தெலங்கானா மாநிலம், செகந்திராபாத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீனிவாஸ். இவரின் மனைவி பிரியங்கா (35). கணவரைப் பிரிந்து வாழும் பிரியங்கா, தன்னுடைய 12 வயது மகனுடன் திருவள்ளூர் மாவட்டம் பாதிரிவேடு-வை அடுத்த வாணியமல்லி கிராமத்தில் வசித்துவந்தார். அந்த கிராமத்தில், சென்னை மாதவரத்தைச் சேர்ந்த கார்டன் டோமினிக் ப்ரோகான் (40) என்பவர் நாய்ப் பண்ணை வைத்திருக்கிறார். நாய்களைப் பராமரிக்கும் வேலையை பிரியங்கா செய்துவந்தார். அவரின் மகன் அந்தப் பகுதியிலுள்ள பள்ளியில் படித்துவந்தார்.
பிரியங்காவுடன் அவரின் சகோதரர் விக்ரம், போனில் பேசிவந்தார். ஒருநாள் பிரியங்காவை செல்போனில் விக்ரம் தொடர்பு கொண்டபோது அவரின் சுவிட்ச் ஆஃப் என பதில் வந்தது. அதனால் தங்கை குறித்த எந்தத் தகவலும் விக்ரமுக்குத் தெரியவில்லை. அதனால் சந்தேகமடைந்த விக்ரம், திருவள்ளூர் மாவட்ட எஸ்.பி அரவிந்தனிடம் ஆன்லைனில் புகார் ஒன்றை அளித்தார். அதில் கூறியிருப்பதாவது, ``நான் தெலங்கானா மாநிலம் செகந்திரபாத், ஆர்.கே.புரத்தில் குடியிருந்துவருகிறேன். நான் பிசினஸ் செய்துவருகிறேன். என்னுடைய தங்கை பிரியங்கா, தமிழகத்தில் திருவள்ளூர் மாவட்டம், தாணிபூண்டி, ஜிபிடி பண்ணையில் தங்கியிருந்தார். அவருடன் பிரியங்காவின் 12 வயது மகனும் இருந்தார்.
Also Read: திருவள்ளூர்: நாய்ப் பண்ணையில் கொன்று புதைக்கப்பட்ட இளம்பெண்! - கிணற்றில் மிதந்த போதைப் பொருள்!
அவர், அந்தப் பகுதியிலுள்ள பள்ளியில் படித்துவருகிறார். இந்தச் சூழலில் 1.7.2020-ல் நாய் பண்ணையை நடத்திவரும் கார்டன் டோமினிக் ப்ரோகான் போனில், `உங்கள் உறவுக்காரச் சிறுவனை பூட்டிய வீட்டுக்குள்ளிருந்து மீட்கப்பட்டதாக’வும் `அவனுக்கு பக்கத்தில் உள்ளவர்கள் உணவு அளித்துவருவதாக’வும் தெரிவித்தார். அதோடு அந்தச் சிறுவனின் பள்ளியின் அடையாள அட்டையையும் பிறப்புச் சான்றிதழையும் அனுப்பி வைத்தார். அதைப் பார்த்தபோது, அது என்னுடைய தங்கை மகன் என்பது தெரியவந்தது. 6.7.2020-ல் கார்டன் டோமினிக் ப்ரோகான் போனில் பிரியங்கா, 20 லட்சம் ரூபாயுடன் எஸ்கேப்பாகிவிட்டதாகவும் தெரிவித்தார்.
இந்தச் சமயத்தில் விஜய், என்பவர் என்னிடம் போனில் பேசியபோது `பிரியங்கா காணாமல்போய்விட்டார்’ என்று தெரிவித்தார். இதையடுத்து 1.8.2020-ல் கார்டன் டோமினிக் ப்ரோகான், வாட்ஸ்அப்பில் ஒரு தகவலை அனுப்பியிருந்தார். அதில் மெல்வின், விஜய், நாயர் ஆகியோர் சேர்ந்து பிரியங்காவைக் கொலை செய்துவிட்டதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. அதன்பிறகு கார்டன் டோமினிக் ப்ரோகானிடம், தங்கையின் மகனை தெலங்கானாவுக்கு விமானத்தில் அனுப்பிவைக்கும்படி நான் கூறினேன். விமான டிக்கெட்டையும் முன்பதிவு செய்து கொடுத்தேன். அதனால், தங்கையின் மகனை அழைத்துக் கொண்டு கார்டன் டோமினிக் ப்ரோகான் தெலங்கானாவுக்கு வந்தார். பின்னர் கார்டன் டோமினிக் ப்ரோகான் சென்னைக்கு 3-ம் தேதி திரும்பிச் சென்றுவிட்டார்.
கார்டன் டோமினிக் ப்ரோகான் கூறும் தகவல்களால் பிரியங்கா உயிரோடு இருக்கிறாரா என்ற குழப்பத்தில் நான் உள்ளேன். எனவே, என்னுடைய தங்கை பிரியங்காவைக் கண்டுபிடித்து தரும்படி கேட்டுக்கொள்கிறேன்" என்று குறிப்பிட்டிருந்தார். விக்ரம் கொடுத்த செல்போன் அடிப்படையில் பாதிரிவேடு போலீஸார் விசாரணை நடத்தினர். மேலும், பிரியங்கா குறித்து விசாரித்தபோது அவர் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது இதையடுத்து அவரின் சடலத்தை நாய்ப் பண்ணையிலிருந்து போலீஸார் தோண்டியெடுத்தனர்.
பிரியங்காவைக் கொலை செய்தது யாரென்று டி.எஸ்.பி ரமேஷ் தலைமையிலான தனிப்படை போலீஸார் விசாரணை நடத்தினர். விசாரணையில் பிரியங்காவைக் கொலை செய்த வழக்கில் மெல்வின் என்பவரை போலீஸார் பிடித்தனர். அவரிடம் விசாரித்தபோது திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.
இது குறித்து திருவள்ளூர் மாவட்ட போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறுகையில், ``பிரியங்காவை மெல்வின், விஜய், ஆனந்தன் ஆகியோர் சேர்ந்து கொலை செய்த தகவல் விசாரணையில் தெரியவந்துள்ளது. நாய்ப் பண்ணை அருகே சொகுசு பங்களாவில் விஜய் என்பவர் குடியிருக்கிறார். அவரின் வீட்டுக்கு வந்த பிரியங்காவிடம் விஜய் தவறாக நடக்க முயன்றிருக்கிறார். அதற்கு பிரியங்கா சம்மதிக்கவில்லை. அதனால் நீச்சல் தொட்டிக்குள் பிரியங்காவைத் தள்ளிவிட்டதில், மூச்சுத்திணறி அவர் உயிரிழந்துவிட்டார். அதனால், பிரியங்காவின் சடலத்தை நாய்ப் பண்ணை அருகிலேயே புதைத்திருக்கிறார்கள்’’ என்று தெரிவித்தார்.
மெல்வின் அளித்த தகவலின்படி விஜய், நாயரை போலீஸார் தேடிவருகின்றனர். `அவர்களிடம் விசாரித்ததால்தான் உண்மையில் என்ன நடந்தது என்று தெரியவரும்’ என்கின்றனர் போலீஸார்.
source https://www.vikatan.com/news/crime/tiruvallur-police-arrests-accused-in-telangana-woman-murder
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக