்களிலும் வடநாட்டைச் சேர்ந்தவர்களை நியமனம் செய்வதற்கு வழி ஏற்பட்டுவிடும். இது, தமிழக இளைஞர்களின் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்கும் வகையில், அரசுப் பணியிடங்களில் இந்திக்காரர்களின் ஆதிக்கத்தை நிலைநிறுத்திவிடும். இந்தச் சதித்திட்டத்தை ஒருபோதும் அனுமதிக்க முடியாது” என்று வைகோ கூறியுள்ளார்.

இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினர் கனகராஜிடம் கேட்டபோது, ``இந்தியா மாதிரியான ஒரு மிகப்பெரிய தேசத்துக்கு `ஒரே தேர்வு’ என்பதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. இதை இன்னொரு நீட் தேர்வாகத்தான் பார்க்கிறேன். இந்தியாவில் பல பின்தங்கிய மாநிலங்கள் உள்ளன. அந்த மாநிலங்களிலுள்ள அரசுப் பணிகளுக்கு அந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் போட்டி போட்டுக்கொண்டு வருவார்கள். அப்படியிருக்கும்போது, `தேசிய அளவில் ஒரே தேர்வு’ என்று கொண்டுவரப்பட்டால், யாருக்கெல்லாம் வசதியும் வாய்ப்பும் இருக்கின்றனவோ, அவர்களால்தான் அரசுப் பணிகளுக்கு வர முடியும் என்ற நிலை உருவாகும். டெல்லியைச் சேர்ந்த ஒருவருடன் ஜார்க்கண்ட் மாதிரியான பின்தங்கிய ஒரு மாநிலத்தைச் சேர்ந்த ஒருவரால் எப்படிப் போட்டிபோட முடியும்? இது போன்ற பிரச்னைகளையெல்லாம் கணக்கில்கொண்டுதான், பிராந்திய அளவில் பணி நியமனத்துக்கான அமைப்புகளை வைத்திருக்கிறார்கள்.

கனகராஜ்

தேசியப் பணியாளர் தேர்வு முகமை, ஒரே தேர்வு என்பதெல்லாம் பா.ஜ.க-வின் அரசியல் செயல் திட்டங்களை நிறைவேற்றுவதற்காகக் கொண்டுவரப்படுகின்றன. அதில் ஒன்றுதான், இந்தியைத் திணிப்பது. கேள்வித்தாள் இந்தியிலும் ஆங்கிலத்திலும் இருக்கும். அதுபோக, பிராந்திய மொழியிலும் இருக்கும். ஆனால், பிராந்திய மொழியில் கேள்விகளை மொழிபெயர்க்கும்போது, சரியாக மொழிபெயர்க்கப்படவில்லையென்றால் என்ன செய்வது? நீட் தேர்வில் 94 மதிப்பெண்களுக்கான கேள்விகள் தவறாக மொழிபெயர்க்கப்பட்டிருந்தன. அதை நீதிமன்றம் ஒப்புக்கொண்டது. அந்தப் பிரச்னை மற்ற தேர்வுகளிலும் ஏற்படும்.

பிராந்திய அளவில் தற்போதுள்ள தேர்வாணையம் போன்ற அமைப்புகளை இன்னும் பரவலாக்க வேண்டும். ஆனால், இருக்கிற அமைப்பையும் காலிசெய்யும் வேலையை மத்திய ஆட்சியாளர்கள் செய்கிறார்கள். மாநிலங்களில் வங்கி, ரயில்வே உள்ளிட்ட மத்திய அரசுத்துறைகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் ஆகியவற்றில் குரூப் - 3, குரூப் - 4 பணிகளில் அந்தந்த மாநிலங்களைச் சேர்ந்தவர்களையே அமர்த்த வேண்டும். `தேசிய அளவில் ஒரே தேர்வு’ என்று கொண்டுவந்தால், அது நடக்காது.

வேலைவாய்ப்பு பயிற்சி

வேலைவாய்ப்பு என்று சொல்லிவிட்டு எங்கிருந்தோ ஆட்களை இங்கு கொண்டு வந்து பணியில் அமர்த்தினால், பிராந்திய அளவில் சமநிலை குலைந்துவிடும். ரயில்வே, வங்கி உள்ளிட்ட துறைகளில் அதுதான் இப்போது நடந்துகொண்டிருக்கிறது. ஊராட்சி, பேரூராட்சி அளவுக்கான அதிகாரங்களே மாநிலங்களுக்குப் போதுமானவை என்று மத்திய பா.ஜ.க அரசு நினைக்கிறது. எனவேதான், இது போன்ற நடவடிக்கைகளை தொடர்ச்சியாக மேற்கொண்டுவருகிறது. இது, மாநிலங்களில் அமைதியற்ற சூழலை உருவாக்கும்” என்றார் கனகராஜ்.

இந்த விவகாரம் குறித்து நாம் தமிழர் கட்சி, இளைஞர் பாசறையின் மாநில ஒருங்கிணைப்பாளர் கல்யாண சுந்தரத்திடம் பேசினோம். ``புதிதாக ஓர் அமைப்பை ஏற்படுத்தப்போவதாக மத்திய அரசு கூறியுள்ளது. அதே நேரத்தில், ரயில்வே பணியாளர் தேர்வாணையமோ, மற்ற தேர்வாணையங்களோ கலைக்கப்படாது என்றும் சொல்லியிருக்கிறது. அப்படியென்றால், மீண்டும் மீண்டும் தேர்வுகளைத்தான் நடத்தப்போகிறார்கள். `தேர்வுக் கட்டணங்களுக்கான செலவு அதிகரிக்கும்’ என்று காரணம் சொல்கிறார்கள். அதைத் தவிர்ப்பதற்கு, `ஒரு முறை கட்டணம் செலுத்தினால் போதும்’ என்று கொண்டுவரலாமே.

மோடி

இதில், அந்தந்த மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் வேலைக்கான தேர்வுகளையே எழுத முடியாத அளவுக்கு முடக்கப்படும் ஆபத்து உள்ளது. மத்தியில் பா.ஜ.க ஆட்சிக்கு வந்த பிறகு, மலையாளத்தைத் தாய்மொழியாகக்கொண்டவர்கள், பிரதமர் அலுவலகத்திலிருந்து வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டதாகச் செய்திகள் வந்தன. அதுபோல, மத்திய ஆட்சியாளர்களுக்கு ஒவ்வாமையாக இருக்கும் மாநிலங்களின் மக்கள், ‘ஸ்க்ரீன் டெஸ்ட்கள்’ மூலமாக இத்தகைய தேர்வுகளிலேயே பங்கேற்க முடியாமல் செய்துவிட முடியும். இவர்கள் கொண்டுவரப்போகும் அமைப்பின் மூலமாக வேலைவாய்ப்பின்மை குறையப்போவதில்லை. இது ஒரு மோசமான முடிவு” என்றார் கல்யாணசுந்தரம்.

Also Read: நாயைக் கொல்வதற்கும் பி.எஸ்.என்.எல்-க்கும் என்ன சம்பந்தம் - அனந்த் குமார் ஹெக்டே பேசியது சரிதானா?

இந்தக் குற்றச்சாட்டுகளை முற்றிலுமாக மறுக்கிறார் பாஜ.க-வின் மாநில செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி. அவரிடம் பேசியபோது, ``பா.ஜ.க அரசு எந்தத் திட்டத்தைக் கொண்டுவந்தாலும் அதை எதிர்க்க வேண்டும் என்பதற்காக, `தேசிய அரசுப் பணியாளர் தேர்வு முகமை ஏற்படுத்தப்படும்’ என்ற மத்திய அரசின் முடிவையும் விமர்சிக்கிறார்கள். உண்மையில், மத்திய அரசுப் பணிகளில் சேர வேண்டும் என்ற ஆர்வம்கொண்ட இளைஞர்களுக்குப் பல வகைகளிலும் உதவுவதற்காகவே இந்த புதிய அமைப்பையும் ஒரே தேர்வையும் மத்திய அரசு கொண்டுவருகிறது.

நாராயணன்

வங்கி, ரயில்வே என ஒவ்வொரு துறைக்கும் தனித்தனியாகத் தேர்வுகள் எழுதுவதால் கால விரயமும், பண விரயமும் ஏற்படுவது நிச்சயமாக இதன் மூலம் தவிர்ப்படும். இதன் மூலம் இளைஞர்கள் மத்திய அரசுப் பணிகளுக்கான தேர்வை எளிதாக எதிர்கொள்வார்கள’’ என்றார்.



source https://www.vikatan.com/government-and-politics/policies/merits-and-demerits-of-national-recruitment-agency

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக