Ad

வியாழன், 20 ஆகஸ்ட், 2020

வேளாங்கண்ணி: முதல் முறையாகப் பக்தர்கள் இல்லாமல் நடைபெறும் திருவிழா!

வேளாங்கண்ணியில் உள்ள புனித ஆரோக்கிய மாதா பேராலய திருவிழாவிற்கு பக்தர்கள் வருகைக்கு தடை விதிக்கப்படுள்ளதாக நாகை கலெக்டர் பிரவீன் நாயர் தெரிவித்துள்ளார்.

வேளாங்கண்ணி

நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் உலக பிரசித்திபெற்ற புனித ஆரோக்கிய மாதா பேராலயம் அமைந்துள்ளது. மும்மதத்தினரும் வந்து வழிபடும் சிறந்த சுற்றுலாத் தலமாகவும் விளங்கி வருகிறது.இங்கு ஆண்டுதோறும் அன்னையின் பிறந்தநாள் 10 நாட்கள் திருவிழாவாக வெகு விமரிசையாக கொண்டாடப்படும். இதில் கலந்துகொள்ள மாநிலத்தின் பல ஊர்களிலிருந்து பக்தர்கள் பாதயாத்திரையாகவே வருவார்கள். லட்சக்கணக்கானோர் கூடும் இவ்விழாவில் வேளாங்கண்ணியே வண்ண விளக்குகளால் ஜொலிக்கும். இவ்வாண்டு திருவிழா வரும் ஆகஸ்டு 29 - ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கவுள்ள நிலையில்,நாகை கலெக்டர் ," கொரோனா வைரஸ் வேகமாக பரவும இந்தச் சுழலில் தற்போது ஊரடங்கு அமலில் உள்ளதால்,விழாவில் பொதுமக்கள் கலந்துகொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும்,கொரோனா தொற்று மேலும் பரவாமல் தடுத்திட பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு முழு ஒத்துழைப்பு நல்கிட வேண்டும் " என்று தெரிவித்துள்ளார்.

வேளாங்கண்ணி பேராலய அதிபர் பிரபாகர் கூறுகையில், ``அரசுக்கு ஒத்துழைப்பு கொடுக்கும் வகையில் பக்தர்கள் இல்லாமல் திருவிழா 29 -ம் தேதி தொடங்கும். இது மன வருத்தத்தை ஏற்படுத்தினாலும், அரசு ஆணையை ஏற்று இந்த ஆண்டு பொதுமக்கள் பங்களிப்பு இல்லாமல், அருட் தந்தையர்களைக் கொண்டு திருவிழா நடைபெறும். மக்களின் நலனை கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மக்கள் வீட்டில் இருந்தபடியே திருவிழாவைக் கண்டுகளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வேளாங்கண்ணி

வரும்29 -ம் தேதி திருக்கொடி பவனியைத் தொடர்ந்து, தஞ்சை மறைமாவட்ட ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் கொடியேற்றுவார். ஒவ்வொரு நாளும் காலை 7 மணிக்கு கொங்கணி, மலையாளம், தமிழ், ஆங்கிலம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் திருப்பலி நடைபெறும். எப்போதும்போல் வழிபாட்டு சடங்குகள் நடைபெறும்.

பாத யாத்திரை வருவதை வழக்கமாகக் கொண்டுள்ள பக்தர்கள் அரசின் நடைமுறையைப் பின்பற்றி ஆலயம் வருவதைத் தவிர்க்க வேண்டும். பேராலய இணையதளம் மூலம் தினசரி நிகழ்வுகளை மக்கள் கண்டுகளிக்கலாம். செப்டம்பர் 8 -ம் தேதி கூட்டுப்பாடல் திருப்பலியை தொடர்ந்து, கொடி இறக்கப்பட்டு திருவிழா நிறைவுபெறும்" என்று கூறியுள்ளார்.

பக்தர்களால் நிரம்பி வழியும் வேளாங்கண்ணி திருவிழா, இந்த ஆண்டு மக்கள் கூட்டமின்றி நடைபெற இருப்பது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.



source https://www.vikatan.com/spiritual/news/devotees-are-not-allowed-to-take-participate-in-velankanni-festival

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக