'துக்ளக் தர்பார்', 'FIR', 'களத்தில் சந்திப்போம்' என மஞ்சிமா மோகனின் லைன் அப் அசத்துகிறது. படங்கள் மட்டுமல்லாமல், ஓ.டி.டி ஒரிஜினல்ஸில் நடிக்கவும் ஆஃபர்கள் குவிகின்றன. லாக்டெளனில் நடிகைகளில் பலரும் போட்டோஷுட்களை செய்துகொண்டிருக்க, கல்லூரி நண்பர்களுக்கு உதவும் 'One In a Million' கான்செப்ட், ஆன்லைன் கோர்ஸ் என பிஸியாக இருக்கும் மஞ்சிமாவிடம் பேசினேன்.
'One in a Million' ஐடியா எப்படி வந்தது?
"ஸ்டெல்லா மேரீஸ் காலேஜ்ல ஃபைனல் இயர் படிக்கும்போது காலேஜ் எலெக்ஷன்ல ஸ்டூடன்ஸ் யூனியன் பொருளாளர் பதவிக்கு நின்னேன். அப்போ ஸ்டூடன்ஸ்கிட்ட பேசும்போது, நான் ஜெயிச்சா இதெல்லாம் பண்ணுவேன்னு சில வாக்குறுதிகள் கொடுத்திருந்தேன். அதுல ஒண்ணுதான் இந்த ஐடியா. ஒருத்தவங்க நல்லா பாடினாங்கன்னா, அவங்களையே எல்லா கலை நிகழ்ச்சிக்கும் பயன்படுத்துவோம். அதனால, இந்த மாதிரி திறமைசாலிகளுக்கு ஒரு களத்தை உருவாக்குனா அதிலிருந்து நிறைய பேர் கிடைப்பாங்கனு இதைச் சொன்னேன். ஆனா, என்னால காலேஜ் டைம்ல இதை சரியா பண்ணமுடியலை. காலேஜ் முடிச்சவுடன் என் ஃப்ரண்ட்ஸ் எல்லோரும் சேர்ந்து இந்த திட்டத்தை ஆரம்பிக்கணும்னு நினைச்சோம். ஆனா, இப்போதான் அதுக்கான நேரம் கிடைச்சிருக்கு. நான் நினைச்சதைவிட இதுக்கு கிடைச்ச ரெஸ்பான்ஸ் அதிகம். ஆர்ட், ஸ்கெட்சிங், இசை, நடனம்னு எல்லாத்துலயும் நிறைய திறமைசாலிகள் இருக்காங்க. அதை எல்லாம் பார்க்கும்போது ரொம்ப சந்தோஷமா இருக்கு. தினமும் காலையில எழுந்தவுடன் என் முதல் வேலை மெயில் செக் பண்ணிட்டு, எதை வெளியிடலாம்னு ஃப்ரண்ட்ஸ்கிட்ட ஆலோசிச்சு... இப்படி நிறைய வேலைகள் இருக்கு. இப்போதான் இந்த லாக்டெளனை என்ஜாய் பண்றேன்."
ஆன்லைன் கோர்ஸ் போறீங்களாமே?!
"ஆமா. இன்டீரியர் டிசைனிங் பத்தி ஆன்லைன் கோர்ஸ் படிக்கிறேன். அந்த திறமைசாலிகள் பண்ற ஸ்கெட்சிங், பெயின்டிங் பார்த்துட்டு நம்மளும் முயற்சி பண்ணலாமேனு ஆன்லைன் கோர்ஸ் சேர்ந்துட்டேன். இப்போ கிடைச்சிருக்கிற நேரம், இனி வரும் காலத்துல கிடைக்குமானு தெரியலை. அதை நல்லவிதத்துல பயன்படுத்திக்கலாம்னு எடுத்த முடிவு இது. எனக்கு வரையறது ரொம்பப் பிடிக்கும். அதை முறைப்படி கத்துக்கலாமேனு நினைச்சேன். ஹோம்வொர்க் எல்லாம் தர்றாங்க. கிளாஸ் முடிச்சுட்டு மறுநாள் ஹோம் வொர்க் காட்டணும். மறுபடியும் ஸ்கூலுக்குப் போற மாதிரி இருக்கு."
'துக்ளக் தர்பார்' படத்துல விஜய் சேதுபதி கூட நடிச்ச நாள்கள்?
"இன்னும் 15 நாள் ஷூட்டிங் இருக்கு. முக்கியமான காட்சிகள் எல்லாம் இனிதான் எடுக்கணும். சேதுபதி சார்கூட வொர்க் பண்ணணும்கிறது என்னோட ரொம்ப நாள் ஆசை. யதார்த்தமா நடிக்கிறவங்ககூட சேர்ந்து நடிக்கும்போது நிறைய விஷயங்கள் கத்துக்கலாம். முதல்ல தங்கச்சி ரோலானு யோசிச்ச எனக்கு, கதை கேட்டதும் அது ஒரு பிரமாதமான கேரக்டரா தெரிஞ்சது. அவருக்கும் எனக்குமான காம்பினேஷன் சீன்ல நடிக்கும்போது ரொம்ப சவாலா இருக்கும். அந்த சவாலை எதிர்கொள்ள ஆவலா காத்துட்டிருக்கேன்."
'துக்ளக் தர்பார்' முதல் சீன்னு இன்ஸ்டாகிராம்ல ஒரு போட்டோ போட்டிருந்தீங்களே!
"ஒரு படத்துடைய முதல் நாள் ஷூட்டிங்குக்கு போகும்போது இதுவரைக்கும் எனக்கு டென்ஷன் இருந்ததில்லை. 'அங்கப்போய் பார்த்துக்கலாம்'னு மனசை ரிலாக்ஸா வெச்சுக்கிட்டுதான் போவேன். ஆனா, இதுல அப்படியில்லை. சேதுபதி சார்கூட நடிக்கப்போறோம் அப்படிங்கிறதே கொஞ்சம் பதற்றமா இருந்தது. அப்புறம், ஒரு காலனியில ஷூட்டிங். நம்ம நடிக்கிறதை நிறைய பேர் பார்ப்பாங்கன்னு ஒரு டென்ஷனும் இருந்தது. மூணாவது கால்ல ஆப்ரேஷன் பண்ணதுனால என்னால கேஷுவலா நடக்கமுடியாது. இதுல நைட் ஷுட் வேற. ஏதாவது க்ளோஸ் அப் ஷாட் அல்லது உட்கார்ந்து நடிக்கிற மாதிரி இருக்கணும்னு கடவுள்கிட்ட வேண்டிக்கிட்டே ஸ்பாட்டுக்கு போனேன். ஆனா, அங்கிருந்து இங்கவரை நடந்து வரணும், வரும்போது இந்த ரியாக்ஷனெல்லாம் வேணும்னு சொல்லிட்டார் இயக்குநர். 'என்னால வழக்கம் போல நடக்க முடியாது'னு சொன்னேன். 'நாங்கெல்லாம் இருக்கோம். சும்மா நடந்துவாங்க'னு சொன்னார். அப்படி நடந்து வரும்போது நொண்டி நொண்டி வந்தா நல்லாயிருக்காதுனு ரொம்ப பதற்றமாகிட்டேன். கதைப்படி அந்தக் கேரக்டர் டயர்டாகி நடந்து வர்ற மாதிரி இருந்ததுனால சமாளிச்சிட்டேன். இந்த சீன் எடுத்த முடிச்சவுடன்தான் எனக்கு நம்பிக்கையே வந்துச்சு. அதனாலதான், அதை இன்ஸ்டாகிராம்ல பதிவு பண்ணேன்."
ஆப்ரேஷன் பண்றளவுக்கு உங்க கால்ல என்னாச்சு?
"அது ஒரு வேடிக்கையான கதை. நான் வீட்டு இரும்பு கதவை மூடும்போது வேகமா வந்து கால்ல இடிச்சுடுச்சு. ரொம்ப முரட்டுத்தனமான கதவு அது. குதிகால்ல நல்ல காயம். நம்முடைய மொத்த எடையையும் தாங்குறது அந்த இடம்தான். அதனால, நடக்க முடியலை. சின்ன சர்ஜரி பண்ணாங்க. இனிமே கதவை மூட போகவே கூடாதுனு முடிவு பண்ணிட்டேன். சமூக இடைவெளிவிட்டு அந்தக் கதவை மூடியிருக்கணும். அப்படி கால்ல அடிபட்டு வீட்ல இருந்த காலம் எனக்கு லைஃப் பத்தி நிறைய கத்துக்கொடுத்துச்சு. வாழ்க்கையில பொறுமை எவ்ளோ முக்கியம்னு கத்துக்கிட்டேன். வாக்கர் வெச்சுதான் நடந்தேன். எங்கேயாவது போகணும்னா வீல் சேர்லதான் போகணும். 'இனி என்னால நடிக்க முடியாது, டான்ஸ் ஆட முடியாது. நடிக்க முடியலைனா வேறென்ன பண்ணலாம்'னு எக்கச்சக்க சிந்தனைகள் மனசுக்குள்ள ஓடிக்கிட்டே இருந்தது. ரொம்ப மோசமான நினைவுகள் அதெல்லாம். அந்த டைம்லதான் நான் யார், என்னுடைய திறமைகள் என்ன, எனக்கு எதுல அதிக ஆர்வம்னு எல்லாத்தையும் தெரிஞ்சிக்கிட்டேன். நிறைய புத்தகங்கள் படிக்கிறது, பெய்ன்டிங்னு அப்போவே லாக்டெளனைப் பார்த்துட்டேன்."
நீங்க சினிமாவுக்கு வந்த இந்த ஐந்து வருடங்கள்ல என்னல்லாம் கத்துக்கிட்டீங்க?
"நிறைய விஷயங்கள் இருக்கு. எங்கே ஷூட்டிங் நடந்தாலும் அப்பா அம்மாவை கூட்டிட்டு போகமாட்டேன். நான் மட்டும்தான் போவேன். அதுவே, நிறைய கத்துக்கொடுத்துச்சு. 'அச்சம் என்பது மடமையடா' ரிலீஸானதுக்குப் பிறகு, 'இந்த மாதிரி கதைகள்லதான் நடிக்கணும், இந்த மாதிரி நடிகர்கள்கூடதான் வொர்க் பண்ணணும், இந்த மாதிரி பிளான் செட் பண்ணி ஃபாலோ பண்ணுங்க. அப்படி பண்ணா அடுத்த ரெண்டு வருஷத்துல நீங்க டாப் ஹீரோயினாகிடலாம்'னு சொன்னாங்க. நானும் அவங்க சொல்றதை கேட்டுட்டு அதே மாதிரி பிளான் செட் பண்ணேன். ஆனா, அது வொர்க் அவுட்டாகவே இல்லை. எனக்கு வேற மாதிரி நடந்தது. அப்போதான், இந்தத் துறையில எதுவும் பிளான் பண்ண முடியாதுனு ஒரு பெரிய விஷயத்தை புரிஞ்சிக்கிட்டேன். ஹீரோயினா நடிக்கலாம், இல்லைனா வேண்டாம்னு சொல்லிடலாம்னு அப்போ என் மனநிலை இருந்தது. அனா, இப்போ எனக்கு வர்ற கேரக்டர் எப்படியிருக்கு, அதுல நான் பர்ஃபார்ம் பண்ண இடம் இருக்கானு யோசிச்சு கதைகளை தேர்ந்தெடுக்கிறேன். ஹீரோயின் முக்கியமில்லை. அந்த கேரக்டர்கள்தான் முக்கியம்னு புரிஞ்சுக்கிட்டேன். எனக்கான உடல் மொழியை எப்படி மாத்துறதுனு கத்துக்கிட்டு இருக்கேன். கரியர்லயும் பர்சனாலாவும் இந்த ஐந்து வருடங்கள்ல நிறைய விஷயங்கள் என்கிட்ட மாறியிருக்கு."
உங்கப் படங்களுடைய தோல்வியை எப்படி எடுத்துக்குறீங்க?
"ரொம்ப மனசு கஷ்டமா இருக்கும். 'சத்ரியன்' படத்துக்கு எதிர்பார்த்த ரெஸ்பான்ஸ் கிடைக்கலை. என் அம்மாக்கிட்ட, 'அடுத்த மூணு நாளுக்கு நான் எங்கேயும் போகமாட்டேன். ரூமுக்குள்ளேயே இருக்கப்போறேன், யார்கிட்டயும் பேசமாட்டேன்'னு சொல்லிட்டேன். அப்போ எனக்கு 22 வயசுதான். ரொம்ப விரக்தி; ரொம்ப கோபம். நான்தான் நல்லா நடிக்கலையா, நான் ராசியில்லதவளானு நிறைய விஷயங்கள் எனக்குள்ள ஓடிக்கிட்டே இருந்தது. அப்போ என் அப்பா என்கிட்ட, 'ஒரு படத்துடைய ஷூட்டிங் முடிஞ்சுடுச்சுனா, அதுல இருந்து வெளியே வந்திடணும். மீதியை மக்கள் பார்த்துட்டு சொல்லுவாங்க. அந்தப் படத்தைப் பத்தியோ இல்லை இந்த சீனை இன்னும் நல்லா பண்ணியிருக்கலாமேனோ யோசிக்கிறது வேலைக்கே ஆகாது. உனக்கு இதை வேற மாதிரி பண்ணியிருக்கலாமேனு தோணுச்சுனா, அடுத்தப் படத்துல இந்த தப்பை பண்ணாதே'னு சொன்னார். அதுக்குப் பிறகுதான், கொஞ்சம் நார்மல் மோடுக்கே வந்தேன். நம்ம பயணத்துல வெற்றி மட்டும் இருக்கக்கூடாது. அப்பப்போ தோல்விகளையும் அனுபவிக்கணும். அப்போதான், வெற்றியுடைய ருசியை முழுமையா உணரமுடியும்."
Also Read: ``முதல் படத்துக்கே ஆனந்த விகடன் விருது... புக்கைப் பார்த்ததும் அனில்..!'' - V.Z.துரை #RIPAnil
என்.டி.ஆருடைய பயோபிக்ல நடிக்கும்போது வித்யா பாலன்கிட்ட அவங்க நடிப்பு பத்தி நிறைய கேட்டீங்கனு ஒரு பேட்டியில சொல்லியிருந்தீங்க. அப்படி வேறொரு நடிகர்கிட்ட கேட்கணும்னா யார்கிட்ட கேட்கணும்னு ஆசை?
"வித்யா பாலன் ரொம்ப யதார்த்தமான நடிகை. எனக்கு ரொம்பப் பிடிக்கும். எல்லோர்கிட்டயும் ரொம்ப சகஜமா பேசுவாங்க. அவங்க ஸ்பாட்ல இருந்தா பாசிட்டிவ் எனர்ஜி இருக்கும். வித்யா பாலன் மேடம் முதல் மலையாள படம் பண்ணும்போது என் அப்பாதான் ஒளிப்பதிவாளர். அதை சொல்லித்தான் அவங்கக்கூட பேச ஆரம்பிச்சேன். அவங்களுக்கும் ரொம்ப சந்தோஷம். நான் அவங்க படங்கள் பத்தி கேட்குற கேள்விக்கெல்லாம் அவங்க பதில் சொல்லிட்டு இருந்தாங்க. அதே சமயம், நம்மளை பத்தியும் நிறைய கேட்டு தெரிஞ்சுக்குவாங்க. அவங்க நடிக்கிறதை நேர்ல பார்க்கும்போது அவ்ளோ சூப்பரா இருந்தது. அவங்கக்கிட்ட கேட்ட மாதிரி நடிப்பு பத்தி கேட்டு தெரிஞ்சுக்கணும்னா, மோகன்லால் சார், விஜய் சார் இவங்க ரெண்டு பேர்கிட்டயும் கேள்வி கேட்கணும்"
இந்த ஐந்து வருஷத்துல உங்களுக்கு ரொம்ப சந்தோஷம் கொடுத்த தருணம், உங்களை கடுப்பேற்றிய தருணம், வருத்தப்பட வெச்ச தருணம் எது?
"நவம்பர் 11, 2016... 'அச்சம் என்பது மடையடா' படத்தை தியேட்டர்ல மக்களோட மக்களா உட்கார்ந்து பார்க்கும்போது ரொம்ப சந்தோஷப்பட்டேன். கடுப்பேத்துன விஷயம்னா, பேட்டி கொடுக்கும்போது நம்ம சொல்றது ஒண்ணா இருக்கும். பத்திரிகைகள்ல வந்தது வேறயா இருக்கும். என்னை ஒரு இயக்குநர் அவர் படத்துல நடிக்கக் கூப்பிட்டு ஓகே சொல்லிட்டார். ஆனா, ஹீரோக்கிட்டேயும் தயாரிப்பாளர்கிட்டயும் கேட்கணும்னு சொன்னாங்க. நானும் வெயிட் பண்ணேன். பெரிய படம் வேற. அந்தப் படம் பண்ணிட்டா என் வாழ்க்கையே மாறிடும்னு ஒரு ஃபீலிங்ல இருந்தேன். ஆனா, ஒரு வாரம் கழிச்சு, வேறொரு ஹீரோயினை கமிட் பண்ணிட்டாங்கன்னு தகவல் வந்துச்சு. அது ரொம்ப ரொம்ப வருத்தமா இருந்தது. ஆனா, அந்த இயக்குநர் என் மேனேஜர்கிட்ட பேசி நிச்சயமா அடுத்தடுத்த படங்கள்ல வொர்க் பண்ணலாம்னு சொன்னாங்க. அந்த இயக்குநருடைய அழைப்புக்காக காத்திட்டிருக்கேன்."
மஞ்சிமாவுக்கான இடம் சினிமாவுல எப்படி இருக்கணும்னு நினைக்கிறீங்க?
"தெரியலை. இதுவரைக்கும் என்னை கமர்ஷியல் ஹீரோயினாதான் பார்த்திருக்காங்க. ஆனா, நான் இப்போ பண்ற படங்கள்ல என் கேரக்டர் வித்தியாசமா இருக்கும். படங்கள் வெளியானால்தான் மக்களுக்கு இந்த மாதிரி கேரக்டர்கள்ல நான் நடிக்கிறது பிடிக்குதா இல்லையானு தெரியும். எனக்கு நிறைய சவாலான கேரக்டர்கள்ல நடிக்கணும்னு ரொம்ப ஆசை."
source https://cinema.vikatan.com/tamil-cinema/manjima-mohan-talks-about-her-career-and-upcoming-projects
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக